இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 08

சேசுநாதர் பரிசேயரிடத்திலிருந்து ஓர் விபசார ஸ்திரீயைத் தப்புவித்து, அவர்களைக் கண்டித்ததும், யூதர்களுக்கு உபதேசித்து எதிர்நியாயங் காட்டினதும், தம்மைக் கல்லாலெறிய வந்தவர்களிடத்தினின்று மறைந்ததுமாகிய வர்த்தமானங்கள்.

1. அப்பொழுது சேசுநாதர் ஒலிவமலைக்குப் போனார்.

2. (மறுநாள்) அதிகாலமே அவர் தேவாலயத்துக்கு மறுபடியும் வந்த போது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசித்துக் கொண் டிருந்தார்.

3. அப்பொழுது விபசாரத்தில் பிடிபட்ட ஓர் ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து அவளை நடுவே நிறுத்தி: (உபாக. 22:22.)

4. போதகரே, இந்த ஸ்திரீ இப்பொழுதுதான் விபசாரத்தில் பிடிபட்டவள்.

5. இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்று மோயீசன் வேதப்பிரமாணத்தில் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்படியிருக்க, நீர் என்ன சொல்கிறீர் என்று அவரிடத்தில் கேட்டார்கள். (லேவி. 20:10.)

6. ஏனெனில் அவர்மேல் குற்றஞ் சாட்டுவதற்கு ஏதுவாகும்படி அவரைச் சோதிக்கத்தக்கதாக இப்படிக் கேட்டார்கள். சேசுநாதரோ கீழே குனிந்து, தமது விரலால் தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

* 6. சேசுநாதர் அவர்களைக் கல்லாலெறியச் சொன்னால், கொடூரமுள்ளவரென்றும், ஜனங்களை இரட்சிக்கவேயன்றி நடுத்தீர்க்கத் தாம் வரவில்லை என்று சொன்னவர், இப்பொழுது இந்தக் கடின தீர்வையிட்டால் பொய்யரென்றும் ஜனங்களுக்குக் காண்பித்து, அவர்மேல் பகையை மூட்டவும், அவளை ஆக்கினையின்றி விடுதலைசெய்தால், தேவ கட்டளையை மீறுகிறவரென்று சங்கத்தார் முன்பாக அவர்மேல் குற்றஞ்சாட்டவும் வழியாகுமென்று எண்ணி, இந்தத் தந்திரம் பண்ணினார்கள்.

7. ஆயினும் அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தபடியால், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களுக்குள்ளே பாவமில்லாதவன் இவள்மேலே முதலாவது கல்லெறியக்கடவான் என்று அவர்களுக்குச்சொல்லி, (உபாக. 17:7.)

8. மறுபடியும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.

9. அவர்கள் இந்த வார்த்தையைக் கேட்டு, மூப்பர் முதற்கொண்டு ஒருவருக்குப்பின் ஒருவராய்ப் போய்விட்டார்கள். சேசுநாதர் மாத்திரமிருந்தார்; அந்த ஸ்திரீயும் நடுவே நின்றாள்.

10. அப்பொழுது சேசுநாதர் நிமிர்ந்து: ஸ்திரீயே, உன்பேரில் குற்றஞ் சாட்டின வர்கள் எங்கே? ஒருவரும் உனக்கு ஆக்கினைத் தீர்வையிடவில்லையோ என்க,

11. அவள்: சுவாமி, ஒருவனும் ஆக்கினைத் தீர்வையிடவில்லை என்றாள். அப்பொழுது சேசுநாதர்: நானும் உனக்கு ஆக்கினைத் தீர்வையிடவில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்று திருவுளம்பற்றினார். (அரு. 5:14.)

12. சேசுநாதர் மீளவும் ஜனங்களோடு பேசி, அவர்களை நோக்கி: நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்செல்லுகிறவன் இருளிலே நடவாமல், ஜீவியத்தின் ஒளியைக் கொண் டிருப்பான் என்றார். (1 அரு. 1:5, 9; 9:15.)

13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: நீயே உன்னைக் குறித்துச் சாட்சியஞ் சொல்லுகிறாய், உன்னுடைய சாட்சியம் உண்மையானதல்ல என்றார்கள்.

