இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 09

சேசுநாதர் அப்போஸ்தலர்களைப் பிரசங்கிக்க அனுப்பினதும், ஐந்து அப்பங்கள் பலுகினதும், இராயப்பருடைய விசுவாச உச்சாரணமும், சேசுநாதர் மறுரூபமானதும், சந்திரரோகியைக் குணமாக்கினதும், தமது பாடுகளை முன்னறிவித்ததும், அப்போஸ்தலர்களுடைய தர்க்கமும்.

1. அப்போது சேசுநாதர் தமது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் வரவழைத்து, சகல பேய்களின்மேல் அவர்களுக்கு அதிகாரத்தையும்,வியாதிகளைச் சொஸ்தமாக்க வல்லமையையும் கொடுத்து,  (மத். 10:1;  மாற். 3:15.)

2. சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பிரசங்கிக்கவும், நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்புகையில்,

3. அவர்களுக்குத் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் வழிக்கு ஊன்றுகோலோ, பையோ, அப்பமோ, பணமோ, ஒன்றையும் கொண்டுபோக வேண்டாம்.   இரண்டு  அங்கிகளை முதலாய் வைத்துக்கொள்ளாதேயுங்கள். (மத். 10:9;  மாற். 6:8.)

* 3. அப்போஸ்தலர்கள் கோல் முதலியவைகளை எந்தக் காரணத்தைப்பற்றியும் கொண்டுபோகப்படாதென்று சேசுநாதர் விலக்கினதில்லை.  ஏனெனில், மாற்கு 6-ம் அதி. 8, 9-ம் வசனத்தில் ஊன்றுகோல் கொண்டுபோகலாமென்றும், பாதரக்ஷை தொடுக்கலாமென்றும் உத்தரவு கொடுக்கிறார். லூக்காஸ் 22-ம் அதி. 36-ம் வசனத்தில் பணப்பையுள்ளவனும், சாமான் பையுள்ளவனும் அவைகளை வைத்துக்கொள்ளும் படியாகவும் தன் அங்கியை விற்று வாள்முதலாய் வாங்கும்படியாகவும் உத்தரவு கொடுக்கிறார்.  ஆதலால் அர்ச். இராயப்பர் பாதரக்ஷை போட்டிருந்தாரென்று தெரியவருகிறது.  (அப்.12:8.) இவ்விடத்தில் சேசுநாதர் தரித்திர விஷயத்தில் உத்தமதனத்தைப் படிப்பிக்கிறாரொழிய ஒன்றும் கொண்டுபோகப்படாதென்று சட்டமாய் விலக்கவில்லை.

4.  எந்த வீட்டில் நீங்கள் பிரவேசித்தாலும், அதைவிட்டுப் போகாமல், அங்கே தங்கியிருங்கள்.

* 4. அப்போஸ்தலர் ஒரு ஊரில் யோக்கியன் யாரென்று விசாரித்து அவன் வீட்டில் தங்கியிருக்கவேணுமல்லாதே, நேர்ந்தபடி வீட்டுக்கு வீடுபோய்த் தங்குவது யோக்கியமல்லவென்று கர்த்தர் காண்பிக்கிறார்.

5.  யாராகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாதிருந்தால், அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியே புறப்பட்டு, உங்கள் கால்களில் ஒட்டின தூசியை முதலாய் அவர்களுக்கு எதிர்ச்சாட்சியாக உதறிப்போடுங்கள் என்றார். (அப். 13:51.)

6.  அப்படியே, அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் சுற்றித்திரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எங்கும் ஆரோக்கியங் கொடுத்து வந்தார்கள்.

7. அப்பொழுது தேசத்தின் சதுர்த்த பாகபதியாகிய ஏரோதென்பவன் அவ ரால் செய்யப்படுகிற யாவையும் கேள்விப் பட்டுக் கலங்கிக்கொண்டிருந்தான்.

