உத்தரிக்கிற ஸ்தலம்

115. (53) தங்கள் பாவங்களுக்காக முழுதும் உத்தரியாத புண்ணிய ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறார்கள்.


1. உத்தரிக்கிற ஸ்தலம் ஆவதென்ன? 

தேவநீதிக்கு முழுவதும் உத்தரியாத நீதிமான்களுடைய ஆத்துமங்கள் மோட்சத்துக்குப் போவதற்குமுன், தங்களுக்குப் பாக்கியாயிருக்கும் உத்தரிப்புக்கடனைத் தீர்க்கும்படியாகப் போகும் வேதனை ஸ்தலமாம்.


2. உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிற ஆத்துமாக்கள் எவை? 

(1) தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருந்தாலும், மன்னிக்கப்படாத அற்பப்பாவத்தோடு மரித்தவர்களுடைய ஆத்துமங்கள்.

(2) மன்னிக்கப்பட்ட சாவான பாவங்களுக்கும், அற்பப் பாவங்களுக்கும் விதிக்கப்பட்ட அநித்திய கடனை முழுதும் உத்தரியாத நீதிமான்களுடைய ஆத்துமங்கள்.


3. அப்பேர்ப்பட்ட ஸ்தலம் அவசியமா?

(1) மன்னிக்கப்படாத அற்பப் பாவங்களுக்கு மன்னிப்பை அடையக்கூடிய இடம் மோட்சமல்ல, நரகத்தில் மன்னிப்பு கிடையாது.  ஆதலால் வேண்டிய மன்னிப்பை அடைய ஒரு விசேஷ ஸ்தலம் அவசியம்.

(2) பொறுக்கப்பட்ட பாவங்களுக்குச் சர்வேசுரனால் விதிக்கப்பட்ட அநித்திய ஆக்கினையை இவ்வுலகத்தில் முழுதும் உத்தரியாதிருந்தால், அதை நித்திய மோட்சத்திலாகிலும், நித்திய நரகத்திலென்கிலும் நிவிர்த்தியாக்கக்கூடாது.  அந்த அநித்திய ஆக்கினை நிவிர்த்தியாகும்படி உத்தரிக்கிற ஸ்தலம் முழுதும் அவசியம்.


4. உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்பது நிச்சயமா? 

உத்தரிப்பு ஸ்தலம் உண்டென்று, பழைய ஏற்பாட்டில் இருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும், திருச்சபை பாரம்பரியத் திலிருந்தும் எண்பிக்கலாம்.  மேலும் இந்தப் போதகம் சர்வேசுர னுடைய பரிசுத்ததனத்துக்கும், நீதிக்கும் இசைந்ததாயிருக்கிறது.


5. பழைய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறதென்ன? 

மக்கபேயர் சண்டை செய்யும் காலத்தில், ஒருநாள் அநேகர் சண்டையில் இறந்துபோய், அவர்களுடைய தலைவராகிய யூதாஸ் என்பவர் ஒரு பெரும் பணத்தொகையைத் தம்மோடிருந் தவர்களிடத்தில் சேகரித்து, மரித்தோருடைய ஆத்துமங்களைக் குறித்து பலி ஒப்புக்கொடுக்கும்படி ஜெருசலேம் பட்டணத்துக்குப் பணத்தை அனுப்பினார்.  இவ்விஷயத்தை வேதப் புஸ்தகம் விவரித்தபின்: “ஆதலால் மரித்தவர்களை மீட்டு இரட்சிக்கும்படி வேண்டிக்கொள்வது பரிசுத்தமும் நன்மையுமான கருத்து” என்கிறது (2 மக். 12:46).

இதனால் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று யூதர்கள் விசுவசித்து வந்தார்களென்று நன்றாய்த் துலங்குகிறது. எப்படியெனில், மோட்சத்திலிருக்கும் ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ளவும், பரிகாரப் பலி ஒப்புக்கொடுக்கவும் வேண்டியதில்லை.   நரகத்திலிருக்கும் ஆத்துமாக்களுக்கு எவ்வளவு செபம் சொன்னாலும், பலி செலுத்தினாலும் பிரயோசனமில்லை.  ஆதலால் இவ்விரண்டிற்கும் நடுவிலான இடமாகிய உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதாக யூதர்கள் விசுவசித்தார்களென்று தீர்மானிக்க வேண்டும்.


6. புதிய ஏற்பாட்டில் போதித்திருக்கிறதென்ன? 

உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்பது புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் போதிக்கப்பட்டிருக்கிறதென்று காண்கிறோம்.

(1) சேசுநாதர் சில பாவங்களைக் குறித்துப் பேசும் போது, “இப்பாவங்களுக்கு இவ்வுலகத்திலும், மறுலோகத்திலும் மன்னிப்பில்லை” (மத். 12:32) என்று வசனித்த வாக்கியம் இதற்கு அத்தாட்சி.  இதெப்படியெனில், மேற்சொல்லிய வார்த்தையினால் மறுவுலகத்தில் சில பாவங்களுக்கு மன்னிப்படையக் கூடுமென்று வெளியாகிறது.  ஆனால் மன்னிப்படையக் கூடிய இடம் மோட்சமல்ல.  ஏனெனில் அங்கே அசுத்தமானதொன்றும் நுழையக் கூடாது.  அப்பேர்ப்பட்ட ஸ்தலம் நரகமுமல்ல. ஏனெனில் நரகத்தில் மன்னிப்புக் கிடையாது.

