இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 10. அற்புதங்கள்

அர்ச். சாமிநாதர் கார்க்காசோன் என்ற இடத்தில் ஜெபமாலையைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கு ஒரு பதிதன் ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் கடவுளின் அற்புதங்களையும் கேலி செய்து பேசியதால் அங்குள்ள மற்ற பதிதர்கள் மனம் திரும்புவதற்கு அது தடையாயிருந்தது. அவனுக்குத் தண்டனையாக அவன் உடலுக்குள் *பதினையாயிரம் பேய்கள் நுழையும்படி இறைவன் அனுமதித்தார். (பதினையாயிரம் பேய்கள் என்றதும் நாம் மலைக்க வேண்டியதில்லை. மாற்கு சுவிசேஷம் 5-ம் அதிகாரத்தில் பேய் பிடித்த ஒரு மனிதனிடம் சேசு உன் பெயரென்ன' என்று கேட்ட போது அவன் 'படை' என்றான். அதாவது ஒரு சேனையளவு தொகையுள்ள பேய்கள் அவனிடம் புகுந்திருந்தன!)

அம்மனிதனிடமிருந்து பேய்களைத் துரத்தும்படியாக அவன் பெற்றோர் அவனை அர்ச்சிஷ்ட சாமிநாதரிடம் கொண்டு வந்தார்கள். அர்ச். சாமிநாதர் ஜெபிக்க ஆரம்பித்தார். அங்கிருந்த எல்லோரையும் தன்னுடன் சேர்ந்து ஜெபமாலையை சத்தமாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் அவ்வாறு ஜெபிக்கையில் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திற்கும் நூறு பேய்களை அம்மனிதனிடமிருந்து வெளியே துரத்தினார்கள் நம் தேவ அன்னை . பழுக்கக் காய்ந்து எரியும் நிலக்கரித் துண்டுகள் போல அம்மனிதனின் உடலிலிருந்து பேய்கள் வெளிப்பட்டன.

பேய்கள் துரத்தப்பட்ட பின் அம்மனிதன் தன் முந்திய தப்பறைகளை யெல்லாம் தள்ளி விட்டான். மனம் திருந்தினான். ஜெபமாலைப் பக்தி சபையில் உட்பட்டான். அவனுடன் மற்ற அநேகரும் அவ்வாறே செய்தனர். அவனுக்கு நேர்ந்த தண்டனையையும் ஜெபமாலையின் வல்லமையையும் கண்டு மிகவும் உணர்ச்சியடைந்து அவ்வாறு செய்தனர்.

அறிவிற்சிறந்த கார்த்தஜெனா என்பவர் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தவர். இவரும் இன்னும் பல ஆசிரியர்களும் 1482-ம் ஆண்டில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். அதாவது. அதே சபையைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் ஸ்ப்ரெஞ்ஜரும் அவருடைய சகோதர துறவிகளும் கொலோன் நகரில் ஜெபமாலைப் பக்தி சபையை ஏற்படுத்த ஊக்கமாக உழைத்து வந்தனர்.

அதனால் இவர்களுக்கு மக்களிடையே ஏற்பட்ட புனிதமான செல்வாக்கைக் கண்டு வேறு இரு குருக்கள் பொறாமை கொண்டனர். இவ்விருவரும் திறமையாகப் பிரசங்கிப்பார்கள். எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும், இக்குருக்கள் ஜெபமாலையைத் தாக்கிப் பேசினர். அவர்கள் மிக்க வாய்ச்சாலகம் உடையவர்களானதாலும் மக்களிடையே பெரும் மதிப்புப் பெற்றிருந்ததாலும் ஜெபமாலைப் பக்தி சபையில் சேராதபடி அநேகரைத் தடுத்து வந்தனர்.

இக்குருக்களில் ஒருவர் தம் தீய குறிக்கோளை அடைந்தே தீருவதென்று உறுதி எடுத்துக் கொண்டார். ஜெபமாலையைத் தாக்கி ஒரு தனிப்பிரசங்கம் தயாரித்தார். அதை வருகிற ஒரு ஞாயிறன்று சொல்லவும் தீர்மானித்திருந்தார். பிரசங்க நேரம் வந்தது, குருவை காணோம். கொஞ்ச நேரம் எல்லோரும் காத்திருந்தார்கள், வரவில்லை . அவரை அழைத்து வர ஒரு மனிதன் சென்றான். அங்கே அவர் இறந்து கிடந்ததைக் கண்டான். தன்னந்தனியே, உதவ யாரும் இன்றி, எந்தக் குருவையும் பார்க்காமலே இறந்து கிடந்தாரென்பது தெளிவாகியது.

இவ்வாறு அவர் இறந்தது இயற்கையின் காரணமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன்னையே திடப்படுத்திக் கொண்டார் மற்ற குரு. தன் நண்பனின் திட்டத்தை தான் நிறைவேற்றத் தீர்மானித்தார். அவர் தயாரித்திருந்தது போலவே வேறு ஒரு பிரசங்கத்தை இன்னொரு நாள் சொல்லிவிட முடிவு செய்தார். இதனால் ஜெபமாலை பக்தி சபையை அழித்து விடலாமென நம்பினார். அதன்படி அவர் பிரசங்கிக்க குறிக்கப்பட்ட நாள் வந்தது. குறிப்பிட்ட நேரமும் வந்தது. கடவுள் அவரைத் தண்டித்தார். திமிர் வாதத்தால் அவரை அடித்து வீழ்த்தினார். ஒரு அவயமும் அசைவதாயில்லை. வாய்ப் பேச்சும் நின்று விட்டது!

