இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கத்தோலிக்கப் பூசை விளக்கம் - திவ்விய பலிபூசையின் தன்மை

திவ்விய பலிபூசை இலத்தின் மொழியில் ஸாக்ரிஃபீச்சியும், அதாவது பலி என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை வெறும் காணிக்கையை விடப் பாரதூரமான அளவுக்கு மேலானதும், உயர்ந்ததுமான ஒரு காரியத்தைக் குறித்துக் காட்டுகிறது. 

பலி என்பது, அதன் முழுமையான, முறையான பொருளின்படி, நமக்கு வெளியரங்கமானதும், மகா உன்னத சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவதுமான ஓர் உத்தமமான காணிக்கையாக இருக்கிறது. அது திருச்சபையால் முறைப்படி, சட்டபூர்வமான முறையில் அபிஷேகம் செய்யப்பட்டு, குருவாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருவரால், அதிகாரபூர்வமான ஒரு முறையில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. 

சர்வ வல்லபரான சர்வேசுரன் சகல சிருஷ்டிகளின் மீதும் கொண்டுள்ள உன்னதமான இராஜரீக அதிகாரத்தை அங்கீகரிப்பதும், அதற்குச் சான்று பகர்வதும் இப்பலியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. திவ்விய பலிபூசை பற்றிய இந்த வரையறையின்படி, பலி என்பது ஒரு சாதாரண காணிக்கையை விட எவ்வளவோ மேலானது என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். 

திவ்விய பலிபூசை, எந்த ஒரு சிருஷ்டிக்கும் அல்லாமல், அளவற்றவராகிய கடவுளுக்கு மட்டுமே உரிய, உயர்வான, பக்திக்குரிய வழிபாட்டுச் செயலாக இருக்கிறது.

இந்த அதிகாரபூர்வமான பலி கடவுளுக்கு மட்டுமே ஒப்புக் கொடுக்கப்படலாம் என்பது, சகல மக்களினங்களின் பொதுவான ஒரு வழக்கத்தின் அடிப்படையில் அர்ச். அகுஸ்தினாரால் எண்பிக்கப் படுகிறது. 

"மெய்யங்கடவுளுக்கு அன்றி, வேறு யாருக்காவது, மெய்யங்கடவுளர் என்று தப்பறையான விதத்தில் மதித்து வணங்கப்படும் பொய்த் தெய்வங்களுக்காவது பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் யாரையாவது எப்போதாவது உலகம் கண்டிருக்கிறதா?'' என்று அவர் கேட்கிறார். 

வேறோர் இடத்தில் அவரே மீண்டும்: "பலி என்பது தெய்வீகத்திற்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சலுகையாக இருக்கிறது என்பதைப் பசாசு அறிந்திருக்க வில்லை என்றால், அவன் தன்னைப் பின் செல்பவர்கள் தனக்குப் பலி செலுத்தும்படி அவர்களை வற்புறுத்தியிருக்க மாட்டான்" என்று கூறுகிறார். 

இந்த உலகைச் சேர்ந்த பெரிய மனிதர்களிலும், வலிமை மிக்கவர்களிலும் அநேகர், உரிமையின்படி கடவுளுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டிய வேறு வகையான மரியாதைக்குரிய செயல்கள் தங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தி யிருக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வெகு சிலர் மட்டுமே தங்களுக்கு பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். இப்படிச் செய்தவர்கள் தாங்கள் தெய்வங்கள் என்று மதிக்கப்பட வேண்டுமென ஆசைப்பட்டார்கள்.

"எல்லாம் வல்ல சர்வேசுரனுக்கு பலிகள் ஒப்புக்கொடுப்பது மனுக்குலத்திற்கு இயல்பானதே. எந்த விதமான கட்டளையோ, விசேஷமான உத்தரவோ இன்றி, சுபாவமான ஓர் அந்தரங்கத் தூண்டுதலால் மனிதன் இப்படி கடவுளுக்கு பலி ஒப்புக்கொடுக்கும் படி தூண்டப்படுகிறான்' என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார். 

ஆபேல், நோவே, ஆபிரகாம், யோபு, இன்னும் பல பிதாப் பிதாக்களின் வாழ்வுகளில் இது வெளிப்படுவதை நாம் காண்கிறோம். அவர்கள் கடவுளின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அல்ல, மாறாக, சுபாவமான ஒரு அந்தரங்கத் தூண்டுதலால் மட்டுமே பலி ஒப்புக்கொடுத்தார்கள். 

கடவுளால் ஞான விதமாய் ஒளிர்விக்கப்பட்ட மனிதர்கள் மட்டும் இப்படிப் பலி ஒப்புக் கொடுக்கவில்லை; புற ஜாதியாரும் கூட, மனித சுபாவத்தின் ஒளியைப் பின்பற்றி, தங்கள் விக்கிரங்கள் உண்மையான தெய்வங்கள் என்று நம்பி அவற்றிற்குப் பலி ஒப்புக்கொடுத்தார்கள். 