14. சேசுநாதர் அவர்களுக்கு மறு மொழியாக: என்னைக்குறித்து நான் சாட்சியஞ் சொன்னாலும், என் சாட்சியம் உண்மையாயிருக்கின்றது. ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிவேன்: நீங்களோ, நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், அல்லது எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

15. நீங்கள் மாம்சத்துக்கு ஒத்தபடி நியாயந் தீர்க்கிறீர்கள். நான் ஒருவனை யும் நியாயந் தீர்க்கிறதில்லை.

16. நான் நியாயந் தீர்த்தாலும், என் தீர்ப்பு உண்மையானது: ஏனெனில் நான் தனிமையாயிருக்கிறதில்லை. நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

17. இரண்டுபேருடைய சாட்சியம் உண்மையென்று உங்கள் வேதப் பிரமாணத்தில் எழுதியிருக்கின்றதே. (உபாக. 17:6; 19:15.)

18. என்னைக்குறித்து நான் சாட்சி சொல்லுகிறவனாயிருக்கிறேன். என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்து சாட்சியஞ் சொல்லுகிறார் என்றார்.

19. அப்பொழுது அவர்கள்: உம் முடைய பிதா எங்கே இருக்கிறார் என்று அவரைக் கேட்க, சேசுநாதர் பிரத்தியுத் தாரமாக: என்னையும் அறியீர்கள்; என் பிதாவையும் அறியீர்கள். நீங்கள் என் னை அறிந்திருந்தால், ஒருவேளை என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்றார்.

20. சேசுநாதர் தேவாலயத்தில் உப தேசித்துக் கொண்டிருக்கும்போது, காணிக்கைப் பெட்டியிருந்த இடத்தில் இந்த வாக்கியங்களைத் திருவுளம்பற்றி னார். ஆயினும் அவருடைய நேரம் இன்னும் வராததினாலே ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை. (அரு. 7:30.)

21. மீண்டும் சேசுநாதர் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: மேலும் உங்கள் பாவத்திலே சாவீர்கள்: நான் போகிற இடத்திற்கு வரவும் உங்களாலே கூடாது என்றார். (அரு. 7:34; 13:33.)

22. அதற்கு யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு வரவும் உங்களாலே கூடாது என்கிறானே: தன்னைத்தான் கொலை செய்துகொள்ளுவானோ என்றார்கள்,

23. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கீழேயிருந்து உண்டான வர்கள். நான் மேலேயிருந்து வந்திருக்கி றேன். நீங்கள் இவ்வுலகத்தாராயிருக்கி றீர்கள்; நான் இவ்வுலகத்தான் அல்ல.

24. இதைப்பற்றியே நீங்கள் உங்கள் பாவங்களிலே சாவீர்களென்று உங்களுக்குச் சொன்னேன். நானே அவரென்று நீங்கள் விசுவசியாவிட்டால், உங்கள் பாவத்திலே சாவீர்கள் என்றார்.

25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்று கேட்க, சேசுநாதர் அவர்களுக்கு மறுமொழியாக: உங்களிடத்தில் பேசுகிற நானே ஆதி.

* 25. நானே ஆதி என்பதை இந்த வசனத்தில்: நானே உங்களிடத்தில் ஆதி முதல் பேசுகிறவர் என்று மொழிபெயர்க்கலாம். இதற்கு: நான் துவக்கமுதல் உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வந்ததுபோல, நானே உலகத்துக்கெல்லாம் ஆதியும் ஒளியுமாய் இருக்கிறேன் என்றர்த்தமாகும்.

26. உங்களைக் குறித்துப் பேசவும், நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேகங் காரி யங்களுண்டு. ஆனால் என்னை அனுப் பினவர் சத்தியர். நானும் அவரிடத்தில் கேள்விப்பட்டவைகளையே உலகத்தில் பேசுகிறேன் என்றார். (உரோ. 3:4.)

27. அவர் சர்வேசுரனைத் தம்முடைய பிதாவென்று சொன்னதாக அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

28. ஆகையால் சேசுநாதர் மறுபடியும் அவர்களை நோக்கி: நீங்கள் மனுமகனை உயர்த்தினபின்பு, நானே, அவரென்றும், நானாக ஒன்றுஞ் செய்யாமல் என் பிதா எனக்குப் படிப்பித்தபடி இவைகளைப் பேசுகிறேனென்றும் அறிந்து கொள்வீர்கள்.

