இங்கிலாந்து தேசத்தார் அஞ்ஞானிகளாயிருந்த பூர்வீக காலத்தில், அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதிக்கும்படி அர்ச். அகுஸ்தீன் என்பவரும், அவரோடு சில குருக்களும் போனார்கள். அத்தேசத் திலிருந்த அஞ்ஞான அரசன் தன் மந்திரி பிரதானிகள் முதலிய இராஜ சமஸ்தானம் முன்பாக அகுஸ்தீன் என்பவரை அழைத்து அவர் செய்த பிரசங்கத்தைக் கேட்டான்.
அந்தப் பிரசங்கத்தில், அகுஸ்தீன் மனிதன் யாரென்றும், அவன் உலகத்தில் வந்த காரணம் எதுவென்றும், மனிதனுக்கு இரட்சணியம் சேசுநாதரால் எப்படி வந்த தென்றும், மனிதன் இறந்தபின் அவனுக்கு வரும் கதி ஏதென்றும் விரிவாய் விவரித்தார். அரசனும் அங்கு கூடிய சபையோர் எல்லா ரும் கவனமாய் இந்தப் புதிதான பிரசங்கத்தைக் கேட்டார்கள்.
பிரசங்கம் முடிந்த பின், அரசன் தன் மந்திரிகளிடம் இந்தப் புதிய வேதத்தின் மட்டில் அவர்கள் கொள்ளும் அபிப்பிராயம் என்னவென்று வினவி னான். பலபேர் பலவிதமான அபிப்பிராயம் கொண்டார்கள். ஆனால் அவர்களுக்குள் நரை திரை விழுந்த மதியூகியான மந்திரி எழுந்து அரசனை வணங்கிச் சொல்வான்:
பேரரசே! அதோ அங்கே நிற்கும் மரத்தைப் பாருங்கள். அதன் மேல் ஒரு பறவை கூடு கட்டியிருக்கிறது. அந்தக் கூட்டுக்குள் இப்போது பறவைநுழைந்தது. இதோ பாருங்கள் . அந்தப் பறவை வெளியே பறந்து போகிறது. பேரரசே! அந்தப் பறவை எங்கேயிருந்து பறந்து வந்து கூட்டுக்குள் பிரவேசித்தது? கூட்டுக்குள் போனபின் அது என்ன செய்தது? இப்போது எங்கே பறந்து போனது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல யாரால் முடியும்? இது போல், இந்த மனித ஜென்மத்துக்கு எங்கேயிருந்து உயிராகிய ஆத்துமம் வந்தது? ஆத்துமம் சரீரமாகிற கூட்டுக்குள் இருக்கு மட்டும் அதன் வேலையென்ன? இனி சரீரத்தை விட்டு ஆத்துமம் " எங்கே போகும்? அதற்கு என்ன கதி? ஓ மகத்துவமுள்ள அரசே! இந்தக் 5 கேள்விகளுக்கு தக்க மறுமொழி சொல்பவனே புத்திமான். எந்த வேதம் இவைகளைத் திருத்தமாய்ப் படிப்பிக்கின்றதோ அதுவே சத்திய வேதம். பிறதேசத்தாரான இவர்கள் போதிக்கும் வேதம் இவற்றைப் படிப்பிப்பதால் இதுதான் சத்திய வேதமாக என் புத்திக் குத் தோன்றுகிறதென்று சமயோஜிதமாய்ப் பதில் சொன்னான்.
இராஜா முதல் சகலரும் இந்த நியாயத்தால் மனந்திரும்பி சத்திய வேத கிறீஸ்தவர்களானார்கள். இந்த கூரிய புத்தியுள்ள மந்திரி சொன்ன மறுமொழியில் மேலான ஞானம் அடங்கி இருக்கின்றது. நான் எங்கே இருந்து வருகிறேன்? எதுக்காக இந்தப் பூமியில் நான் இருக்கிறேன்? இனி நான் பூமியை விட்டு எங்கே போவேன்? என்ற இந்த மூன்று கேள்விகளுக்கும் தகுந்த மறுமொழி அறிவது : அது தான் அறிவு, அதுதான் ஞானம், அதுதான் புத்தி.
இந்த மூன்று சத்தியங்களின் பேரில் முதல் பிரசங்கம் செய்யப் போகிறோம். இந்த சத்தியம் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை அஸ்திவார சத்திய மென்று அர்ச். இஞ்ஞாசியார் குறித்துக் காட்டியிருக்கிறார். இனி மேல் நீங்கள் கேட்டுத் தியானிக்க வேண்டிய சத்தியங்களெல்லாம் இந்த முதல் தியானத்திலிருக்கும் சத்தியத்திலே ஆதாரமாய் தங்கி ஊன்றி நிற்கின்றன. அடிப்படை சத்தியத்தை எவன் நன்றாய் ஆழ்ந்து - யோசித்து கண்டுபிடிக்கிறானோ, அவன் இனி வரும் சத்தியங் களையும் நன்றாய்க் கண்டுபிடிப்பான். அவைகளால் பெறக் கூடுமான நன்மை எல்லாம் பெறுவான்.
நான் இப்போது விவரிக்கும் சத்தியத்தை நீங்கள் கவனமாய்க் கேட்டு, பின் அதன்பேரில் கருத்தாய் யோசிப்பீர்களாகில் அப்போதுதான் இந்தப் புத்தி உங்கள் மனதில் ஆழ்ந்து பதியும்.
ஓ! மரியாயே! இஷ்டப்பிரசாதத்தின் மாதாவே! ஞானத்தியான முயற்சிகளை அர்ச். இஞ்ஞாசியாருக்குப் படிப்பித்தது நீர்தான் ஆனபடியால், நீர் சொல்லிக் கொடுத்த புத்திகளை நாங்கள் தியானித்து நன்றாய்க் கண்டுபிடிக்கக் கிருபை செய்யும். எங்கள் புத்திக்குப் பிரகாசமும், மனதுக்கு உறுதியும் உண்டாக உமது தேவ குமாரன் சேசுநாதரிடத்தில் எங்களுக்காக மன்றாடும் தாயே.
ஆமென் சேசு.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