இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 04

சேசுநாதர் சமாரிய ஸ்திரீயோடு சம்பாஷித்ததும், சமாரியர்களில் அநேகர் அவரை விசுவசித்ததும், ஓர் சிற்றரசனுடைய மகனைக் குணமாக்கினதுமாகிய விசேஷங்கள்.

1. அருளப்பரைவிட சேசுநாதர் அநேகம் பேர்களைச் சீஷர்களாக்கி, ஞானஸ்நானங் கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாக சேசுநாதர் அறிந்தபோது, (அரு. 3:22.)

2. ஞானஸ்நானம் சேசுநாதருடைய சீஷர்கள் கொடுத்ததேயல்லாமல், அவர் கொடாதிருந்தாலும்,

* 1-2. சேசுநாதர்சுவாமியின் ஸ்தானாபதிகளான அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானங் கொடுத்துவந்ததினாலே, அவர்கள் கொடுத்த ஞானஸ்நானம் சேசுநாதர்சுவாமியால் கொடுக்கப்பட்டதென்று இவ்விடத்தில் சொல்லியிருக்கிறது. இந்தப்பிரகாரமாய் அப்போது துவக்கி உலக முடியுமட்டும் அப்போஸ்தலர்களும் அவர்கள் வழியாக விடாத தொடர்போடு ஏற்பட்டுவருகிற திருச்சபைக் குருமார்களும் கொடுத்துவருகிற ஞானஸ்நானம், பச்சாத்தாபம் முதலிய தேவதிரவிய அநுமானங்களை சேசுநாதரே நிறைவேற்றுகிறாரென சொல்லத்தகும்.

3. அவர் யூதேயா தேசத்தை விட்டு, மறுபடியும் கலிலேயா நாட்டுக்குப் போனார்.

4. அவர் சமாரியா நாட்டின் வழியாகப் போகவேண்டியதாயிருந்தது.

5. ஆகையால் யாக்போபு என்பவர் தமது குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகேயிருந்த ஊராகிய சிக்காரென்னும் சமாரியா நாட்டிலுள்ள ஊருக்கு வந்தார். (ஆதி. 33:19; 48:22; ஜோசு. 24:32.)

6. அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; சேசுநாதர் பிரயாணத்தால் களைத்து, அப்படியே அந்தக் கிணற்றின் மேல் உட்கார்ந்தார். அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி வேளையா யிருந்தது.

7. அந்நேரத்தில் சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள்; சேசுநாதர் அவளை நோக்கி: எனக்குத் தாகத்துக்குக் கொடு என்றார்.

8. அவருடைய சீஷர்களோவெனில் உணவுகளை வாங்கும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.

9. சமாரிய ஸ்திரீயாகிய அவள் அவரைநோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குக் கேட்கிறதெப்படி? என் றாள். ஏனெனில் யூதர் சமாரியரோடு கூடப் புழங்குவதில்லை. (சர்வப். 50:27.)

* 9. சமாரியர்கள் ஆதியிலே யூதர்களோடு சேர்ந்து ஒரே வேத முறைமைகளை அநுசரித்திருந்தும், பின்னால் தேவ பிரிவினைக் காரர்களானார்கள். அதனிமித்தம் யூதர் அவர்களை வெறுத்து, அவர்களோடு போஜனபானமுதலாய்ச் செய்யாதிருந்தார்கள்.

10. அதற்கு சேசுநாதர்: நீ சர்வேசுரனுடைய வரத்தையும், எனக்குத் தாகத்துக்குத் தாவென்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னாரென்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் ஒருவேளை கேட்டிருப்பாய். அவரும் உனக்குச் சீவ ஜலத்தைக் கொடுத்திருப் பார் என்றார்.

11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்வதற்கு உம்மிடத்தில் ஒன்றும் இல்லையே, கிணறும் ஆழமா யிருக்கிறதே; எங்கேயிருந்து சீவ ஜலம் உமக்குக் கிடைக்கும்?

