இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

1500 ஆண்டுகள் கல்லறையின் மறைவில்!


உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன் கி.பி. 3-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசாட்சி செய்தான். கிறீஸ்தவர்களுக்கெதிரான 10-வது வேதகலாபனையை நடத்தினான். அந்தக் கலாபனையில் 13 வயதுச் சிறுமியான அர்ச். பிலோமினம்மாள் வேதசாட்சி முடிபெற்றாள். அக்கால முறைப்படி சுரங்க சுவர்க் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். அப்படியே 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் 1500 ஆண்டுகளாக ஆண்டவர் அவளை அக்கல்லறையிலேயே மறைத்து வைத்தார். பிந்திய ஒரு காலத்திற்கு அவளின் முன்மாதிரிகையும் வல்லமையும் புதுமைகளும் தேவைப்படும் என்பதற்காக அப்படிச் செய்தார். அந்தப் பிந்திய காலம் நம்முடைய இந்தக் காலமே.

1802-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி கிறீஸ்தவர் களின் சகாயமாதா திருநாள் . அன்று உரோமை சலாரிய பாதையில் (Via Salaria) “பிரஸில்லா நிலம்'' என்ற இடத்தில் ஆதிக் கிறீஸ்தவ வேதசாட்சிகளை அடக்கம் செய்துள்ள கல்லறை சுரங்கத்தில் அகழ்வு ஆய்வு நடந்தது. வேலைக் காரர்கள் குந்தாலியால் தோண்டும்போது சத்தம் வேறு பட்டது! உடனே வேலையை நிறுத்தினார்கள். அகழ்வாய்வு நிபுணர்கள் அந்த இடத்திலுள்ள மண்ணைப் பதனமாக அகற்றிப் பார்த்தபோது, அங்கே சலவைக் கல்லால் செய்யப்பட்ட அடக்கப்பெட்டி ஒன்று காணப் பட்டது. வரலாற்று வல்லுனர்கள், டாக்டர்கள், வேத சாஸ்திரிகள் எல்லாரும் தருவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் அப்பெட்டி பரிசோதிக்கப்பட்டது. அதன் வெளிப்புறமாய் மூன்று சுட்டமண் ஓடுகள் பதிக்கப்பட் டிருந்தன. அவற்றின்மேல் ஒரு குருத்தோலை, ஒரு லீலி மலர், அடிக்கிற சவுக்கு அல்லது கசை, சில அம்புகள், ஒரு நங்கூரம் ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன; இந்த அடையாளங்களுக்குக் குறுக்காக மூன்று சுட்ட மண் ஓடு களிலும் பொருந்தும்படி ஒரு வாக்கியம் எழுதப்பட் டிருந்தது.

முதல் ஓட்டில்  : LVMENA (லூமினா)

2-வது ஓட்டில்  : PAXTE (பாக்ஸ் தெ)

3- வது ஓட்டில்  : CVMFI (கும்ஃபி)

வாசகம்: LVMENA PAXTE CVMFI என்பது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்படி ஒரு வாக்கியம் இருக்க முடியாது. ஆகவே அடக்கம் செய்யும்போது ஏதோ ஒரு குழப்பத்தினால் அல்லது அவசரத்தில் இந்த ஓடுகள் மாற்றிப் பதிக்கப்பட்டு விட்டன என்று ஆய்வாளர்கள் கருதி ஓடுகளை மாற்றி வைத்துப் பார்த்தபோது தெளிவு கிடைத்தது.

2-வது ஓடு 3-வது ஓடு முதல் ஓடு 
PAX  TE          CVMFI           LVMENA

 அதாவது PAX TE CVMFI LVMENA என்ற வாக்கியம் கிடைத்தது! அதன் பொருளும் தெளிவாயிருந்தது: 

“பிலூமினா உனக்கு சமாதானம்'' என்ற உருக்கமும் இரக்கமும் அன்பும் கலந்த வாழ்த்துதலாக அது இருந்தது. மேற்கூறிய சின்னங்களிலிருந்தும் வாக்கியத்திலிருந்தும் அதில் அடக்கம் செய்ப்பட்டிருந்தவளின் ஒரு சிறிய வரலாறு நமக்குக் கிடைத்தது.

1.  சலவைக்கல் பெட்டி : இந்த வேதசாட்சி மிகவும் பிரபலமுள்ளவள் உயர்குடிப் பிறந்தவள் என்று காட்டு கிறது.

2.  குருத்தோலைச் சின்னம் : அவள் வேதத்திற்காக வதைக்கப்பட்டு மனந்தளராமல் இறுதிவரை நின்று வேதசாட்சி முடி பெற்றதைப் புலப்படுத்துகிறது. 

3.  அம்புகள் : நேராக ஒன்றும் தலைகீழாக ஒன்றும். நேரான அம்பானது வேதசாட்சி அம்புகளால் வாதிக்கப்பட்டதையும், தலைகீழான அம்பு இன்னொரு வகையான வாதையையும் குறிக்கிறது. 

4.  நங்கூரம் : அக்காலத்தில் நங்கூரம் கழுத்தில் கட்டுண்டு வேதசாட்சிகள் கடல் அல்லது ஆறுகளில் எறியப்பட்டதைப் போல் இவளுக்கும் நேரிட விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

5.  சாட்டைக் கசை : உரோமையர் தண்டிக்கும் முறைப்படி இந்த அர்ச்சியசிஷ்டவள் கசையடிக்கும் உட்படுத்தப் பட்டதை எண்பிக்கிறது.

6.  லீலி மலர் : வேதசாட்சி ஒரு கன்னிகை என்பதைக் கூறுகிறது.

7.  “பிலூமினா உனக்கு சமாதானம்'' என்ற வார்த்தைகள் இந்த வேதசாட்சியின் பெயர் “பிலோமினா'' என்பதை எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி பறைசாற்றுகிறது.