இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 05

சேசுநாதர் முப்பத்தெட்டு வருஷம் வியாதியாய்க் கிடந்தவனைச் சொஸ்தமாக்கினதும், அவர் பிதாவோடு சகலத்தையும் செய்கிறாரென்பதும், சகலருக்கும் நடுத்தீர்ப்பவராக ஏற்படுத்தப்பட்டிருக்கிறாரென்பதும்.

1. இவைகளுக்குப்பின்பு, யூதருடைய பண்டிகையாயிருந்தது. அப்பொழுது சேசுநாதர் ஜெருசலேமுக்கு ஏறிப்போ னார். (லேவி. 23:5; உபாக. 16:1.)

2. ஜெருசலேமில் ஐந்து மண்டபங்களுள்ள புரோபாத்திக்கா என்னும் ஒரு குளமிருக்கிறது. அதற்கு எபிரேய பாஷை யில் பெத்சயிதா என்னும் காரணப்பெயர் வழங்குகிறது.

* 2. புரோபாத்திக்கா என்பது ஆட்டுக்குளம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பலியிடப்பட்ட ஆடுகள் அக்குளத்தில் குளிப்பாட்டப்பட்டதினாலோ அல்லது அக் குளத்தினருகே ஆட்டு வாசல் என்ற ஓர் வாசற்படி இருந்ததினாலோ இந்தப் பெயர் அதற்கு உண்டாயிற்று.

3. இந்த மண்டபங்களில் வியாதிஸ்தரும், குருடரும், முடவரும், அவயவஞ் சூம்பினவர்களும் திரண்ட கூட்டமாய்ப் படுத்திருந்து, எப்பொழுது ஜலம் அசையுமென்று காத்துக் கொண்டிருந்தார்கள்.

4. ஏனெனில் ஆண்டவருடைய தூதன் சமயம்போல் குளத்தில் இறங்கவே, ஜலம் அசைபடும். ஜலம் அசைந்த பின் குளத்தில் முந்தி இறங்குகிறவன் எவ்வித வியாதிப்பட்டவனாயிருந்தாலும், சொஸ்தமாவான்.

* 4. இவ்விடத்தில் சொல்லியிருக்கிற குளத்தின் ஜலத்துக்கு வியாதிக்காரரைச் செளக்கியப்படுத்த சுபாவ பலனிருந்ததில்லை. ஆயினும், சர்வேசுரனால் அனுப்பப்பட்ட சம்மனசானவர் அதைக் கலக்குகிற நேரத்திலே சர்வேசுரன் அதற்கு அந்தச் சக்தியைக் கொடுத்தார்

5. அப்படியிருக்க, அங்கே முப்பத்தெட்டு வருஷமாய்ப் பிணிகொண்ட ஓர் மனிதன் இருந்தான்.

6. அவன் படுத்திருக்கிறதை சேசுநாதர் கண்டு, வெகுநாளாய் அப்படிக் கிடக்கிறானென்று அறிந்து அவனை நோக்கி: நீ சொஸ்தமாகவேண்டுமோ என்றார். 

7. பிணியாளி அவருக்கு மறுமொழி யாக: ஆண்டவரே, ஜலம் கலக்கப்படும் போது என்னைக் குளத்திலே கொண்டு விடுகிறதற்கு எனக்கு ஆளில்லை. நான் வருவதற்குள்ளே வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான்.

8. சேசுநாதர் அவனைநோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (மத். 9:6.)

9. என்றவுடனே அந்த மனிதன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அன்று ஓய்வுநாளாயிருந்தது.

10. ஆதலால் யூதர்கள் சொஸ்தமாக் கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வு நாளாயிருக்கின்றதே, நீ உன் படுக்கை யை எடுத்துக்கொண்டு போகவொண் ணாது என்றார்கள். (யாத். 20:11.)

11. அவர்களுக்கு அவன் மறுமொழி யாக: என்னைச் சொஸ்தமாக்கினவர்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட வென்று எனக்குச் சொன்னார் என்றான்.

12. அப்பொழுது அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உனக்குச் சொன்ன அந்த மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

13. ஆனால் சொஸ்தமாக்கப்பட்ட வன் அவர் இன்னாரென்று அறியாதிருந்தான். ஏனெனில் சேசுநாதர் அவ்விடத் தில் கூடி நின்ற ஜனக் கும்பலை விட்டு, மறைவாய்ப் போய்விட்டார்.

14. பின்பு சேசுநாதர் அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமாயிருக்கிறாய்; அதிக கேடான தொன்றும் உனக்கு நேரிடாதபடி, இனிப் பாவம் செய்யாதே என்றார்.

