இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரணம் ஒறுத்துப் பாராமற் பண்ணும் பார அழிவில் பயங்கரம்.

மரணத்தின் காலமும் இடமும் விதமும் தெரியாமல் இருக்கிறதினால் மயங்கி, உலகத்தைச் சதமென்று நடக்கிறவர்களுக்கு வரப் போகிற திக்குமுக்காட்டான பயங்கரம் இது. ஆனால் இந்த உலகமும் இதின் மாய்கையும் கடந்து போகிறதினால் (1 கொரி. 7. 31 ) உண்டாகுகிற பார அழிவையும் நாம் விசாரித்துப் பார்க்க வேணும்.

கிறிஸ்தவர்களே, இந்தக் கண்ணராவியைக் காண வேணுமானால் உங்கள் ஊர்ச் சவக்காலைக்கு (கல்லறைக்கு) மனதினாலே என்னோடு கூட வாருங்கள். இதோ கல்லறை. இங்கே என்னத்தைக் காண்கிறீர் கள்? உங்கள் தாய் தகப்பன், பேரன் பீட்டன், உறவு உற்றாரை அடக்கம் பண்ணிய இடங்கள் இதோ இருக்கிறது. சில பழங்காலக் கல்லறைகளுக்குள்ளே ஒன்றையுங் காணமுடியாது. ஒரு வேளை சில எலும்புகளைத் தவிர மற்றதெல்லாம் மண்ணாய்ப் போய் விடும். கொஞ்ச நாட்களுக்கு முன் புதைத்த சவம் என்றால், எவ்வளவு அச்சம் வருவிக்கிற காட்சி!

இதோ இந்தக் குழியிலே கிடக்கிற ஆளைக் கவனியுங்கள். இது ஒரு பணக்காரப் பெண் பிள்ளையின் சவம். சீவனோடு இருந்தபோது இவள் ஒரு மாளிகை போன்ற வீட்டிலே எவ்வளவு சொகுசாய்ச் சீவித்து, பஞ்சணை மெத்தையிலே படுத்து வந்தவள்! இவளுக்கு எத்தனை வேலைகாரர்! எத்தனை தோழிகள்! எவ்வளவு வாஷம் ஊட்டிய அழகான உடுப்புக்கள்! இவளுக்கு எவ்வளவு அழகான முகம்! மயிலையும் காணப் பண்ணுகிற சாயலாய், ஒய்யாரமாய் நடப்பாளே. குயிலையும் வெட்கப் பண்ணுகிற தீங்குரலோடு பேசுவாளே. சந்தோஷ உல்லாசமாய் கலகலவென்று சிரிப்பாளே. ஆனால் இப்போது இவள் இருக்கிற வீட்டைப் பாருங்கள்: ஒரு நாலு முழக் கிடங்கு. கட்டிலைப் பாருங்கள்: கல்லும் மண்ணும் பரவிய வெறுந் தரை. இப்போது இவளுக்கு வேலைகாரரும் தோழிகளும் ஆர்? இவள் தேகத்தைத் தின்றுகொண்டிருக்கிற புழுக்கள் தான்.

யோபு சொன்னது போல இவளும் '' உளுப்பைப் பார்த்து நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்'' என்று அல்லவோ சொல்ல வேண்டியிருக்கிறது (யோபு 17; 14 )! இவள் மெலுக்காய்ப் பூசிப் புணர்த்தி வந்த சரீரத்திலே தானே கணக்கில்லாத புழுக்கள் உண்டுபட்டு, வாயிலே வயிற்றிலே குடலிலே மொய்த்து நெளிந்து கொண்டு குப்பையாகக் கிடக்கிறது. கண் காது முதலிய துவாரமெல்லாம் அருவருப்பான நாறற் புழுக் குவியல். உடுப்புக்களின் வாசனை எங்கே?' முகத்தின் அழகு எங்கே? எத்தனையோ பாவப் பார்வைகளுக்கு இடமாயிருந்த வசீகரம் பொருந்திய கண்கள் புழுவாய் மாறிவிட்டது. காந்தளுக்கு உவமிக்கப்பட்ட மிருதுவான கைகள் மூட்டு விட்டு எலும்பு தெரியப் புழு மொய்த்துக் கிடக்கிறது. ஆண்டவருடைய திருக் கட்டளைகளையும் பாராமல் சிற்றின்ப சுகத்தில் ஈடுபட விட்ட சரீரம் முழுதும் இடிந்து தகர்ந்து ஊனமுந் தசையுமாய் நாறுகிறது.

நடையின் ஒய்யாரம் எங்கே? பேச்சின் அலங்காரம் எங்கே? சிரிப்பின் கலகலப்பு எங்கே ? எவ்வளவு அருவருப்பான அவலட்சணம்! எவ்வளவு வாந்தி எடுக்கிற துர்நாற்றம்!

