இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் நிகழும் ஆண்டவரின் பிறப்பின் அனுதினப் புதுப்பித்தலால் பாவகரமான ஓர் உலகத்தினுள் கொண்டு வரப்படும் வாக்குக் கெட்டாத ஆசீர்வாதங்கள்

இறுதியாக, திவ்விய பலிபூசையில் நிகழும் நம் ஆண்டவரின் பிறப்பின் அனுதினப் புதுப்பித்தலால் பாவகரமான ஓர் உலகத்தினுள் கொண்டு வரப்படும் வாக்குக்கெட்டாத ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் தியானிப்போம். 

இசையாஸ் தீர்க்கதரிசி இரட்சகரின் பிறப்பைப் பற்றிப் பேசும்போது, "நமக்காக ஒரு பாலன் பிறந்தார், நமக்கு ஒரு மகன் தரப்பட்டார்" (இசை. 9:6) என்று கூறுகிறார். அவரது ஞானப் பிறப்பைப் பற்றியும் இதே வார்த்தைகள் சொல்லப்படலாம்: பூசை நிறைவேற்றப்படும் போதெல்லாம், "நமக்காக ஒரு பாலன் பிறக்கிறார், நமக்கு ஒரு மகன் தரப்படுகிறார்." எவ்வளவு விலை மதிக்கப்படாதது, எவ்வளவு மதிப்பு மிக்கது இந்த மாபெரும் கொடை! 

இந்தக் கொடை பரலோகப் பொக்கிஷங்களில் எல்லாம் விலை மதிக்கப்படாத கொடையேயன்றி வேறு எதுவுமில்லை. அவர், எல்லாச் செல்வங்களையும் தம்மகத்தே கொண்டுள்ள நித்திய பிதாவின் திருச்சுதனேயன்றி வேறு யாருமில்லை. பூசை நிறைவேற்றப் படும் போது, அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார், அளவிட முடியாத செல்வ வளங்களையும், பரலோகப் பொக்கிஷங்களையும் தம்மோடு கொண்டு வருகிறார். 

இவற்றில் முதன்மையானவை தேவ வரப்பிரசாதம் மற்றும் இரக்கம், மனஸ்தாபம் மற்றும் பாவ மன்னிப்பு, பாவத்திற்குரிய தண்டனை விலக்கப்படுதல், வாழ்வு திருத்தப்படுதல், நல்மரண வரம், பரலோகத்தில் அதிக உயர்வான நிலை, இவற்றோடு எண்ணற்ற உலக நன்மைகள் --உதாரணமாக, விபத்துக்களிலிருந்தும், பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதல், நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் கடவுளின் ஆசீர்வாதம் -- ஆகியவையாகும். இவற்றையும் இன்னும் பல வரங்களையும் பக்தியோடு பூசை காண்பவர்களுக்கு வழங்க அவர் தயாராக இருக்கிறார், அவற்றை அவர் அவர்கள் மீது அபரிமிதமாகப் பொழிந்தருள்வார்.

இசையாஸின் தீர்க்கதரிசனத்தை இன்னும் அதிக கவனத்தோடு நாம் தியானிப்போம் என்றால், நம்மை ஊக்கப்படுத்தும் மற்றுமொரு காரியத்தை அதில் நாம் காண்போம். அவர் நேரடியாக, "நமக்காக ஒரு பாலன் பிறக்கிறார், நமக்கு ஒரு மகன் தரப்படுகிறார்" என்று சொல்கிறார். 

சேசு பாலன் இவ்வாறு திவ்விய பலிபூசையில் பிறக்கிறார், அவர் நமக்குத் தரப்படுகிறார் என்றால் அவர் நமக்குச் சொந்தமானவராக இருக்கிறார். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம்; அவர் செய்வதெல்லாமும் கூட நமக்குச் சொந்தம். பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு அவர் செலுத்தும் சங்கை மரியாதையும், ஆராதனையும், நன்றியறிதலும், பாவப் பரிகாரமும் கூட நம்முடையவையாகவே இருக்கின்றன. 

நாம் பூசை காணும்போது, பூசை மட்டுமல்ல, மாறாக, சேசுபாலனும் கூட முழுவதும் நமக்குச் சொந்தம் என்று அறிந்திருப்பதை விட, ஏழைப் பாவிகளாகிய நமக்கு அதிக ஆறுதலளிக்க வல்லது வேறு எது இருக்க முடியும்? 

கிறீஸ்து பிறப்பின் இரவில் நீ அந்தத் தொழுவத்தில் இருந்திருந்தால், அந்தப் பச்சிளம் மகவை உன் கரங்களில் எடுத்து, இந்த இனிய பாலனின் நிமித்தமாக, பிதாவாகிய சர்வேசுரன் உன் மீது தயவாயிருக்குமாறு மன்றாடியபடி, அவரைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்க உன்னால் முடிந்திருந்தால், அவர் உனக்குத் தயவு காண்பித்து, உன் பாவங்களை யெல்லாம் உனக்கு மன்னித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறாயா? 

நல்லது, ஆகவே, நீ பூசை காணும் ஒவ்வொரு முறையும் இப்படியே செய். மானசீகமாக பீடத்தை நெருங்கிச் சென்று, தேவ குழந்தையானவரை உன் கரங்களில் ஏந்தி, பிதாவாகிய சர்வேசுரனுக்கு அவரை ஒப்புக்கொடு.

மிகவும் குறிப்பிடத்தக்கதும், விளக்கப்பட அவசியமானதுமான மற்றொரு காரியம் இன்னும் இருக்கிறது. அது என்னவெனில்: கிறீஸ்துநாதர் பீடத்தின் மீது பரம இரகசிய முறையில் பிறப்பது மட்டுமல்ல, மாறாக, அவர் அங்கே பரலோகமும், பூலோகமும் கண்டு அதிசயித்துப் போகும் அளவுக்கு மிகத் தாழ்மையான வடிவத்தை எடுத்துக் கொள்கிறார். 

