இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 14

மகோதர வியாதிக்காரன் குணமானதும், விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களுடைய உவமையும், கோபுரத்தைக் கட்டுமுன் செலவைக் கணிக்கவேண்டும் என்பதும்.

1. பின்பு சம்பவித்ததேதெனில், ஒரு ஓய்வுநாளிலே சேசுநாதர் பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டில் அசனம்பண்ணப் போயிருந்த போது (அங்கே இருந்தவர்கள்) அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள். 

2. அப்பொழுது மகோதர வியாதியஸ்தனான ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான்.

3. சேசுநாதர் நீதிசாஸ்திரிகளையும் பரிசேயரையும் நோக்கி: ஓய்வு நாளிலே சுகமாக்கலாமா என்று கேட்டார். (மத். 12:10.)

4. அதற்கு அவர்கள் பேசாதிருந்தார்கள். அவர் அவனைக் கையால் பிடித்துச் சுகமாக்கி, அனுப்பினார்.

5. பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: உங்களில் யாதொருவனுடைய கழுதையாவது எருதாவது கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளானாலும் உடனே அதை வெளியே இழுத்துவிடாதிருப் பானோ? என்றார்.

6. அதற்கு அவர்கள் பதில் சொல்ல மாட்டாமலிருந்தார்கள்.

7. அப்பால் விருந்துக்கு அழைக்கப் பட்டவர்கள் எப்படி முதல் ஆசனங்களைத் தெரிந்துகொள்ளுகிறார்களென்று அவர் பார்த்து, அவர்களுக்குச் சொன்ன உவமையாவது:

8. நீ கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன் மையான இடத்தில் உட்காராதே; ஏனெ னில் உன்னிலும் அதிக கனவான் ஒரு வேளை அவனால் அழைக்கப்பட்டிருக்க லாம்.

9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இந்த இடத்தைக் கொடு என்று சொல்லும்படியாயிருக்கும். அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசியான இடத்திற்குப் போவாய்.

10. ஆனால் நீ அழைக்கப்பட்டிருக் கும்போது, கடைசியான இடத்தில் போய் உட்கார்ந்திரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து உன்னை நோக்கி: சிநேகிதனே, மேலான இடத் துக்கு வாரும் என்று சொல்ல, உன்னோடு கூடப் பந்தியிலிருக்கிறவர்களுக்கு முன்பாக அது உனக்கு மகிமையாயிருக்கும். (பழ. 25:6, 7.)

11. ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்படுவான் என்றார். (மத்.23:12; லூக். 18:14.)

12. பின்னும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனைப் பார்த்து: நீ பகல் விருந்தாவது இரா விருந்தாவது நடத்தும்போது, உன் சிநேகிதர்களையாவது உன் சகோதரர்களையாவது இனத்தார்களையாவது ஐசுவரியமுள்ள அயலார்களையாவது அழைக்கவேண் டாம். அழைத்தால், ஒருவேளை அவர் களும் உன்னை அழைப்பார்கள்; அப் பொழுது அது உனக்குப் பிரதி பலனாகி விடும்.

* 12. ஒருவன் தன் உறவின்முறையார் சி¼கிதருக்கு விருந்து செய்யும்போது, வழக்கமாய் உலகப்பற்றுதலினாலும், பதிலுக்குப் பதில் அடையலாமென்ற ஆசையினாலும் செய்கிறபடி யால், அது பேறுபலனுள்ளதல்லவென்று ஆண்டவர் சொல்லுகிறாரொழிய, அதைப் பாவ மென்று விலக்குகிறதில்லை. எவ்வளவுக்குப் புண்ணிய கருத்தோடு செய்யப்படுகிறதோ, அவ்வளவுக்குப் புண்ணிய பலன் கிடைக்குமென்றறிக.

13. ஆனால் நீ விருந்து செய்யும்போது, ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடர்களையும் அழைப்பாயாக; (தோபி. 4:7.)

14. அவர்கள் உனக்குப் பதிலளிக்கக் கூடாதவர்களாகையால், பாக்கியவானா யிருப்பாய்; ஏனெனில் நீதிமான்களு டைய உத்தானத்தில் உனக்குப் பிரதி பலனளிக்கப்படும் என்றார்.