12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த எங்கள் பிதாவாகிய யாக்கோ பைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? இந்தக் கிணற்றில் அவரும் அவருடைய பிள்ளைகளும் அவருடைய மந்தைகளும் தண்ணீர் குடித்தார்களே என்றாள்.

13. சேசுநாதர் அவளுக்குப் பிரத்தியுத்தாரமாக: இந்தத் தண்ணீரில் பானம் பண்ணுகிற எவனுக்கும் மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண் ணீரில் பானம்பண்ணுகிறவனுக்கோ, என்றென்றைக்கும் தாகமுண்டாகாது.

14. ஆனால் நான் அவனுக்குக் கொ டுக்கும் ஜலம் அவனிடத்தில் நித்திய ஜீவியத்துக்குப் பாய்கிற நீருற்றாகும் என்றார்.

15. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண் டாகாமலும், நான் தண்ணீர் மொள்ள இங்கே வராமலுமிருக்கும்படி, அந்தத் தண்ணீரை எனக்குத் தந்தருளும் என்றாள்.

16.சேசுநாதர் அவளைநோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா என்றார்.

17. அந்த ஸ்திரீ மறுமொழியாக: எனக்குப் புருஷனில்லை என்றாள். அதற்கு சேசுநாதர்: உனக்குப் புருஷனில் லையென்று நன்றாய்ச் சொன்னாய். 

18. ஏனெனில் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். இப்பொழுது உனக்கு இருக்கிறவனும் உன்னுடைய புருஷன் அல்ல; இதை உள்ளபடியே சொன்னாய் என்றார்.

19. அப்பொழுது அந்த ஸ்திரீ: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்.

20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே ஆராதனை செய்துவந்தார்கள்; நீங்களோ ஆராதனை செய்யவேண்டிய இடம் ஜெருசலேமிலிருக்கிறது என்கிறீர்கள் என்றாள். (உபாக. 12:5.)

* 20. சமாரியர்கள் பிரிவினைக்காரராய்ப் போனபின் வெகுகாலம்வரையில் தேவாலயங் கட்டாதிருந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் அலெக்சாந்தர் இராஜாயூதேயா தேசத்துக்கு வந்து, சமாரிய நாட்டைப் பிடித்தபோது, அவனுடைய உத்தரவுபெற்று, காரீசிம் என்னும் மலையின்மேல் ஒரு பிரிவினைக் கோவிலைக் கட்டி அதில் பூசை பிரார்த்தனை நடத்தி வந்தார்கள். (கால்மேத்.) ஆகையால் இந்த வாக்கியத்தில் சமாரிய ஸ்திரீ குறித்துப்பேசுகிற மலை காரீசிம் மலைதான்.

21. அதற்கு சேசுநாதர்: ஸ்திரீயே, என்னை நம்பு. இதோ காலம் வருகிறது, அப்பொழுது இந்த மலையிலாவது ஜெருசலேமிலாவது நீங்கள் பிதாவை ஆராதிக்கமாட்டீர்கள்.

22. நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள், நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம். ஏனெனில் இரட்சணியம் யூதரிடத்தினின்று வருகிறது. (4 அரச. 17:41)

23. உண்மையாக ஆராதிப்பவர்கள் ஞானத்திலும் சத்தியத்திலும் ஆராதிக் குங்காலம் வருகிறது; இப்போதே வந்திருக்கிறது. ஏனெனில் பிதாவான வரும் தம்மை இப்படி ஆராதிக்கிறவர்களைத் தேடுகிறார்.

24. சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்கவேண்டும் என்றார். (1 கொரி. 3:17.)

