இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நிஜத்திலும் கிறீஸ்து நாதரின் துன்பங்களும், மரணமும் மீண்டும் நிகழ்த்தப்படும் பலிச்செயலாக இருக்கிறது

இக்காரியத்தைப் பற்றி லான்சீஸியுஸ் என்பவர் கூறும்போது, "திவ்விய பலிபூசை ஒரு நாடக மேடையில் நடிக்கப்படுவது போல வார்த்தைகளில் மட்டுமின்றி, செயலிலும், நிஜத்திலும் கிறீஸ்து நாதரின் துன்பங்களும், மரணமும் மீண்டும் நிகழ்த்தப்படும் பலிச்செயலாக இருக்கிறது. இதனாலேயே திருச்சபைத் தந்தையர் பூசையைக் கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் மறுநிகழ்வு என்று அழைக்கிறார்கள், அதில், ஒரு பரம இரகசிய முறையில், அவர் மீண்டும் பாடுபட்டு, சிலுவையில் அறையப்படுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்கிறார். 

இவை ஓர் ஆன்ம எழுத்தாளரின் வார்த்தைகளாக, பூசையின் பரம இரகசியங்களைப் பற்றிய ஞான மிக்க நூல்களை எழுதிய ஓர் ஆசிரியரின் வார்த்தைகளாக, இருக்கின்றன. இது வரை சொன்னவற்றிற்கு சாட்சியமாக, மற்றொரு சம்பவத்தை நாம் இங்கு விவரிப்போம்.

திருச்சபைத் தந்தையரின் சரித்திரங்களில், ஒரு வயதான, படிப்பறிவில்லாத வனவாசியைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அவர் திவ்விய சற்பிரசாதத்தில் நமதாண்டவரின் மெய்ப்பிரசன்ன சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாதவராக, "பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில், கிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தையல்ல, மாறாக, அவரது ஒரு சாயலை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம்" என்று வழக்கமாகக் கூறி வந்தார். 

வேறு இரண்டு வயதான வனவாசிகள் இதைக் கேட்டு, அவரிடம் சென்று, அவரது தப்பறையை அவருக்குப் புரிய வைக்க முயன்றார்கள், கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையை அவருக்கு விளக்கிக் கூறி, தங்கள் வாதங்களுக்கு ஆதரவாகப் பரிசுத்த வேதாகமத்தின் பல பகுதிகளை மேற்கோள் காட்டினார்கள். ஆனாலும் அவருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. குறைந்தபட்சம் ஒரு புதுமையாவது நிகழ்ந்தால்தான் தாம் இதை நம்ப முடியும் என்று அவர் கூறி விட்டார்.

இந்த இரு வனவாசிகளும் ஒரு வார காலத்தை ஜெபத்தில் செலவிட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, மூவரும் சிற்றாலயத்தில் பூசை கண்டார்கள். தேவ வசீகரத்தின் போது, தேவ அப்பத்தின் இடத்தில், மிகுந்த அழகுள்ள ஒரு குழந்தையை அவர்கள் கண்டார்கள். இந்தக் காட்சி அவர்களைப் பரிசுத்தமானதொரு மகிழ்ச்சியால் நிரப்பியது. 

ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி சில நிமிடங்களில் கடும் திகிலாக மாற்றப்பட்டது ஏனெனில், தேவ அப்பம் பிட்கப்படும் போது, பீடத்தருகில் ஒரு சம்மனசானவர் தோன்றுவதையும், அவர் ஒரு கத்தியால் அந்தக் குழந்தையைக் குத்தித் துளைப்பதையும், காயத்திலிருந்து பாய்ந்த இரத்தத்தைத் திருக்கிண்ணத்தில் சேகரிப்பதையும் அவர்கள் கண்டார்கள்.

பொருண்மை மாற்ற சத்தியத்தை நம்ப மறுத்த மனிதர் திவ்விய நன்மை வாங்க பீடத்தை அணுகிய போது, ஆராதனைக்குரிய தேவத் திரவிய அனுமானத்தைக் குருவானவர் அவருக்கு வழங்க இருந்த போது, இந்த வனவாசி அது இரத்தம் தோய்ந்திருப்பதையும், மாமிசத்தின் தோற்றத்தைக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார். 

உடனே அவர் உரத்த சத்தமாக, "ஆண்டவராகிய சேசுவே, என் அவிசுவாசத்தை நான் ஒப்புக்கொள்கிறேன், அதில் பிடிவாதமாக நிலைத்திருந்தது பற்றி நான் வெகுவாக மனஸ்தாபப்படுகிறேன். இந்த வசீகரிக்கப்பட்ட அப்பம் உம்முடைய திருச்சரீரமாகவும், திருக் கிண்ணத்திலுள்ள இரசம் உமது திரு இரத்தமாகவும் இருக்கிறது என்று நான் உறுதியாக விசுவசிக்கிறேன். என் ஆன்மாவின் நன்மைக்காக, நான் உம்மை உட்கொள்ளும்படி, தேவரீர் மீண்டும் அப்பத்தின் வடிவத்திற்குள் உம்மை மறைத்துக் கொள்ளுமாறு உம்மை மன்றாடுகிறேன்'' என்றார். 

அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது; அவர் பக்தியோடு திவ்விய நன்மை உட்கொண்டார், கடவுளுக்கும், தமது தப்பறையை வெளிப்படுத்திய அந்த இரு வனவாசிகளுக்கும் அவர் நன்றி செலுத்தினார், அதன்பின் திவ்விய பலிபூசையில் தாம் காணப் பேறுபெற்ற காரியத்தை எங்கும் பிரசித்தப்படுத்தினார்.

சேசுக்கிறீஸ்துநாதர் தமது ஆள்தன்மையிலும் உண்மையாகவும் திவ்விய அப்பத்தில் பிரசன்னமாயிருப்பது மட்டுமின்றி, திவ்விய பலிபூசையில் அவர் தமது கசப்பான திருப்பாடுகளைப் புதுப்பிக்கவும் செய்கிறார் என்பதற்கான மேலும் ஒரு சாட்சியத்தை இந்தப் புதுமையில் நாம் கொண்டிருக்கிறோம். 

"முழு உலகத்தினுடையவும் பாவங்களையும் தம் திரு இரத்தத்தால் கழுவிப் போக்கும்படியாக, அவர் அவற்றைத் தம்மீது சுமந்து கொண்டது போலவே, இப்போதும் நம் பாவங்கள், நம் மீறுதல்களுக்குப் பரிகாரம் செய்யுமாறு, பீடத்தின் மீது பலியாக்கப்படவிருக்கும் அதே செம்மறிப் புருவையாகிய அவர் மீது சுமத்தப்படுகின்றன.'' 

உலகில் நிறை வேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும் ஏன் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளையும், திருமரணத்தையும் புதுப்பிக்கிறார் என்பதற்கான காரணத்தை இந்த வார்த்தைகள் நமக்குத் தருகின்றன. ஆயினும், இந்த தியானப் பொருளை நாம் இன்னும் முழுமையாக விவரித்துக் கூறுவோம்.