இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 10

எழுபத்திரண்டு சீஷர்கள் பிரசங்கிக்க அனுப்பப்பட்டதும், தேவசிநேக பிறர் சிநேகக் கற்பனைகளும், மரியம்மாள் மார்த்தம்மாள் இவர்களைப்பற்றிய விசேஷங்களும்.

1. இவைகளுக்குப்பின் கர்த்தர் வேறே எழுபத்திரண்டு பேரையும் நியமித்து, தாம் போகவிருந்த சகல பட்டணங்களுக்கும், இடங்களுக்கும், தமது சமுகத்துக்கு முன்பாக அவர்களை இருவரிருவராக அனுப்பி,

2.  அவர்களுக்குச் சொன்னதாவது: அறுப்பு மிகுதியாம், வேலையாட்களோ கொஞ்சம்பேர்;  ஆதலால் தன் அறுப் புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வெள்ளாண்மைக்குஎஜமானை மன்றா டுங்கள்.  (மத். 9:37.)

* 2. மத். 9-ம் அதி. 38-ம் வசன வியாக்கியானம் காண்க.

3. புறப்பட்டுப் போங்கள்;  இதோ, ஆட்டுக்குட்டிகளை ஒநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோலே, நான் உங்களை அனுப்புகிறேன்.  (மத். 10:16.)

4. பணப்பையையாவது கைச்சோளியையாவது பாதரட்சைகளையாவது கொண்டுபோகவேண்டாம்;  வழியில் ஒருவரையும் வினவவும் வேண்டாம். (மாற். 6:8;  4 அரச. 4:29;  லூக்.9:1-5.)

* 4. வழியில் ஒருவரையும் வினவவேண்டாமென்று ஆண்டவர் சொல்லும்போது, தேவ தொழிலுக்கு ஏற்பட்டவர்கள் பிரயாணம் போகையில், வழியிலே அவசரமின்றித் தங்கியிருக்கவும், வீண்காலம் போக்கவும் வேண்டாமென்று விலக்கினாரொழிய, எதிர்ப்பட்ட அறிமுகமுள்ளவர்களுக்கு மங்கள வார்த்தை முதலாய்ச் சொல்லாமல் போகவேண்டுமென்று அர்த்தமல்ல.  பழைய ஏற்பாட்டில் 4 அரச. 4-ம் அதி. 29-ம் வசன த்தில், எலிசேயு தீர்க்கதரிசியானவர் தன் சீஷனைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் ஊன்றுகோலை உன் கையில் பிடித்துக்கொண்டு வழியில் ஒருவன் எதிர்ப்பட்டாலும், அவனுக்கு மங்கள வார்த்தை சொல்லாமலும், உனக்கு ஒருவன் மங்கள வார்த்தை சொன்னாலும்,  நீ அவனுக்குப் பதில்மொழியுரையாமலும் போய் என் கோலை இறந்துபோன பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றார்.  இதைக்கொண்டு மங்கள வார்த்தை சொல்லுதல் சட்ட திட்டமாய் விலக்கப்பட்டதென்று சொல்லப்படாது. காலத்தை வீண்போக்காமல் தனது தொழிலின் மேல் முழுதும் கருத்தாயிருக்கவேண்டு மென்று காண்பிக்கப்படுகிறது.

5. நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும்: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.

6.  சமாதான புத்திரன் அங்கேயிருந்தால், உங்கள் சமாதானம் அவன்மேல் தங்கும்;  இல்லாதிருந்தால், அது உங்களிடத்தில் திரும்பிவரும்.

7.  அந்த வீட்டில்தானே தங்கி, அவர்களிடத்தில் உள்ளவைகளைப் புசித்துப் பானஞ்செய்யுங்கள்.  ஏனெனில் வேலைக்காரன் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.  வீட்டுக்கு வீடு போகாதேயுங்கள்.  (உபாக. 24:14;  மத். 10:10;   1 தீமோ. 5:18.)