* 21-24. சாலமோன் இராஜா ஜெருசலேமில் கட்டின தேவாலயத்தில் மாத்திரம் அந்நாள் பலிகளெல்லாம் செலுத்தப்படவேண்டியதாயிருந்தது. பிரிவினைக்காரரான சமாரியர்கள் ஜெருசலேமில் பலியிடப்போகாமல், அவர்கள் பட்டணத்துக்கு அருகேயிருந்த காரீசிம் என்ற மலையின்மேல் சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமாய்ப் பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இந்தப் பலிகளெல்லாம் தெய்வபக்தியில்லாமல் யூதர்கள் வெறுஞ் சடங்குகளாக நிறைவேற்றிவந்ததினாலே அவைகளுக்கு முடிவுகாலம் வந்ததென்றும், இது முதற்கொண்டு ஞானமாயிருக்கப்பட்ட சர்வேசுரனை ஞானமும் உண்மையும் அடங்கிய தேவ விசுவாசம் தேவ நம்பிக்கை தேவ சிநேகத்தினாலே ஆராதிக்கிற காலம் வந்திருக்கிறதென்றும் சேசுநாதர்சுவாமி படிப்பிக்கிறார்.

25. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்துநாதர் என்னப்படுகிற மெசியாஸ் வருகிறாரென்று அறிவேன். அவர் வரும்போது எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார் என்றாள்.

26. அதற்கு சேசுநாதர்: உன்னோடு பேசுகிற நானே அவர் என்று அவளுக்குத் திருவுளம்பற்றினார்.

27. அந்நேரமே சீஷர்கள் வந்து, அவர் அந்த ஸ்திரீயோடே சம்பாஷிக்கிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் நீர் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளோடு பேசுகிறீரென்றாவது ஒரு வரும் கேட்கவில்லை.

28. அப்பொழுது அந்த ஸ்திரீ தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே போய், அவ்விடத்து ஜனங்களை நோக்கி:

29. ஒரு மனிதனை வந்துபாருங்கள், நான் செய்ததெல்லாவற்றையும் அவர் எனக்குச் சொன்னார்; ஒருவேளை அவர்தான் கிறீஸ்துநாதரோ என்றாள்.

30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.

31. அதற்குள்ளாகச் சீஷர்கள்: குருவே, சாப்பிடும் என்று அவரை மன்றாட,

32. சேசுநாதர் அவர்களை நோக்கி: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.

33. ஆகையால் சீஷர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி: யாராகிலும் அவருக்குச் சாப்பிடக் கொண்டுவந்தானோ என்றார்கள்.

34. சேசுநாதர் அவர்களை நோக்கி: என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய வேலையைச் சரிவர முடிப்பதே எனக்குப் போஜனமாயிருக்கிறது.

35. அறுப்புக்காலம் வர இன்னும் நாலுமாதம் உண்டென்று சொல்லுகிறீர்களல்லவா? இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்கள் கண்களை ஏறெடுத்து நாடெல்லாம் அறுப்புக்கு வெளுத்திருக்கிறதைப் பாருங்கள். (மத். 9:37; லூக். 10:2.)

36. ஆகையால் அறுக்கிறவன் தன் கூலியைப்பெற்று நித்திய ஜீவியத்துக்குப் பலனைச் சேர்க்கிறான். இதனால் விதைக்கிறவனும் அறுக்கிறவனும் ஒரு மிக்கச் சந்தோஷப்படும்படியாகிறது.

37 எப்படியெனில்: விதைக்கிறவன் ஒருவன், அறுக்கிறவன் ஒருவன் என்னும் பழமொழி இதிலே மெய்யாகின்றது.

38. நீங்கள் பிரயாசப்படாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்; மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள்; நீங்களோ, அவர்கள் பிரயாசப்பட்டதில் பிரவேசித்தீர்கள் என்றார்.

* 38. உலகமுண்டான நாள் துவக்கி, அப்போஸ்தலர் காலம் வரையில் பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், வேதபாரகரும் தங்கள் போதகத்தினாலும், வேண்டுதலினாலும், தர்ம நடக்கையினாலும், மனுக்குலத்தோரை இரட்சகருடைய வருகைக்கு ஆயத்தம்பண்ணினார்கள். ஆகையால் சேசுநாதர் தம்முடைய அப்போஸ்தலர்களை உலகமெங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பும்போது, மற்றவர்கள் உழைத்துப் பிரயாசப்பட்டதை அறுக்க நான் உங்களை அனுப்புகிறேன் என்றார்.

39. இப்படியிருக்க: நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னாரென்று சாட்சிசொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம், அந் தப் பட்டணத்திலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்க ளானார்கள்.