29. என்னை அனுப்பினவர் என்னோடுகூட இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை; ஏனெனில் நான் எப்பொழுதும் அவருக்குப் பிரிய மானவைகளைச் செய்து வருகிறேன் என்றார்.

30. சேசுநாதர் இவைகளைச் சொல்லுகையில் அநேகர் அவர்மேல் விசுவாசமானார்கள். (அரு. 7:31, 33, 37, 39.)

31. ஆகையால் சேசுநாதர் தம்மை விசுவசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் வாக்கியத்திலே நிலைத்திருந்தால், மெய்யாகவே என்னுடைய சீஷர்களா யிருப்பீர்கள்.

32. சத்தியத்தையும் அறிந்துகொள்ளு வீர்கள்; சத்தியம் உங்களைச் சுயாதீன ராக்கும் என்றார்.

33. அப்பொழுது அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் அபிரகாமின் சந்ததியார், நாங்கள் ஒருபோதும் எவ னுக்கும் அடிமைப்பட்டிருந்ததில்லையே. இப்படியிருக்கச் சுயாதீனராவீர்களென்று நீர் சொல்லுவதெப்படி என்றார்கள்.

* 33. யூதர்கள் எஜிப்து தேசத்திலும், பபிலோன் பட்டணத்திலும் அடிமைகளாயிருந்ததுந் தவிர, சேசுநாதர்சுவாமியுடைய காலத்திலே உரோமானருடைய அரசாட்சிக்கு உட்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க நாங்கள் ஒருக்காலும் அடிமைகளாய் இருந்ததில்லையென்று பரிசேயர் சொன்னது சுத்தப் பிசகு.

34. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக: மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவத்தைச் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமைப்பட்டவனாய் இருக்கி றான். (உரோ. 6:15; 2 இரா. 2:19.)

35. அடிமையானவன் என்றென்றைக்கும் வீட்டில் நிலைகொள்ளான், குமாரனோ என்றென்றைக்கும் நிலை கொள்ளுகிறான்.

36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே நீங்கள் சுயாதீனராயிருப்பீர்கள். (உரோ. 8:2; கலாத். 4:6, 7.)

37. நீங்கள் அபிரகாமுடைய புத்திரரென்று அறிவேன். ஆனாலும் என் வாக் கியத்துக்கு நீங்கள் இடங் கொடாததினா லே, என்னைக் கொலைசெய்யத் தேடுகி றீர்கள். (மத். 3:9.)

38. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைப் பேசுகிறேன். நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டவைகளைச் செய்கிறீர்கள் என்றார்,

39. அவர்கள் அவருக்குப் பிரத்தியுத்தாரமாக: அபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். சேசுநாதர் அவர்களை நோக்கி: நீங்கள் அபிரகாமுடைய புத்திரரானால், அபிரகாமுடைய செய்கைகளைச் செய்யுங்கள். (உரோ. 9:7.)

40. இப்பொழுதோ, சர்வேசுரனிடத்தில் கேட்ட சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். அபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

41. நீங்கள் உங்கள் பிதாவின் செய்கைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத் தில் பிறந்தவர்கள் அல்ல; கடவுள் ஒருவரே எங்களுக்குப் பிதா என்றார்கள்.

42. அப்பொழுது சேசுநாதர் அவர் களை நோக்கி: கடவுள் உங்கள் பிதா வானால், என்னை மெய்யாகவே நேசித் திருப்பீர்கள். ஏனெனில் நான் கடவுளி டத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கி றேன். ஆயினும் நான் என் சுயமாய் வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

43. நீங்கள் ஏன் என் வாக்கை அறியாதிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்கமாட்டாததினாலல்லோ?

