அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து. . . மனிதனானார்!

கடவுள் இவ்வுலகில் தம்மை நேசிக்கவும், அதன்பின் மறுவுலகில் தம்மைத் துய்த்து மகிழவும் நம்மைப் படைத்திருக்கிறார்; ஆனால் நாம் பாவம் செய்ததன் மூலமாகக் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தோம், அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தோம். அதனால் தேவ வரப்பிரசாதம் நம்மிடமிருந்து விலக்கப்பட்டது. நாம் பரலோகத்திலிருந்து விலக்கப்பட்டோம், நித்திய நரக வேதனைகளுக்குத் தீர்ப்பிடப்பட நம்மைத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டோம். ஆகவே, நாம் அனைவரும் இழக்கப் பட்டவர்களாக இருந்தோம். ஆனால் இந்தக் கடவுள் நம்மீது பரிதாபம் கொண்டு நம் மாபெரும் அழிவைச் சரிசெய்யக் கூடிய இரட்சகர் ஒருவரை பூலோகத்திற்கு அனுப்பத் தீர்மானித்தார்.

ஆனால் இந்த இரட்சகர் யாராக இருப்பார்? அவர் ஒரு தேவ தூதராக இருப்பாரா, அல்லது ஒரு பக்திச்சுவாலகராக இருப்பாரா? இல்லை; கடவுள் நம்மீது தாம் கொண்டுள்ள அளவற்ற அன்பை நமக்குக் காட்டும்படியாக, தம் சொந்த மகனையே நமக்காக அனுப்புகிறார்: ""கடவுள் தம் சொந்த மகனைப் பாவ மாம்சத்தின் பாவனையில் அனுப்பினார்.''

ஓ அதிசயமே! ஓ கடவுளின் அன்பின் மிகுதியே--ஒரு கடவுள் மனிதனானார்! இவ்வுலக அரசன் ஒருவன் இறந்து கிடக்கும் ஒரு புழுவைக் கண்டு, அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க விரும்புகிறான். அதைச் செய்வதற்கு, அவனே அந்தப் புழுவாக மாறி, அதன் அருவருப்பான வசிப்பிடத்திற்குள் நுழைந்து, அங்கே தன் உயிரை விலையாகத் தந்து, தன் சொந்த இரத்தத்தில், இறந்த அந்தப் புழுவைக் குளிப்பாட்டினால் மட்டுமே அது உயிர் பெறும் என்று அவனுக்குச் சொல்லப்படுகிறது. இப்போது அந்த அரசனின் பதில் என்னவாக இருக்கும்? ""இல்லை! இந்தப் புழுவுக்கு உயளிர் தருவதற்காக என் இரத்தத்தைச் சிந்தி இதை உயிர்ப்பிப்பதால் எனக்கு என்ன நன்மை வரப் போகிறது?'' என்றுதான் அவன் கேட்பான். மனிதர்கள் தங்கள் சொந்தப் பாவங்களால் நித்திய அழிவுக்குத் தகுதி பெற்றிருக்க, அவர்கள் அழிந்து போவதால், கடவுளுக்கு என்ன நஷ்டம்? இதனால் அவருடைய பேரின்பத்தில் ஒரு துளியளவாவது குறைந்து விடப் போகிறதா?

இல்லவேயில்லை! மனிதர்கள் மீது கடவுள் கொண்டுள்ள அன்பு உண்மையாகவே அளவற்றதாக இருந்ததால்தான் அவர் பூமிக்கு இறங்கி வந்து, ஒரு கன்னிகையிடமிருந்து மனித சரீரத்தை எடுக்கும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்திக் கொண்டார். ஓர் அடிமையின் தன்மை பூண்டு, அவர் மனிதனானார் - அதாவது, அவர் நம்மைப் போன்ற ஒரு புழுவாகத் தம்மை ஆக்கிக் கொண்டார். ""தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனிதர் சாயலாகி, மனித ரூபமாகக் காணப்பட்டார்'' (பிலி.2:7). அவர் பிதாவைப் போல சர்வேசுரனாக இருக்கிறார் - மிகப் பெரியவர், சர்வ வல்லபர், பேரரசர், எல்லாவற்றிலும் பிதாவுக்குச் சரி சமமானவர்; ஆனால்; மாமரியின் திருவுதரத்தில் அவர் மனிதனான போது, அவர் பலவீனமுள்ள சிருஷ்டியாகவும், பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராகவும் ஆனார். மாமரியின் திருவுதரத்தில் இவ்வாறு தாழ்த்தப்பட்டவராக அவரைப் பாருங்கள்; அங்கே, முப்பத்து மூன்று வருடங்கள் உலகில் துன்ப வாழ்வு நடத்தியபிறகு, ஒரு சிலுவையின் மீது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சாக வேண்டும் என்ற பிதாவின் திருச் சித்தத்தை அவர் ஏற்றுக் கொண்டார்! ""தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டுக்கும் அதாவது சிலுவை மரண மட்டுக்கும் கீழ்ப்படிதல் உள்ளவரானார்'' (பிலி.2:8).