40. ஆதலால் சமாரியர் அவரிடத்திலே வந்து: தங்களிடத்தில் தங்கவேண்டு மென்று அவரை மன்றாடினார்கள். அவரும் அவ்விடத்திலே இரண்டுநாள் தங்கினார்.

41. அப்பொழுது அவருடைய போத கத்தினிமித்தம் முன்னிலும் அநேகம்பேர் அவரை விசுவசித்து,

42. அந்த ஸ்திரீயை நோக்கி: இப் பொழுது நாங்கள் விசுவசிக்கிறது உன் னுடைய வார்த்தையைப்பற்றியல் லவே, நாங்களே அவருடைய வாக் கைக் கேட்டு, அவர் மெய்யாகவே உலக இரட்சகரென்று அறிந்திருக்கிறோம் என்றார்கள்.

43. ஆனால் அவர் இரண்டு நாளைக்குப்பிறகு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா நாட்டுக்குப் போனார். (மத். 4:12.)

44. ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த நாட்டிலே மகிமையடையாரென்று சேசுநாதர்தாமே சாட்சி சொல்லியிருந் தார். (மத். 13:57; மாற். 6:4; லூக். 4:24.)

* 44. சேசுநாதர் சமாரியா நாட்டைவிட்டுக் கலிலேயா நாட்டுக்குப் போகும்போது, தமது சொந்த ஊராகிய நசரேத்தூரில் போய்த் தங்காமல், கப்பர்நாவும் ஊரில் வாசஞ்செய்யப் போனதற்குக் காரணம் இங்கே சொல்லப்படுகிறது.

45. ஆகையால் அவர் கலிலேயா நாட்டுக்கு வந்தபோது, கலிலேயர் ஜெரு சலேமில் திருநாளிலே அவர் செய்த யாவற்றையும் கண்டிருந்தபடியினாலே அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர் களும் திருநாளுக்குப் போயிருந்தார்கள். (மத். 4:12; மாற். 1:14; லூக். 4:14)

46. பின்பு அவர் தண்ணீரைத் திராட்ச ரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மறுபடியும் வந்தார். அப் பொழுது ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுடைய மகன் கப்பர்நாவும் ஊரிலே வியாதியாயிருந்தான். (அரு. 2:1-9.)

47. சேசுநாதர் யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வருகிறாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டவுடனே, அவரிடத்திற்குபோய், அவர் வந்து தன் குமாரனைக் குணமாக்க வேண்டுமென்று மன்றாடினான். ஏனெனில் அவன் சாகக் கிடந்தான்.

48. அப்பொழுது சேசுநாதர் அவனை நோக்கி: நீங்கள் அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் கண்டாலொழிய, விசுவசிக்கமாட்டீர்கள் என்று சொல்ல,

49. அந்தச் சிற்றரசன் அவரை நோக்கி: சுவாமி, என் மகன் சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.

50. சேசுநாதர் அவனை நோக்கி: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கி றான் என்றார். அந்த மனிதன் சேசுநாதர் தனக்குச் சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.

51. அவன் போகையில், அவனுடைய ஊழியர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து: உம்முடைய குமாரன் பிழைத்திருக் கிறான் என்று அறிவித்தார்கள்.

52. அப்பொழுது அவன்: எந்நேரத்தில் அவனுக்கு வியாதி குணமானதென்று அவர்களிடத்தில் விசாரிக்க, அவர்கள்: நேற்று ஏழு மணிக்குக் காய்ச்சல் அவனை விட்டு நீங்கினது என்றார்கள்.

53. உன் மகன் பிழைத்திருக்கிறா னென்று சேசுநாதர் தனக்குச் சொன்ன நேரம் அதுதான் என்று தகப்பன் அறிந்து அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவசித்தார்கள்.

54. சேசுநாதர் யூதேயா தேசத்திலிருந்து கலிலேயா நாட்டுக்குத் திரும்பி வந்தபின், அவர் செய்தருளிய இரண்டாம் அற்புதம் இதுவே.