இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - அதிகாரம் 01

சேசுக்கிறீஸ்துநாதருடைய தேவத்துவமும், மனுஷத்துவமும், அர்ச். ஸ்நாபக அருளப்பர் அவரைக்குறித்துச் சொல்லிய சாட்சியமும், கிறீஸ்துநாதருடைய முதல் சீஷர்களும்.

1. ஆதியிலே வார்த்தையிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனிடத்திலிருந் தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார். (பழ. 8:22-30; ஆதி. 1:1.)

* 1. அர்ச். திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிதாவின் வார்த்தை என்னப்படுகிறார். வார்த்தையானது மனதினின்று உற்பத்தியாகிறது போல சுதனும் தேவ பிதாவினின்று உற்பத்தியாகிறார். (மெனோக்கியுஸ்)

2. அவர் ஆதியிலே சர்வேசுரனிடத்தில் இருந்தார்.

3. அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்டதொழிய உண்டாக்கப் பட்டவைகளில் எதுவும் அவராலே யன்றி உண்டாக்கப்படவில்லை. 

* 3. பிதாவாகிய சர்வேசுரன் சகலத்தையும் தமது வார்த்தையினாலே சிருஷ்டித்தார். ஆனால் பிதாவின் வார்த்தையும் சுதனும் ஒன்றென்பதனால், சகலமும் சுதனால் சிருஷ்டிக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது.

4. அவருக்குள் சீவனிருந்தது. அந்தச் சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது.

5. அந்த ஒளி இருளில் பிரகாசிக்கின்றது. ஆயினும் இருளானது அதை ஒப்புக்கொள்ளவில்லை. (அரு. 3:19.)

6. சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தார். அவருக்கு அருளப்பர் என்று பெயர். (மத். 3:1.)

7. அவர் தமது வழியாய்ச் சகலரும் விசுவசிக்கும்பொருட்டு, ஒளியைக் குறித்துச் சாட்சியஞ் சொல்லுவதற்குச் சாட்சியாக வந்தார்.

8. அவர் அந்த ஒளியல்ல. ஆனால் அந்த ஒளியைக்குறித்துச் சாட்சியஞ் சொல்ல வந்தவராமே.

9. (வார்த்தையாகிய அவர்) இவ்வுலகத்திலே வருகிற எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாயிருந்தார். (அரு. 3:19.)

* 9. சூரியன் உலகத்திலுள்ள சகல வஸ்துக்களுக்கும் ஒளியைத் தருகிறதுபோல, தேவ பிதாவின் வார்த்தையாகிய சுதனும் சகல மனிதருக்குந் தமது பிதாவின் ஞானமாகிய ஒளியை வீசி, நித்திய மோட்ச வழியைக் காட்டித் தமது வரப்பிரசாதத்தால் சகலரும் அவ்வழி நடக்கும்படி ஏவுகிறார்.

10. அவர் உலகத்திலிருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாக்கப்பட்டது. ஆகிலும் உலகம் அவரை அறிந்து கொள்ளவில்லை. (எபி. 11:3.)

11. அவர் தமது ஆதீனத்தில் வந்தார். அவருடையவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

12. யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (உரோ. 8:14; கலாத். 3:26.)

13. அவர்கள் இரத்தத்தினாலுமல்ல, மாம்ச இச்சையினாலுமல்ல, புருஷனு டைய சித்தத்தினாலுமல்ல, ஆனால் சர் வேசுரனாலே பிறந்தவர்கள். (அரு. 3:5.)

* 12-13. தந்தை தாய் முகச்சாயல் பிள்ளைகளுடைய முகத்தில் தோன்றுவது போல, மனுஷனுடைய மனது தேவ சித்தத்துக்கு ஒத்ததாயிருக்கும்போது, தேவசாயல் அந்த மனுஷனுடைய மனதில் தோன்றும். இப்படித் தோன்றுவதினால் மனுஷன் சர்வேசுரனுடைய பிள்ளையாயிருக்கிறானென்று ஒரு விதத்தில் சொல்லலாம். ஆனால் மனுஷன் சேசுநாதரைத் தேவசுதனென்று அங்கீகரித்து அவரை விசுவசித்துச் சிநேகிக்கும்போது, தேவ இஷ்டப்பிரசாதத்தால் சுபாவத்துக்கு மேலான ஞான சீவியத்தை அடைந்து சர்வேசுரனுடைய சுவிகாரப் புத்திரனாகிறான்.

14. வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகி மைக்கு நிகராயிருந்தது. (மத். 1:16.)

* 14. இவ்வாக்கியத்தைக் கொண்டு தேவ பிதாவின் வார்த்தையாகிய சுதனிடத்தில் தேவ சுபாவமும், மனுஷசுபாவமுமாகிய இரண்டு சுபாவமுண்டென்று ஒப்பிக்கப்படுகிறது. மாம்சமென்பது வேத வாக்கியங்களில் வழக்கமாய் ஆத்துமமுஞ் சரீரமுமுள்ள மனுஷ சுபாவத்தைக் குறிக்கிறது. ஆகையால் சுதனாகிய சர்வேசுரன் மாம்சமானாரென்கும்போது, அவர் ஒரே ஆளாய் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனுமாய் இருக்கின்றார் என்றறிக.

15. அருளப்பர் அவரைக் குறித்துச் சாட்சியஞ்சொல்லி: எனக்குப்பின் வருகி றவர் எனக்குமுன் இருந்தவர். ஆகையால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர் தானென்று கூவிச் சொல்லுகிறார்.

16. நாம் எல்லோரும் அவருடைய சம்பூரணத்திலிருந்து அருளுக்கு மேல் அருளைப் பெற்றுக்கொண்டோம். (கொலோ. 2:9.)

17. எப்படியெனில் மோயீசனால் வேதப்பிரமாணங் கொடுக்கப்பட்டது. அருளும் சத்தியமும் சேசுக்கிறீஸ்து நாதரால் உண்டாயிற்று.

18. சர்வேசுரனை ஒருவனும் ஒரு போதுங் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஏக சுதனே அவரை வெளிப்படுத்தினார். (1 தீமோ. 6:16; 1 அரு. 4:12.)

19. யூதர்கள் ஜெருசலேமிலிருந்து ஆசாரியரையும் லேவித்தரையும் அருளப்பரிடத்தில் அனுப்பி: நீர் யாரென்று கேட்டபோது, அவர் சொன்ன சாட்சியமாவது :

* 19. யாக்கோப்பின் மக்களில் ஒருவராகிய லேவி என்பவருடைய வம்சத்தில் பிறந்தவர்கள் தேவாலயப் பணிவிடைக்குக் குறிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு லேவித்தரென்று பெயருண்டாயிருந்தது. இந்த லேவித்தர்களில் மோயீசனுடைய சகோதரனாகிய ஆரோன் வம்சத்தார் மாத்திரம் பூரண குருப்பட்டத்துக்கு உரியவர்களாயிருந்தார்கள். ஆகையால் இவ்வாக்கியத்தில் ஆசாரியரென்கும்போது ஆரோன் வம்சத்தாரையும், லேவித்தரென்கும் போது லேவி கோத்திரத்தில் பிறந்த மற்றவர்களையும் பிரித்துக் காட்டியிருக்கிறது. (கால்மேத்து.)

20. நான் கிறீஸ்துவானவர் அல்ல என்று அறிக்கையிட்டு, அதை மறுதலிக்காமல் வெளிப்படுத்தினார்

21. அவர்கள் மறுபடியும் அவரை வினாவி: பின்னை நீர் யார்? நீர் எலியாசோ என்று கேட்க, அவர்: நான் அல்ல என்றார். நீர் தீர்க்கதரிசியோ என, அதற்கும் அவர்: நான் அல்ல என்று மறுமொழி சொன்னார்.

22. ஆகையால் அவர்கள்: எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் மாறுத்தாரஞ் சொல்லும்படி நீர் யார்? உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

23. அதற்கு அவர்: கர்த்தருடைய வழியைச் செவ்வையாக்குங்களென்று இசையாஸ் தீர்க்கதரிசி வசனித்தபடியே வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய குரலொலி நானே என்றார். (இசை. 40:3; மத். 3:3; மாற். 1:3; லூக். 3:4.)

24. அனுப்பப்பட்டவர்களோ பரிசேயராயிருந்தார்கள்.

25. மீளவும் அவர்கள் அவரை நோக்கி: நீர் கிறீஸ்துவுமல்ல, எலியாசு மல்ல, தீர்க்கதரிசியுமல்லவென்றால், பின்னை ஏன் ஞானஸ்நானங் கொடுக் கிறீர் என்று கேட்டார்கள்.

