இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - பாயிரம்

அர்ச். லூக்காஸ் சீரியா நாட்டின் இராஜதானிப் பட்டணமாகிய அந்தியோக்கியா நகரில் பிறந்து வளர்ந்து, சாஸ்திரத்திலும் சித்திரவேலையிலும் வைத்தியத் தொழிலிலும் பேர்போனவராயிருந்தார்.

அர்ச். சின்னப்பர் அந்நகருக்கு வந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, இவர் மனந்திரும்பினதுமன்றி, அவருக்குப் பிரியமுள்ள சீஷனும், பிரியாத் துணைவருமானார்.

அர்ச். சின்னப்பரால் ஏற்படுத்தப்பட்ட சபைகளுக்காக இவர் இந்தச் சுவிசேஷ சுருக்கத்தைக் கிரேக்க பாஷையில் 55-ம் வருஷத்தில் எழுதினார். அன்றியும், 63-ம் வருஷத்தில் உரோமாபுரியிலிருந்து அப்போஸ்தலர் நடபடி என்னும் உத்தமமான வேறொரு சிறு பிரபந்தத்தையும் எழுதினார்.

இவர் அர்ச். தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியுள்ளவரா யிருந்ததினாலே, அந்த ஆண்டவளைக் குறித்துத் தமது சுவிசேஷத்தில் வெகு தோத்திரங்களை எழுதினதுமல்லாமல் தேவமாதாவின் சாயலையும் ஒரு படமாக வரைந்துவைத்தார்.

அந்தப்படம் இப்போது உரோமாபுரியிலுள்ள தேவமாதாவின் பெரிய கோவிலிலே மகா பூச்சியத்தோடே வைக்கப்பட்டிருக்கிறது.

இவர் எப்போதும் விரத்தராயிருந்து, தாம் உயிரோடிருந்த எண்பத்திநாலு வருஷத்துக்குள்ளாகத் தமது வாக்கினாலும், இஸ்பிரீத்துசாந்துவின் ஏவலால் தாம் எழுதின இரண்டு வேதாகமங்களினாலும் அநேக இராச்சியத்தாருக்கு வேதத்தைப் போதித்து, வெகு புண்ணியங்களையும் செய்து காலஞ்சென்றார்.