இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 06

கிறீஸ்துநாதர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மச்சங்களையுங்கொண்டு ஐயாயிரம்பேர்களுக்குப் போஜனங்கொடுத்ததும், தாம் ஜீவிய அப்பமென்றும், தமது மாம்சம் மெய்யான போஜனமும், தமது இரத்தம் மெய்யான பானமுமென்றும் போதித்ததும். 

1. இவைகளுக்குப் பின்பு, சேசுநாதர் திபேரியாக் கடலாகிய கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். (மத். 14:13; மாற். 6:32; லூக். 9:10; அரு. 1:15.)

2. திரளான ஜனங்களும் வியாதிப் பட்டவர்களிடத்தில் அவர் செய்தருளிய அற்புதங்களைக் கண்டதினாலே, அவரைப் பின்சென்றார்கள்.

3. ஆகையால் சேசுநாதர் ஓர் மலையின்மேல் ஏறி, அவ்விடத்தில் தம்மு டைய சீஷர்களோடுகூட உட்கார்ந்தார்.

4. அப்பொழுது யூதருடைய பண்டி கை நாளாகிய பாஸ்கா சமீபித்திருந்தது.

5. அப்படியிருக்க, சேசுநாதர் தம்மு டைய கண்களை ஏறெடுத்து, மிகுதியான ஜனக்கும்பல் தம்மிடத்தில் வந்திருக்கிற தைக்கண்டு, பிலிப்பென்பவரை நோக்கி: இவர்கள் சாப்பிடும்படி எங்கேயிருந்து அப்பங்களை வாங்குவோம் என்றார்.

6. தாம் செய்யப்போகிறதை அறிந் திருந்தும், அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்.

7. பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இரு நூறு பணத்து அப்பங்களும் இவர்களுக் குப் போதாதே என்றார்.

8. அப்பொழுது அவருடைய சீஷர் களில் ஒருவரும், சீமோன் இராயப்ப ருடைய சகோதரனுமாகிய பெலவேந் திரர் அவரை நோக்கி :

9. இங்கே ஒரு பையனிருக்கிறான்; அவனிடத்தில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றன. ஆனாலும் அவைகள் இத்தனை பேர்களுக்கு எம்மாத்திரம் என்றார்.

10. சேசுநாதர்: ஜனங்களைப் பந்தியமரச்செய்யுங்கள் என்றார். அவ்விடத்தில் புல் மிகுதியாயிருந்தது. அப்படியே பந்தியமர்ந்த புருஷர்கள் சுமார் ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.

11. அப்பொழுது சேசுநாதர் அப்பங்களை எடுத்து, நன்றியறிந்த தோத்திரஞ் சொன்னபின், பந்தியமர்ந்தவர்களுக்குப் பரிமாறினார். அவ்வண்ணமே மீன்களிலும் அவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தார்.

12. அவர்கள் திருப்தியடைந்த பின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: மீதியான துண்டுகள் சேதமாகாதபடிக்கு அவைகளைச் சேர்த்து வையுங்கள் என் றார்.

13. அப்படியே அவர்கள் சேர்த்து, ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலே சாப்பிட்டவர்களுக்கு மீதியான துண்டுகளால் பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.

14. சேசுநாதர் செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் கண்டு: மெய்யாகவே உலகத்தில் வரவேண்டிய தீர்க்கதரிசி இவர்தான் என்றார்கள்.

15. ஆகையால் அவர்கள் தம்மை இராஜாவாக்கும்படி பலவந்தமாய்த் தம்மைப் பிடிக்க வரப்போகிறார்க ளென்று சேசுநாதர் அறிந்து, மறுபடியும் தனியே மலையின்மேல் ஏறி, விலகிப் போனார். (மத். 14:23; மாற். 6:46.)

16. அவருடைய சீஷர்களோ சாயுங் காலமானபோது கடற்கரைக்கு வந்து,

17. ஓர் படகிலேறிக் கடலுக்கு அக் கரையிலுள்ள கப்பர்நாவும் ஊருக்குச் சென்றார்கள். அப்பொழுது இருட்டிப் போயிற்று; சேசுநாதரும் அவர்களி டத்தில் வந்துசேராதிருந்தார்.

