இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இயாகப்பர் எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 05

தரித்திரரை உபத்திரவப்படுத்துகிற ஐசு வரியவான்களைக் கண்டித்து, கிறீஸ்துவர்கள் தங்கள் உபத்திரவங்களில் பொறுமையாயிருக்கவும், ஆணையிடுதலை விலக்கவும், வியாதிக்காரர் அவஸ்தைப்பூசுதலைப் பெறவும், பாவசங்கீர்த்தனஞ் செய்யவும் புத்திசொல்லி ஜெபத்தின் பலனை வெளிப்படுத்துகிறார்

1. வாருங்கள், ஐசுவரியவான்களே, உங்கள்மேல் வரப்போகிற நிர்ப்பந்தங்களை நினைத்து, இப்போது புலம்பி அழுங்கள். (லூக். 6:24.)

2. இதோ, உங்கள் திரவியங்களும் அழுகி, உங்கள் வஸ்திரங்களும் பூச்சிகளினால் அரிக்கப்பட்டிருக்கின்றன.

3. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்து, அவைகளில் ஏறின துரு உங்களுக்கு எதிர்ச்சாட்சியா யிருந்து, அக்கினியைப்போல் உங்கள் மாம்சங்களைப் பட்சிக்கும். கடைசிக் காலத்துக்குத் (தேவ) கோபத்தைத் தேடிக் குவிக்கிறீர்கள். (பழ. 16:27.)

4. இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலையாட்களுடைய கூலி உங்களால் வஞ்சிக்கப்பட்டு, கூக்குரலிடுகின்றது. அவர்களின் கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிக்குள் புகுந்தது. (லேவி: 19:13; இசை. 5:9.) 

5. பூமியிலே விருந்துண்டு, உங்கள் இருதயங்களைக் கொலையுண்ணும் நாளுக்காகக் கொழுக்க வளர்த்தீர்கள்.

* 5. கொலையுண்ணும் நாள்:- தீர்வைநாள்; அந்நாளில் தேவசாபத்தையடைந்து நரக நெருப்பில் சாகாமல் செத்து, வேகாமல் வேகும்படியாகச் சரீரத்தைக் கொழுக்க வைத்தாற்போல் சரீர இச்சைப்படி நடக்கிறதென்பது கருத்து.

6. நீதிமானைக் குற்றவாளியாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவ னோ உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

7. இப்படியிருக்க, சகோதரரே, ஆண்டவர் வருமளவும் பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் முன் மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடிய பொறுமையோடு காத்திருந்து, பூமியின் அரும்பலனுக்கு எதிர்பார்த் திருக்கிறான்.

8. ஆகையால், நீங்களும் பொறுமையாயிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவருடைய வருகை சமீபமாயிற்று.

9. சகோதரரே, உங்களுக்குத் தீர்ப்பு வராதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறைப்படாதிருங்கள். இதோ, நடுவர் வாசலுக்கு முன் நிற்கிறார்.

10. சகோதரரே, துன்பத்திலும், கஷ்டப்படுவதிலும், பொறுமையிலும் ஆண்டவருடைய நாமத்தினால் பேசின தீர்க்கதரிசிகளை உங்களுக்கு மாதிரி யாக வைத்துக்கொள்ளுங்கள்.

11. பொறுமையாய்ச் சகித்தவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே. யோபென்பவருடைய பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.

12. எல்லாத்துக்கும் முக்கியமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறே எந்த ஆணையிட்டாவது. சத்தியம் பண்ணாதிருங்கள். நீங்கள் தீர்வைக் குள்ளாகாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லக்கடவீர்கள். (மத். 5:34.)

13. உங்களில் யாதொருவன் துக்கமாயிருக்கிறானோ, ஜெபம்பண்ணக்கடவான். சந்தோஷமாயிருக்கிறானோ சங்கீதம் பாடக்கடவான்.

14. உங்களில் ஒருவன் வியாதியாயிருக்கிறானோ, அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணுவார்கள். (மாற். 6:13.)

* 14. வியாதிக்காரர்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ளவும், தங்கள்பேரில் தைலத்தைப் பூசவும் திருச்சபையின் குருமார்களை வரவழைக்கக் கற்பிக்கிறார். இது கத்தோலிக்கு உரோமன் திருச்சபையிலே எக்காலத்திலும் நடந்துவருகிற ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்றாகிய அவஸ்தைபூசுதல் என்றறிக.

15. அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோடிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும். (மாற். 16:18.)

16. நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவரொருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமானுடைய அயராத வேண்டுதல் மிகுந்த வல்லமையுள்ளது.

* 16. பின்னும் நீங்கள் இரட்சணியமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணுங்களென்று கற்பிக்கிறார். இங்கே ஒருவருக்கொருவர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமேதெனில், பாவப்பொறுத்தல் கொடுக்க அதிகாரம் பெற்ற குருமார்கள் ஒருவருக்கொருவர் என்றும் மற்றக் கிறீஸ்தஃவர்கள் அந்த அதிகாரம் பெற்றிருக்கிற தங்கள் குருமார்களிடத்திலென்றும் அர்த்தமல்லாது வேறல்ல. ஏனெனில், பாவப்பொறுத்தலைக் கொடுக்க அதிகாரமில்லாதவர்களிடத்தில் ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால் பிரயோஜனமென்ன?

17. எலியாயஸன்பவர் நம்மைப் போல் துன்பங்களுக்குள்ளான மனிதனாயிருந்தும், பூமியில் மழை பெய்யாதபடிக்கு உருக்கமாய் வேண்டிக்கொண்டதினாலே மூன்று வருஷமும் ஆறு மாதமும் மழை பெய்யவில்லை. (3 அரச. 17:1; லூக். 4:25.)

18. அவர் மறுபடியும் வேண்டிக் கொண்டார். வானமும் மழைபொழிய, பூமியும் தன் பலனைத் தந்தது. (3 அரச. 18:42.)

19. என் சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தினின்று தவறி விழும் போது யாதாமொருவன் அவனை மனந்திருப்பினால், (கலாத். 6:1.)

20. தவறின வழியினின்று பாவி யை மனந்திரும்பச்செய்தவன் அவனு டைய ஆத்துமத்தை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவான். (சங். 50:15; பழ. 10:12; 1 இரா. 4:8.)


இயாகப்பர் நிருபம் முற்றிற்று.