இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவாலயங்கள் அர்ப்பணிக்கப்படுதல்

முந்தின நாளில், இச்சடங்குகளில் பங்குபெறவிருக்கும் விசுவாசிகளோடு, உபவாசம் இருப்பதன் மூலம் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ள மேற்றிராணியார், இரவில், ஆலய அர்ப்பணத்தில் பயன்படுத்தப்பட இருக்கும் திருப்பண்டங்களை எடுத்துத் தயார் நிலையில் வைக்கிறார். 

குறிக்கப்பட்ட நாள் பொழுது விடிந்தவுடன், அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லும் அவர், மேற்றிராணியாருக்குரிய விதத்தில் வழிபாட்டு உடுப்புகளை அணிந்து கொண்டு, அங்குள்ள குரு நிலையினரோடு ஏழு தவச் சங்கீதங்களையும், அர்ச்சியசிஷ்டவர்களின் பிரார்த்தனையையும் பாடுகிறார். அதன்பின் அவர் ஆலயத்தின் வெளிப்புறத்தில், குருநிலையினரோடு பவனியாக அதைச் சுற்றி வருகிறார். 

கோவில் கதவு மூடப்பட்டிருக்கிறது. மேற்றிராணியார் சுவர்களின் மேற் பகுதியில் சிலுவை வடிவத்தில் பரிசுத்த தீர்த்தம் தெளித்தபடி, "பிதா * சுதன் இஸ்பிரீத்து * சாந்துவின் பெயராலே" என்று சொல்ல, குருநிலையினர் அதற்குரிய பதில் வாசகத்தைப் பாடுகிறார்கள். 

கோவிலின் முன்வாசலுக்குத் திரும்பி வரும் மேற்றிராணியார் ஒரு சிறு ஜெபத்தைச் சொல்லி, தமது ஆயருக்குரிய கோலைக் கொண்டு கதவைத் தட்டியபடி, "அத்தோல்லித்தே போர்த்தாஸ், ப்ரின்சிப் பெஸ், வெஸ்த்ராஸ்..."-" அரசர்களே, உங்கள் சிரசுகளை உயர்த்துங்கள், நித்திய வாசல்களே, உயர்த்தப்படுவீர்களாக, மகிமையின் அரசர் உள்ளே பிரவேசிப்பார்" - என்ற ஜெபத்தைச் சொல்கிறார். 

அதன்பின் அவர் மீண்டும் ஆலயத்தைச் சுற்றி வந்து, இப்போது சுவர்களின் கீழ்ப் பகுதியில் தீர்த்தம் தெளித்தபடி, இதே வார்த்தைகளைச் சொல்கிறார். 

அதன்பின் வாசலுக்குத் திரும்பி வந்து, இம்முறை வேறு ஒரு ஜெபத்தைச் சொல்லி, முன்பு போல, தமது கோலால் கதவைத் தட்டுகிறார். மூன்றாம் முறையும் அவர் ஆலயத்தைச் சுற்றி வந்து, இம்முறை சுவர்களின் நடுப்பகுதியில் தீர்த்தம் தெளிக்கிறார்; 

அதன்பின் கதவில் தமது கோலால் மும்முறை தட்டி, "திறக்கப்படு!" என்று சொல்கிறார். கதவு திறக்கப்பட்டதும், அவர் வாசலில் தமது கைக்கோலால் சிலுவை அடையாளம் வரைந்தபடி, "இதோ, சிலுவை அடையாளம், தீய அரூபிகளே, ஓடிப் போங்கள்!'' என்கிறார். ஆலயத்திற்குள் பிரவேசித்து, "இந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக!" என்கிறார்.

அதன்பின் அவர் ஆலயத்தின் நடுப்பகுதிக்கு வந்து அங்கே முழந்தாளிட்டு, வேனி க்ரேயாத்தோர் ஸ்பீரித்துஸ் என்னும் கீதத்தைப் பாடத் தொடங்குகிறார்; அதைத் தொடர்ந்து அர்ச்சியசிஷ்டவர்களின் பிரார்த்தனையும், "பெனதிக்துஸ் தோமினுஸ் தேயுஸ்"--"இஸ்ராயேலின் தேவனாகிய ஆண்டவர் துதிக்கப்படுவாராக'' என்னும் சக்கரியாஸின் கீதமும் பாடப்படுகின்றன. 