இஸ்பானிய தேசத்தின் மகா ரூப லாவண்ணியம் உள்ள இராசாத்தி இராச நகருக்கு அப்பால் மரித்தபோது, அவளுடைய சவத்தை இராசாக்களுடைய கல்லறையில் அடக்கஞ் செய்யும்படியாக, போர்சியா என்கிற துரை அதைப் பெட்டியிலே வைத்து மூடி எடுப்பித்துக் கொண்டுவந்தார். இராச நகரியில் வந்து சேர்ந்து, அங்குள்ள இராசப் பிரபுக்களுக்குச் சவத்தைக் காண்பிக்கும்படியாக பெட்டியைத் திறந்தபோது, அந்த அழகு சவுந்தரியம் உள்ள இராசாத்தியின் முகம் காட்டின அவலட்சண கோர ரூபத்தையும், பெட்டியிலிருந்து கிளம்பின சவவெடிலையும் பார்த்து போர்சியா பிரபு திடுக்கிட்டு திக்குக் கெட்டு, அந்தச் சணமே உலக சுகபோக வைபவங்களின் நிலையாமையை உணர்ந்து கைவிட்டு சன்னியாசியாகிக் குருப்பட்டம் பெற்றதும் அல்லாமல், தமது சுகிர்த சீவியத்தின் பிரபலியத்தினால் திருச்சபையிலே அர்ச்சியசிஷ்ட போர்சியா என்று வணங்கப்படுகிறவரும் ஆனார்.

மகா அலக்சாந்தர் என்கிற அரசர் இறந்தபோது ஒரு ஞானவான் சொல்லுவான்: அலக்சாந்தர் நேற்றுப் பூமியை அடக்கி ஆண்டார், இன்றைக்கு பூமி அவரை அடக்குகிறது. நேற்றுப் பூமி முழுதுந் தானும் தமக்குப் போதாதென்றது போல பல தேசங்களையும் அடிப்படுத்த முயன்று கொண்டுவந்தார், இன்றைக்கு அவருடைய இராச்சியம் ஒரு நாலு முழக் கிடங்கு மாத்திரமே. நேற்று சேனை படை புடைசூழ ஒட்டோலகமாய்ப் பவனி போய்க்கொண்டிருந்தார், இன்றைக்கு அவரை நாலு கூலிக்காரரே சுமந்துகொண்டு போகிறார்கள் என்றானாம். ''பாவியுடைய மகிமை மலக் குவியலும் புழுவுமே'' என்ற வேதவாக்கியம் இப்படியே சவக்கிடங்கில் நிறைவேறுகிறது (1 மக்க பே. 2; 62 ).

மரணமானது சரீரத்துக்குக் கொண்டு வருகிற அழிவு இது. அது சரீரத்துக்குச் சேர்ந்த பொருள் பண்டங்களுக்கும் ஆத்துமத்தைச் சேர்ந்த இவ்வுலக நன்மைகளுக்கும் வருவிக்கிற அழிவையும் இப்போது நோக்குங்கள். எத்தனை காணி பூமி, தோட்டம் வயல், வீடு வாசல், மாடு கன்று, நகை நட்டுகள், பல முறையும் அநியாயமாய் தேடின திரவியங்கள், வங்குக் கணக்குகள், நோட்டுச் சீட்டு ஈடு ஒற்றி வருமதிகள்! எத்தனை அருமையாய்ப் பேணி வந்த சிறுச் சிறுச் சாமான், தட்டு முட்டு, தளவாடம், புத்தகங்கள்! எவ்வளவோ பாடுபட்டுத் தேடி வைத்த இந்தப் பொருட்கள், எவ்வளவோ அருமை பெருமையாய் காப்பாற்றி ஆண்ட இந்தத் தட்டுமுட்டுக்கள் எல்லாம் கனாவிற் கண்ட திரவியம் போல இல்லாமற் போய்விடும்.

சலாதின் என்னும் சுலுத்தான் சாகக்கிடந்த போது, ஒரு பணியாளை அழைத்து அவனிடம் ஒரு தடியின் தலைப்பிலே கட்டின நாலு முழத் துணியைக் கொடுத்து : நீ இதைக் கொண்டுபோய் ஊரெங்குங் காட்டி '' இதுதான் இராசாதிராசன் இராசமார்த்தாண்டன் சலாதின் மகாராசன் தன்னோடு கொண்டு போகிற சகல சம்பத்தும்'' என்று சொல்லிக்கொண்டு வா என்றாராம். மரணமானது நம்முடைய சகல செல்வ சம்பத்துக்களையும், உடைமை உரிமைகளையும் அறவே அழித்துப்போடும். மரண நேரம் ''நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் திரும்பிப் போவேன்'' என்று யோபு மகாத்துமா சொல்லிய வாக்கியம் ஒரு அரவுந் தவறாமல் நிறைவேறுவதாகும் ( யோபு. 1; 21).

