சரீர உத்தானம்

1. விசுவாசப் பிரமாணத்தின் 11-ம் பிரிவைச் சொல்லு.

“சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.” 


2.  உத்தானம் என்கிற பதத்திற்கு அர்த்தமென்ன?

உயிர்த்தல், திரும்பச் சேருதல், உயிரோடு எழும்புதல் என்று அர்த்தமாம்.


3.  சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன் என்பதினால் என்ன விசுவசிக்கிறோம்?

உலகமுடிவில், சர்வேசுரனுடைய சர்வ வல்லமையினால், மண்ணாய்ப் போன ஒவ்வொரு மனிதனுடைய சரீரமும் திரும்ப உருவாகி, தனது ஆத்துமத்தோடு இனி ஒருபோதும் பிரியாத விதமாய்ச் சேர்ந்து,  உயிர்த்தெழுந்து, பொதுத் தீர்வைக்கு வரும் என்று விசுவசிக்கின்றோம்.


4. சரீர உத்தானம் என்று மாத்திரம் சொல்லுவது ஏன்? 

சரீரம் மாத்திரம் மரித்து அழிந்து போகிறபடியால், அது மாத்திரம் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும்.  ஆத்துமம் மரிக்கக் கூடாதாகையால் அது உயிர்க்கத் தேவையில்லை.


5. சகல மனிதரும் உயிர்ப்பார்களென்பது நிச்சயமா? 

உலகத்தின் துவக்க முதற்கொண்டு இறந்துபோய், மண்ணாய்ப் போன சகல மனிதருடைய சரீரமும் மறுபடி எலும்பு களையும், சதைகளையும் எடுத்துக் கொண்டு உயிர்க்கும் என்பது நிச்சயம்.  ஏனென்றால், 

(1) இது திருச்சபை போதிக்கும் விசுவாச சத்தியம். 

(2) சேசுநாதர் சுவிசேஷத்தில் அநேக முறை இந்த சத்தியத்தை அறிவித்திருக்கிறார். “மரித்தோர் உயிர்ப்பார்கள்” (லூக்.20:27), “கல்லறைகளிலுள்ள யாவரும் தேவசுதனுடைய குரலொலியைக் கேட்குங்காலம் வரும், அப்பொழுது நற்கிரியை களைச் செய்தவர்கள் உயிர்த்துப் (பாக்கியமான) சீவியத்துக்கும், துர்க்கிரியைகளைச் செய்தவர்கள் உயிர்த்து, ஆக்கினைத் தீர்ப்புக்கும் புறப்படுவார்கள்” (அரு. 5:28,29).

(3) “மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட் டாலோ, கிறீஸ்துநாதரும் உயிர்த்தெழுந்ததில்லை” என்று  அர்ச். சின்னப்பர் வசனித்தார் (1 கொரி. 15:13).


6. எந்த வல்லமையால் சரீர உத்தானம் நிறைவேறும்?

சேசுநாதருடைய தெய்வீக வல்லமையால் இது நிறைவேறும். அவர் தமது சொந்த சரீரத்தை எப்படி மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்து எழுப்பினாரோ, அப்படியே உலக முடிவில் மரித்தவர்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.


7. சரீர உத்தானம் எப்படி நிறைவேறும்? 

ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்த காலமுதல், அந்தச் சரீரம் எவ்வளவுதான் மாறுபட்டு, அணுப்பிரமாணமான துண்டு களாய் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தாலும், சேசுநாதர் ஆகட்டுமென்று சித்தமானவுடனே, ஒரு கணத்தில் அவைகளை ஒன்றாய்ச் சேர்த்து, திரும்பவும் சரீரமாக உண்டுபண்ணி, ஆத்துமத்தை அதோடு ஒன்றித்து உயிர்ப்பிப்பார்.  “ஒரு கணப் பொழுதில், ஒரு கண் சிமிட்டல் நேரத்தில்... மரித்தவர்கள் உயிர்ப்பார்கள்” (1 கொரி. 15:52).


8. சரீர உத்தானத்தை விளக்கிக் காட்ட ஒரு உவமையைச் சொல்.

நிலத்தில் விதைத்த விதையானது எப்படி அழிந்து அப்பால் முளையாய்க் கிளம்புகிறதோ, அதுபோலவே அழிந்து போன சரீரம் சர்வேசுரனுடைய வல்லமையினால் கல்லறையினின்று சீவனுடன் உயிர்த்தெழும்பும் (1 கொரி.15:36).


