இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 03

சேசுநாதர் இரவிலே தம்மிடத்தில்வந்த நிக்கோதேமு என்பவனுக்குச் சொன்ன உபதேசமும், ஸ்நாபக அருளப்பர் அவரைக் குறித்துச் சொல்லிய சாட்சியமும்.

1. யூதர்களுக்குள்ளே பிரபுவான நிக்கோதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவனிருந்தான். (அரு. 7:50; 19:39.)

2. அவன் இரவிலே சேசுநாதரிடத்தில் வந்து: குருவே, நீர் சர்வேசுரனிடத்திலிருந்து போதகராய் வந்திருக்கிறீரென்று அறிவோம். ஏனெனில் ஒருவனும் தன் னோடு சர்வேசுரன் இருந்தாலொழிய, நீர் செய்கிற இந்த அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான்.

3. சேசுநாதர் அவனுக்கு மறுமொழி யாக: ஒருவன் மறுபடியும் பிறவாதிருந் தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காணமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

4. நிக்கோதேமு அவரை நோக்கி: மனுஷன் முதிர்வயதாயிருக்கையில், எப்படிப் பிறக்கக்கூடும்? அவன் தன் தாய் வயிற்றில் திரும்பவும் பிரவேசித்து, மறுபடி பிறக்கக்கூடுமோ என்றான்.

5. சேசுநாதர் பிரத்தியுத்தாரமாக: ஒருவன் ஜலத்தினாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும் மறுபிறப்பு அடையாதிருந்தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

* 4-5. மனுஷரெல்லோரும் ஜென்மதோஷத்தோடு உற்பவிக்கிறதினாலே பிறக்கிறபோது சரீர உயிரடைந்திருந்தாலும், ஆத்தும உயிராகிய இஷ்டப்பிரசாதமில்லாமல் பிறக்கிறார்கள். ஆகையால் ஜென்ம தோஷத்தைக் கழுவுகிற ஞானஸ்நானத்தை அவசியமாய்ப் பெற்றுத் தேவ இஷ்டப்பிரசாதமாகிற ஞான உயிரையும், ஞானப்பிறப்பையும் அடையவேண்டியது. கர்த்தர் இவ்விடத்தில் குறிக்கிற மறுபிறப்பும், ஞானப்பிறப்பும் இதுவேயன்றி, சரீரப் பிறப்புமல்ல, மறு ஜெனனமுமல்ல என்றறியவும்.

6. மாம்சத்தினால் பிறந்தது மாம்சமாம்; இஸ்பிரீத்துவினால் பிறந்தது இஸ்பிரீத்துவாமே.

7. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைப்பற்றி ஆச்சரியப்படவேண்டாம்.

8. காற்றானது தனக்கு இஷ்டமான பக்கத்தில் வீசுகின்றது. அதன் சத்தத்தைக் கேட்கிறாய்; ஆயினும் அது எங்கேயிருந்து வருகிறதென்றும், எங்கே போகிறதென்றும் அறியாய். இஸ்பிரீத்துவினால் பிறந்த எவனும் அத்தன்மையே இருக்கிறான் என்று திருவுளம் பற்றினார். (சங். 134:7.)

* 8. கண்ணுக்குக் காணப்படாத காற்றானது, அதன் அசைவினால் காணப்படுவதுபோல, ஞானஸ்நானத்தால் ஆத்துமம் அடைகிற ஞானப் பிறப்பும் கண்ணுக்குப் புலப்படாதிருந்தாலும், அது நிறைவேற்றுகிற புண்ணியக் கிரியைகளால் புலப்படலாகுமென்று இதிலே கர்த்தர் காண்பிக்கிறார்.

9. அதற்கு நிக்கோதேமு: இவைகள் எப்படி ஆகக்கூடும் என்று கேட்க,

10. சேசுநாதர் அவனுக்கு மறுமொழி யாக: நீ இஸ்ராயேலில் போதகனா யிருந்தும், இவைகளை அறியாயோ?

