இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

12-ம் சிங்கராயர்

1827ல் 12ம் சிங்கராயர் என்ற பாப்பு அர்ச். பிலோமி னம்மாளின் அர்ச். பட்டத்திற்கான முன்னோடி ஆய்வுகளைத் தொடங்கி வைத்தார். அப்போது அதிசங். பிலிப்பு லுடோ விச்சி என்ற குருவானவர் உரோமையில் அர்ச்சியசிஷ்டவர்களின் திருப்பண்டங்களின் காப்பாளராக இருந்தார். முஞ்ஞானோவுக்கு அர்ச். பிலோமினம்மாளை 1805-ல் கொண்டு வந்ததிலிருந்து நிகழ்ந்த புதுமைகளின் திரட்டு என்று ஒரு புத்தகம் சங். லூஸியாவின் பிரான்ஸிஸ் கோவால் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தின் 2ம் பதிப்பை அதிசங். பிலிப்பு லுடோவிச்சி 12ம் சிங்க ராயரிடம் சமர்ப்பித்தார். பாப்பரசர் அந்தப் புதுமைகளால் கவரப்பட்டு இத்தகைய வல்லமையைத் தம் புனிதர்களுக்குக் கொடுத்த இறைவனை வாழ்த்தினார்.

12ம் சிங்கராயர் அர்ச். பிலோமினம்மாளை மிகவும் வியந்து பாராட்டிய முக்கிய காரணம், அவள் முஞ்ஞானோவுக்கு வந்ததிலிருந்து அந்தப் பட்டணத்திலும் சுற்றிலுமுள்ள கிராமங்கள், இதர பட்டணங்களிலும், பிலோமினாளின் சிறிய சகோதரிகள் என்ற பெயரில் ஏராளமான இளம் கன்னிகைகள் அவளது முன்மாதிரிகையைப் பின்பற்றி தங்கள் கன்னிமையை தங்கள் இல்லங்களில் இருந்தபடியே காப்பாற்றி உத்தமதனம் அடைந்து வந்ததுதான். ஆகவே அவர் அர்ச். பிலோமினம்மாள் பெயரால் பீடங்களையும் சிற்றாலய சேத்திரங்களையும் அமைத்து அர்ச். பிலோமினம்மாளுடைய புண்ணியங்களைப் பின்பற்றவும் பரப்பவும் அனுமதியளித்தார். இந்தப் பாப்பரசர்தான் அர்ச். பிலோமினம்மாள் பெரிய அர்ச்சியசிஷ்டவள் என்று அழைத்தார்.