26. அருளப்பர் அவர்களுக்கு மாறுத் தாரமாக: நான் ஜலத்தினால் ஞான ஸ்நானங் கொடுக்கிறேன். ஆனால் நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியில் நிற்கிறார். (மத். 3:11.)

27. எனக்குப்பின் வரவேண்டியவரும், என்னிலும் மேன்மையாக்கப் பட்டவரும் அவரே; அவருடைய பாத ரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரவானல்ல என்றார். (மாற். 1:7; லூக். 3:16; அப். 1:5; 11:16; 19:4.)

28. இவைகள் யோர்தான் நதிக்கு அக்கரையில் அருளப்பர் ஞானஸ்நானங் கொடுத்துவந்த பெத்தானியாவில் சம்பவித்தன.

* 28. இவ்வசனத்தில் பெத்தானியாவென்று லத்தீன் பாஷைப் புத்தகங்களில் கண்டிருந்தாலும், பூர்வீக கிரேக்குக் கையெழுத்துப் பிரதிகளில் பெத்பாரா என்றிருக்கக் காண்கிறோம்.

29. மறுநாளிலே அருளப்பர் தம்மிடத்தில் சேசுநாதர் வருகிறதைக்கண்டு, உரைத்ததாவது: இதோ, சர்வேசுரனு டைய செம்மறிப்புருவையானவர்; இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குகிறவர்.

* 29. பாஸ்காப் பண்டிகையில் ஒரு செம்மறிப் புருவையைப் பலியிடவேண்டுமென்று யூதர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் செம்மறிப் புருவை சேசுநாதருக்கு ஓர் அடையாளமாயிருந்ததொழிய அந்தப் பலியினாலே, யூதர்களுக்குப் பாவம் நீங்கி இரட்சணியமுண்டானதில்லை. சேசுநாதரோ சகல மனுஷருடைய பாவங்களையும் போக்கும்படி சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, அர்ச். அருளப்பர் அவரைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையென்று சகலரும் அறியும்படி கூறினார்.

30. எனக்குப்பின் ஒருவர் வருகிறாரென்றும், அவர் எனக்கு முன்னிருந்தபடி யால், என்னிலும் மேன்மையானவரென் றும் நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

31. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனால் இவர் இஸ்ராயேலருக்கு வெளிப்படும்பொருட்டு நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றார்.

32. மீளவும் அருளப்பர் சாட்சியஞ்சொல்லி வசனித்ததாவது: இஸ்பிரீத்து சாந்துவானவர் புறாவைப்போல் பர லோகத்திலிருந்து இறங்குவதையும், இவர்மேல் நிற்பதையுங் கண்டேன். (மத். 3:16; மாற். 1:10; லூக். 3:22.)

33. நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: நீ எவர்மேல் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவரவும், தங்கி நிற்கவும் காண்பாயோ, அவரே இஸ்பிரீத்துசாந்துவினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவரென்று, எனக்குத் திருவுளம்பற்றினார்.

* 33. சேசுநாதர் பிறந்து உலகத்தில் சஞ்சரிக்கிறாரென்று ஸ்நாபக அருளப்பர் தேவஞான திருஷ்டியால் அறிந்திருந்தாலும், சேசுநாதர்சுவாமி தம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற வந்தபோதுதான் அவரை முதல்விசை தம்முடைய கண்களால் கண்டு அறிந்துகொண்டார்.

34. அப்படியே நானும் கண்டு: தேவசுதன் இவர்தானென்று சாட்சியஞ் சொன்னேன் என்றார்.

35. மறுநாளிலே அருளப்பரும், அவருடைய சீஷர்களில் இரண்டு பேரும் திரும்ப அவ்விடத்தில் நிற்கும் போது,

36. சேசுநாதர் நடந்துபோகிறதை அவர் கண்டு: இதோ, சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையானவர் என்றார்.

37. அவர் சொன்னதை அவ்விரு சீஷருங் கேட்டு, சேசுநாதரைப் பின் சென்றார்கள்.

38. சேசுநாதர் திரும்பி, அவர்கள் தம்மைப் பின்செல்லுகிறதைக்கண்டு: என்ன தேடுகிறீர்களென்று அவர்களுக்குச் சொல்ல, அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கு கிறீரென்று அவரைக் கேட்டார்கள். (ரபீ என்பதற்குக்குருவே என்றர்த்தமாம்.)