* 14. உலகத்தில் மனுஷருக்கு வருகிற வியாதிகள் சில சமயங்களில் அவர்கள் செய்த பாவத்துக்கு ஆக்கினையாக வருகிறது. வேறே சமயங்களில் அருளப்பர் சுவிசேஷம் 9-ம் அதி. 3-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடியே வெவ்வேறு காரணங்களாலும் வருகிறது. ஆயினும் உலகத்துக்கு வருகிற துன்பங்களெல்லாம் மொத்தத்திலே பாவத்துக்கு ஆக்கினையென்று சொல்ல வேண்டியதுதான். என்றாலும், அவனவன் செய்த பாவத்துக்கு இது ஆக்கினை என்று சொல்லுவது தப்பிதம். ஏனெனில் இது சர்வேசுரனுக்கு மாத்திரம் தெரிந்த காரியம்.

15. அப்பொழுது அந்த மனிதன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் சேசுநாதர்தான் என்று யூதர்களுக்கு அறிவித்தான்.

16. சேசுநாதர் இவைகளை ஓய்வுநாளிலே செய்ததைப்பற்றி யூதர்கள் அவரை உபத்திரவப்படுத்தினார்கள்.

17. சேசுநாதரோவென்றால் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக: என் பிதா வானவர் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.

18. ஆகையால் அவர் ஓய்வுநாளை மீறினதுமல்லாமல், தம்மைச் சர்வேசுரனுக்குச் சமமாக்கி, சர்வேசுரனைத் தம்முடைய பிதாவென்று சொன்னதினாலே, யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி மென்மேலும் வழிதேடிக் கொண்டிருந்தார்கள். இதனிமித்தம் சேசுநாதர் மீளவும் அவர்களுக்கு வசனித் ததாவது: (அரு. 10:30; மத். 20:23.)

19. மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்கிறதாகச் சுதன் காண்கிற காரியங்களையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவை களைச் சுதனும் அப்படியே செய்கிறார்.

20. பிதாவானவர் சுதனைச் சிநேகித்து, தாம் செய்கிற யாவையும் அவருக்குக் காண்பிக்கிறார். நீங்கள் ஆச்சரியப்படும் படியாக இவைகளிலும் பெரிதான செயல் களையும் அவருக்குக் காண்பிப்பார்.

21. அவ்வண்ணமே பிதாவானவர் மரித்தவர்களை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, சுதனும் தமக்கு இஷ்டமானவர் களை உயிர்ப்பிக்கிறார். (ஞானா. 16:13.)

22-23. ஏனெனில் பிதாவானவர் எவனுக்கும் தீர்வையிடுகிறதில்லை. ஆனால் சகலரும் பிதாவைச் சங்கிக்கிறது போல, சுதனையும் சங்கிக்கும்படியாக நியாயத்தீர்ப்பு முழுமையும் சுதனுக்கு ஒப்பித்தருளினார். சுதனைச் சங்கியா தவன் அவரை அனுப்பின பிதாவையும் சங்கியாதவனாயிருக்கிறான். (மத். 25:31.)

24. என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்வைக்குள்ளாகாமல் மரணத்தினின்று நீங்கி, ஜீவியத்துக்குள் சேருகிறானென்று மெய்யாகவே, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (அரு. 8:51.)

25. மரித்தோர் தேவசுதனுடைய குரலொலியைக் கேட்குங் காலம் வருகிறதென்றும், அது இப்பொழுதே வந்திருக் கிறதென்றும், அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்களென்றும் மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக். 7:14; அரு. 11:43.)

26. ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, சுதனும் தம்மிலே தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அவருக்குத் தந்தருளினார்.

27. அவர் மனுமகனாயிருக்கிறபடியினாலே நியாயத்தீர்வையிடும் அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் கல்லறைகளிலுள்ள யாவரும் தேவசுதனுடைய குரலொலியைக் கேட்குங்காலம் வருகிறது.

29. அப்பொழுது நற்கிரியைகளைச் செய்தவர்கள் உயிர்த்துச் சீவியத்துக்கும், துர்க்கிரியைகளைச் செய்தவர்கள் உயிர்த்து, ஆக்கினைத் தீர்வைக்கும் புறப்படுவார்கள். (மத். 25:46)

30. நானாக எதுவும் செய்யக்கூடாது. நான் கேட்கிறபடியே நியாயத் தீர்ப் பிடுகிறேன். என் தீர்ப்பு நீதியுள்ளது. ஏனெனில் நான் என்னை அனுப்பினவ ருடைய சித்தத்தைத் தேடுகிறேனே யன்றி, என் சித்தத்தை தேடுகிறதில்லை.

