இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையின் இரட்சணியத்தைப் பற்றிய வாக்களிப்பு

ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகை பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உனக்குக் காட்சி தந்து, "என் குழந்தாய், அஞ்சாதே, உன் இரட்சணியமாகிய முக்கியமான வேலையை நான் என்னுடையதாக ஏற்றுக் கொள்வதாகவும், உன் நிமித்தமாக என் திருக்குமாரனை மன்றாடுவதாகவும், நித்தியப் பேரின்பத்தில் உனக்குப் பங்கு தருவதாக அவர் வாக்களிக்கும் வரை, என் மன்றாட்டுக்களில் நிலைத்திருப்பதாகவும் நான் உனக்கு வாக்களிக்கிறேன்" என்ற ஆறுதல் தரும் வார்த்தைகளை உனக்குக் கூறுவார்கள் என்றால், உன் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழியாதா? 

சர்வேசுரனுடைய திருமாதா உனக்குச் செய்யும் இந்த மேலான உபகாரத்தைப் பற்றி நீ அகமகிழ்ந்து களிகூர மாட்டாயா? தனது சர்வ வல்லமையுள்ள பரிந்து பேசுதலை தேவமாதாவே உனக்கு வாக்களித்து விட்டதால், இனி உன் இரட்சணியத்தைப் பற்றி நீ சந்தேகப்பட வாய்ப்பே இல்லை அல்லவா?

சர்வேசுரனுடைய திருமாதாவின் மன்றாட்டில் நாம் இவ்வளவு பெரிய நம்பிக்கை வைக்கிறோம் என்றால் (இது சரியானதுதான்), இதே நம்பிக்கையை, அல்லது இதைவிடப் பெரிய நம்பிக்கையை உன்னத மகிமையுள்ள தேவ சுதனின் மகா வல்லமையுள்ள மன்றாட்டில் நாம் ஏன் வைக்க முடியாது? 

அவரோ, நித்தியப் பேரின்பம் அடையும்படியாகப் பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசு வதாக வாக்களிப்பது மட்டுமின்றி, நாம் பங்குபெறும் ஒவ்வொரு பூசையிலும் அவர் உள்ளபடியே நமக்காகப் பரிந்து பேசி, தேவ நீதி நம் மட்டில் நிறைவேற்றப்படுவதைத் தடை செய்கிறார். நம் பாவங்களுக்குத் தகுதியானபடி நாம் தண்டிக்கப்படாதவாறும், அதற்கு மாறாக, வரப்பிரசாதத்தின் வழியாக நாம் இரட்சிக்கப் படுமாறும் அவர் ஒவ்வொரு பூசையிலும் இப்படிச் செய்கிறார். 

வெறும் வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அவர் நமக்காக மன்றாடுவதில்லை; அவருடைய கண்ணீர்களும் பேசுகின்றன; அவரது ஆராதனைக்குரிய திருச்சரீரத்தின் ஐந்து திருக்காயங்களும், இந்தக் காயங்களிலிருந்து வழிந்த அவரது திரு இரத்தத்தின் ஒவ்வொரு துளியும், அவரது திரு இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும், அவருடைய சுவாசத்திலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு பெரு மூச்சும் --இவை எல்லாமே நம் சார்பாக வாய்ச்சாலகமுள்ள குரல்களாக இருக்கின்றன. 

இந்தக் குரல்கள் உன்னதத்திற்கு எழுந்து சென்று, சர்வேசுரனுடைய சிம்மாசனத்தை அடைந்து, பரலோகத்திலிருக்கிற நம் பிதாவின் கனிவுள்ள இருதயம் நம் மீது தயவு கொள்ளச் செய்கிறது. இவை போன்ற ஜெபங்களால் பெற்றுத் தர முடியாத வரப்பிரசாதம் என்ன உண்டு? அவை நம்மிடமிருந்து அகற்றாத தீமை என்ன உண்டு? அவை பெற்றுத் தர இயலாதிருக்கிற நன்மைகள் என்ன உண்டு?

