இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

59. நமது சகல நம்பிக்கையும் உறுதியும் சர்வேசுரனிடத்தில் மாத்திரம் வைக்கவேண்டியது.

1. (சீஷன்) ஆண்டவரே! இச்சீவியத்தில் எனக்கு நம்பிக்கையா யிருப்பவர் யார்? பூலோகத்தில் காணப்படும் எல்லாவற்றின் மத்தியில் சீவிக்கிற எனக்கு அதிக ஆறுதலாயிருப்பதென்ன? அளவில்லாத இரக்கமுடைய என் ஆண்டவராகிய நீர்தாமே! உம்மிடத்திலன்றி வேறு எவ்விடத்தில் எனக்கு நன்மையாயிருந்தது? அல்லது நீர் இருக்கும்போது, எனக்கு நன்மையிராமல் போனது எப்போது? நீரில்லாமல் திரவிய செல்வந்தனாயிருப்பதை விட உம்மைப்பற்றித் தரித்திரனாயிருக்க ஆசைப்படுகிறேன். நீர் இல்லாமல் மோட்சத்தை அனுபவிப்பதை விட, உம்முடன் பூலோகத்தில் பரதேசியாயிருப்பதைத் தெரிந்து கொள்வேன். நீர் எங்கே இருக்கிறீரோ அங்கே மோட்சம்; நீர் எங்கே இல்லையோ அங்கே மரணம், அங்கே நரகம்.

என் ஆசையெல்லாம் உமது பேரில்தான் வைக்கிறேன். ஆனதால் நான் உம்மை நாடித் தேடி, உம்மை அழைத்து உம்மை மன்றாடி வரக் கடமைப்பட்டிருக்கிறேன். சகல அவசரங்களில் எனக்குத் தக்க காலத்தில் ஒத்தாசை கிடைக்கும்படி, என் தேவனாகிய உம்மைத் தவிர மற்றெவர் மட்டிலும் நான் முழு நம்பிக்கை வைக்கக் கூடாது. நீரே என் நம்பிக்கை, நீரே என் உறுதி, நீரே என் ஆறுதல், நீரே சகலத்திலும் எனக்கு அதிபிரமாணிக்கமுள்ள சினேகிதர்.

2. “சகலரும் தங்கள் சுய காரியங்களைத் தேடுகிறார்கள்,” நீரோ என் இரட்சணியத்தையும் என் புண்ணிய வளர்ச்சியையும் மாத்திரம் ஆசிக்கிறீர், சகலமும் எனக்கு நன்மையாயிருக்கும்படிச் செய்கிறீர். பற்பல சோதனை களுக்கும் துன்பங்களுக்கும் நீர் என்னை உள்ளாக்கின போதிலும், அவை யாவற்றையும் எனது பிரயோசனத்திற் காகவே திட்டம் செய்திருக்கிறீர்; ஏனெனில் பலவாறாய் உமது நேசர்களை வழக்கமாய்ப் பரிசோதிக்கிறீர். பரலோக ஆறுதலால் என்னை நீர் நிரப்பும்போது நான் உம்மை எவ்வளவிற்கு சிநேகித்துத் துதிக்க வேண்டியிருக்கிறதோ, நீர் என்னைச் சோதிக்கும்போதும் நான் உம்மை அவ்வளவிற்குத் துதித்துச் சிநேகிக்க வேண்டியது.

3. ஆனதால் என் ஆண்டவராகிய தேவனே என் சர்வ நம்பிக்கையையும் விசுவாசத்தையும் உமது பேரில் வைக்கிறேன்; என் துன்பங்கள் இடையூறுகள் யாவையும் உம்மிடத்தில் ஒப்புவிக் கிறேன், ஏனெனில் உமக்கப்பால் நான் காண்பதெல்லாம் பலவீனமும் நிலையற்றதுமென்று பார்க்கிறேன். உள்ளபடி நீர் உதவி யாக வந்து ஒத்தாசை செய்து, திடன் அளித்து, ஆறுதல் தந்து, கற்பித்துக் காப்பாற்றாவிட்டால், அநேக சிநேகிதர் இருந்தும் உதவி யேது? பலமுள்ள துணைவர் இருந்தும் ஒத்தாசை ஏது? விமரிசை யுள்ள ஆலோசனைக்காரர் புத்திமதிகள் சொல்லியும் பிரயோசன மென்ன? சாஸ்திரிகளுடைய புத்தகங்களைப் படித்தாலும் எனக்கு ஆறுதல் என்ன? எந்தப் பெரும் செல்வங்கள் என்னை இரட்சிக்கக் கூடும்? மறைவுள்ளதும் இணக்கமுள் ளதுமான எவ்விடத்தில் புகுந்து அடைக்கலம் அடைவேன்?