11. நாங்கள் அறிந்திருக்கிறதைப் பேசி, கண்டதற்குச் சாட்சி சொல்லுகிறோமென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். ஆயினும் எங்கள் சாட்சியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

12. பூலோகத்துக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் விசுவசிக்கவில்லையே; பரலோகத்துக்கடுத்த காரியங்களைச் சொல்வேனாகில், எப்படி விசுவசிப்பீர்கள்?

13. பரலோகத்தினின்று இறங்கின வரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுமகனைத் தவிர, பரலோகத்துக்கு ஏறினவர் ஒருவருமில்லை.

14. மோயீசன் கானகத்திலே சர்ப்பத்தை உயர்த்தினதுபோல, மனுமகனும், (எண். 21:9.) 

15. தம்மை விசுவசிக்கிற எவனும் சேதமாகாமல், நித்திய ஜீவனை அடையும்படி உயர்த்தப்படவேண்டும்.

* 14-15. இவ்வாக்கியங்களின் கருத்து வெளியாகும்படி எண்ணாகமம் 21-ம் அதி. 5-ம் வசனமுதல் 9-ம் வசனம் வரையில் காண்க. விஷ சர்ப்பந் தீண்டினவர்கள் வெண்கலச் சர்ப்பத்தைப் பார்த்தவுடனே சுகமடைந்ததுபோல, நரக சர்ப்பத்தின் விஷமாகிய பாவ விஷந் தீண்டினவர்கள் பாடுபட்ட சுரூபத்தைப் பார்த்து, பாவத்தின் விஷம் இன்னதென்று காட்டுகிற கர்த்தருடைய பாடுகளைத் தியானித்தால், அவர்கள் இரட்சண்யம் அடைவார்கள். ஆதலால் பாடுபட்ட சுரூபத்தைச் செய்து தங்களிடத்தில் பூச்சியமாய் வைத்துக்கொள்வது நன்மையான காரியம். அது ஆகாதென்று போதிப்பது சுவிசேஷ வாக்கியத்துக்கு விரோதமாயிருக்கின்றது.

16. சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசு வாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9; உரோ. 5:8.)

17. உலகத்துக்கு ஆக்கினைத் தீர் வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார்.

* 17. உலகத்தை இரட்சிக்கும்பொருட்டாகவே பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய திவ்விய சுதனை இவ்வுலகத்துக்கு அனுப்பினார். இந்த அனுப்புதலைப் பற்றியே திவ்விய கர்த்தர் இவ்விடத்தில் பேசுகிறார். உலக முடிவிலோ, அவர் சகல மனுஷரையும் நடுத்தீர்க்க இரண்டாந்தரம் வருவார். இதன் விபரம் மத். 24-ம் அதி. 30-ம் வசனமுதல் காண்க.

18. அவரை விசுவசிக்கிறவன் தீர்வை யிடப்படான்; அவரை விசுவசியாதவ னோ கடவுளின் ஏக குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிராததி னால் ஏற்கனவே தீர்வையிடப்பட்டி ருக்கிறான். (1 தீமோ. 6:16; 1 அரு. 4:12.) 

* 18. இந்த வாக்கியத்திலே சேசுநாதரை விசுவசிக்கிறவன் தீர்வையிடப்படானென்று சொல்லியிருப்பதினாலே இரட்சணியம் அடைவதற்கு சேசுநாரை விசுவசிக்கிறதொன்றே போதுமென்று அர்த்தமல்ல, இரட்சணியம் அடையும்படி வேத கற்பனைகளைக் கைக்கொண்டு அநுசரிக்கவும் வேண்டுமென்று திவ்விய கர்த்தர் மத்.19-ம் அதி. 17-ம் வசனத்தில் தெளிவாய்ப் போதிக்கிறார்

19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும், மனுஷர், தங்கள் கிரியைகள் கெட் டவைகளாயிருந்தபடியினாலே, ஒளியை விட்டு, இருளையே தாவிளையென்று விரும்பினார்கள். இதுவே அவர்களு டைய தீர்வைக்குக்காரணம். (அரு. 1:9)

* 19. இவ்வாக்கியத்தில் ஒளியென்பது மனுமக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவிக்க இவ்வுலகத்தில் ஞானச் சுடராய் வந்த சேசுநாதர்தாமே.

