அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 04

பாவத்தை விலக்கி, ஜெபத்திலும், அந்நியோந்நிய சிநேகத்திலும் நிலைத்திருக்கவும், எல்லாவற்றையும் தேவ ஸ்தோத்திரமாகச் செய்யவும், கிறீஸ்துநாதருடைய பாவனையாகத் துன்பங்களில் பொறுமையாயிருக்கவும் கற்பிக்கிறார்.

1. ஆகையால் கிறீஸ்துநாதர் நமக்காகத் தமது சரீரத்தில் பாடுபட்டிருக்கக்கொள்ள, நீங்களும் அப்படிப்பட்ட சிந்தனையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். (உரோ. 6:6.)

2. ஏனெனில், சரீரத்தில் பாடுபட்டவன் இனித் தான் சரீரத்தோடிருக்கும் காலம்வரையில், மனுஷருடைய இச்சைகளின்படி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத்தின்படியே நடக்கத்தக்கதாகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான். (எபே. 4:23.)

3. ஆகையால், காமவிகாரம், துராசை, மதுபானம், பேருண்டி, குடிவெறி, அக்கிரமமான விக்கிரக ஆராதனை ஆகிய இவைகளில் உழன்றவர்கள் உண்டே, அவர்கள் அஞ்ஞானிகளுடைய மனதின்படி நடப்பதற்கு இவைகளில் செலவழித்த காலம் போதும்.

4. இப்பொழுதோ வெட்கத்துக்குரிய அப்படிப்பட்ட துர்மார்க்கத்திலே அவர்களோடுகூட நீங்களும் நடவாததினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷணிக்கிறார்கள்.

5. அவர்கள் ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்க ஆயத்தமாயிருக்கிறவருக்குக் கணக்குக் கொடுப்பார்கள்.

6. இதனிமித்தம் மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாகச் சரீரத்தில் தீர்வையிடப்பட்டிருந்தாலும் சர்வே சுரன் முன்பாக ஆத்துமத்தில் பிழைக்கும் படியாக அவர்களுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.

* 6. இந்த அதிகாரத்தின் துவக்கமுதல் விளங்குகிறபடி மறு ஜீவியம் உண்டென்று விசுவசியாத அஞ்ஞானிகளைப்போல் கிறீஸ்துவர்கள் நடக்கப்படாதென்றும், அவர்கள் நிந்தை பரியாசம் பண்ணினாலும், அவர்கள் ஜீவியரையும், மரித்தோரையும் நடுத்தீர்க்கப்போகிற கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியதென்றும் காண்பித்த பின், மறு ஜீவியம் உண்டென்று தெளிவிக்கும்படி முந்தின அதிகாரம் 19-ம், 20-ம் வசனங்களில் சொல்லியதைத் திரும்பவுஞ் சொல்லுகிறார்.

7. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் விவேகிகளாயிருந்து, ஜெபம்பண்ணுவதில் விழித்திருங்கள்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரோடொருவர் நிலைமையான சிநேகமுள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் சிநேகமானது திரளான பாவங்களை மூடும். (பழ. 10:12.)

9. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். (உரோ. 12:13; எபி. 13:2; பிலிப். 2:14.)

10. அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே சர்வேசுரனுடைய பல வித வரப்பிரசாதங்களைப் பங்கிடுகிற நல்ல உக்கிராணக்காரரைப்போல், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

11. ஒருவன் போதித்தால், தேவ வாக்கியத்துக்கேற்ப போதிக்கக்கடவான். ஒருவன் பணிவிடை செய்தால், சர்வே சுரன் தனக்கருளின பலத்தின்படி செய் யக்கடவான். இப்படியே சகல காரியங் களிலும் சேசுக்கிறீஸ்துவின் மூலமாய்ச் சர்வேசுரனுக்கு ஸ்துதியுண்டாகும்படி செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் இராச்சியபாரமும் அநவரத காலங்களி லும் உண்டாகக்கடவது. ஆமென்.

12. மிகவும் பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்களுக்கு நேரிடுகிற (துன்பமாகிற) அக்கினியைப் பற்றி ஏதோ நூதனமென்று ஆச்சரியப் படாமல்,

* 12. இதில் சொல்லப்படுகிற அக்கினி, துன்ப துரிதங்களின் பெருக்கமாம். ஏனெனில் தட்டானானவன் அக்கினியினால் பொன்னைப் பரிசோதித்துச் சுத்தமாக்குகிறதுபோல், சர்வேசுரனும் சகல புண்ணியாத்துமாக்களையும் பெருந் துன்ப துரிதங்களினால் சோதித்துப் பரிசுத்தமாக்குவது வழக்கமாயிருக்க, நமக்கு ஏதேனும் துன்ப துரிதம் நேரிடும்போது, அது நூதனமென்று எண்ணித் திகைக்கலாகாதென்று அறியவும்.

13. கிறீஸ்துநாதருடைய மகிமை வெளிப்படும்போது, நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதினாலே சந்தோஷப்படுங்கள்.

14. நீங்கள் கிறீஸ்துநாதருடைய நாமத்தைப்பற்றி நிந்திக்கப்பட்டால், பாக்கியவான்கள். ஏனெனில், சர்வேசுரனுடைய மாட்சிமையும் மகிமையும் வல்லமையுமாகிய அவருடைய இஸ்பிரீத்துவானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். (மத். 5:10.)

15. உங்களில் ஒருவனும், கொலை பாதகன், திருடன், அவதூறு சொல்லுபவன், பிறர் பொருளை அபேட்சிக்கிறவனாக ஆக்கினைப்படக்கூடாது.

16. ஆனால், ஒருவன் கிறீஸ்துவனாயிருப்பதைப்பற்றிப் பாடுபட்டால் வெட் கப்படாமல், இந்த நாமத்தின் நிமித்தம் சர்வேசுரனை மகிமைப்படுத்துவானாக.

17. ஏனெனில், நடுத்தீர்வை சர்வே சுரனுடைய வீட்டிலே துவக்குங் காலமாயிருக்கின்றது. நம்மிடத்திலே அது முந்தித் துவக்கினால், சர்வேசுரனுடைய சுவிசேஷத்துக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய முடிவு என்னமாயிருக்கும்?

18. நீதிமானே இரட்சணியமடைவது அரிதானால், தேவ துரோகிக்கும் பாவிக்கும் இடம் எங்கே? (பழ. 11:31.)

19. ஆகையால் சர்வேசுரனுடைய சித்தத்தின்படி துன்பப்படுகிறவர்கள் நற்கிரியைகளைச் செய்து, தங்கள் பிரமாணிக்கமுள்ள சிருஷ்டிகராகிய அவர் கையில் தங்கள் ஆத்துமங்களை ஒப்பு விக்கக்கடவார்கள்.