8. ஏனெனில் சிலர்: அருளப்பர் மரித்தோரினின்று உயிர்த்தெழுந்தாரென்றும், வேறு சிலர்: எலியாஸ் தோன் றினாரென்றும், மற்றவர்கள்: பூர்வீக தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தா ரென்றும் சொல்லிக்கொண்டிருந்தார் கள்.  (மத். 14:1, 2;  மாற். 6:14.)

9. ஆகையால் ஏரோது: நான் அருளப்பனைச் சிரச்சேதஞ் செய்தேன். அப்படியிருக்க, இவரைப்பற்றி இப்பேர்ப்பட்ட காரியங்களைக் கேள்விப் படுகிறேனே;  இவர் யார் என்று சொல்லி, அவரைக் காணத் தேடிக்கொண்டிருந் தான்.

10. பின்னும் அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவற் றையும் அவருக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, பெத்சாயிதாவைச் சேர்ந்த வனாந்தரமான ஓர் இடத்துக்கு ஏகாந்த மாய் ஒதுங்கிப்போனார்.

11. ஜனங்கள் அதை அறிந்து அவரைப் பின்சென்று போனார்கள். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பற்றி அவர்களுக்கு உபதேசித்து, சொஸ்தமாக வேண்டியிருந்தவர்களையும் சொஸ்தமாக்கினார்.

12. அப்பொழுது சாயங்காலமாயிற்று.  ஆகையால் பன்னிருவரும் அவரிடத்தில் வந்து: நாம் இங்கே வனாந்தரமான இடத்திலிருக்கிறபடியினாலே, ஜனங்கள் சுற்றுக்கிராமங்களிலும் ஊர்களிலும் போய்த் தங்கவும், ஆகாரஞ் சம்பாதித்துக்கொள்ளவும் அவர்களை அனுப்பிவிடும் என்றார்கள்.  (மத். 14:15;  மாற். 6:36;  அரு. 6:1-13.)

13. அவரோ, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குச் சாப்பிடக் கொடுங்கள் என்றார்.  அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களுமல்லாதே அதிகமில் லை;  வேண்டுமானால், நாங்கள் போய் இந்த ஜனக்கூட்டத்துக்கெல்லாம் உணவு கள் வாங்கி வருவோம் என்றார்கள்.

14. ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர்கள் இருந்தார்கள்.  அப்போது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரச் செய்யுங்கள் என்றார்.

15. அவர்களும் அப்படியே செய்து எல்லாரையும் பந்தியமர்த்தினார்கள்.

16. அவர் ஐந்து அப்பங்களையும், இரண்டு மச்சங்களையும் கையிலே வாங்கி பரலோகத்தை அண்ணார்ந்து, பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்.

17.   எல்லாருஞ் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்களுக்கு மீதியான துண்டுகள் பன்னிரண்டு கூடைகள் எடுக்கப்பட்டன.

18.  பின்னுஞ் சம்பவித்ததேதெனில், அவர் தனித்து ஜெபஞ்செய்து கொண்டிருக்கையில், சீஷர்களும் அவரோடுகூட இருந்தார்கள்.  அவர் அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யாரென்று சொல்லுகி றார்கள் என்று கேட்டார்.

19. அதற்கு அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் உம்மை ஸ்நாபக அருளப்பரென்றும், சிலர் எலியாயஸன்றும், வேறு சிலர் பூர்வீக தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தாரென்றும் சொல்லுகி றார்கள் என்றார்கள்.

20. அப்பொழுது அவர்: நீங்களோ, என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று அவர்களைக் கேட்டார்.  அதற்கு சீமோன் இராயப்பர் பதில்மொழியாக: உம்மைச் சர்வேசுரனுடைய கிறீஸ்து என்கிறோம் என்றார்.

21.  அப்பொழுது அவர் இதை ஒருவ ருக்கும் சொல்லாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டு,

22. மனுமகன் அநேகம் பாடுபடவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொலையுண்ணப்பட வும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்திருக் கவும் வேண்டும் என்றார்.  (மத். 16:21;   17:21;  மாற். 8:31;  9:30.)