18. கடலோ பெருங்காற்று அடித்ததினாலே, கொந்தளித்துக்கொண்டி ருந்தது.

19. ஆயினும் ஏறக்குறைய மூன்று நாலு மைல் தூரம் அவர்கள் தண்டு வலித் துக்கொண்டு போகையில், சேசுநாதர் கடலின்மேல் நடந்து, படகுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு, பயந்தார்கள்.

20. அவரோவெனில், அவர்களை நோக்கி: நான்தான் பயப்படாதேயுங்கள் என்றார்.

21. அப்பொழுது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார் கள். அக்ஷணமே படகு அவர்கள் போகிற கரை சேர்ந்தது.

22. மறுநாள் கடலின் அக்கரையில் நின்ற ஜனங்கள் அங்கே ஒரு படகே யன்றி, வேறே படகு இருந்ததில்லை யென்றும், சேசுநாதர் தம்முடைய சீஷர் களோடுகூடப் படகில் ஏறாமல், சீஷர்கள் மாத்திரம் போனார்களென்றும் அறிந்து கொண்டார்கள்.

23. கர்த்தர் நன்றியறிந்த தோத்திரஞ் செய்ததின்மேல், ஜனங்கள் அப்பம் சாப் பிட்ட இடத்துக்குச் சமீபமாய், அச் சமயத்தில் வேறே படகுகள் திபேரியாவி லிருந்து வந்தன,

24. அப்பொழுது, சேசுநாதரும் அவ ருடைய சீஷர்களும் அங்கேயில்லை யென்று ஜனங்கள் கண்டு, உடனே படகு களில் ஏறி, சேசுநாதரைத் தேடிக்கொண்டு கப்பர்நாவும் ஊருக்கு வந்தார்கள்.

25. அவர்கள் கடலுக்கு அப்பால் அவரைக் கண்டபோது: சுவாமி, நீர் எப் போது இங்கே வந்தீர் என்று அவரைக் கேட்டார்கள்.

26. சேசுநாதர் அவர்களுக்கு மறு மொழியாகத் திருவுளம்பற்றினதாவது: மெய்யாகவே, மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அற்பு தங்களைக் கண்டதினாலல்லவே, அப்பங் களைப் புசித்துத் திருப்தியடைந்ததினா லல்லோ என்னைத்தேடுகிறீர்கள்.

27. அழிந்துபோகிற போஜனத்துக் காக அல்ல, நித்திய ஜீவியத்திற்காக நிலை நிற்கிற போஜனத்துக்காகவே பிரயாசப் படுங்கள்; மனுமகன் அதை உங்களுக்குத் தந்தருள்வார். ஏனெனில் பிதாவாகிய சர் வேசுரன் அவரையே முத்திரித்திருக்கி றார் என்றார். (மத். 3:17; 17:5; அரு. 1:32.)

* 27. இராஜாவினால் அனுப்பப்பட்ட ஸ்தானாபதியினாலும், யாதோர் கற்பனை கட்டளையினாலும் இராஜமுத்திரையால் நிச்சயிக்கப்படுவதுபோல, சேசுநாதர் தாம் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டவரென்று தேவமுத்திரையாகிய தெய்வீகவல்லமை அற்புதங்களைக்கொண்டு தம்மை உலகத்துக்கு நிச்சயப்படுத்துகிறார் என்றறியவும்.

28. அதற்கு அவர்கள்: சர்வேசுரனுக்கு ஏற்ற கிரியைகளை நடத்தும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவரைக் கேட்டார்கள்.

29. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாக: சர்வேசுரன் அனுப்பின வரை நீங்கள் விசுவசிப்பதே அவருக்கு ஏற்ற கிரியை என்றார். (1 அரு. 3:23.)

30. மீளவும் அவர்கள்: அப்படியா னால் நாங்கள் உம்மை விசுவசிக்கும் பொருட்டு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அற்புதத்தைச் செய்கிறீர்? நீர் செய்கிறதென்ன?