9. மனிதர் எந்தச் சரீரத்தோடே உயிர்ப்பார்கள்? 

மனிதர் பூமியில் எந்தச் சரீரத்தோடு ஒன்றித்திருந்தார்களோ, அந்தச் சரீரத்தோடுதானே உயிர்ப்பார்கள்.


10. மரித்தவர் தங்கள் சொந்த சரீரத்தோடு திரும்பவும் உயிர்க்க வேணுமென்று சர்வேசுரன் ஏன் சித்தமானார்? 

நன்மைக்கும் தின்மைக்கும் சரீரம் பங்காளியாயிருந்தது. ஆதலால் அதுவும் ஆத்துமத்தோடு சேர்ந்து, செய்த நற்கிரியைகளுக்குச் சம்பாவனையும், பாவமான காரியங்களுக்கு ஆக்கினையும் அநுபவிப்பது நியாயம்.  மனிதன் தன் பாவ புண்ணி யங்களுக்குத் தகுந்ததுபோல் நரகத்தில் நித்திய ஆக்கினையை யாவது, மோட்சத்தில் நித்திய சம்பாவனையையாவது அடையும் பொருட்டு மனிதர்கள் தங்கள் சொந்த சரீரத்துடன் திரும்ப உயிர்க்க வேண்டுமென்று சர்வேசுரன் சித்தமானார்.


11. மரித்தவர் சொந்த சரீரத்தோடு உயிர்ப்பார்கள் என்பதால், இளம் வயதில், அல்லது கிழ வயதில் இறந்து போனவர்கள், குழந்தையாக அல்லது வயோதிபராக உயிர்ப்பார்களென்று கண்டுபிடிக்க வேண்டுமா? 

இல்லை.  நாம் நமது சொந்த சரீரத்தோடு உயிர்ப்போ மென்றாலும், நமது உயிர்த்த சரீரத்தின் அந்தஸ்துக்கும், இப்போது இருக்கும் அந்தஸ்துக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கும்.  ஏனென்றால் மரித்தவர்களுடைய சரீரம் குறைவொன்றுமின்றிப் பூரண மனித இலட்சணங்களைக் கொண்டதாய் உயிர்க்குமென்று அர்ச். அகுஸ்தினார் சொல்லியிருக்கிறார்.  ஆகையினாலே உயிர்த்தவர்களுக்குள் குழந்தைகளும், கிழவர்களும், குருடர்களும், முடவர்களும் இருக்கவே மாட்டார்கள்.   எல்லோரும் பெலனுள்ளவர்களாயும்,  ஏறக்குறைய 33 வயதுள்ளவர்களாயுமிருப்பார்கள்.


12. மரித்த எல்லாருடைய சரீரம் ஒரே விதமாய் உயிர்க்குமோ? 

(1) மரித்த எல்லோருடைய சரீரங்களும் சாகாமை என்னும் வரத்தோடு உயிர்க்கும்.  “மரித்தவர்கள் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்” (1கொரி. 15:52).

(2) ஆனால் நல்லவர்களுடைய சரீரம், யாதொரு சரீரக் குறையின்றி உயிர்த்த சேசுநாதருடைய சரீரத்தின் பாவனையாக, மகிமையடைந்த சரீரத்தின் குணங்களுடன் உயிர்க்கும்போது, பாவிகளுடைய சரீரம் மிக அவலட்சணமாய் நாறுகிற பிரேதம் போல் உயிர்க்கும்.


13. நல்லவர்களுடைய சரீரம் உயிர்த்த சேசுநாதருடைய சரீரத்தின் பாவனையாக உயிர்க்கும் என்று நாம் எப்படி அறிவோம்? 