23. பின்னும் அவர் சகலரையும் நோக்கிச் சொன்னதாவது: யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்து கொண்டு, என்னைப் பின்செல்லக் கடவான்;  (மத். 10:38; 16:24;  மாற். 8:34.)

24. ஏனெனில் தன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவன் அதை இழப்பான்.  என்னைப்பற்றித் தன் உயிரை இழப்பவனோ அதைக் காப்பாற்றிக் கொள்ளுவான்.  (லூக். 17:33;  அரு. 12:25.)

25. மனிதனானவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்துச் சுயநாசம் வருவித்துக்கொண்டால், அவனுக்குப் பிரயோசனம் என்ன?

26. ஒருவன் என்னைக் குறித்தும் என் வாக்கியத்தைக் குறித்தும் வெட்கப்படுவானாகில், அவனைக் குறித்து மனுமகனும், தமக்கும் பிதாவுக்கும் சம்மனசுக்களுக்கும் உரிய மகிமையோடு வரும்போது வெட்கப்படுவார். (மத். 10:33;  மாற். 8:38;  2 தீமோ. 2:12.)

27. மீளவும் இங்கே நிற்கிறவர்களில் சிலர் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காணுமளவும், மரணசுவை பார்க்கமாட்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  (மத். 16:28; மாற். 8:39.)

* 27. மத். 16-ம் அதி. 28-ம் வசன வியாக்கியானம் காண்க.  இவ்விடத்தில் சேசுநாதர்சுவாமி தாம் மறுரூபமாகும் பிரதாப மகத்துவத்தை அப்போஸ்தலர்களில் சிலர் தாங்கள் சாகுமுன்னே காண்பார்களென்று அறிவிக்கிறார். (மெனோக்கியுஸ்)

28. சேசுநாதர் இந்த வார்த்தைகளைச் சொல்லி, ஏறக்குறைய எட்டு நாளானபின்பு சம்பவித்ததேதெனில், அவர் இராயப்பரையும் இயாகப்பரையும் அருளப்பரையும் அழைத்துக்கொண்டு ஜெபம்பண்ணத்தக்கதாக ஓர் மலையின்மேல் ஏறினார்.  (மத். 17:1;  மாற். 9:1.)

29. அவர் ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறி, அவருடைய வஸ்திரம் வெண்மையும் காந்தியுமாயிற் று.

30. அப்போது இதோ, இரண்டு மனிதர் அவரோடுகூடச் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் மோயீச னும் எலியாசுமாம்.

* 30. மத். 17-ம் அதி. 3-ம் வசன வியாக்கியானம் காண்க.

31. அவர்கள் மகிமைப் பிரதாபத்தோடு தோன்றி, அவர் ஜெருசலேமில் நிறைவேற்றவிருந்த மரணப் பயணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

32. அப்படியிருக்க, இராயப்பரும் அவரோடிருந்தவர்களும் நித்திரை மயக் கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து, அவர்களுடைய மகிமைப் பிரதாபத்தையும், அவரோடு நின்ற அந்த இரண்டுபேரையும் கண்டார்கள்.

33. பின்பு சம்பவித்ததேதென்றால், அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகையில், இராயப்பர் சேசுநாதரை நோக்கி என்ன சொல்லுகிறதென்று தெரியாமல்: குருவே! நாம் இங்கே இருக்கிறது நல்லது.  உமக்கு ஒரு கூடார மும், மோயீசனுக்கு ஒரு கூடாரமும், எலியாசுக்கு ஒரு கூடாரமும் ஆக மூன்று கூடாரங்களை அடிப்போமாக என்றார்

34. ஆனால் அவர் இவைகளைச் சொல்லுகையில் ஓர் மேகம் எழும்பி, அவர்களைத் தன்னிழலால் மறைத்தது. அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவே   சிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.

35. அப்பொழுது மேகத்திலிருந்து ஓர் குரலொலியுண்டாகி: இவரே நம்முடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று சத்தித்தது. (2 இரா. 1:17.)

