இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

58. நமது புத்திக்கெட்டாத இரகசியங்களையும் தேவ தீர்மானங்களையும் ஆராயலாகாது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! புத்திக்கெட்டாத விஷயங்களையும் தேவனுடைய இரகசிய தீர்மானங்களையும் பற்றித் தர்க்கிக்காதபடிக்கு ஜாக்கிரதையாயிரு: அவர் அவ்விதம் கைவிடப்படுவது ஏன்? இவன் இவ்வளவு பெரிய வரப்பிரசாதம் பெறுவது ஏன்? ஒருவன் இவ்வளவு கஸ்திக்கு ஆளாவதேன்? மற்றொருவன் இவ்வளவு மேன்மைக்கு உயர்த்தப்படுவதேன் என்று வாதாடாதே. இவை மனிதனுடைய புத்திக்கு மேற்பட்டவை; எந்த நியாயமும், எந்த வாக்குவாதமும் சர்வேசுரனுடைய தீர்மானத்தை ஆராய்ந்து பார்க்க வல்லதல்ல.

ஆனதால் அவ்வித எண்ணங்களை பகைவர் உனக்கு ஏவினாலும் சரி, அல்லது யாரேனும் விநோதப்பிரியர் உன்னிடத்தில் கேட்ட போதிலும் சரி, மறுமொழியாக: “ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர், உமது தீர்மானம் நேர்மையானது” அல்லது “ஆண்டவருடைய தீர்மானங்கள் உண்மையானவை, அவை தங்களைக் கொண்டே எண்பிக்கின்றன” என்று தீர்க்கதரிசியின் வாக்கியத்தைச் சொல். நமது தீர்மானங்களுக்கு அஞ்ச வேண்டியது. அவைகளைப் பற்றித் தர்க்கிக்கலாகாது, ஏனெனில் மானிட புத்திக்கு எட்டாதவையா யிருக்கின்றன.

2.  மேலும் ஒவ்வொரு அர்ச்சியசிஷ்டவருடைய மேன்மை யைப் பற்றி அவர்களில் எவர் அதிக அர்ச்சியசிஷ்டவருமாய் மோட் சத்தில் சிறந்தவருமாயிருக்கிறார் என்று தர்க்கிக்காதே, அதையறியத் தேடாதே. அதெல்லாம் அநேக முறை சச்சரவுகளையும் பிரயோசன மற்ற வாக்குவாதங்களையும் விளைவிக்கின்றது. இது தவிர ஆங்காரமும் வீண் பெருமையும் ஏவப்பட்டு பொறாமை, பிரிவினை முதலியவைகளை உண்டாக்குகின்றன, ஏனெனில் ஒருவன் ஒரு அர்ச்சிஷ்டவரை உயர்த் திப் பேச, மற்றொருவன் வேறொருவரே அதிக உயர்ந்தவரென்று சாதிக்கிறான்.

அவ்வித இரகசியமான காரியங்களை அறியவும், ஆராயவும் தேடுவதால் எந்தப் பயனுமில்லை; அது அர்ச்சியசிஷ்டவர்களுக்குப் பிரியப்படுவதுமில்லை; ஏனெனில் “நாம் பிரிவினையின் தேவனல்ல, சமாதானத்தின் தேவன்.” அந்தச் சமாதானம் சொந்த மேன்மையில் அல்ல, ஆனால் மெய்யான தாழ்ச்சியில்தான் அடங்கியிருக்கின்றது.

3. சிலர் இன்னின்ன அர்ச்சியசிஷ்டவர்கள் பேரில் அதிக உருக்கமான நேசத்தால் இழுக்கப்பட்டு அவர்களை மற்ற அர்ச்சியசிஷ்டவர்களை விட அதிகமாய் நேசிக்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய நேசம் அவ்வளவு பரிசுத்தமுள்ளதல்ல; அது அநேகமாய் சுபாவ காரணங்களால் ஏவப்பட்டிருக்கிறது.