44. நீங்கள் உங்கள் தகப்பனாகிய பசாசினால் உண்டானவர்கள். மேலும் உங்கள் தகப்பனுடைய இச்சைகளை நிறைவேற்ற விரும்புகிறீர்கள். ஆதிமுதற் கொண்டு அவன் கொலைபாதகனா யிருந்தான். சத்தியம் அவனிடத்தில் இல்லாததினாலே, அவன் சத்தியத்தில் நிலைக்கவில்லை. அவன் பொய்யனும், பொய்க்கு அப்பனுமாயிருக்கிறபடியி னாலே அவன் பொய் சொல்லும்போது தன் உற்பத்தியாகச் சொல்லுகிறான். (1 அரு. 3:8-12.)

45. ஆயினும் நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால், நீங்கள் என்னை விசுவசிக்கிறதில்லை.

46. என்னிடத்திலே பாவம் உண்டென்று உங்களில் எவன் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவசிக்கிறதில்லை?

47. சர்வேசுரனால் உண்டானவன் சர்வேசுரனுடைய வாக்கியங்களுக்குச் செவிகொடுக்கிறான். நீங்கள் சர்வேசுரனால் உண்டாகாதவர்களாகையால், செவிகொடாதிருக்கிறீர்கள் என்றார். (1 அரு. 4:6.)

48. அப்பொழுது யூதர்கள் அவருக் குப் பிரத்தியுத்தாரமாக: நீ சமாரிய னென்றும், பேய் பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரியல்லவோ என்றார்கள். (அரு. 10:20; மத். 9:34.)

49. அதற்கு சேசுநாதர் மறுமொழி யாக: நான் பேய்பிடித்தவனல்ல; நான் என் பிதாவைச் சங்கிக்கிறேன். நீங்களோ என்னைச் சங்கையீனப்படுத்தினீர்கள்.

50. ஆயினும் நான் எனக்கு மகிமை யைத் தேடுகிறதில்லை: அதைத் தேடுகிறவரும் நியாயந் தீர்க்கிறவருமாகிய ஒருவர் இருக்கிறார்.

51. யாதொருவன் என் வார்த்தை யைக் கைக்கொண்டால், என்றென்றைக்கும் சாவைக் காண்பதில்லை என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (அரு. 5:24.)

52. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பேய்பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்துகொண்டோம். அபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; நீயோ: யாதொருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், என்றென்றைக்கும் மரணச் சுவை பாரான் என்கிறாயே.

53. எங்கள் பிதாவாகிய அபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார்; தீர்க்கதரிசிகளும் மரித்தார்களே; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

54. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாக: நானே என்னை மகிமைப் படுத்தினால், என் மகிமை ஒன்றுமில்லை. என் பிதாவே என்னை மகிமைப்படுத்து கிறவர். அவரையே நீங்கள் உங்கள் தெய்வம் என்கிறீர்கள்.

55. ஆயினும் நீங்கள் அவரை அறிய வில்லை; நானோ அவரை அறிந்திருக் கிறேன். நான் அவரை அறியேன் என் பேனாகில், உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன். அவரை நான் அறிந்து, அவருடைய வாக்கியத்தை அனுசரிக்கிறேன். (அரு. 7:28.)

56. உங்கள் பிதாவாகிய அபிரகாம் என்னுடைய நாளைக் காணவேண்டு மென்று ஆவலோடு ஆசித்தார்; (அதைக்) கண்டு களிகூர்ந்தார் என்றார். (ஆதி. 22:18.)

* 56. சர்வேசுரன் அபிரகாமை நோக்கி: உன் சந்ததியில் இரட்சகர் பிறப்பாரென்று வாக்குத்தத்தஞ் செய்தபொழுதே, அந்த இரட்சகருடைய திருப் பிறப்பை அவருக்குக் காட்சியில் காண்பித்து, அவரைக் கண்டு மகிழச்செய்தாரென்று வேதபாரகர்கள் சொல்லுகிறார்கள்.

57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதில்லையே; நீ அபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

58. சேசுநாதர் அவர்களை நோக்கி: அபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாக வே, மெய்யாகவே உங்களுக்குச் சொல் லுகிறேன் என்றார். (அரு. 8:24-28.)

59. அப்பொழுது அவர்கள் அவர் மேல் எறியும்படி கல்லுகளை எடுத்தார்கள். சேசுநாதரோ மறைந்து, தேவாலயத்தினின்று வெளியே போனார்.