4. ஏனெனில் சமாதானத்தையும் பாக்கியத்தையும் பெறுவிப் பதாகக் காணப்படுவதெல்லாம், தேவரீர் இல்லாத போது ஒன்றுமில் லாமையாயிருக்கின்றது, உண்மையான பாக்கியத்தைத் தருகிற தில்லை. ஆகையால் சகல நன்மைக்கும் சம்பூரணம் நீர், சீவிய சமுத்திரமும் நீர்; ஞானம், கல்வி ஆகியவற்றின் வற்றாத ஊறணியும் நீரே; ஆதலால் சகலத்திற்கு மேலாக உமது மட்டில் நம்பிக்கை வைப்பதே உமது ஊழியருடைய மிகவும் பலமான ஆறுதல். என் சர்வேசுரா! இரக்கமுள்ள பிதாவே! “என் கண்கள் உம்மை நாக்கி யிருக்கின்றன;” உம்மையே நம்புகிறேன். 

என் ஆத்துமம் உமது பரிசுத்த வாசஸ்தலமும் உமது நித்திய மகிமையின் சிம்மாசனமும் ஆகும்படிக்கும், நீர் எழுந்தருளி வருகிற இவ்வாலயத்தில் உமது மகத்துவத்திற்கு விரோதமானதொன்றும் காணப்படாதபடிக்கும், அதை உமது தேவ ஆசீரால் ஆசீர்வதித்து அர்ச்சித்தருளும்! உமது தயாளத்தின் அளவில்லாத நன்மைக்கும் உமது இரக்கத்தின் மிகுதிக்கும் தக்க வண்ணம் என்னை நோக்கி யருளும்; மரண நிழல் மூடின நாட்டில் பரதேசியாயிருக்கிற உமது எளிய ஊழியனுடைய மன்றாட்டைக் கேட்கிற இத்தனை ஆபத்துக்களின் நடுவே உமது சிறு ஊழியனின் ஆத்துமத்தை ஆதரித்துக் காப்பாற்றியருளும்; எனக்கு உமது வரப்பிரசாதத்தைத் துணையாகத் தந்து நித்திய ஒளி வீசும் ஜென்ம தேசத்திற்குச் சமாதான மார்க்கமாய் என்னை நடப்பித்தருளும் சுவாமி. ஆமென்.

யோசனை

சகலமும் வாசித்த பிறகு, சகலமும் கேட்ட பிறகு, சகலமும் பார்த்த பிறகு என்ன முடிவுக்கு வந்தோம்? “சர்வேசுரன் ஒருவரே,” என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியது. அர்ச். பிரான்சிஸ்கு சபைத் துறவிகளில் ஒருவர் சொல்வது என்னவென்றால்: முற்காலங்களில் சுபாவத்திலும் ஞானத்திலும் சிறந்து ஜீவித்த கோடானுகோடி சிருஷ்டிகளைப் பார், அளவில்லாத விதமாய் அவர்கள் எண்ணிக்கையைப் பெருக்கித் தொகையைக் கூட்டிப் பார். அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சர்வேசுரனுக்கு முன்பாக என்ன? ஒன்றுமில்லை. அவருக்கு முன்பாக அவர்களது புண்ணியங்களும் நற்கிரியைகளும் ஒன்றுமில்லை. அவர் நித்தியர், மாறாதவர், அளவில்லாதவர். “என் தேவனிடத்தில் எல்லாம் பூரணம், அவரது அளவில்லாத இலட்சணங்களை நான் யோசிக்கும்போது என்னிருதயம் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து போகிறது; ஒரு பக்கத்தில் அவருடைய அளவில்லாத மகத்துவத்தை யோசித்தேன், மற்றோர் பக்கத்தில் என் ஒன்றுமில்லாமையைக் கண்டேன்; நான் அவரை எவ்வளவுதான் நேசித்த போதிலும், அவர் பாத்திரமாயிருக்கிற அளவிற்கு நேசிக்க, நீச வஸ்துவும் ஒன்றுமில்லாமையுமான என்னால் முடியுமோ? முடியாது. அப்போது என் நீசத்தனத்தை அறிந்து கொண் டேன். அந்த அறிதலே என்னைத் தேவ சிநேக அக்கினியில் எரித்து விட்டது” என்று எழுதி வைத்திருக்கிறார்.