பூசையில் பங்கு பெறுபவர்களின் சார்பாக, கிறீஸ்துநாதர் விசேஷமான முறையில் பரிந்து பேசுகிறார் என்ற முழுமையான உறுதிப்பாட்டை நமக்குத் தர இதற்கு முந்திய பக்கங்கள் போதுமானவை என்பதால், அவருடைய பரிந்து பேசும் மன்றாட்டுக்களில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளும்படி நாம் ஏன் அடிக்கடி பூசை காணக் கூடாது? 

நாம் பூசைக்குச் சென்றால், கிறீஸ்துநாதர் நமக்காக ஜெபித்து, நம் எல்லாக் குறைபாடுகளுக்கும் ஈடு செய்வார் என்றாலும், நாம் ஜெபித்தாலும், இன்னும் வியாதியுள்ளவர்களாகவே இருக்கிறோம் என்று அடிக்கடி முறைப்பட்டுக் கொள்வதையும், புலம்புவதையும் பிறர் கேட்கிறார்கள். அவர் எவ்வளவு கருணை யோடு நம்மை அழைக்கிறார் என்று கேளுங்கள்: 'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னண்டையில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றி தருவேன்" (மத் 11:28) தாம் பூமியிலிருந்த போது அவர் இப்படிச் சொன்னார். 

இப்போது பீடத்தில் இருந்து கொண்டு, "உங்களுக்காக ஜெபிக்க முடியாதவர் களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்'' என்று அவர் சொல்வதாகத் தோன்றுகிறது. நிர்ப்பாக்கியப் பாவிகளாகிய நாம் ஏன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, பூசையில் பிரசன்னமாகியிருக்கும் அவரிடம் விரைந்து செல்லக் கூடாது? 

நிர்ப்பாக்கியங்கள் நம்மை மேற்கொள்ளும்போது, நம் சகல சிருஷ்டிகளிடம் சென்று, அவர்களிடம் நம் பிரச்சினையைச் சொல்லி, அவர்கள் நமக்காக ஜெபிக்கும்படி கேட்பது நமக்கு வழக்கமாக இருக்கிறது. மனிதர்களுடைய ஜெபங்கள் நமக்கு உதவி செய்யும் என்று நாம் நம்புவோமானால், கிறீஸ்துநாதருடைய, முழுமையும் நன்மை பயப்பதும், முழு வல்லமையுள்ளதுமான ஜெபத்தில் நாம் இன்னும் அதிக, பாரதூரமான அளவுக்கு நம்பிக்கை வைக்க வேண்டாமா? 

எந்த மனிதனும் தன் இரட்சணியத்தைப் பற்றி உறுதி கொள்ள முடியாது; சீடர்கள் நம் ஆண்டவரிடம்: "அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?" என்று கேட்டபோது, ''மனிதர்களால் ஆகாதது சர்வேசுரனாலே ஆகும்" என்று அவர் பதிலளித்தார் (மாற்கு. 19:26-27). 

நம் இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நம்மால் இயலாத காரியம் என்று கிறீஸ்துநாதரின் சொந்த உதடுகளிலிருந்தே நாம் கேட்பதால், நம்மைச் சுற்றியுள்ள ஆபத்துக்களிலிருந்து தப்பும்படி திவ்விய பலிபூசையில் நாம் தஞ்சமடைவோமாக. அப்போது கிறீஸ்துநாதர் நமக்காகப் பரிந்து பேசி, நித்தியப் பேரின்பத்தை நமக்குப் பெற்றுத் தருவார்.

ஆகவே, "நான் ஈனப் பாவியாயிருப்பதால், கிறீஸ்துநாதர் எனக்காக மன்றாட எனக்குத் தகுதியில்லை" என்று புலம்பாதே, மாறாக, திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரை நோக்கி நீ ஏக்கத்தோடு ஒரே ஒரு பெருமூச்சு விட்டாலும் கூட, அவர் உனக்காக ஜெபிப்பார் என்பதில் உறுதியாயிரு; உண்மையில் அவர் உனக்காக ஜெபிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். 

