இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 13

தவஞ்செய்யவேண்டுமென்பதும், காய்ப்பில்லாத அத்திமரமும், ஓய்வுநாளில் ஒரு ஸ்திரீ குணப்பட்டதும், கடுகுவிதை, புளிக் காரம் முதலியவைகளின் உவமைகளும், ஜெருசலேமின் அழிவும்.

1. அக்காலத்திலே பிலாத்து என்பவன் கலிலேயருடைய பலிகளோடு கூட அவர்கள் இரத்தத்தையும் கலந்தானென்கிற சங்கதியை அங்கேயிருந்த சிலர் அவர்கள் விஷயமாய் அவருக்கு அறிவித்தார்கள்.

1. சேசுநாதர்சுவாமி காலத்தில் கலிலேயா தேசத்தான் ஒருவன் (அப். 5-ம் அதி. 37-ம் வச.) எழும்பி அநேகரைத் தன் பட்சமாய்த் திரட்டி செசாரிராயன் அஞ்ஞானியா யிருப்பதால், மெய்யான சர்வேசுரனைக் கும்பிடுகிறவர்கள் அவனுக்கு அடங்கி வரி செலுத் துகிறது தகாதென்று போதித்து, ஜனங்களுக்குள் கலகமுண்டாக்கினான்.  அப்போது பிலாத்து என்ற தேசாதிபதி அக்கலகக்காரரோடே யுத்தஞ் செய்யப்போய், அவர்கள் பலி யிட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்கள்மேல் பாய்ந்து அவர்களில் அநேகரைக் கொன்ற தினால் அவர்கள் இரத்தம் அவர்கள் கொடுத்த பலிகளின் இரத்தத்தோடு கலந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது. (கொர்னேலியுஸ் அலாப்பிதே.)

2. அவர் மறுமொழியாக அவர்களை நோக்கி: அந்தக் கலிலேயர் அப்படிக்கொத்த துன்பத்துக்கு உள்ளான தால், அவர்கள் எல்லாக் கலிலேயரிலும் பாவிகளாயிருந்தார்களென்று நினைக் கிறீர்களோ?  (அரு. 9:3)

3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் நீங்கள் தபஞ்செய்யாவிட்டால், எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

4. அவ்விதமே சீலோவேயில் கோபுரம் இடிந்து பதினெட்டுப் பேர் மேல் விழுந்து அவர்களைக் கொன்றதே.  அந்தப் பதினெட்டுப் பேரும் ஜெருசலே மில் குடியிருக்கிற மற்றெல்லா மனிதரிலும் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ ?

* 4. ஜெருசலேம் நகரின் கோட்டைச் சுவரையடுத்த சீலோவே என்னும் ஊற்றும் அந்த ஊற்றுக்கருகாமையில் ஒரு கோபுரமும் இருந்தது.  ஏதோ காரணத்தால் அந்தக் கோபுரம் இடிந்து விழவே, பதினெட்டுபேர் அதன்கீழ் அகப்பட்டு மடிந்தார்கள்.  இவர்களும் பிலாத்தினால் கொல்லப்பட்ட கலிலேயரும் சடுதியில் இறந்ததுபோல, பாவிகளும் மனந்திரும்பாதேபோனால், தேவ கோபாக்கினையால் சடுதி மரணமடைந்து நித்திய ஆக்கினைக்குள்ளாகலாம் என்பது கருத்து.

5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆனால் நீங்கள் தபஞ்செய்யாவிட்டால், எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

6. மேலும் இந்த உவமையையும் அவர்களுக்குத் திருவுளம்பற்றினார். ஒருவன் தன் திராட்சத் தோட்டத்திலே ஒரு அத்தி மரத்தை நட்டு வைத்திருந் தான்;  அதிலே அவன் கனியைத் தேடி வந்தும், அகப்படவில்லை.

7. ஆகையால் அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷ மாக இந்த அத்திமரத்தில் நான் கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றுங் காணவில்லை.  ஆகையால்  இதை  வெட்டிப்போடு;  ஏன் இடத்தை அடைத்துக்கொண் டிருக்கிறது என்றான்.

8.  அவனோ மறுமொழியாக: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; அதற்குள்ளாக நான் இதைச் சுற்றிலும் வெட்டி, எருப்போடுகிறேன்; 

9. கனிகொடுத்தால் சரி; கொடாவிட்டால் இனி இதை வெட்டிப்போடுவீர் என்று சொன்னான் என்றார்.