31. பரமண்டலத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிற பிரகாரம் எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்களே என்றார் கள். (யாத். 16:14, 15; எண். 11:7; சங். 77:24; ஞானா. 16:20; 1 கொரி. 10:3.)

32. சேசுநாதர் அவர்களை நோக்கி: மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன்: பரமண்டலத்திலிருந்து வந்த அப்பத்தை மோயீசன் உங்களுக்குக் கொடுக்கவில்லை. என் பிதாவே பரமண்டலங்களிலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.

* 32. இந்த முப்பத்திரண்டாம் வசனமுதல் இந்த அதிகாரத்தின் முடிவுவரைக்கும் சேசுநாதர் திருவுளம்பற்றியிருக்கிற வாக்கியங்கள் மேலான பரமரகசியமாகிய தேவநற்கருணையைக் குறிக்கிறதென்று கவனமாய் வாசிக்கிற எவனும் கண்டுகொள்வான். இந்த வாக்கியங்களைக் கொண்டு தமது திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் மெய்யாகவே மனுஷனுக்கு நித்திய ஜீவியத்தைத்தரும் போஜனமாகத் தந்தருளுகிறாரென்று எவரும் தெளிவாய்க் கண்டுபிடிக்கலாம்.

33. ஏனெனில் பரலோகத்திலிருந் திறங்கி, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற அப்பமே சர்வேசுரனுடைய அப்பம் என்றார்.

34. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்போதும் எங்களுக்குத் தந்தருளும் என்று சொல்ல,

35. சேசுநாதர் அவர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஜீவியத்தின் அப்பம் நானே: என்னிடத்தில் வருகிற வன் பசியடையான்; என்னை விசுவசிக் கிறவனும் ஒருக்காலும் தாகமடையான். (சர்வப். 24:29; அரு. 4:14; 6:41, 48, 51.)

36. ஆனால் நீங்கள் என்னைக் கண்டிருந்தும், விசுவசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.

37. பிதாவானவர் எனக்குத் தந்தரு ளுகிற யாவும் என்னிடத்திலே வரும்; என்னிடத்தில் வருகிறவனையோ நான் வெளியே தள்ளுவதில்லை.

38. ஏனெனில் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத் தையே நிறைவேற்றும்படி பரலோகத்தி னின்று இறங்கிவந்தேன். 

39. என்னை அனுப்பின பிதாவின் சித்தம் ஏதெனில், அவர் எனக்குத் தந்தருளின யாவற்றிலும், நான் ஒன்றையும் இழந்துபோகாமல், கடைசி நாளில் அதை உயிர்ப்பிக்கவேண்டுமென்பதுதான்.

40. சுதனைக் கண்டு, அவர்பேரில் விசுவாசமாயிருக்கிற எவனும் நித்திய ஜீவியத்தை அடையவேண்டுமென்று என்னை அனுப்பின என் பிதாவின் சித்தமாயிருக்கிறது. நானும் கடைசி நாளிலே அவனை உயிர்ப்பிப்பேன் என்றார். (பிலிப். 3:21.)

41. ஆனால் நான் பரலோகத்தினின்று இறங்கின ஜீவிய அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவர் பேரில் முறுமுறுத்து:

42. இவன் சூசையின் மகனாகிய சேசு அல்லவா? இவனுடைய பிதா மாதாவை நாம் அறிவோமே; அப்படியிருக்க பரலோகத்தினின்று இறங்கிவந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். (மத். 13:55; மாற். 6:3.)

43. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக: நீங்கள் உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.

44. என்னை அனுப்பின பிதாவானவர் ஒருவனை இழுத்துக்கொள்ளா விட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். கடைசி நாளிலே நான் அவனை உயிர்ப்பிப்பேன்.

45. ஆயினும் எல்லாரும் சர்வேசுர னாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக் கொண்ட எவனும் என்னிடத்தில் வருகி றான். (இசை. 54:13; எரே. 31:33, 34.)