ஏனெனில் அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில், "எந்தப் பெரிய குருவும் மனிதர்களுக்குள்ளே தெரிந்து கொள்ளப்பட்டு, காணிக்கைகளையும் பாவங்களுக்காகப் பலிகளையும் செலுத்தும்படிக்குத் தேவ ஆராதனை தொடர்பான காரியங்களில் மனிதர்களுக்குச் சனுவாக ஏற்படுத்தப்படுகிறான்" என்று கூறுகிறார் (5:1). 

இனி, நம் பெரிய குருவாக இருக்கும்படி கிறீஸ்துநாதர் பிதாவாகிய சர்வேசுரனால் ஏற்படுத்தப் பட்டிருப்பதாலும், திவ்விய பலிபூசையில் அவர் தமது குருத்துவ அலுவல்களை நிறைவேற்றுகிறார் என்பதாலும், தமது பதவியின் காரணமாக, மக்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுக்காக திவ்விய பலி பூசை ஒப்புக்கொடுக்கவும் அவர் கடமைப்பட்டிருக்கிறார். 

உலகம் முழுவதற்காகவும் மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்காகவும் தனிப்பட்ட முறையில் தாம் மரித்தது போலவும், பொதுவாக மனுக்குலம் முழுவதையும் மட்டுமன்றி, ஒவ்வொரு தனிமனித னையும் தனிப்பட்ட முறையில் தாம் ஆண்டு நடத்தி வருவது போலவும், பூசை காண்பவர்கள் அனைவருக்கும் பொதுவாக மட்டுமின்றி, பூசை காணும் ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அவர் பூசையை ஒப்புக்கொடுக்கிறார். 

ஆகவே கிறீஸ்துநாதர் உனக்காக ஜெபிக்கிறார் என்பதில் இனியும் சந்தேகம் கொள்ளாதே, மாறாக, தகுதியுள்ள பக்தியோடு நீ பூசை காண்பாய் என்றால், கிறீஸ்துநாதர் உனக்காக ஜெபிக்கிறார் என்பதில் நீ உறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

இது வரை சொல்லப்பட்ட அனைத்திலிருந்தும், கிறீஸ்து நாதர் பீடத்தின் மீது நமக்காக ஒப்புக்கொடுக்கும் ஜெபம் எவ்வளவு வல்லமையும், ஏக்கமும் உள்ளது என்பதையும், நம் மீது அதன் விளைவு எவ்வளவு நன்மை பயப்பதாக இருக்கிறது என்பதையும் நாம் அதிக முழுமையாக இப்போது புரிந்து கொள்கிறோம். 

இன்னும் ஒரே ஒரு காரியம்தான் விளக்கப்பட வேண்டியுள்ளது : நாம் நம் ஜெபங்களை அவருடைய ஜெபங்களோடு ஒன்றிக்க வேண்டும் -- அல்லது அதை விட மேலாக, நம் ஜெபத்தை அவர் தம் ஜெபத்தோடு ஒன்றாக்கிக் கொள்ளும்படி அவரை மன்றாட வேண்டும் என்பது தான் அது. 

ஏனெனில் இந்த ஒன்றிப்பு நம் ஜெபத்தை எவ்வளவு வல்லமையுள்ளதாக ஆக்கும் என்றால், வேறு எந்த ஜெபத்தையும் அதனோடு ஒப்பிடவும் முடியாது. இதைப் பற்றி மேற்றிராணியா ரான ஃபோர்னேருஸ் கூறும்போது, "பூசையில் நாம் செய்கிற ஜெபங்கள், திவ்விய பலியோடு ஒன்றிக்கப்பட்டு ஒப்புக்கொடுக்கப் படும்போது, அவை வேறு எந்த ஜெபங்களையும் விட, வேறு எந்த மிக நீளமான, மிகுந்த பக்தியார்வமுள்ள -- பரவச நிலையில் செய்யப் படும் காட்சிதியான -- ஜெபங்களையும் விட அதிகமாக அளவற்ற மதிப்புள்ளவையாக இருக்கின்றன. 

கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் பேறுபலன்கள் இவற்றை இவ்வாறு மதிப்பு மிக்கவையாக ஆக்குகின்றன, திருப்பாடுகளின் வல்லமை, அதியபரிமிதமான பரலோகக் கொடைகளாலும், வரப்பிரசாதங்களாலும் வெளிப்படுத்தப்படு கிறது. 

ஏனெனில் சிரசானது மனித சரீரத்தின் மிக உன்னதமான பகுதியாக இருப்பது போலவே (வேறு எந்த உறுப்பும் அதனோடு ஒப்பிடப் பட முடியாது), நம் சிரசாயிருக்கும் கிறீஸ்துநாதர் பூசையில் நமக்காக ஜெபிக்கும் போது, அவரால் ஒப்புக்கொடுக்கப்படும் ஜெபங்களும் தங்கள் மகத்துவத்தில், அவரது உறுப்புகளாக இருக்கும் சகல கிறீஸ்தவர்களுடைய ஜெபங்களையும் விஞ்சுவதாக இருக்கிறது" என்று கூறுகிறார்.

ஆகவே, பூசையின் போது, நாம் நம் ஆண்டவரின் உத்தமமான ஜெபத்தோடு நம் எளிய விண்ணப்பங்களை ஒன்றித்து ஒப்புக்கொடுப்போம் என்றால், உருகிய தங்கத்தில் அமிழ்த்தப்பட்ட பித்தளை நாணயத்தைப் போல, அவை அழகும் மேன்மையும் பெற்று, நம் ஆண்டவருடைய ஜெபத்தோடு மோட்சத்திற்குச் சுமந்து செல்லப்படவும், அத்துடன் விலை மதிக்கப்படாத காணிக்கையாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படவும் தகுதியுள்ளவையாகின்றன. 

இவ்வாறு, பூசை நேரத்தில் செய்யப்படும் ஜெபங்கள், (நம் சொந்தப் பாவத்தின் காரணமாக) தங்களிலேயே குறைந்த நன்மைத்தனம் உள்ளவையாக இருந்தாலும், வீட்டிலிருந்து செய்யப்படும் அதிக பக்தியுள்ள ஜெபங்களை விட அதிக மதிப்பைக் கொண்டிருக்கும். 

ஆகவே, பூசைக்குச் சென்று, அதன் மூலம் தங்கள் பேறுபலன்களை அதிகரித்துக் கொள்ள முடிந்தும், அதைச் செய்யாமல் வீட்டிலிருந்த படி ஜெபிப்பதைத் தேர்ந்து கொள்பவர்கள் எவ்வளவு மூடத்தன முள்ளவர்களாகவும், தங்கள் சொந்த ஆவல்களின் காரியத்திலும் கூட குருடர்களாகவும் இருக்கிறார்கள்! 

ஏனெனில், பலிபூசை ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெறும் நோக்கத்துடன் தங்கள் சாதாரணமான பக்தி முயற்சிகளை அவர்கள் செய்வார்கள் என்றால் --தேவ வசீகரத்தின் போது மட்டும், நம் இரட்சகரின் திருச்சரீரத்தையும், விலை மதியாத திரு இரத்தத்தையும் ஆராதிக்கும்படி இந்த பக்திமுயற்சிகளை இடைநிறுத்த வேண்டும் -- அப்போது, இதே ஜெபங்களைத் தங்கள் வீட்டிலோ, வெளி இடங்களிலோ செய்யும்போது பெற்றுக் கொள்வதை விட அதிகமான பேறுபலன்களைப் பெற்றுக் கொள்வார்கள். 

ஏனெனில் அப்போது, முன்பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் அனைத்திலும் பங்குபெறுபவர்களாக அவர்கள் ஆக்கப்பட்டு, மோட்சத்தில் தங்களுக்கெனப் பெரும் பொக்கிஷங்களைக் குவித்து வைப்பார்கள். ஆகவே, பக்தியுள்ள வாசகனே, முடிந்த வரை அதிகமாக உன் விண்ணப்பங்களைப் பூசையில் நம் பரிசுத்த ஆண்டவரின் மன்றாட்டுக்களோடு ஒன்றித்து ஒப்புக்கொடுப்பதில் கவனமாயிரு.