8.  அவ்வண்ணமே நீங்கள் எந்தப் பட்டணத்தில் பிரவேசித்தாலும், அந்தப் பட்டணத்தார் உங்களை எற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுக்குப் பரிமாறு கிறவைகளைப் புசித்து,

9. அவ்விடத்திலுள்ள நோயாளிகளைச் சொஸ்தமாக்கி, சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களுக்குச் சமீபித்தது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

10. எந்தப் பட்டணத்திலாவது நீங்கள் பிரவேசிக்கையில், அந்தப் பட்ட ணத்தார் உங்களை ஏற்றுக்கொள்ளா திருந்தால், நீங்கள் அதன் தெருவீதிகளில் புறப்பட்டு:

11. உங்கள் பட்டணத்திலிருந்து எங்கள்மேல் ஒட்டிய தூசியையும் உங்க ளுக்கு எதிரிடையாக உதறிப் போடுகி றோம்.  ஆகிலும் சர்வேசுரனுடைய இராச்சியம் சமீபித்ததென்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்.  (அப். 13:51.)

12. அந்த நாளிலே இப்பட்டணத்தைவிட சோதோம் நகருக்குத் (தண்டனை) குறைவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

13. கொர்சயிம் நகரமே, உனக்கு ஐயோ கேடு!  பெத்சாயிதா நகரமே, உனக்கு ஐயோ கேடு!  உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே மயிர்ச்சட்டையணிந்து சாம்பலில் உட்கார்ந்து தவஞ் செய்திருப் பார்கள்.  (மத். 11:21.)

14.   ஆதலால் நடுத்தீர்வையிலே உங்க ளைவிடத் தீர், சீதோன் நகரங்களுக்குத் தண்டனை குறைவாயிருக்கும்.

* 14. மத். 11-ம் அதி. 22-ம் வசன வியாக்கியானம் காண்க.

15. நீயோ, வானமட்டும் உயர்த்தப்பட்ட கப்பர்நாவுமே, பாதாளமட்டும் அமிழ்த்தப்படுவாய்.

16. உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான். உங்களைப் புறக்கணிக்கிறவன் என் னைப் புறக்கணிக்கிறான்.  என்னைப் புறக்கணிக்கிறவனோ, என்னை அனுப் பினவரைப் புறக்கணிக்கிறான் என்று திருவுளம்பற்றினார்.  (மத். 10:40;  அரு. 13:20.)

17. பின்பு எழுபத்திரண்டு சீஷர்களும் சந்தோஷமாய்த் திரும்பிவந்து: ஆண்டவரே, தேவரீருடைய நாமத்தினாலே பசாசுக்கள் முதலாய் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்றார்கள்.

18. அவர்களுக்கு அவர் திருவுளம்பற்றினதாவது: சாத்தான் மின்னலைப்போல வானத்தினின்று விழுகிறதைக் கண்டேன்.

* 18. லூசிப்பேர் என்ற பசாசானது முன் எவ்வளவு மேலான வரங்களைப் பெற்றிருந்தும், அகங்காரத்தால் கெட்டு நரகத்தில் விழுந்துபோனதே. ஆகையால் நீங்களும் உங்களுக்கு அளிக்கப்பட்ட வரங்களால் அகங்காரியாகாமல் தாழ்ச்சியா யிருக்கவேண்டுமென்று கர்த்தர் கற்பிக்கிறார்.

19. இதோ சர்ப்பங்களையும், தேள்களையும், சத்துருவின் வல்லமை யாவையும் மிதிக்கும்படி உங்களுக்கு அதிகாரம் தந்தேன், உங்களுக்கு ஒன்றும் தீங்கு செய்யாது.

20. ஆயினும் அரூபிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைப்பற்றி நீங்கள் சந்தோஷப்படவேண்டாம்; உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பற்றியே சந்தோஷப்படுங்கள் என்றார்.