15. அவரோடுகூடப் பந்தியமர்ந்தவர்களில் ஒருவன் இவைகளைக்கேட்டு, அவரை நோக்கி: சர்வேசுரனுடைய இராச்சியத்தில் அப்பம் புசிக்கிறவனே பாக்கியவான் என்றான்.

* 15. சர்வேசுரனுடைய இராச்சியத்தில் அப்பம் புசிக்கிறவனே பாக்கியவான்:- சுவிசேஷத் திலே சர்வேசுரனுடைய இராச்சியமென்பது, சம்மனசுக்களும் அர்ச்சியசிஷ்டவர்களும் வாழும் பேரின்ப மோட்சத்தையும், இவ்வுலகத்தில் சத்திய திருச்சபையையும் குறிக்கும். பரலோகவாசிகளுடைய அப்பமென்பது அவர்களுக்கு எந்நாளும் திருப்தியையும், எந்நாளும் பேரின்ப ஆசையையும் வருவிக்கிற சர்வேசுரனுடைய தரிசனமாமே. இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள். திருச்சபையில் மெய்யான இன்பத் தைத் தருகிற அப்பமானது சற்பிரசாதமாகிய சேசுநாதருடைய திருச்சரீரமாமே. இந்த அப்பத்தைத் தக்க ஆயத்தத்தோடு உட்கொள்ளுகிறவனும் பாக்கியவானாமே.

16. அப்பொழுது அவர் அவனை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஒரு மனுஷன் பெரிய விருந்துசெய்து, அநேகரை அழைப்பித்தான். (மத். 22:2.)

17. அப்படியே அவன் விருந்து வேளையில்: இப்பொழுது எல்லாம் தயாராயிருக்கின்றது, அழைக்கப்பட்ட வர்கள் வரவேண்டுமென்று சொல்லும் படி, அவர்களிடத்தில் தன் ஊழியனை அனுப்பினான்.

18. அவர்களெல்லாரும் ஒருப்படப் போக்குச் சொல்லத் துவக்கினார்கள்; ஒருவன் அவனை நோக்கி: நான் ஒரு தோட்டத்தை வாங்கினேன், அவசியமாய் நான் போய் அதைப் பார்க்க வேண்டும். ஆகையால் என்னை மன்னித்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

19. மற்றொருவன்: ஐந்தேர் மாடு வாங்கினேன், அவைகளைப் பரீட்சிக்கப்போகிறேன். ஆகையால் என்னை மன்னித்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

20. இன்னோருவன்: நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன்; ஆதலால் வரக்கூடாது என்றான்.

21. ஊழியன் திரும்பிவந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது குடும்பத்தெஜமான் கோப மடைந்து, தன் ஊழியனை நோக்கி: நீ சீக்கிரமாகப் பட்டணத்துத் தெருக் களிலும் வீதிகளிலும் போய், ஏழைகளை யும் ஊனர்களையும் குருடர்களையும் நொண்டிகளையும் இங்கே அழைத்துக் கொண்டுவா என்றான்.

22. பின்னும் ஊழியன்: ஆண்டவனே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடமிருக்கிறது என்றான்.

23. எஜமான் ஊழியனை நோக்கி: நீ புறப்பட்டு, வழிகளிலும் வேலிகளோரத்திலும்போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி கட்டாயப்படுத்து.

* 23. இந்த உவமையால் சேசுநாதர் தம்மைப் புறக்கணித்து, தமது வார்த்தைகளுக்குக் காதுகொடாத யூதரைக் கைவிட்டுப் புறஜாதி ஜனங்களைத் தமது திருச்சபைக்கு அழைத்துச் சேர்ப்பாரென்று தெளிவாகிறது.

24. ஏனெனில் அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனும் என் விருந்தைச் சுவைபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னான் என்றார்.

25. பின்பு வெகு ஜனங்கள் அவரோடுகூட நடந்துபோகையில், அவர் அவர்களைத் திரும்பிப்பார்த்துச் சொன் னதாவது:

26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், இன்னும் தன் உயிரையுமுதலாய்ப் பகைக்காவிட்டால், என் சீஷனாயிருக்கக் கூடாது. (மத்.10:37.)