46. சர்வேசுரனிடத்திலிருந்து வரு கிறவரேயல்லாது, பிதாவைக் கண்டவர் ஒருவருமில்லை; அவரே பிதாவைக் கண்டவர். (மத். 11:27.)

47. என்பேரில் விசுவாசமாயிருக்கி றவனுக்கு நித்திய ஜீவியம் உண்டென்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன்.

48. ஜீவிய அப்பம் நானே,

49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்திருந்தும் மரித் தார்கள். (யாத். 16:13-15.)

50. இதிலே புசிக்கிறவன் சாகாதிருக்கும்படி பரலோகத்திலிருந்து இறங்குகிற அப்பம் இதுவே.

51. நானே பரலோகத்திலிருந்து இறங் கின ஜீவிய அப்பம்.

52. இந்த அப்பத்தில் யாதொருவன் புசிப்பானேயாகில், என்றென்றைக்கும் பிழைப்பான். நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவியத்திற்காக (நான் கொடுக்கும்) என் மாம்சமே என்றார். (மத். 26:26.)

* 52. இந்த வாக்கியத்தைக்கொண்டு வசீகரம் பண்ணப்பட்ட அப்பத்தின் வகையிலே, சேசுநாதர்சுவாமியுடைய திருச்சரீரமும் இரத்தமும் இருக்கிறதென்றும், ஆகையால் அந்த அப்பத்தை உட்கொள்ளுகிற கிறீஸ்துவர்கள் சேசுநாதர்சுவாமியுடைய திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும்கூட உட்கொள்ளுகிறார்களென்றும், ரசத்தின் வகையில் தேவநற்கருணை வாங்குவது அவசரமில்லையென்றும் தெளிவாய் அறிந்துகொள்ளலாம்.

53. அதைப்பற்றி யூதர் ஒருவரோடொ ருவர் வாக்குவாதஞ்செய்து: இவன் தன் னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுக்கக்கூடும் என்றார்கள்.

54. ஆகையால் சேசுநாதர் அவர்களை நோக்கி: மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாம லும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால், உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்கமாட்டீர்கள்.

55. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டு. கடைசிநாளிலே நான் அவனை உயிர்ப்பிப்பேன்.

56. ஏனெனில் என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது. (1 கொரி. 11:26, 27; அரு. 15:4.)

57. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்.

58. சீவியராகிய பிதா என்னை அனுப் பினதுபோலவும், நான் பிதாவினால் சீவிக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னால் சீவிப்பான்.

59. பரலோகத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே. இது உங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்ததுபோல் அல்ல; அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

60. அவர் கப்பர்நாவும் ஊரிலே ஜெப ஆலயத்தில் உபதேசிக்கையில் இவை களைத் திருவுளம்பற்றினார்.

61. அவருடைய சீஷர்களில் அநேகர் இவைகளைக்கேட்டு; இது கடின வாக்கா யிருக்கிறது; இதை யார் கேட்கக்கூடும் என்றார்கள்.

62. இவ்வண்ணமாய், சீஷர்கள் இதைப்பற்றி முறுமுறுத்துக்கொண்டிருக் கிறார்களென்று சேசுநாதர் தமக்குள் அறிந்து, அவர்களைப் பார்த்துத் திருவு ளம்பற்றினதாவது: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?

63. அப்படியானால், மனுமகன் தான் முன்னிருந்த இடத்துக்கு ஆரோகண மாகிறதை நீங்கள் கண்டாலோ (என்ன மாயிருக்கமாட்டாது)? (அரு. 3:13; மாற். 16:19.)

64. உயிர்கொடுப்பது ஆத்துமமே; மாம்சமானது ஒன்றுக்கும் ஆகாது. நான் உங்களுக்குச் சொன்ன வாக்கியங்கள் ஞானமும் உயிருமாயிருக்கின்றன.

65. ஆகிலும் உங்களில் சிலர் விசுவசியாதவர்களாயிருக்கிறார்கள் என்றார். ஏனெனில் சேசுநாதர் ஆதிமுதற்கொண்டு தம்மை விசுவசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் இன்னானென்றும் அறிந்திருந்தார். (அரு. 2:25; 13:11.)