21. அந்நேரமே அவர் இஸ்பிரீத்துசாந்துவினால் களிகூர்ந்து: பிதாவே, பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் கர்த்தாவே!  நீர் இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து, சிறியோர்களுக்கு வெளிப்படுத்தினபடியால், நான் உம்மை ஸ்துதிக்கிறேன். ஆம், பிதாவே, இவ்விதஞ் செய்வது உமது திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

22. என் பிதாவினால் சகலமும் எனக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது;  மேலும் பிதா தவிர வேறொருவனும் சுதன் இன்னாரென்று அறியான்; சுதனும் சுதன் யாருக்கு அறிவிக்கச் சித்தமா யிருப்பாரோ அவனும் தவிர வேறொரு  வனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.

23. பின்னும் அவர் தம்முடைய சீஷர்கள் பக்கமாய்த் திரும்பிச் சொன்னதாவது: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியம் பெற்ற வைகள்.  (மத்.13:16.)

24. ஏனெனில் அநேகம் தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பி யிருந்தாலும், அவர்கள் காணவுமில்லை, கேட்கவுமில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

25. அப்பொழுது இதோ, நீதிசாஸ்திரியொருவன் எழுந்து, அவரைச் சோதிக்கத்தக்கதாக: போதகரே, நான் என்னத்தைச் செய்து, நித்திய சீவியத்தை அடைவேன் என்று கேட்க, (மத். 22;35;  மாற். 12:28-34.)

26. அவர் அவனை நோக்கி: வேதப்பிரமாணத்தில் எழுதப்பட்டிருக்கிறதென்ன?  எவ்வாறு வாசிக்கிறாய் என்று கேட்டார்.

27. அதற்கு அவன் பிரத்தியுத்தாரமாக: உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்து மத்தோடும், உன் முழு சத்துவங்களோ டும், உன் முழு மனதோடும் சிநேகிப் பாயாக;  உன்னைப்போல உன் பிறனை யும் சிநேகிப்பாயாக (என்று எழுதி யிருக்கிறது) என்றான்.  (உபாக. 6:5;  லேவி. 19:18.)

28. அவர் அவனை நோக்கி: நீ சரியாய்ப் பதிலுரைத்தாய்;  அப்படியே செய்;  அப்போது பிழைப்பாய் என்றார்.

29. அவனோ, தன்னை  நீதிமானென்று காண்பிக்க விரும்பி, சேசுநாதரைப் பார்த்து: என் பிறன் யார் என்று கேட்டான்.

30. சேசுநாதர் மறுமொழியாகத் திருவுளம்பற்றினதாவது: ஒரு மனிதன் ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோ நக ருக்கு இறங்கிப் போகையில், கள்ளர் கையில் அகப்பட்டான்.  அவர்கள் அவனி டத்திலிருந்ததையெல்லாம் பறித்துக்  கொண்டு, அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுப்போனார்கள்.

* 30. ஜெருசலேமிலிருந்து இறங்கின இந்த மனுஷன் யூதஜாதியானென்றும், அடுத்த 31-ம் வாக்கியத்தில் சொல்லியிருக்கிற குரு யூதஜாதியாருடைய குருவென்றும், 33-ம் வாக்கியத்தில் குறித்திருக்கிற சமாரியன் யூதஜாதியாருக்குப் புறம்பானவனென்றும்,       இவ்விரு ஜாதியாருக்குள் உண்பன தின்பன கிடையாதென்றும் அறிக.  (அரு. 4-ம் அதி. 9-ம் வச.) இங்கு சொல்லப்பட்ட உதாரணம் நன்றாய் விளங்கும்படி இத்தேசத்திலே குருக்களென்று விளங்குகிற பிராமணர் தங்கள் தேசத்தார்மட்டில் நடக்கிற வகையையும், சமாரியருக்கு ஒப்பான சத்தியவேதக் குருக்கள் இத்தேசத்தாரை நடத்துகிற வகையையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது.