31. என்னைக்குறித்து நானே சாட் சியஞ் சொன்னால், என்னுடைய சாட்சியம் உண்மையாயிராது.

* 31. என்னைக் குறித்து நானே சாட்சியஞ் சொன்னால், என் சாட்சியம் இயல்பிலே உண்மை என்பது நிச்சயமானாலும், யூதர்களுடைய துர்ப்புத்தியினிமித்தம், அது அவர்களுக்கு உண்மையாகத் தோன்றாது என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்றறியவும்.

32 என்னைக்குறித்துச் சாட்சியஞ் சொல்லுகிறவர் வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச்சொல் லுஞ் சாட்சி உண்மையானதென்று அறிந்திருக்கிறேன். (மத். 3:17; அரு. 1:15.)

33. நீங்கள் அருளப்பரிடத்தில் ஆள் அனுப்பினீர்கள்: அவரும் சத்தியத்துக்குச் சாட்சியஞ் சொன்னார். (அரு. 1:19.)

34. ஆயினும் மனுஷ சாட்சியம் எனக்கு வேண்டுவதில்லை. ஆனால் நீங் கள் இரட்சிக்கப்படும்பொருட்டு இவை களை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35. அவர் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற விளக்காயிருந்தார். நீங்களும் அவரு டைய வெளிச்சத்தில் சொற்பக்காலம் களிகூற விரும்பினீர்கள்.

36. ஆனால் அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு. அதென்னவெனில் நான் நிறை வேற்றும்படி பிதாவானவர் எனக்குத் தந்தருளின கிரியைகளாம். நான் செய்து வருகிற இந்தக் கிரியைகளே பிதாவான வர் என்னை அனுப்பினாரென்று என் னைப்பற்றிச் சாட்சியஞ் சொல்லுகின்றன.

37. என்னை அனுப்பின பிதாவானவரும் என்னைக்குறித்துச் சாட்சியஞ் சொல்லியிருக்கிறார். நீங்களோ அவருடைய குரலொலியைக் கேட்டதுமில்லை, அவருடைய ரூபத்தைக் கண்டதுமில்லை. (உபாக. 4:12, 15; மத். 3:17.)

38. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவசியாதபடியால், அவருடைய வார்த்தையை உங்களிடத்தில் தரிக்கும்படி நீங்கள் வைத்துக்கொள்ளுகிறதுமில்லை.

39. வேதாகமத்தில் உங்களுக்கு நித்திய ஜீவியம் உண்டென்று எண்ணுகிறீர்களே; அவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவைகளே என்னைக் குறித்துச் சாட்சியஞ் சொல்லுகின்றன.

* 39. யூதர்கள் பழைய ஏற்பாட்டைப் படித்து, ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், சேசுநாதர்தான் உலக இரட்சகரென்று அவர்கள் அவசியமாய் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்குமென்பது இவ்வாக்கியத்தின் கருத்து. ஆகையால் சுவிசேஷத்தை மேலெழுந்தவாரியாய் வாசிக்கிறது ஆகாதென்பது இதன் உட்கருத்தாகும்

40. அப்படியிருந்தும், நீங்கள் ஜீவனை அடையும்பொருட்டு என்னிடத்தில் வர மனதில்லாதிருக்கிறீர்கள்.

41. மனிதரால் பிரபல்லியம் எனக்கு அவசியமில்லை.

42. ஆனால் நீங்கள் தேவசிநேக மற்றவர்களாயிருக்கிறதாக நான் உங்களை அறிந்திருக்கிறேன்.

43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை; வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால், அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

44. சர்வேசுரனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவரால் உண்டாகும் மகிமையைத் தேடிக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவசிக்கக்கூடும்? (அரு. 12:43.)

45. பிதாவினிடத்தில் நான் உங்கள் மேல் குற்றஞ்சாட்டுவேனென்று நீங்கள் நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற மோயீசனே உங்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவர்.

46. நீங்கள் மோயீசனை விசுவசித்தீர்களேயானால், ஒருவேளை என்னையும் விசுவசித்திருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைக் குறித்து எழுதியிருக் கிறார்; (ஆதி. 3:15; 22:18; 49:10; உபாக. 18:15; அரு. 1:45; லூக். 24:44.)

47. அவருடைய எழுத்துக்களை நீங்கள் விசுவசியாமலிருந்தால், என்னுடைய வார்த்தைகளை எப்படி விசுவசிக்கப்போகிறீர்கள் என்று திரு வுளம்பற்றினார்.