அவரது தாயின் திருவுதரத்தில் ஒரு குழந்தையாக அவரைப் பாருங்கள். அங்கே அவர் எல்லாக் காரியங்களிலும் தமது பிதாவின் திருச்சித்தத்தோடு தம்மை இணைத்துக் கொண்டார், நம் மீதுள்ள அன்பால் பற்றியெரிந்தார். மனமுவந்து தம்மைக் கையளித்தார்: ""தம் சொந்த சித்தப்படியே அவர் பலியானார்'' (இசை. 53:7). நம் இரட்சணியத்திற்காக அனைத்து துன்பங்களையும் அனுபவிக்க அவர் தம்மை ஒப்புக்கொடுத்தார். அப்போது தாம் கசைகளால் அடிக்கப்படுவதைத் தீர்க்கதரிசனமாகக் கண்டு, தம் திருச்சரீரத்தை ஒப்புக்கொடுத்தார்; முட்களைக் கண்டு, தம் திருச்சிரசை ஒப்புக் கொடுத்தார்; ஆணிகளைக் கண்டு, தம் கரங்களையும், பாதங்களையும் ஒப்புக்கொடுத்தார்; சிலுவையை தீர்க்க தரிசனமாகக் கண்டு தம் உயிரை ஒப்புக்கொடுத்தார். நன்றிகெட்ட பாவிகளாகிய நமக்காக இவ்வளவு அதிகமாகத் துன்பப்பட அவர் ஏன் பிரியம் கொண்டார்? ஏனெனில் அவர் நம்மை நேசித்தார். ""இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மை கழுவினார்'' (காட்சி.1:5). நாம் பாவத்தால் கறைப்பட்டவர்களாக இருந்ததை அவர் கண்டு, தமது சொந்த இரத்தத்தால் நமக்கு ஒரு ஸ்நானத்தை ஆயத்தம் செய்தார். இதன் மூலம் நாம் சுத்திகரிக்கப்பட்டு, கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக வேண்டுமென்று இப்படிச் செய்தார்: ""கிறீஸ்துநாதரும் நம்மைச் சிநேகித்து, நமக்காகத் தம் உயிரைக் கையளித்தார்'' (எபே.5:2). நாம் மரணத்திற்குத் தீர்வையிடப்பட்டதை அவர் கண்டு, நாம் வாழும்படி தாமே சாகத் தயாரானார்; நம் பாவங்களின் காரணமாக, நாம் கடவுளால் சபிக்கப்பட்டதைக் கண்டு, நாம் இரட்சிக்கப்படும்படி, நாம் தகுதி பெற்றிருந்த அந்த சாபங்களைத் தம்மீது சுமத்திக் கொள்வதில் அவர் பிரியம் கொண்டார்: ""கிறீஸ்துநாதர் நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்தினின்று நம்மை இரட்சித்தார்'' (கலாத். 3:13).

ஓ என் தேவனே, மனுக்குலம் முழுவதன் சார்பாகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; ஏனெனில் நீர் எங்களை இரட்சிக்க நினைத்திராவிட்டால், நானும் உலகம் முழுவதும் என்றென்றும் இழக்கப்பட்டிருப்போம்! ஓ என் பிரியமுள்ள சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்; நீரே என் நம்பிக்கை, நீரே என் நேசம்!