பொருள் பண்டங்களைப் போலவே, குலம் கோத்திரம், உத்தியோகம், சங்கை வெகுமானம், கல்விச் செருக்கு எல்லாம் மரணத்தோடே சூறைக் காற்றில் அகப்பட்டட துரும்பாய்ப் போம். எத்தனை முறை நாம் எமது உயர்ந்த சாதி, இனக்கட்டு, இவைகளைப் பற்றி இறுமாப்புக் கொண்டு தலையெடுப்பாய் நடந்துவருகிறோம்! ஏழை எளியோரை, வேலைகாரரை எவ்வளவு பராமுகமாய் நடத்துகிறோம்! நமது உத்தியோகம் எவ்வளவு கர்வத்துக்குக் காரணமாகிறது! நமக்குக் கொஞ்சம் தாழ்ச்சியான ஒரு சொல்லை யாராவது சொல்லிப் போட்டால் : ''என்னையோ இப்படிச் சொல்லுவது? நான் ஆர் என்று நினைத்துக்கொண்டாய்? என் குணம் தெரியுமா?'' என்று கோபித்துச் சடபிடக்கிறோம்! நம்முடைய கல்வியைப்பற்றி எவ்வளவு அகங்காரமான எண்ணம் நமக்கு இருக்கிறது! இது எல்லாம் மரணத்தோடே அக்கினியாற்றின் மேல் இட்ட மயிர்ப் பாலம் போல கண் மூடி விளிக்குமுன் பொசுங்கி அற்றுப்போம்.

மரணம் ஒரு விசேஷமும் பாராத சவக்கிடங்கு. அரசர் என்றும் பிரசை என்றும் நோக்காது. மேட்டிமை மிகவும் நிறைந்தவரான அலக்சாந்தர் இராசா ஒரு சவக்காலைக்கு அருகே குதிரையிலேறிப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு ஞானியானவன் அச்சவக்காலைக்குள் ஏதோ கிளறிப் பார்த்துத் தேடிக்கொண்டிருக்கிறதைக் கண்டு, குதிரையை நிறுத்திக்கொண்டு: இங்கே நீர் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர் என்று கேட்க, அந்த ஞானி: அரசனே தங்களுடைய பிதாவான பிலிப்பு இராசாவுடைய தலைமண்டையையும் எலும்புகளையும் தேடுகிறேன். இங்கே ஓடுகள் எலும்புகள் எல்லாம் ஒன்றடிமன்றடியாய்ப் போய்க்கிடக்கிறதினால், அவைகளைக் கண்டு கொள்ளக் கூடியதாய் இல்லை. பிதாவின் தலை ஒடும் எலும்பும் என்றபடியால் ஒரு வேளை தங்களுக்கு அவைகளின் குறிப்புத் தெரியுமாக்கும் என்றானாம்.

இப்படியே, நம்முடைய சகல சம்பத்துக்களும் சங்கை கீர்த்திகளும் எல்லாம் மரணத்தோடு மறைந்து விடும். நம்முடைய பேரையும் உலகம் மறந்துவிடும். ''அவர்களுடைய ஞாபகம் சத்தத்தோடு அழிந்து போயிற்று'' என்ற வேத வாக்கியம் (சங். 9; 7 ) உண்மையான வாக்கியந்தானே. உற்றார் உறவோர் நாலைந்து நாள், நாலைந்து மாதம், அல்லது நாலைந்து வருஷம் மட்டும் நம்மை எட்டிலே தப்பிலே நினைக்கக் கூடும். அதற்குப் பிறகு ஒருவரும் நம்மைக் கவனிப்பார் இல்லை. கவனித்தும் என்ன? நினைத்தும் என்ன? நமது சரீரம் முழுதும் அழுகிப் புழுத்து மண்ணாக, நம்முடைய பொருள் பண்டம் ஆஸ்தி பாஸ்தி எல்லாம் போக, ஆணவம் சங்கை வெகுமானம் எல்லாம் நம்மை விட்டு நீங்க, உலகத்தால் முற்றாக மறக்கப்பட்டுத் தட்டத்தனியே புறப்பட்டு ஒருவரும் துணையாய் வரக்கூடாத தனிப் பாதையால் மறுலோகத்துக்குப் பயணப்படுவது எவ்வளவு அச்சம் வருவிக்கிற ஒரு காரியம்!