36. அந்தக் குரலொலி உண்டாகையில் சேசுநாதர் ஒருவரே காணப்பட்டார்.  அவர்களோவெனில் தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அந்நாட்களில் எவனுக்கும் சொல்லாமல் மெளனமா யிருந்தார்கள்.

37. மறுநாள் அவர்கள் மலையினின்று இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

38. அப்பொழுது இதோ கும்பலினின்று ஓர் மனிதன் சத்தமிட்டு: போதகரே!  என் மகன்மேல் கிருபைக் கண் நோக்கியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.  எனக்கு அவன் ஏக புத்திரனாயிருக்கிறான்.  (மத். 17:14;  மாற். 9:16, 17.)

39. இதோ அவனை ஓர் பேய் பிடிக்கிறது;  உடனே அவன் அலறுகிறான்;  அது அவனைக் கீழே விழத்தாட்டி,  நுரை கக்க அலைக்கழித்து, அவனை இலேசில் விடாமல் சின்னாபின்னமாக்குகிறது.

40. அதை ஓட்டும்படி உம்முடைய சீஷர்களை மன்றாடினேன், அவர்களாலே கூடாமல்போயிற்று என்றான்.

41.  அதற்கு சேசுநாதர்: ஓ விசுவாச மற்ற கெட்ட சந்ததியே, எவ்வளவு காலம் உங்களோடிருந்து, உங்களைச் சகித்துக்கொண்டிருப்பேன்?  உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

* 40, 41. மத். 17-ம் அதி. 19-ம் வசன வியாக்கியானம் காண்க.

42. அப்படியே அவன் சமீபத்து வருகையில், பசாசானது அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது.

43. சேசுநாதர் அசுத்த அரூபியை அதட்டிச் சிறுவனைக் குணமாக்கி, அவன் தகப்பனுக்கு அவனைக் கையளித்தார்.

44. அப்பொழுது எல்லாரும் சர்வேசுரனுடைய மகத்துவத்தின்மேல் பிரமிப்படைந்தார்கள்.  மேலும், அவர் செய்துவந்த எல்லாவற்றையும்பற்றி யாவரும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில், அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளை உங்கள் இருதயங்களில் வைத்துக்கொள்ளுங்கள்; அதாவது, மனுமகன் மனிதர்களுக்குக் கையளிக்கப்படும்படி நேரிடும் என்று திருவுளம் பற்றினார்.  (மத். 17:21;  மாற். 9:30.)

45.  அவர்கள் அந்த வார்த்தையைக் கண்டுபிடியாதிருந்தார்கள்.  ஏனெனில் அதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி அது அவர்களுக்கு மறைபொருளாயிருந்தது;  அந்தவார்த்தையைக் குறித்து அவரை வினாவவும் பயந்திருந்தார்கள்.

46. அப்படியிருக்க, தங்களுக்குள்ளே யார் அதிக பெரியவனாயிருப்பானென்கிற எண்ணம் அவர்களுக்குள் புகுந்தது.  (மத். 18:1;  மாற். 9:33.)

47. ஆனால் சேசுநாதர் அவர்களுடைய இருதயச் சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுவனை எடுத்துத் தமதருகில் அவனை நிறுத்தி,

48. அவர்களுக்கு வசனித்ததாவது: என் நாமத்தினாலே இந்தச் சிறுவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்.  என்னை ஏற்றுக்கொள் ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்;  ஆகையால் உங்களெல்லாரிலும் எவன் அதிக சிறிய வனாயிருக்கிறானோ, அவனே அதிக பெரியவன் என்றார்.

49. அப்போது அருளப்பர் பதிலுத் தாரமாக: சுவாமி, உம்முடைய நாமத்தி னாலே பசாசுக்களைத் துரத்துகிற ஒருவனை நாங்கள் கண்டு, அவன் எங்களோடு (உம்மை) பின்பற்றாததினாலே அவனைத் தடுத்துவிட்டோம் என்றார்.  (மாற். 9:37-40.)

