இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 04

விசுவாசத்தினாலே நித்திய இளைப்பாற்றியை அடையக்கடவோம் என்றும் நம்முடைய பரம குருவாகிய சேசுக்கிறீஸ்துநாதர் தேவ சமுகத்திற் சேரும் வழியை நமக்குத் திறந்தார் என்றும் காட்டுகிறார்.

1. ஆனபடியினாலே அவருடைய இளைப்பாற்றியில் பிரவேசிப்பதற்கு நமக்கு வாக்குத்தத்தஞ் செய்யப்பட்டிருக்க, அதைவிட்டு உங்களில் ஒருவனும் தவறிப்போனவனென்று எண்ணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.

2. ஏனெனில் இந்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதெப்படி யோ, அப்படியே நமக்கும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கேட்ட வாக்கியத்தை விசுவாசத்தோ டுங்கூடக் கேட்காததினாலே, அந்த வாக்கியம் அவர்களுக்குப் பிரயோசனப் படவில்லை.

3. இவர்கள் என் இளைப்பாற்றியில் பிரவேசிப்பவர்களோ என்று என் கோபத்தில் ஆணையிட்டேன் என்று அவர் சொல்லியிருக்கிறதினாலே, விசுவசித்திருக்கிற நாம் அந்த இளைப்பாற்றியில் பிரவேசிப்போம். (சர்வேசுரன்) உலகத்தை உண்டாக்கித் தமது வேலையை முடித்தபின்பு கொண்ட இளைப்பாற்றியே அந்த இளைப்பாற்றி. (சங். 94:10.)

4. ஏனெனில் சர்வேசுரன் தம்முடைய வேலைகளையெல்லாம் முடித்து, ஏழாம் நாளிலே இளைப்பாறினார் என்று ஏழாம் நாளைக்குறித்து (வேதா கமத்தில்) ஓரிடத்தில் சொல்லப் பட்டிருக்கிறதல்லோ? (ஆதி. 2:2.)

5. பின்னும் அதிலேயே: இவர்கள் என் இளைப்பாற்றிக்குள் பிரவேசிப்பார் களோ என்றும் சொல்லியிருக்கிறதே!

6. ஆதலால் அந்த இளைப்பாற்றிக்குள் சிலர் இனிப் பிரவேசிக்க வேண்டியிருக்கிறதினாலும், முந்தி அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றவர்கள் தங்கள் அவிசுவாசத்தினாலே அதில் பிரவேசியாததினாலும்,

7. வெகுகாலத்துக்குப்பிறகு தாவீது என்பவருடைய வாக்கினால் ஒரு விசே ஷித்த நாளை இன்று என்றுஎல்லை யாகக் குறிக்கிறார். ஏனெனில் இன்று அவருடைய வாக்கைக் கேட்பீர்களா கில் உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதிருங்கள் என்று ஏற்கனவே எழுதப்பட்டது. (எபி. 3:7; சங். 94:8)

8. யோசுவா என்பவர் இளைப்பாற்றியை அவர்களுக்குப் பெறுவித்திருந்தால், பிந்திவரும் வேறொரு நாளைக்குறித்து, அவர் ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டாரே.

9. ஆகையால் தேவ பிரஜைகளுக்கு இளைப்பாற்றியின் காலம் இனி வருகிற தாயிருக்கிறது.

10. ஏனெனில் அவருடைய இளைப்பாற்றிக்குள் பிரவேசித்தவன் சர்வேசுரன் தம்முடைய கிரியைகளை முடித்து இளைப்பாறினதுபோல், தானும் தன் கிரியைகளை முடித்து இளைப்பாறுவான்.

11. ஆனதைப்பற்றி (நம்மில்) எவனும் அந்த விசுவாசிகளுடைய மாதிரியாகாதபடி, அந்த இளைப்பாற்றிக் குள் பிரவேசிக்கத் தீவிரிப்போமாக.

12. ஏனெனில் தேவ வாக்கியமானது உயிருள்ளதும், சக்தியுள்ளதும், இருபுறமும் கருக்குள்ள எந்த வாளிலும் அதிகக் கூரானதுமாயிருந்து, ஞானாத்துமாவையும், ஜீவாத்துமாவையும், மூட்டுகளையும், மூளையையுங்கூட ஊடுருவிப் பிரிக்கத்தக்கதுமாய், இருதயத்தின் நினைவுகளையும் கருத்துகளையும் வகையறுக்கத்தக்கதுமாய் இருக்கின்றது.

13. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. அவருடைய கண்களுக்கு முன்பாக சகலமும் திறப்பாயும், வெட்டவெளியாயும் இருக்கின்றது. அவருக்கே நாம் கணக்குக் கொடுக்கவேண்டும். (சங். 33:16; சர்வப். 15:20.)

14. ஆகையால் வானமண்டலங்களை எல்லாம் ஊடுருவிப்போயிருக்கிற சர்வேசுரனுடைய சுதனாகிய சேசுநாதர் நமக்கு மகா பிரதான குருப்பிரசாதியாய் இருக்கையில் நாம் ஏற்றுக்கொண்ட விசுவாசத்தைக் கடைப்பிடிப்போமாக.

15. ஏனெனில் நமக்கு உள்ள குருப் பிரசாதியானவர் நம்முடைய பலவீனங் களில் நமக்கு இரங்கமாட்டாதவர் அல்ல. ஆனால் பாவம் நீங்கலாக மற்ற எவ்விதத்திலும் அவர் நமக்கு ஒத்தவ ராய்ப் பரிசோதிக்கப்பட்டவராமே.

16. ஆதலால் நாம் இரக்கம் பெறும் படிக்கும், அவசிய சமயத்துக்குக் கிருபையைக் கண்டடையும்படிக்கும் அவரு டைய கிருபைச் சிம்மாசனத்தை நம் பிக்கையோடு அண்டிப் போவோமாக.