கடைசியில் தன் பாவத்தை அக்குரு ஒப்புக் கொண்டார். தன் நண்பனின் பாவத்தையும் உணர்ந்தார். தன் இருதயத்தில் தேவ அன்னையை கூவியழைத்தார். அவர்கள் தனக்கு உதவ வேண்டுமென மவுனமாக வேண்டினார். எனக்கு சுகம் அளித்தால், நான் முன்பு எந்த அளவு ஜெபமாலையை எதிர்த்து போராடினேனோ அந்த அளவு ஆர்வத்துடன் ஜெபமாலையைப் பிரசங்கிப்பேன் என தேவ அன்னைக்கு வாக்குறுதி கொடுத்தார். இதற்காக அவ்வன்னை தன் உடல் நலத்தையும் பேசும் ஆற்றலையும் மீண்டும் தர வேண்டும் என உருகி மன்றாடினார். தேவ அன்னையும் அவரைக் குணப்படுத்தினார்கள். திடீரென தான் குணமடைந்ததை உணர்ந்த அவர் சவுலைப் போல் எழுந்தார். ஜெபமாலையைத் துன்புறுத்தியவர் அதைப் பாதுகாப்பவராக மாறினார். தன் முந்திய தப்பறையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அன்று முதல் ஜெபமாலையின் அதிசயங்களை மிகுந்த ஆர்வத்துடனும் சொல்வன்மையுடனும் பிரசங்கித்தார்.

கண்டதையும் குறை சொல்லும் குணமுடைய இக்காலத்தவரும் சுய மரியாதைக்காரரும் இச்சிறு நூலிலுள்ள சம்பவங்கள் உண்மைதானா என்று பிரச்சனை கிளப்புவார்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏறக்குறைய எல்லாக் காரியங்களையும் அவர்கள் கேள்வி கேட்பது போலவே இதிலும் செய்வார்கள். ஆனால் நான் தற்கால நல்ல எழுத்தாளர்களின் நூல்களில் உள்ளபடியே இங்கு இவற்றைப் பெயர்த்து எழுதியுள்ளேன். 'தேவ இரகசிய ரோஜா செடி' என்ற பெயரில் சங். அந்தோனின் தாமஸ் என்பவர் சில காலத்துக்கு முன் எழுதிய ஒரு நூலின் சில பகுதிகளையும் சேர்த்துள்ளேன்.

பல வகை வரலாறுகளை மூன்று வகையான நிச்சயத்துடன் நாம் நம்புகிறோம்.

வேதாகமத்திலுள்ள சம்பவங்களை - நாம் தேவ விசுவாசத்துடன் ஏற்கிறோம்.

தேவ சம்பந்தமில்லாமலிருந்தாலும் அறிவுக்குப் பொருந்துவதாகவும் நம்பிக்கைக்குரியவர்களால் எழுதப் பட்டதுமான நிகழ்ச்சிகளை மனித விசுவாசத்துடன் ஏற்கிறோம்.

புனிதமான பொருள்கள் பற்றி நல்ல ஆசிரியர்களால் எழுதப்பட்டவையும் அறிவுக்கு ஏற்றவையும் விசுவாசம் நல்லொழுக்கம் இவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வையுமான சம்பவங்களை - இவைகள் சில சமயம் சாதாரணமான நிலைக்கு மேற்பட்டவையாக இருப்பினும் - மரியாதையான விசுவாசத்துடன் ஏற்கிறோம்.

நாம் எதையும் நம்பக் கூடியவர்களாகவும் இருக்கக்கூடாது. எதையும் கேள்வி கேட்பவர்களாகவும் இருக்கக்கூடாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். 'நடுவில் வாழ்கின்றது நற்செயல் ; எங்கே உண்மை உள்ளது, எங்கே போய் இருக்கின்றது என்பதைக் காணும் பொருட்டு ஒரு நடுநிலையில் நிற்றல் வேண்டும். அதே நேரத்தில் 'அன்பு அனைத்தையும் விசுவசிக்கும்...' (1 கொரி. 13.7) என்றபடி விசுவாசத்திற்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் முரணில்லாத எதையும் ஏற்றுக் கொள்ள அன்பு நம்மை எளிதில் கொண்டு செல்லும் என்பதையும் நான் அறிவேன். ஆனால் அகங்காரம் நல்ல ஆதாரமுள்ள, சம்பவங் களையும், அவை வேதாகமத்தில் இல்லையென்பதற்காக அவற்றை சந்தேகிக்கத் தூண்டி விடுகிறது.

பசாசின் கண்ணிகளில் இதுவும் ஒன்றாகும். முன்நாட்களில் பாரம்பரியத்தை மறுத்த பதிதர்கள் இக்கண்ணியில் சிக்கினார்கள். இந்நாட்களில் அளவுக்கு மீறி குற்றங்காண்பவர்கள் அதில் விழுந்து கொண்டிருக் கிறார்கள். தங்களை அறியாமலே விழுகிறார்கள்.

இவ்வகை மனிதர்கள் தாங்கள் கண்டுபிடியாததையும் தங்களுக்குப் பிடித்தமில்லாததையும் தங்களின் ஆங்கார சுய நிர்ணயப் போக்கினால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

குறிப்பு ரோஜா மலர் 10 வரையிலும் ஒரு முன்னுரை போல் எழுதி வந்த அர்ச். லூயிஸ் மரியமொன்போர்ட் இனி ஜெபமாலையைக் கையில் எடுத்து விளக்க முன் வருகின்றார். ரோஜா மலர் 11, ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்திலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த முறை ஒப்பற்ற சிறப்புடையது.