(2) அர்ச். சின்னப்பர் குறையுள்ள புண்ணிய முயற்சிகள் செய்பவனைப் பற்றிப் பேசும்போது, “அவனோ இரட்சிக்கப்படுவான் என்றாலும், அக்கினியில் அகப்பட்டுத் தப்பினது போலாகும்” என்று எழுதியிருக்கிறார் (1 கொரி. 3:15).  நரகத்திலிருந்து மீட்கப் படுகிறவர்கள் ஒருவருமில்லாததால், அர்ச். சின்னப்பர் இந்த வசனத்தில் உத்தரிக்கிற ஸ்தலத்தின் பரிகாரத்தைக் குறித்துப் பேசுகிறாரென்று வேதபாரகர் நிச்சயித்திருக்கிறார்கள்.


7. இவ்விஷயத்தைப் பற்றித் திருச்சபையின் பாரம்பரிய போதகம் என்ன? 

உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்பதை எக்காலத்திலும், எங்கும், திருச்சபை விசுவசித்து வந்திருக்கிறது.

(1) திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் பயன் படுத்தப்பட்ட வேதமுறையாசாரப் புஸ்தகங்களில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகச் செபங்களிருக்கின்றன.

(2) கி.பி. 1438-ம் ஆண்டில் கிரேக்க மேற்றிராணி மார்கள் முதலாய் வந்து கூடியிருந்த ஃப்ளோரென்ஸ் பட்டணத்துப் பொதுச் சங்கம்: “உத்தரிக்குமுன் சாகிறவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மன்னிப்படைகிறார்கள்” என்று தீர்மானித் திருக்கிறது.

(3) கி.பி. 1563-ம் ஆண்டில் திரிதெந்தீன் என்னும் சங்கமும் (வீrஷ்deஐமிஷ்ஐe ளீலிற்ஐஉஷ்யி) இதை விசுவாச சத்தியமாக ஸ்தாபித் திருக்கிறது.


8. இந்தப் போதகம் எப்படி சர்வேசுரனுடைய பரிசுத்ததனத் துக்கும், நீதிக்கும் இசைந்ததாயிருக்கிறது? 

அசுத்தமானது எதுவும் மோட்சத்தில் பிரவேசிப்பதற்கு சர்வேசுரனுடைய பரிசுத்தத்தனம் சகிக்காது. மேலும் பாவங்களுக்காகத் தக்க பரிகாரம் செய்திருக்க வேண்டுமென்று அவருடைய நீதி கேட்கிறது.


116. (54) உத்தரிக்கிற ஸ்தலத்திலே என்னமாயிருக்கிறார்கள்?

தங்கள் பாவங்களுக்குத் தக்கதாக வேதனைப்பட்டு உத்தரிக்கிறார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.


1. உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்கள் படுகிற வேதனை யென்ன? 

(1) உத்தரிப்பு முடியும் வரையில் இந்த ஆத்துமாக்களுக்குச் சர்வேசுரனுடைய பாக்கியமான தரிசனை கிடையாது.  இதனால் வரும் துக்கம், வியாகுலம், ஐம்புலன்களின் வேதனையை விட அதிகக் கொடூரமானது.

(2) மேலும் பற்பல கடுமையான வேதனைகளை  அநுபவித்து வருகிறார்கள். இவைகளின் தன்மை நமக்குச் சரியாய்த் தெரியாது. ஆனாலும் இவ்வுலகத்திலுள்ள சகல வேதனைகளையுங் கூட்டிச் சேர்த்தாலும், அது அவைகளைப் பார்க்க அதிக அகோரமானது என்று அநேக வேதசாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். அவநம்பிக்கை ஒன்றைத் தவிர நரக ஆக்கினைக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆக்கினைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்று சிலர் எண்ணுகிறார்கள்.


2. உத்தரிக்கிற ஸ்தலத்தில் மெய்யான நெருப்பு உண்டா? 

உண்டு.  அதன் அக்கினியும், நரகத்தின் அக்கினியும் இவ்விரண்டும் ஒன்றுதான் என்று வேதசாஸ்திரிகள் போதிக்கிறார்கள்.


