இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 14. பரலோக மந்திரம் (தொடர்ச்சி)

கர்த்தர் கற்பித்த ஜெபத்தை மனப்பற்றுதலுடன் சொல்லும்போது நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மிகச் சிறந்த கிறிஸ்தவ புண்ணிய முயற்சியை செய்கிறோம்.

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்னும் போது விசுவாசம், ஆராதனை, தாழ்ச்சி ஆகிய முயற்சிகளை செய்கிறோம். அவருடைய நாமம் அர்ச்சிக்கப்பட்டு மகிமைப்பட வேண்டும் என்று கேட்கும் போது, இறைவனின் மகிமையில் நாம் தீவிர ஆவல் கொள்கிறோம். அவருடைய இராச்சியம் பரவ வேண்டுமென மன்றாடும் போது, நாம் அவரில் நம்பிக்கை கொள்கிறோம். அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படும்படி நாம் விருப்பம் தெரிவிக்கும் போது அது ஒரு உத்தம கீழ்ப்படிதல் முயற்சியாகின்றது.

நம் அனுதின உணவை அவரிடம் கேட்கும் போது நாம் மனத்தரித்திரத்தையும் உலகப் பொருட்கள் மீது பற்று அறுத்தலையும் கடை பிடிக்கிறோம். எங்கள் பாவங்களை பொறுத்தருளும் என்று மன்றாடும் நாம் அவற்றிற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல் என்று கேட்பது இரக்கம் காட்டுதல் என்ற புண்ணியத்தை மிகச் சிறந்த முறையில் நாம் கைக்கொள்வதன் அடையாளமாகும்.

சோதனையில் விழ விடாதபடி அவருடைய உதவியைக் கேட்பதால் தாழ்ச்சி, விவேகம், திடம் என்ற முயற்சிகளைச் செய்கிறோம். தீமையிலிருந்து இரட்சிக்கும்படி அவருக்காகக் காத்திருக்கிறதனால் பொறுமை என்ற புண்ணியத்தைச் செய்கிறோம்.

இறுதியாக, இத்தனை காரியங்களையும் கேட்பது நமக்காக மட்டுமல்ல. நம் அயலாருக்காகவும், திருச்சபையின் அங்கத்தினர் அனைவருக்காகவும். ஆதலால் கடவுளின் உண்மையான மக்கள் என்ற முறையில் நம் கடமையைச் செய்தவர்களாகிறோம். எல்லா மாந்தரையும் நேசிக்கிற சர்வேசுரனின் அன்பை நாம் கண்டு நடக்கிறோம். அத்துடன் பிறர் சிநேகக் கட்டடளையையும் அனுசரிக்கிறோம்.

நம் உதடுகள் உச்சரிப்பதை நம் இருதயம் ஏற்றுக் கொள்வதாயிருந்தால், அதோடு கர்த்தர் கற்பித்த ஜெபத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நம் கருத்து மாறுபடாமல் இருக்குமானால், இச்செபத்தைச் சொல்லும் போது நாம் சகல பாவத்தையும் வெறுக்கிறவர்களாகிறோம். தேவ கட்டளைகள் யாவற்றையும் ஏற்று நடக்கிறவர்களாகிறோம். ஏனென்றால், தமது அளவற்ற பெரும் மகத்துவத்தால் அளவற்ற விதமாய் நம்மை விட்டுத் தூரமாயிருக்கும் சர்வேசுரனை, பரலோகத்தில் இருப்பவராக நாம் நினைத்து அவருடைய சந்நிதானத்தில் நம்மையே நிறுத்தும் போதெல்லாம், பொங்கி வழியும் மரியாதை வணக்கத்தினால் நாம் நிரப்பப்பட வேண்டும். அப்போது தெய்வ பயமானது சகல ஆங்காரத்தையும் நீக்கும். ஒன்றுமற்ற தன்மையில் நாம் சர்வேசுரன் முன் பணிந்திருப்போம்.

'பிதா என்ற பெயரைச் சொல்கிறோம்; சொல்லி, நாம் இருப்பதே அவரால்தான் - நம் பெற்றோர் மூலமாக - என்றும், அவருடைய ஸ்தானத்தில் அவருடைய சாயலில் இருக்கும் ஆசிரியரால் நாம் அறிவைப் பெற்றோம் என்றும் நாம் நினைக்கையில் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் காட்டாமல் நம்மால் இருக்க முடியாது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கடவுளைத்தான் அவர்களில் வணங்குகிறோம். அவர்களுக்கு அவமரியாதையோ ஊறோ செய்யும் எண்ணமே தூரமாய் அகன்று விடும்.

தேவனின் திருப்பெயர் மகிமை பெற வேண்டுமென்று நாம் மன்றாடும் போது தேவ நிந்தை எனும் தீமையை விட்டு தூரமாய் விலகி ஓடுகிறோம். தேவ நிந்தைக்கும் நமக்கும் இதைப் போல தூரம் இருக்க முடியாது. சர்வேசுரனின் இராச்சியமே நமது உரிமைச் சொத்து என நாம் உண்மையிலேயே காண்போமானால், இவ்வுலகப் பொருள்களின் மீது பற்றுக் கொள்ள நம்மால் முடியாது.

நமக்கு எந்த நன்மைகள் தேவையாயிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நம் அயலாருக்கும் தரும்படி நாம் நேர்மையோடு தேவனிடம் மன்றாடுவோமானால், நாம் எல்லா பகையையும், சச்சரவையும், பொறாமையையும் விட்டு விடுவோம் என்று கூற அவசியமில்லை. மேலும் நம் அனுதின உணவை தினமும் அவரிடம் கேட்டு வருவோமானால் பேருண்டிப் பிரியத்தையும் சரீர இச்சையானவற்றையும் பகைக்கக் கற்றுக் கொள்வோம். இவை செல்வச்செழிப்பான சூழ்நிலையில்தான் வளருகின்றன.

நமக்குத் தீமை செய்தவர்களை நாம் மன்னிப்பது போல நம்முடைய பாவங்களையும் சர்வேசுரன் மன்னிக்க வேண்டும் என்று நாம் உண்மையிலேயே அவரை மன்றாடும் போது, கோபத்திற்கு இடங்கொடுக்க மாட்டோம். கோபப்படவே நினைக்க மாட்டோம். தீமைக்கு நன்மை செய்வோம். நம்மைப் பகைப்பவர்களை நேசிப்போம்.

நாம் சோதிக்கப்படுகையில் பாவத்தில் விழாதபடி நம்மைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் கேட்பதே சோம்பலை நாம் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதன் அடையாளம். நம் தீய பழக்கங்களை வேருடன் ஒழித்து நம் இரட்சண்யத்தைத் தேடுகிறோம் என்பதற்கு அதுவே சான்று.

தீமையிலிருந்து இரட்சிக்கும்படி கடவுளை நாம் வேண்டுகிறோம். அவருடைய நீதிக்கு நாம் அஞ்சுகிறோம் என்பதை இது காட்டுகிறது. இது நமக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும். ஏனென்றால், தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பமாயிருப்பதால், தேவனுக்கு அஞ்சுதல் என்ற புண்ணியத்தினாலேயே மனிதன் பாவத்தைத் தவிர்க்கிறான்.