50. சேசுநாதர் அவரைப் பார்த்து: நீங்கள் அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், உங்களுக்கு விரோதமாயிராதவன் உங்கள் பாரிசமாயிருக்கிறான் என்று திருவுளம்பற்றினார்.

51. மீளவுஞ் சம்பவித்ததேதெனில், அவர் இவ்வுலகத்தினின்று எடுபடும் நாட்கள் நிறைவேறுகையில், அவர் ஜெருசலேம் நகருக்குப் போகும்படி திடமுகங்காட்டி,

52. தமது சமுகத்துக்குமுன் தூதர் களை அனுப்பினார்.  அவர்கள் போய், அவருக்கு இடம் ஆயத்தம் பண்ணும்படி சமாரியருடைய ஒரு ஊரிலே பிரவேசித் தார்கள்.

53. ஆனால் அவர் ஜெருசலேமுக்குப் போகிற நோக்கமாயிருந்ததினாலே, அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

* 53. சமாரியர் யூதர்களுக்குள் வேதப் பிரிவினைக்காரராயிருந்து, சாலோமோன் கட்டின தேவாலயத்தில் தேவாராதனைக்குப் போகாமல், தங்கள் சீமைக்கு அடுத்த மலையின்மேல் ஒரு கோவிலைக் கட்டி, தேவாராதனை செய்துவந்தார்கள். சேசுநாதர் தங்கள் கோவிலுக்கு வராமல், ஜெருசலேமிலுள்ள தேவாலயத்துக்குப் போகிறாரென்று காய்மகாரத்தால் அவர் தங்குவதற்கு இடம் கொடாதிருந்தார்கள்.

54. அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.

55.  அவர் திரும்பிப் பார்த்து, அவர் களைக் கண்டித்து: உங்களுக்கு யாரு டைய புத்தியுண்டென்று உங்களுக்குத் தெரியவில்லை.

56. மனுமகன் ஆத்துமங்களைச் சேதமாக்குவதற்கல்ல, அவைகளை இரட் சிக்கவே வந்தார் என்றார்.  அதன் பின்பு அவர்கள் வேறொரு ஊருக்குப் போனார் கள்.  (அரு. 3:17;  12:47.)

57. அவர்கள் வழிநடந்துபோகையில் சம்பவித்ததெனில், ஒருவன் அவரை நோக்கி: நீர் எங்கே போனாலும், உம்மைப் பின்செல்லுவேன் என்றான்.

58.   சேசுநாதர் அவனை நோக்கி: நரி களுக்கு வளைகளும், ஆகாயப்பறவை களுக்குக் கூடுகளுமுண்டு; மனுமகனுக் கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.  (மத். 8:20.)

59. பின்பு அவர் வேறொருவனை நோக்கி: என் பிறகே வா என்று சொல்ல, அவன்: ஆண்டவரே, முந்தி நான் போய், என் தகப்பனை அடக்கஞ் செய்ய எனக்கு உத்தரவு கொடுத்தருளும் என்றான்.

60. அதற்கு சேசுநாதர்: மரித்தோர் தங்களில் மரித்தோரை அடக்கஞ் செய்யட்டும்; நீ போய், சர்வேசுரனுடைய இராச்சியத்தை அறிவி என்று அவனுக்குத் திருவுளம்பற்றினார்.

* 60. உலகத்தாரை மரித்தவர்களென்று ஆண்டவர் சொல்லுகிறார்.

61.  பின்னும் வேறொருவன் (வந்து): ஆண்டவரே!  உம்மை நான் பின்செல்லு வேன், ஆனால் முந்த என் வீட்டிலுள்ள வைகளை நீக்கிவிட எனக்கு உத்தரவு கொடுத்தருளும் என்றான்.

62. சேசுநாதர் அவனை நோக்கி: கலப்பையின்மேல் கையை வைத்துக்கொண்டு, பின்னிட்டுத் திரும்பிப் பார்க் கிற எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்துக்குத் தகுந்தவனல்ல என்று திருவுளம் பற்றினார்.