* 9. இந்த உவமைக்கு அர்த்தமாவது: இந்தத் திராட்சத் தோட்டத்தின் எஜமான் சர்வேசுரன்;  திராட்சத் தோட்டம் யூத சபை;  அத்திமரம் அச்சபையிலுள்ள யூதர்களாம்;  கனியோ பச்சாத்தாபக் கிரியைகளைக் கொடுக்கிற மனந்திரும்புதல்;  தோட்டக்காரன் பிரயாசைப்பட்ட மூன்று வருஷம் என்பது சேசுக்கிறீஸ்துநாதர் அவர்களுக்குப் பிரசங்கித்து வந்த காலம்;  இன்னம் கெடுவாக அதற்குக் கொடுக்கப்பட்ட காலம் என்பது அப்போஸ்தலர் அவர்களுக்குப் பிரசங்கித்த நாட்களாம்.  அதிலும் அவர்கள் மனந்திரும்பாததினாலே, அந்த அத்திமரத்துக்கு இடப்பட்ட ஆக்கினைக்கொப்பாக, அவர்களும் வேரோடு பிடுங்கப்பட்டாற்போல, தங்கள் தேசத்தினின்று துரத்தப் பட்டு, நாலாதேசங்களிலுஞ் சிதறுண்டு தேவ சாபத்துக்குள்ளாயிருக்கிறார்கள். தவக்கனி கொடாத பாவிகளுக்கும் இவ்விதம் சம்பவிக்கும்.

10. பின்னும் அவர் ஓய்வுநாளிலே அவர்களுடைய ஜெப ஆலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தார்.

11. அப்பொழுது இதோ, பதினெட்டு வருஷமாய் நோக்காட்டு அரூபி பிடித் திருந்த ஒரு பெண்பிள்ளை அங்கேயிருந் தாள்.  அவள் கூனியாய்ச் சற்றும் நிமிர்ந்து பார்க்கக்கூடாதவளாயிருந்தாள்.

12. சேசுநாதர் அவளைக் கண்டு, அவளைத் தமதருகில் அழைத்து: ஸ்திரீ யே, உன் நோக்காட்டினின்று விடுதலை யாக்கப்பட்டாய் என்று சொல்லி,

13. அவள்மேல் தமது கரங்களை நீட்டினார்.  உடனே அவள் நிமிர்ந்து, சர்வேசுரனை ஸ்துதித்தாள்.

14.  சேசுநாதர் ஓய்வுநாளிலே சொஸ் தப்படுத்தினதைப்பற்றி, ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்வதற்கு ஆறு நாட் கள் உண்டே, அந்த நாட்களிலே வந்து, செளக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வுநாளிலோ இது தகாது என்றான். 

15. அப்பொழுது ஆண்டவர் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: கள்ள ஞானிகளே, உங்களில் ஒவ்வொருவனும் தன் எருதையாவது கழுதையையாவது ஓய்வுநாளிலே தொழுவத்தினின்று அவிழ்த்து, தண்ணீர் காட்டக் கொண்டுபோகிறதில்லையோ ?

16. அப்படியிருக்க இதோ, பதினெட்டு வருஷமாகச் சாத்தான் கட்டி வைத்திருந்த அபிரகாமுடைய குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளிலே இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையோ? என்றார்.

17. அவர் இவைகளைச் சொல்லும் போது, அவருடைய எதிராளிகள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். சகல ஜனங்களும் அவரால் மகத்துவப்பிரதாபமாய்ச் செய்யப்பட்ட சகலகாரியங்களையும்பற்றிச் சந்தோஷப்பட்டார்கள்.

18. மேலும் அவர் திருவுளம்பற்றினதாவது: சர்வேசுரனுடைய இராச்சியம் எதற்கு ஒப்பாயிருக்கிறது?  அதை எதற்கு நிகராக மதிப்பேன்?  

19. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கின்றது.  அதை ஒரு மனிதன் எடுத்துத் தன்னுடைய தோட்டத்திலே போட, அது ஓங்கி வளர்ந்து பெரிய விருட்சமாயிற்று. ஆகாயத்துப் பறவை கள் அதன் கிளைகளிலே வந்து தங்கின என்றார்.  (மத். 13:31;  மாற். 4:31.)

* 19. மத். 13-ம் அதி. 32-ம் வசன வியாக்கியானம் காண்க.

20. மறுபடியும் அவர் சொன்னதாவது: சர்வேசுரனுடைய இராச்சியத் தை எதற்கு ஒப்பாக எண்ணுவேன் ?

21. மூன்று மரக்கால் மாவு முழு தும் புளிப்பேறும்படிக்கு அதற்குள் ஓர் ஸ்திரீ எடுத்துத் திணித்துவைத்த புளிக்காரத்துக்கு ஒப்பாயிருக்கின்றது என்றார்.  (மத். 13:33.)

* 21. மத். 13-ம் அதி. 33-ம் வசன வியாக்கியானம் காண்க.

22. பின்னும் அவர் ஜெருசலேம் நகரத்துக்குப் பிரயாணமாகி, பட்டணங் கள், கிராமங்கள் வழியாய் உபதேசித் துக்கொண்டு போகும்போது,  (மத். 9:35.)

23. ஒருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் கொஞ்சம்பேரோ என்றான்.  அவரோ வெனில் அவர்களுக்குச் சொன்னதாவது:

24. நெருக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்; ஏனெனில் அநேகர் உட்பிரவேசிக்கத் தேடுவார்கள்;  அவர்களால் கூடாமற் போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (மத். 7:13.)

25. வீட்டெஜமான் உட்பிரவேசித்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று: சுவாமி, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கத வைத் தட்டத் துவக்குவீர்கள்.  அவர் மாறுத்தாரமாக; நீங்கள் எவ்விடத்தா ரோ, உங்களை அறியேன் என்று உங்க ளுக்குச் சொல்லுவார்.  (மத். 25:10-12.)

26. அப்பொழுது நீங்கள்: உமது சமுகத்திலே நாங்கள் போசன பானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் உபதேசித்தீரே என்று சொல்லத்  துவக்குவீர்கள்.

27. ஆயினும் அவர் உங்களை நோக்கி: நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன்.  அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள் என்பார்.
(மத். 7:23;  25:41;  சங். 6:9.)

28.   அப்பொழுது அபிரகாம், ஈசாக், யாக்கோப் என்கிறவர்களும், சகல தீர்க்கதரிசிகளும் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் இருக்கிறதையும், நீங்க ளோ, வெளியே தள்ளுண்டவர்களா யிருக்கிறதையும் காண்கையில், அங்கே உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும்.

29. அன்றியும் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து அநேகர் வந்து, சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பந்தியமருவார்கள்.

30. மேலும் இதோ, கடைசியாயிருக்கிறவர்கள் முதல்வர்களாயிருப்பார்கள், முதல்வர்களாயிருக்கிறவர்கள் கடைசியானவர்களாயிருப்பார்கள் என்றார்.  (மத். 19:30; 20:16;  மாற். 10:31.)

* 30. யூதர்கள் முந்தியும் அஞ்ஞானிகள் பிந்தியும் சர்வேசுரனை அறியும்படி அழைக்கப்பட்டிருந்தாலும். அஞ்ஞானிகள் யூத ஜாதியாருக்கு முந்திப் பரலோக இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்களென்று அர்த்தமாம்.

31.  அன்றையத்தினத்திலே பரிசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து: நீர் இவ் விடம் விட்டுப் புறப்பட்டுப்போம்;  ஏனென்றால் ஏரோது உம்மைக் கொலை செய்ய மனதாயிருக்கிறான்  என்றார்கள்.

32. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் போய்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பசாசுகளைத் துரத்துகிறேன்; வியாதிக்காரரைச் சொஸ்தமாக்குகிறேன்; மூன்றாம் நாளிலோ முற்றும் முடிவையடைகிறேன் என்று அந்த நரிக்குச் சொல்லுங்கள்.

* 32. நரிக்கு ஒப்பான கபடுள்ள இந்த ஏரோதரசன் என்னை கபடமாய்ப் பிடித்து கொல்லத் தேடுகிறான்.  ஆனால் அவன் வஞ்சனைக்கு நான் பயப்படுகிறதில்லை. என் சித்தத்தின்படிக்குச் சில நாள் என் கிரியைகளை நடத்திக்கொண்டு வருவேன்; பிற்பாடு எனக்குச் சித்தமாயிருக்கும்போது, நான் ஜெருசலேமுக்குப் போய் அங்கே மனிதர்களுடைய இரட்சண்யத்துக்காக என் பிராணனைக் கொடுப்பேன்;  அதுவரைக்கும் என்மேல் கைநீட்ட ஒருவனாலும் முடியாது என்பது கர்த்தர் சொல்லுவதின் கருத்தாம்.

33. ஆகிலும் இன்றும் நாளையும் மூன்றாம் நாளிலும் நான் நடமாட வேண்டியது. ஏனெனில் ஒரு தீர்க்கதரிசியும் ஜெருசலேம் நகருக்கு வெளியே மடிவது தகாது.

34. ஜெருசலேமே, ஜெருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன்னிடத்தில் அனுப்பப்படுகிறவர்களைக் கல்லால் எறிகிறாயே;  பட்சியானது கூட் டிலுள்ள தன் குஞ்சுகளை இறக்கையின் கீழ் அணைத்துக்கொள்ளுவது போல, எத்தனையோ முறை உன் மக்களையும் அணைத்துக்கொள்ள விரும்பினேன், உனக்கு மனமில்லாமற் போயிற்றே.  (மத். 23:37-39.)

35. ஆகையால் இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாய் விடப்படும். மேலும், கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவரென்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணமாட்டீர்கள் என்று  உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  (லூக். 19:43.)