சரித்திரம்

ஸ்பெயின் தேசத்தில் சமோரா என்கிற பட்டணத்தில் அர்ச். சாமிநாதர் சபையில் உட்பட்ட புண்ணியவானான ஒரு சந்நியாசி இருந்தார்.  அர்ச். பிரான்சிஸ்கு சபையைச் சேர்ந்த ஒரு சந்நியாசி அவருக்குச் சிநேகிதராயிருந்தார்.  ஒரு நாள் அவர்கள் இருவரும் நித்திய சம்பாவனையைப் பற்றிப் பேசி இருவரிலே முதலிலே இறந்து போகிறவர், சர்வேசுரன் சித்தமானால், மற்றவரிடத்தில் வந்து, தமக்கு இடப்பட்ட தீர்வை எப்படியென்று அறிவிப்பாரென்று ஒருவர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்தார்கள்.  அர்ச். பிரான்சிஸ்கு சபை சந்நியாசி முதலிலே இறந்துபோனார்.  அவர் செத்துப் போன சில நாட்களுக்குப் பின் தன் சிநேகிதன் உணவு மேசை ஆயத்தம் செய்யும் சமயத்தில் அவருக்குத் தரிசனையாகி, “நான் செய்த பாவங்களுக்காக இவ்வுலகத்தில் முழுதும் உத்தரியாததினால், சர்வேசுரன் என்னை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குத் தீர்வையிட்டார். அவ்விடத்தில் நான் பயங்கர வேதனைப்பட்டு வருகிறேன்” என்று சொல்லி மேசையைத் தன் கையால் தொட்டு மறைந்து போனார். கைப்பட்ட மாத்திரத்தில் மேசை வெந்து அவருடைய கையின் முத்திரையும் அதில் இடப்பட்டது (ஸிநுUVசிவீ).


3. அவ்விடத்திலிருக்கும் எல்லா ஆத்துமாக்களுக்கும் ஒரே வகை ஆக்கினை உண்டோ? 

எல்லா ஆத்துமங்களுக்கும் ஒரே வகை ஆக்கினையல்ல. அந்தந்த ஆத்துமாக்கள் தாங்கள் கட்டிக் கொண்ட பாவத்துக்கு அளவாக கொடூர வேதனைப்படுவார்கள். பரிகரிக்க வேண்டிய பாவங்களின் எண்ணிக்கைக்கும், அவைகளின் கனாகனத்துக்குத் தக்காப்போல் வேதனை அதிகமாயிருக்கும். அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற செபதபங்களினால் அவர்களுடைய வேதனையின் காலமும், உக்கிரமும் குறைவுபடக் கூடும்.


4. உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களின் வேதனை எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? 

இது அவரவருடைய அநித்திய தண்டனையின் உத்தரிப்புக் கடனைப் பொறுத்தது. சில ஆத்துமாக்கள் உலக முடிவு வரை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கக்கூடும். ஏனெனில், சில ஆத்துமாக்களுக்காக உலகமுடியும் மட்டும் திவ்விய பூசை நடப்பிக்க வேண்டுமென்று சிலர் கொடுக்கும் நன்கொடைகளைத் திருச்சபை அங்கீகரித்து வருகிறது.


5. உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்கள் சொந்த பலத்தால் தங்கள் வேதனையைக் குறைத்துக் கொள்ளக் கூடுமா? 

தாங்களே அவைகளை குறைக்கவும், அல்லது முழுதும் தணிக்கவும் முடியாது.


6. யாராலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவி செய்யக் கூடும்? 

முன் சொன்னபடி அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தின் மூலமாய், மோட்சவாசிகளும், நாமும் அந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதல் கொடுத்து அவர்களுடைய அகோர வேதனையைக் குறைக்கவும் தணிக்கவும் கூடும்.


7. அந்த ஆத்துமாக்களுக்காக நாம் ஒப்புக்கொடுக்கிற நற்செயல்கள் எல்லாம் எவ்விதமாக, எந்த அளவில் அவர்களுடைய வேதனையைக் குறைக்கும்? 

நமக்குத் தெரியாது. ஆனாலும் அவை அவர்களுக்கு மகா பிரயோசனமாயிருக்கின்றன என்பது சத்தியம்.


8. உத்தரிக்கிற ஸ்தலம் எங்கே இருக்கிறது? 

உத்தரிக்கிற ஸ்தலமாகிற பாதாளக்குழி பூமிக் கோளத்தின் மத்தியில் இருக்கிறதென்று வேதபாரகர்கள் நினைக்கிறார்கள்.  அந்த ஆத்துமாக்கள் சில சமயத்தில் இவ்வுலகத்தில் நடமாடி வருவார்கள் என்று அர்ச். அக்வீனாஸ் தோமாஸ் எழுதி யிருக்கிறார்.


9. உத்தரிக்கிற ஸ்தலம் முடிந்து போகுமா? 

பொதுத் தீர்வையோடு உத்தரிக்கிற ஸ்தலம் முடிந்து போகும். அப்போது இன்னும் அதிலிருக்கும் ஆத்துமாக்கள் செலுத்த வேண்டியதெல்லாம் சர்வேசுரன் தாம் நியமித்த வழிப் பிரகாரம், அவர்களை ஒரே நிமிஷத்தில் உத்தரிக்கச் செய்து, முழுதும் சுத்தப்படுத்தி அவர்களை மோட்சத்தில் ஏற்றுக் கொள்ளுவார்.  அதற்குப் பின் நித்திய காலத்துக்கும் நரகமும், மோட்சமும் மாத்திரம் இருக்கும்.