20. ஏனெனில் தின்மையைச் செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்திலும் வராதிருக்கிறான்.

21. உண்மையைச் செய்கிறவனோ, தன் கிரியைகள் சர்வேசுரனிடத்தில் செய் யப்பட்டபடியால், அவைகள் வெளிப் படும்பொருட்டு ஒளியினிடத்தில் வருகி றான் என்றார்.

* 21. உண்மையைச் செய்வதேதெனில் தேவ கட்டளைகளை அநுசரித்து, மெய்யான புண்ணியத்தைச் செய்வதாமே.

22. இவைகளுக்குப்பின்பு, சேசுநாத ரும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்துக்கு வந்தார்கள். அங்கே அவர் அவர்களோடுகூட வாசம்பண்ணி, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். (அரு. 4:1)

23. அப்பொழுது அருளப்பரும் சாலிம் ஊருக்கடுத்த என்னோன் என்னும் இடத்தில் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்தார். ஏனெனில் அவ்விடத்தில் ஜலமும் மிகுதியாயிருந்தது, ஜனங்களும் வந்து ஞானஸ்நானம் பெறு வார்கள்.

24. அதேனென்றால் அருளப்பர் இன்னும் காவலிலே வைக்கப்படாதிருந்தார்.

25. அப்படியிருக்க அருளப்பருடைய சீஷர்களில் சிலருக்கும் யூதர்களுக்கும் சுத்திகரிப்பைக்குறித்து ஓர் தர்க்கமுண் டாயிற்று. (மத். 4:12; 14:3.)

26. அவர்கள் அருளப்பரிடத்திலே வந்து: குருவே, உம்மோடுகூட யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீரும் சாட்சியஞ் சொன்னீரே; இதோ அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடத்திலே போகிறார்கள் என்று சொன்னார்கள். (அரு. 1:19.)

27. அதற்கு அருளப்பர் பிரத்தியுத் தாரமாக: பரலோகத்திலிருந்து மனுஷ னுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டான்.

28. நான் கிறீஸ்துநாதரல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (அரு. 1:20; 23:27.)

29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுக்குச் செவிதந்து நிற்கிற அவனுடைய சிநேகிதனோ, மணவாளனுடைய குரலொலியினிமித் தம் மகிழ்ந்து சந்தோஷிக்கிறான். ஆகையால் என்னுடையதாகிய இந்தச் சந்தோஷம் பூர்த்தியாயிற்று. (2 கொரி. 11:2.)

* 29. இதில் சொல்லப்பட்ட மணவாளன் கிறீஸ்துநாதரென்றும், மணவாட்டி திருச்சபையென்றும், மணவாளனுடைய சிநேகிதன் ஸ்நாபக அருளப்பரென்றும் அறிக.

30. அவர் வளரவும், நான் குறுகவும் வேண்டும்.

31. உன்னதத்திலிருந்து வருகிறவர் யாவரிலும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணாயிருந்து, மண்ணுக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் யாவ ரிலும் மேலானவர். (உரோ. 9:5.)

32. அவர் தாம் கண்டதையும், கேட் டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். ஆயினும் அவருடைய சாட்சியத்தை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

33. அவருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவன் சர்வேசுரன் சத்திய முள்ளவரென்று முத்திரையிட்டு நிச்ச யப்படுத்தினான். (உரோ. 3:4.)

34. அதெப்படியெனில் சர்வேசுரனால் அனுப்பப்பட்டவர் சர்வேசுரனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில் சர்வேசுரன் இஸ்பிரீத்து (சாந்து)வை அளவோடு கொடுக்கிறதில்லை.

35. பிதாவானவர் சுதனை நேசித்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். (மத். 11:27)

36. சுதனை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியமுண்டு. ஆனால் சுதன் பேரில் அவிசுவாசமாயிருக்கிறவன் ஜீவியத்தைக் காணாதிருப்பதுந்தவிர தேவகோபமும் அவன்மேல் நிலை நிற்கும் என்றார். (1 அரு. 5:10.)