இவை பாடப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவர் இலத்தின் மற்றும் கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒரு சிலுவை அடையாளத்தை வரைகிறார், இந்த எழுத்துக்களை ஆலயத்தின் தரையில் பரப்பப்பட்டுள்ள சாம்பலின் மீது தமது கைக்கோலைக் கொண்டு அவர் எழுதுகிறார். 

அதன்பின், முக்கிய பீடத்திற்கு முன்பாக முழந்தாளிட்டு, "தேயுஸ், இன் அத்யுத்தோரியும் மேயும் இந்த்தெந்தே..."--"சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும்..."-- என்று தொடரும் வார்த்தைகளை மும்முறை பாடுகிறார். 

அதன் பின் திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டுள்ள உரிய ஜெபங்களைக் கொண்டு அவர் சாம்பலையும், உப்பையும், தண்ணீரையும், திராட்சை இரசத்தையும் மந்திரித்து, திரும்பத் திரும்ப அவற்றின் மீது சிலுவை அடையாளம் வரைந்தபடி, அவற்றை ஒன்றாகக் கலக்கிறார். தொடர்ந்து முக்கிய பீடத்தையும், மற்ற பீடங்களையும் மந்திரிக்கிறார். 

அதன்பின் தாம் இப்போதுதான் மந்திரித்த கலவையில் தம் பெருவிரலை மூழ்க்கி, பீடக்கல்லின் நடுவிலும், அதன் நான்கு மூலைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்தபடி, "கடவுளுடையவும், கன்னிமாமரியினுடையவும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் மகிமைக்காகவும், அர்ச்.... (ஆலயத்தின் பாதுகாவலரான அர்ச்சியசிஷ்டவரின் பெயரைச் சொல்கிறார்) பெயராலும், ஞாபகத்தாலும் இந்தப் பீடம் அர்ச்சிக்கப்படுவதாக, பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே. ஆமென்" என்று சொல்கிறார். 

இந்த வார்த்தைகள் ஐந்து முறை சொல்லப்படுகின்றன. அதன்பின் பீடத்தின் மீது பரிசுத்த தீர்த்தத்தால் தெளித்தபடியும், மிசரேரே என்னும் சங்கீதத்தைப் பாடியபடியும் ஏழு முறை சுற்றி வருகிறார்.

அதன்பின் அவர் ஆலயத்தின் உட்பகுதியில் மூன்று முறை சுற்றி வந்து, சுவர்களின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும், நடுப் பகுதியிலும் தீர்த்தம் தெளிக்கிறார். அப்போது மூன்று சங்கீதங்களும், மூன்று ஆரம்ப வாக்கியங்களும் பாடப்படுகின்றன. 

அவர் சில ஜெபங்களைச் சொன்னபடியும், சிலுவை அடையாளம் வரைந்த படியும் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் தீர்த்தம் தெளித்து, ஆலயத்தின் தரையை மந்திரித்து விட்டு முக்கிய பீடத்திற்குத் திரும்பி வருகிறார். அதன்பின் அவர் சுண்ணாம்புக்கட்டியையும், மணலையும் மந்திரித்து, பரிசுத்த தீர்த்தம் சேர்த்து அவற்றை ஒன்றாகக் கலக்கிறார். இவ்வாறு, பீடக்கல் வைக்கப்படுவதற்கான சாந்தை அவர் தயாரிக்கிறார். 

அதன்பின் அவர் முந்தின நாளில் திருப்பண்டங்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு பவனியாகச் சென்று, அவற்றிற்குத் தூபமிட்டு, எரியும் மெழுகுவர்த்திகளோடும், புகையும் தூபக்கலசங்களோடும் அவற்றைச் சுமந்தபடி ஆலயத்தைச் சுற்றி வருகிறார். வாசலுக்கு நேராக வரும்போது, நின்று, "பிதா சுதன் இஸ்பிரீத்து * சாந்துவின் பெயராலே நீ ஆசீர்வதிக்கவும், அர்ச்சிக்கவும், மந்திரிக்கவும் படுவாயாக" என்ற வார்த்தைகளைச் சொன்னபடி கதவின் மீது மும்முறை சிலுவை அடையாளம் வரைகிறார்.