பிற்காலங்களில் இஸ்ராயேல் மக்களுக்குக் கடவுளால் தரப்பட்ட சட்டம் அனுதினமும் அவருக்குப் பலி ஒப்புக்கொடுப்பதை அவர்களுக்குக் கடமையாக்கியது; திருநாட்களில் அதிக ஆடம்பரமான பலிச் சடங்குகள் அனுசரிக்கப்பட வேண்டியிருந்தன. 

அவர்கள் அவருக்கு செம்மறிப் புருவைகளையும், ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும், காளைகளையும் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. இந்த மிருகங்கள் வெறுமனே ஒப்புக்கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, மாறாக, அபிஷேகம் பெற்ற ஒரு குருவால், சில ஜெபங்களோடும், சடங்குகளோடும் அவை கொல்லப்பட்டு, இரத்தப் பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியிருந்தது. 

அவை கொல்லப்படவும், தோலுரிக்கப்படவும் வேண்டியிருந்தது; அவற்றின் இரத்தம் பீடத்தின் மீதும், அதைச் சுற்றிலும் தெளிக்கப்பட வேண்டியிருந்தது, அவற்றின் மாமிசம் எக்காளத் தொனிகளுக்கும், சங்கீதப் பாடல்களுக்கு மத்தியில், பீடத்தின் மீது சுட்டெரிக்கப்பட வேண்டியிருந்தது. 

கடவுளுக்குரிய ஆராதனை வணக்கத்தை அவருக்குச் செலுத்தவும், அவரை சகல சிருஷ்டிகளின் மீதும் ஆட்சி புரியும் உன்னத அரசராக ஏற்றுக்கொள்ளவும் யூதர்கள் வழக்கமாக ஒப்புக் கொடுத்து வந்த பரிசுத்த பலிகளாக இவை இருந்தன.

பலி பற்றிய சிந்தனை மனித சுபாவத்தில் இவ்வளவு ஆழமாக ஊன்றியிருந்ததன் காரணமாக, சகல மக்களினங்களும், நாடுகளும், ஜெபங்கள், பாடல்கள், தர்மச் செயல்கள், தவச் செயல்களைக் கொண்டு கடவுளுக்கு ஊழியம் செய்தது மட்டுமின்றி, அவை ஏதாவது ஒரு வகையான பலியை மெய்யான சர்வேசுரனுக்கு -- அல்லது, மெய்யான சர்வேசுரன் என்று நம்பி தாங்கள் வணங்கி வந்த பொய்த் தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுத்து வந்தன. 

எனவே, விசுவாசிகள் மெய்யான சர்வேசுரனுக்கு உரிய ஆராதனை வணக்கத்தைச் செலுத்தவும், தாங்கள் அவருக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பதை வெளிக்காட்டவும், காணக்கூடிய ஒரு வழிபாட்டுச் செயலாக, கிறீஸ்துநாதர் தம் திருச்சபையில் ஒரு பரிசுத்தமான தெய்வீகப் பலியை ஸ்தாபிப்பது பொருத்தமானதாக மட்டுமின்றி, அவசியமானதாகவும் இருந்தது. 

தமது திருச்சபையில் எல்லாவற்றையும் மிக உத்தமமான முறையில் ஸ்தாபித்த கிறீஸ்துநாதர், இந்த அனைத்திலும் மேலான வழிபாட்டுச் செயலை ஸ்தாபிக்காமல் விட்டிருப்பார் என்றும், இவ்வளவு முக்கியமான ஒரு காரியம் தம் திருச்சபையில் குறைவுபட அனுமதித்திருப்பார் என்றும், அறிவுள்ள எந்த மனிதனும் கற்பனை கூட செய்து பார்க்க மாட்டான். 

அப்படி அவர் இக்காரியத்தை அலட்சியம் செய்திருந்தால், கிறீஸ்தவ வேதம் யூத மதத்தை விடத் தாழ்ந்ததாக இருந்திருக்கும். ஏனெனில் பழைய ஏற்பாட்டுப் பலிகள் எவ்வளவு மகிமை பொருந்தியவையாக இருந்தன என்றால், புறஜாதியாரில் சிறந்த மனிதர்கள் தொலைவான நாடுகளிலிருந்தும் இந்தப் பலிகளில் பங்கு பெறுவதற்காக வந்தார்கள். 

மக்கபேயர் இரண்டாம் ஆகமத்தில் நாம் வாசிப்பது போல (3:3), சில அஞ்ஞான அரசர்களும் கூட, தங்கள் கருவூலங்களிலிருந்து, இந்த தேவ ஊழியத்திற்குரிய தொகையைச் செலுத்தினார்கள் என்று நாம் அறிகிறோம்.