அர்ச். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், பின்வரும் வலிமையான வார்த்தைகளில் இரட்சகரின் முதல் மனிதாவதாரத்திலும் பிறப்பிலும் அவர் எந்த அளவுக்குத் தம்மையே தாழ்த்திக் கொண்டார் என்று விளக்குகிறார்: ''கிறீஸ்து சேசுவினிடத்தில் உண்டாயிருந்த சிந்தைகளே உங்களிடத்திலும் உண்டாயிருக்கக்கடவது. அவர் தேவரூபமாயிருக்கையில் தாம் சர்வேசுரனுக்குச் சரிசமானமாயிருப்பதைத் திருட்டென்று எண்ணாமல். தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூப மெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுரூபமாகக் காணப்பட்டார். தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டுக்கும் அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் கீழ்ப்படிதலுள்ளவரானார்” (பிலி.2: 5-8.)

கிறீஸ்துநாதரின் ஆழ்ந்த தாழ்ச்சியை நமக்கு அறிவிக்கவும், அவர் தம்மையே அழித்துக் கொள்ளும் காரியத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பவும் அர்ச். சின்னப்பர் பயன்படுத்தும் அழுத்தந் திருத்தமான வார்த்தைகள் இவையே. 

ஆனால் பூசையில் நம் ஆண்டவரின் ஞானப் பிறப்பைப் பற்றிச் சிந்திப்பவன், அதில் பாரதூரமானதும், அதிகம் ஆழ்ந்ததுமான தாழ்ச்சியின் பாதாளத்தைக் கண்டு கொள்வான். ஏனெனில் தமது இவ்வுலகப் பிறப்பில் அவர் தம்மை மனிதனைப் போல் ஆக்கிக் கொண்டார். ஓர் அழகிய, வசீகரமான குழந்தையின் வடிவத்தை அவர் எடுத்துக் கொண்டார்; ஆனால் தமது பரம இரகசியப் பிறப்பில், அவர் அப்பத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டு, வெளிப்பார்வைக்கு ஓர் அப்பத் துண்டைப் போலத் தோன்றுகிறார். அல்லது, இன்னும் மேலாக, நாம் காணக்கூடிய மிகச்சிறிய ஒரு அப்பத்துணுக்கிலும் கூட தம்மை மறைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தம்மை முழுமையாகத் தாழ்த்தி, அழித்துக் கொள்கிறார்.

இது உண்மையாகவே ஈடு இணையற்ற தாழ்ச்சியாகவும், நாம் இதற்கு முன் கேள்விப்பட்டிராத சுய மறுதலிப்பாகவும் இருக் கிறது! "நான் மனிதனல்ல, புழுவாயிருக்கிறேன், நான் மனிதர் களாலே நிந்திக்கப்பட்டு, மக்களுக்கு அசங்கியப்பட்டவனா யிருக்கிறேன்" (சங். 21:6) என்று கிறீஸ்துநாதரின் வாய்மொழியாக அரச தீர்க்கதரிசியானவர் கூறியுள்ள வார்த்தைகள் இங்கு மிகப் பொருத்தமானவையாக இருக்கின்றன. 

ஏனெனில் ஓர் அப்பத்துண்டுக்கு செவி சாய்ப்பவன் யார்? அதைத் தன் கடவுளாக அங்கீகரிப்பவன் எவன்? அவருக்கு சங்கை மரியாதையும், மகிமையும் செலுத்துபவன் யார்? அவரது மகிமையுள்ள திருச்சரீரத்திற்குரிய மகத்துவப் பேரொளி எங்கே? அவரது சர்வ வல்லமை எங்கே? பரலோகத்தையும், பூலோகத்தையும் தனக்கு முன்பாக அஞ்சி நடுநடுங்கச் செய்கிற அவருடைய அரச மகத்துவம் எங்கே? 

ஆ. என் ஆண்டவர் எனக்காக இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, அனைத்திலும் அதிக ஆழமான தாழ்ச்சியின் ஆடையால் தம்மை உடுத்திக் கொண்டாரே! 

நித்திய தேவ வார்த்தையானவராக இருப்பவர் பீடத்தின் மீது ஒரு வார்த்தை முதலாய்ப் பேச முடியாதவராக இருக்கிறார்! 

பரமண்டலங்களையும், பூமண்டலத்தையும் சிருஷ்டித்த தேவன் தம் கரத்தையோ, காலையோ அசைக்க முடியாதவராயிருக்கிறார்! 

வானாதி வானங்களும் கூட தங்களுக்குள் அடக்கிக் கொள்ள இயலாதவராக இருக்கிறவர், ஒரு சிறு அப்பத் துண்டில் அடக்கப் பட்டிருக்கிறார், 

அதில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். பிதாவின் வலப்புறத்தில் வீற்றிருக்கிறவர், பலிச் செம்மறிப் புருவையாகக் கட்டுண்டு, நம் நிமித்தமாக ஒரு பலிப்பொருளாக ஞான முறையில் புதிதாகக் கொல்லப்படுவதற்குக் காத்துக் கொண்டு, பலிபீடத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! 

இதோ, பரலோகத்தினுடையவும், பூலோகத்தினுடையவும் இராஜரீக ஆண்டவராயிருப்பவரின் அளவற்ற தாழ்ச்சி! 

இதோ மனித மக்களின் மீது பிரமாணிக்கமுள்ள நேசர் கொண்டுள்ள உரைக்கவியலாத தேவசிநேகம்!