சகல விசுவாசிகளும் சேசுநாதரோடு ஒரு ஞான சரீரமாயிருக்கிறார்கள்.  “நீங்களோ கிறீஸ்துநாதருடைய சரீரமாயும், அவயவத்தின் அவயவங்களாயும் இருக்கிறீர்கள்” (1கொரி. 12:27), “அவருடைய சரீரத்தின் அவயவங்களும், மாம்சத்தின் மாம்சமும், எலும்பில் எலும்புமாயிருக்கிறோம்” (எபே. 5:30) என்றார் அர்ச். சின்னப்பர்.  தமது ஞான சரீரத்தின் தலைவராகிய சேசுநாதர் மகிமையோடு உயிர்த்தெழுந்தருளியிருக்கிறபடியால் அவருடைய அவயவங்களாகிற சகல கிறீஸ்துவர்களும், அவரோடே உயிர்த்தலில் ஒன்றித்து, அவருடைய உயிர்த்த சரீரத்தின் மகிமையின் பங்காளி யாயிருக்க வேண்டும்.  “உங்கள் ஜீவனாகிய கிறீஸ்துநாதர் தோன்றும் போது, நீங்களும் அவருடனேகூட மகிமையிலே தோன்றுவீர்கள்” (கொலோ. 3:4) என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார்.


14. மகிமையடைந்த சரீரத்தின் குணங்கள் எவை? 

அட்சயம், சூட்சம், இலகு, ஒளி என்னும் நான்கு குணங்களாம்.

குறிப்பு: இந்நான்கு குணங்களின் தன்மையை 204, 205-ம் பக்கங்களில் விவரித்துக் காட்டியாயிற்று.


15. மகிமையடைந்த சரீரம் அந்த நான்கு குணங்களைக் கொண் டிருக்கும் என்று நமக்கு எப்படித் தெரியும்? 

“சேசுநாதர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப் போமென்று அறிவோம்” (1 அரு. 3:2) என்று அர்ச். அருளப்பர் எழுதி வைத்தார்.  சேசுநாதருடைய சரீரம் அந்த நான்கு குணங் களைக் கொண்டிருக்க, மகிமையடைந்த சரீரம் அவைகளைக் கொண்டிருக்க வேண்டும்.


அட்சயத்தால் உயிர்த்த சரீரத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை? 

சரீரம் ஒருபோதும் அழிந்துபோகக் கூடாததாயிருப்பது மில்லாமல், கஸ்தி துன்பங்களுக்கு எட்டாததாயும், காயம், வியாதி முதலியவை படக்கூடாததாயுமிருக்கும்.


17. சூட்சம் என்னும் வரத்தால் உண்டாகும் நன்மைகள் என்ன? 

(1) இப்போது சரீரத்துக்கு அவசியமாயிருக்கிறவைகள் யாதொன்றும் தேவையாயிராது.

(2) நமது மிதமிஞ்சின பற்றுதல்களாகிய ஆசாபாசங் கள் நீங்கிப் போகும்.

(3) எப்படிச் சூரிய கதிர் கண்ணாடியை ஊடுருவிச செல்லுகிறதோ, அப்படியே உயிர்த்த சரீரமும் கண்டிப்பான பொருட்களை ஊடுருவிச் செல்லக் கூடுமாயிருக்கும்.


18. இலகு என்னும் குணத்தால் உண்டாகும் நன்மை என்ன? 

எவ்வளவு தூரமான இடத்துக்கும் நொடிப்பொழுதில் மனோவேகத்துடன் நாம் செல்லக்கூடும்.  உயிர்த்தபின், ஆத்துமத் துக்கு இஷ்டமானபடி, சரீரம் எப்போதும் எநத இடத்திற்கும் ஒரு நொடிப் பொழுதில் உடனே போகக்கூடுமாயிருக்கும்.


19. ஒளி என்னும் குணத்தால் உண்டாகும் நன்மை என்ன? 

ஒளியால் சரீரம் சூரியனிலும் அதிகப் பிரகாசமுள்ளதா யிருக்கும்.


20. மோட்சவாசிகள் சகலருக்கும் சரிசமமான ஒளி இருக்குமா? 

இருக்காது.  அவரவர் பேறுபலன்களுக்கும் அர்ச்சிய சிஷ்டதனத்துக்கும் தக்கதுபோல் அதிகமாயும், குறைவாயுமிருக்கும்.  “சூரியன் பிரகாசம் வேறே, சந்திரன் பிரகாசம் வேறே; இப்படியே உத்தானத்திலுமிருக்கும்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (1கொரி.15:41,42).


21. பாவிகளுடைய உயிர்த்த சரீரம் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்? 

பாவிகளுடைய சரீரம் சாகாமையென்னும் குணத்தை அடையும்.  ஆனால் அவர்களுடைய சரீரம் அவலட்சணமுள்ளதாயும், இருண்டதாயும், பாரமுள்ளதாயும், பாடுபடும் தன்மையுள்ளதாயும் இருக்கும்.