31. அத்தருணத்தில்  ஆசாரியன் ஒருவன் அவ்வழியாய் வரும்படி நேர்ந்தது.  ஆனாலும் அவனைக் கண்டு, அப்பாலே போய்விட்டான்.

32.  அவ்விதமே, ஒரு லேவித்தனும் அவ்விடத்துக்குச் சமீபமாய் வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

33. ஆனால் வழிப்போக்கனான சமாரியன் ஒருவன் அவனருகே வந்து, அவனைக் கண்டு மனமிரங்கி,

34. கிட்ட அணுகி, எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து அவனுடைய காயங்களைக் கட்டி, அவனைத்தன் வாகனத்தின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்தில் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.

35.  மறுநாள் அவன் இரண்டு தெனியர் நாணயங்களை எடுத்துச் சத்திரக்காரனுக்குக் கொடுத்து: இவனை விசாரித்துக்கொள்; நீ அதிகமாய்ச் செலவழித் திருப்பதையெல்லாம் நான் திரும்பி வரும்போது, உனக்கு உத்தரிப்பேன் என்றான்.

36. ஆகையால் கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்று பேரில் எவன் பிறனாயிருந்தான் என்றார்.

37. அதற்கு அவன்: அவனுக்குத் தயை செய்தவனே என்றான். அப்போது சேசுநாதர் அவனை நோக்கி: நீயும் போய், அவ்விதமே செய் என்றார்.

38. பிற்பாடு சம்பவித்ததேதென்றால், அவர்கள் பிரயாணமாய்ப் போகை யில் அவர் ஒரு ஊரிலே பிரவேசித்தார்.  அவ்விடத்தில் மார்த்தம்மாள் என்னப் பட்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள்.  (அரு. 11:1;  12:2.)

39.  இவளுக்கு மரியம்மாளென்னும் பெயருள்ள ஒரு சகோதரி இருந்தாள்.  அவள் ஆண்டவருடைய பாதத்தின் கிட்ட உட்கார்ந்து, அவருடைய வாக்கி யத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

40.  மார்த்தம்மாளோ பற்பல வேலைகளைப் பரபரப்புடன் செய்து வரு கையில் (சேசுநாதருக்கு முன்பாக) வந்து நின்று: ஆண்டவரே, என் சகோதரி என்னைத் தனியே வேலை செய்ய விட்டிருக்கிறதைப்பற்றித் தேவரீருக்குக் கவலையில்லையா?  அவள் எனக்கு உதவி செய்யக் கற்பித்தருளும் என்றாள்.

41. ஆண்டவர் அவளுக்குப் பிரத்தி யுத்தாரமாக: மார்த்தாளே, மார்த்தா ளே, நீ அநேக காரியங்களைப்பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42.  ஆயினும் ஒரு காரியந்தான் அவ சரம். மரியம்மாள் உத்தமமான பங்கைத் தெரிந்துகொண்டாள்.  அது அவளிடத்தி னின்று எடுபடமாட்டாது என்று திரு வுளம் பற்றினார்.

* 42. சேசுநாதர்சுவாமி தமது பசியாற்ற ஒருவகை உணவு இருந்தால் போதும், பலவகை செய்ய அவசியமில்லையென்று மார்த்தம்மாளுக்குப் புத்திசொல்லி, மரியம்மாள் தேவ வாக்கைக் கேட்கிறதிலே முழுவதும் கருத்தாயிருக்கிறதினால், அவள் செய்கிறது உத்தமமான காரியம்; அதற்குத் தடை செய்யப்படாதென்று படிப்பிக்கிறார். (மெனோக்கியுஸ்). இது இயல்பான அர்த்தமாயினும் ஞான அர்த்தத்திலே ஒரே காரியம் அவசியமென்பது, மனிதரெல்லோருக்கும் மகா முக்கியமாகிய ஆத்தும இரட்சணியமே அவசியமானதென்று அர்த்தமாகும்.