66. மீளவும் அவர் திருவுளம்பற்றினதாவது: ஒருவன் என் பிதாவினால் வரம் பெற்றாலன்றி, அவன் என்னிடத்தில் வரமாட்டானென்று இதனிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.

67. அதுமுதல் அவருடைய சீஷர்களில் அநேகர் பின்வாங்கி, அதன்பின் அவரோடு சேர்ந்து போகாதிருந்தார்கள்.

68. ஆதலால் சேசுநாதர் பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களோ என்று கேட்க,

69. சீமோன் இராயப்பர் அவருக்குப் பிரத்தியுத்தாரமாக: ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவிய வார்த்தைகள் உம்மிடத்திலிருக் கின்றதே. (அரு. 11:27.)

70. தேவசுதனாகிய கிறீஸ்துநாதர் நீர் தான் என்று நாங்கள் விசுவசித்தும், அறிந்தும் இருக்கிறோம் என்றார். (மத். 16:16; மாற். 8:29; லூக். 9:20.)

71. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாக: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொண்டேனல்லோ? ஆயினும் உங்களில் ஒருவன் பசாசாயி ருக்கிறான் என்றார். (அரு. 13:18; 15:16.)

72. சேசுநாதர் சீமோன் குமாரனாகிய யூதாஸ் இஸ்காரியோத்தென்பவனைக் குறித்து இதைச் சொன்னார். ஏனெனில் அவன் பன்னிருவரில் ஒருவனாயிருந்தும், அவரைக் காட்டிக்கொடுப்பவனாயிருந் தான்.


* இந்த அதிகாரத்திலே சேசுநாதர் இனி தாம் ஏற்படுத்தப்போகிற தேவநற்கருணை யைக்குறித்து வாக்குத்தத்தஞ் செய்கிறார். எப்படியெனில், அவர் வனாந்தரத்திலே ஐந்து அப்பங்களை அற்புதமாய் பலுகச்செய்து, ஐயாயிரம்பேருக்குத் திருப்தியாகப் போஜனங் கொடுத்தபின், அந்தப் போஜனத்தைச் சாப்பிட்டவர்களில் அநேகர் கர்த்தரை ஆவலோடு தேடிக்கொண்டு கப்பர்நாவும் ஊர் ஜெப ஆலயத்திற்கு வந்தவிடத்தில், கர்த்தர், அவர்கள் சாப்பிட்ட அந்த அப்பத்தைவிட மேன்மையான அப்பத்தைத் தந்தருளுவோமென்று வாக்குத்தத்தஞ் செய்தருளினார் இதைத் தெளிவாய் அறியும்படிக்கு, இந்த அதிகாரத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் சுவிசேஷகர் அப்பம் பலுகின அற்புதத்தை வர்ணிக்கிறார்.

2-ம் பாகத்தில் சேசுநாதர் தம்முடையபேரில் ஜனங்கள் வைக்கவேண்டிய விசுவாசத்தைத் தூண்டி எழுப்பிப் போதிக்கிறார்.

3-ம் பாகத்தில் தேவநற்கருணையைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.இந்த மூன்றாம் பாகத்திலே, சேசுநாதர் தாம் இனி தந்தருளப்போகிற ஒரு புதிதான அப்பத்தைப்பற்றிப் பேசுகிறாரே அல்லாது சிலர் சாதிக்கிறதுபோல விசுவாசத்தைப்பற்றிப் பேசுகிறதில்லை. ஏனெனில் 1-வது ஞானப் போஜனமென்கும்போது விசுவாசத்தைக் குறித்திருந்தால், அது முன்னில்லாத ஒரு புதுக் காரியமாயிருந்திருக்கவேண்டியது. ஆனால் அர்ச். சின்னப்பர் சொல்லுவதுபோல விசுவாசமானது பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் எக்காலத்துக்கும் பொதுவாயிருக்கின்றது. அன்றியும் அநேகர் இதற்கு முந்தியே சேசுநாதர்மேல் விசுவாசமாயிருந்தார்கள். ஆகையால் சேசுநாதர் தாம் ஒரு புதிதான அப்பத்தைத் தந்தருளுவோம் என்கும்போது விசுவாசத்தைப்பற்றிப் பேசாமல் தேவநற்கருணையைப்பற்றிப் பேசுகிறாரென்பது நிச்சயம்.