* 26. நமது விரோதிகளை முதலாய் நாம் பகைக்கப்படாதென்று சேசுநாதர் கற்பித்திருக்க, நமது தாய், தந்தை முதலியவர்களைப் பகைக்காதிருந்தால், நாம் அவருக்குச் சீஷர்களாகக்கூடாதென்று இவ்வாக்கியத்தில் சொல்லியிருப்பதின் கருத்தேதெனில்: நாம் மெய்யாகவே கர்த்தரைச் சிநேகித்து அவரைப் பின்பற்றுவதற்கு நம்முடைய தந்தை, தாய் முதலியவர்கள் தடையாயிருந்தால், அவர்கள்மேல் நமக்குள்ள பட்சத்தையும் பிரியத்தையும் பாராமல் அவர்களை விட்டுப் பிரியவேண்டுமென்பதே கருத்து.

27. தன் சிலுவையைச் சுமந்து கொண்டு, என் பிறகே வராத எவனும் எனக்குச் சீஷனாயிருக்கக் கூடாது.

28. அதேனென்றால், உங்களில் எவ னாவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அவன் முந்த உட்கார்ந்து அதைக் கட்டி முடிப்பதற்குத் தனக்கு அவகாசமுண்டோவென்று அறியும்படி அதற்குச் செல்லும் செலவைக் கணக்குப் பாராதிருப்பானோ?

29. இல்லாவிடில், அவன் அஸ்திவாரம் போட்டபின் முடிக்கமாட்டாதேபோனால், காண்கிற எல்லோரும் அவனை நகைக்கத் துவக்கி: 30. இந்த மனிதன் கட்டத் துவக்கினான், முடிக்கமாட்டாதேபோனான் என்று சொல்லுவார்களே.

31. அல்லது வேறொரு இராஜாவோடு யுத்தஞ்செய்யப்போகிற எந்த இராஜாவானாலும் முந்த உட்கார்ந்து, இருபதினாயிரம் பேரோடு தன்மேல் வருகிற அவனைப் பதினாயிரம்பேரோடு தான் எதிர்க்கக் கூடுமோவென்று ஆலோ சியாதிருப்பானோ?

32. அப்படிக் கூடாதென்று கண்டால், அவன் இன்னுந் தூரத்திலிருக்கும்போதே ஸ்தானாபதிகளை அனுப்பிச் சமாதானத்துக்கடுத்தவைகளைக் கேட்டுக்கொள்ளுவானல்லோ?

33. அவ்வண்ணமே உங்களில் எவனும் தனக்குள்ள யாவற்றையும் துறந்து விடாதிருந்தால், அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

* 28-33. இந்த இரண்டு உவமைகளுக்கும் அர்த்தமேதெனில், தனக்குள்ள யாவற்றையுந் துறந்துவிடத் துணியாமல், உத்தமதனத்தின் பாதையில் சேசுநாதரைப் பின்செல்ல வேண்டுமென்றிருக்கிறவன் செலவில்லாமல் கோபுரத்தைக் கட்டி முடிக்கப் பார்க்கிறவனைப்போலும், சேனையில்லாமல் சத்துருப் படையை முறியடித்து வெல்லப் போகிறவனைப் போலுமாவான் என்றர்த்தமாம்.

34. உப்பு நல்லதுதான்; ஆனால் அது காரமற்றுப்போனால் எதனால் காரமாக்கப்படும்? (மத். 5:13; மாற். 9:49.)

* 34. உப்பினால் ஞானஸ்நானங் குறிக்கப்படுகிறது. குருவானவர் ஒருவனுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்போது, கொஞ்சம் உப்பை அவனுடைய நாவில் வைத்து ஞானத்தின் உப்பை உட்கொள்ளென்று சொல்லுகிறார்.

35. அது பூமிக்காவது எருவுக்காவது உதவாமல் புறம்பே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளவன் கேட்கக்கடவான் என்று திருவுளம்பற்றினார்.