39. அவர்: நீங்கள் வந்து பாருங்களென்று அவர்களுக்குத் திருவுளம்பற்றினார். அப்படியே அவர்களும் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரோடு தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய பத்துமணி வேளையாயிருந்தது.

* 39. அக்காலத்தில் சூரியன் உதிக்கிற நேரத்தை முதல் மணியென்று கணித்து வந்ததினாலே, இங்கே குறித்திருக்கிற பத்தாம் மணி என்பது இக்காலத்தின் கணக்கின்படி சாயங்காலம் நாலு மணியாகும்.

40. அருளப்பர் சொன்னதைக் கேட்டு, சேசுநாதரைப் பின்சென்ற அவ்விருவரில் சீமோன் இராயப்பருடைய சகோதரனாகிய பிலவேந்திரர் ஒருவராயிருந்தார்.

41. அவர் தன்னுடைய சகோதரனா கிய சீமோனை முந்தமுந்தக் கண்டு: மெசியாசைக் கண்டுகொண்டோமென்று அவருக்குச் சொன்னார். (மெசியாஸ் என்பதற்குக் கிறிஸ்து என்றர்த்தமாம்.)

42. பின்னும் அவரை சேசுநாதரிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தார். சேசுநாதர் அவரை நோக்கி: நீ யோனா வின் மகனாகிய சீமோனல்லோ. இனி நீ கெபாஸ் என்று அழைக்கப்படுவாய் என்றார். (கெபாஸ் என்பதற்கு இராயப் பன் என்றர்த்தமாம்.) (மத். 16:18.)

* 42. கெபாஸ் என்பது இராய் அல்லது கல், பாறை யென்றர்த்தமாகும்.

43. மறுநாளிலே சேசுநாதர் கலிலே யாவுக்குப் புறப்பட்டுப்போக மனதா யிருக்கையில், பிலிப்பு என்பவரைக் கண்டு: என்னைப் பின்செல்லென்று அவருக்குச் சொன்னார்.

44. இந்தப் பிலிப்பு, பிலவேந்திரர், இராயப்பர் என்பவர்களுடைய ஊராகிய பெத்சாய்தா நகரத்தானாயிருந்தார்.

45. பிலிப்பு நத்தனயேலைக்கண்டு: வேதப்பிரமாணத்திலே மோயீசனும், தீர்க்கதரிசிகளும் குறித்தெழுதினவரைக் கண்டுகொண்டோம். அவர் நசரேத்தூர் சூசையப்பருடைய குமாரனாகிய சேசு நாதர்தாம் என்றார். (ஆதி. 49:10; உபாக. 18:15; இசை. 40:10; 45:8; எரே. 23:5; எசே. 34:23; 37:24; தானி. 9:24.)

46. அதற்கு நத்தனயேல்: நசரேத்தூரிலிருந்து யாதொரு நன்மை வரக் கூடுமோ என்று அவருக்குச் சொல்ல, பிலிப்பு: நீயே வந்து பார் என்றார்.

47. சேசுநாதர் தம்மிடத்தில் நத்தனயேல் வருகிறதைக்கண்டு, அவனைக் குறித்து: இதோ கபடற்ற உண்மையான இஸ்ராயேலன் என்றார்.

48. நத்தனயேல் அவரை நோக்கி: எவ்வாறு என்னை அறிந்தீர் என்க, சேசுநாதர் மறுமொழியாக: பிலிப்பு உன்னை அழைக்குமுன்னே நீ அத்தி மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

49. நத்தனயேல் அவருக்குப் பிரத்தி யுத்தாரமாக: ரபீ, நீர் சர்வேசுரனுடைய குமாரன், இஸ்ராயேலின் இராஜா என்றார். (அரு. 6:70; 11:27.)

* 49. இங்கே சொல்லப்படுகிற நத்தனயேல்தான் அப்போஸ்தலரான அர்ச். பர்த்தலோமை என்று வேதசாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.

50. சேசுநார் அவனுக்கு மறுமொழியாக: நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேனென்று உனக்குச் சொன்னதினால் விசுவசிக்கிறாயே; இவைகளிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

51. மீண்டும் அவர் அவனை நோக்கி: பரமண்டலந் திறக்கப்படுவதையும், சர்வேசுரனுடைய சம்மனசுகள் ஏறுவதையும், மனுமகன் மேல் இறங்குவதையும் காண்பீர்களென்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று திருவுளம்பற்றினார்.