2-வது, அன்றியும் இரண்டாம் பாகமாகிய 27-ம் வசன முதல் 47-ம் வசனம் வரையில் சேசுநாதர்: நானே பரலோகத்தினின்று இறங்கிவந்த ஜீவிய அப்பம் என்கும்போது அவர் உருவகமாய்ப் பேசினாரென்றும், விசுவாசத்தைப்பற்றிப் பேசினாரென்றும் அறிந்து கொள்ளுவது எளிதாயிருந்தது. ஜனங்களும் அப்படியே கண்டுபிடித்தார்கள். அப்படியிருக்க மூன்றாம் பாகத்தில் திவ்விய கர்த்தர்: ‘“என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது; என் மாம்சத்தைப் புசிக்கிறவன் எனக்குள் தங்குகிறான்” என்றபோது அவர் விசுவாசத்தைப் பற்றிப் பேசாமல் தம்முடைய திருச் சரீரத்தையும் திரு இரத்தத்தையும் போஜனமாகப் புசிப்பதைப்பற்றி உருவகமின்றிப் பேசினார். ஜனங்களும் இப்படியே கண்டுபிடித்தார்கள். ஆகையால் இந்தக் கருத்து அவர்களுக்கு அரோசிகத்தை எழுப்பினதினாலே, அவர்கள் சகிக்கமாட்டாமல்: இவன் தன் மாம்சத்தை நமக்கு எப்படி புசிக்கக் கொடுக்கக்கூடும் என்றார்கள். சீஷர்களில் அநேகரும், இது கடின வாக்காயிருக்கிறதே; இதை யார் கேட்பானென்று சொல்லி அவரை விட்டுப் பிரிந்துபோனார்கள். சேசுநாதர் சொன்னதை ஜனங்களும் சீஷரும் சரியாய்க் கண்டுபிடியாதிருந்தால், அவர் நியாயத்தின்படியே அவர்களுடைய அறியாமையை நீக்கி, அவர்களுக்கு உண்மை யைத் தெளிவித்திருக்கவேண்டியது. அவர்கள் சரியாய்க் கண்டுபிடித்ததினாலேதான் அவர் தாம் சொன்னதை மாற்றாமல், இன்னும் அதிக உறுதியாக நிச்சயித்து: நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணா மலுமிருந்தால், உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்க மாட்டீர்களென்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3-வது, ஆயினும் புசிக்கவேண்டிய வகையை அவர்கள் கண்டுபிடியாமல் மற்ற மாம்சங்களைப்போல சமைத்துப் புசிப்பதாகுமென்று தப்பான எண்ணங்கொண்டதை அவர் அறிந்து, அந்தத் தப்பிதமான எண்ணத்தை தமது வழக்கப்படி திருத்துகிறார். வகையைப்பற்றிய தப்பெண்ணத்தைத் திருத்தும்போதே, தாம் சொன்ன காரியத்தின் உண்மையை நிலைநிறுத்துகிறார். எப்படியெனில் நான் வாக்குத்தத்தம் பண்ணின படியே என் மாம்சத்தையும் இரத்தத்தையும் போஜனபானமாக உண்மையாகவே கொடுப்பேனென்று நீங்கள் விசுவசிக்கவேண்டுமேயொழிய எவ்விதமாய்க் கொடுப்பே னென்று அறிவது உங்கள் புத்திக்கு எட்டாது. எவ்விதங் கொடுப்பேனென்பது என்னைச் சார்ந்தது. விசுவாசத்தால் ஒத்துக்கொள்ளவேண்டியதொழிய சுபாவ புத்தியால் இதில் ஒன்றும் ஆகாதென்று தெரிவித்தார்.