சகல அர்ச்சியசிஷ்டவர்களை பரிசுத்தராக்கியவர் நாம்; வரப் பிரசாதங்களை அவர்களுக்கு அளித்தவர் நாம்; அவர்களைப் பிரபலப் படுத்தினவர் நாம். நாம் ஒவ்வொருவருடைய தகுதிகளை அறிகிறோம்; நமது மதுரமான ஆசீர்வாதங்களால் அவர்களை எதிர்கொண்டு சந்தித் தோம்; நித்திய காலமாய் நமது நேசரை முன்னாடி அறிந்தோம்; பூலோகத்தினின்று அவர்களைத் தெரிந்து கொண்டோம், அவர்க ளல்ல முன்னதாய் நம்மைத் தெரிந்து கொண்டவர்கள். தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு அவர்களை அழைத்தோம், இரக்கம் கொண்டு அவர்களை இழுத்தோம், பல சோதனைகள் வழியாய் அவர்களை நடத்தினோம், அவர்களுக்கு ஆச்சரியத்துக்குரிய ஆறுதல் களைப் பொழிந்தோம், அவர்களைப் பரிசுத்தத்தில் நிலைகொள்ளச் செய்தோம், அவர்களுடைய பொறுமைக்குச் சம்பாவனை கொடுத் தோம். 

4. அவர்களில் முதலானவரையும் கடைசியானவரையும் நாம் அறிந்திருக்கிறோம். சகலரையும் விலைமதிக்கப்படாத அன்பால் அரவணைக்கிறோம். நமது அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லாரிடத்திலும் தோத்தரிக்கப்பட வேண்டியவர் நாமே; சகலத்திற்கும் மேலாக ஒவ்வொருவரிடத்திலும் நாமே புகழப்படவும் மகிமைப்படுத்தப் படவும் வேண்டியவர், ஏனெனில் அவர்கள் இன்னும் யாதொரு பேறும் பெறாதவர்களாயிருந்தபோது நாம் அவர்களைத் தெரிந்து கொண்டு, இப்பரிசுத்தமான அந்தஸ்திற்கு உயர்த்தினோம். ஆனதால் நமது நேசரில் சிறியவராகிய ஒருவரை நிந்திக்கிறவன் பெரிய வரையும் மதிப்பதில்லை; ஏனெனில் “சிறியவரையும் பெரியவ ரையும் நாமே படைத்தோம்.” அர்ச்சியசிஷ்டவர்களில் யாருக்காவது அவமரியாதை செய்கிறவன் நமக்கே அவமரியாதை செய்கிறான், மோட்ச இராச்சியத்திலுள்ள மற்ற சகலருக்குமே அவமரியாதை செய்கிறான். சிநேக பந்தனத்தால் எல்லாரும் ஒன்றாகச் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள், எல்லாருக்கும் ஒரே மனதும் உண்டு. எல்லாரும் ஏகமானவரிடத்தில் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்கள்.

5. இதிலும் மேலான காரியமேதெனில், அவர்கள் தங்களையும் தங்கள் பேறுபலன்களையும் நேசிப்பதைவிட நம்மை அதிகமாய் நேசிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு மேலாகப் பரவச மாய்ப் போய், தங்களை நேசித்தலினின்று பறிக்கப்பட்டவர்களாய் நமது மட்டில் கொண்ட நேசத்தில் மூழ்கி இளைப்பாறி முழுமையும் திருப்தியடைகிறார்கள். அவர்களை அதை விட்டுவிடவும் அதனில் குறைந்த உக்கிரம் கொள்ளவும் செய்வது எதாலும் முடியாத காரியம்; ஏனெனில் அவர்கள் நித்திய சத்தியத்தால் நிரப்பப் பட்டவர்களானதால், ஒருக்காலும் அணைக்கப்படாத தேவ சிநேகத்தின் அக்கினி அவர்களிடத்தில் எரிகின்றது.

ஆனதால் தங்கள் சொந்த திருப்தியைத் தேடி ஞான மற்றவர் களும் சரீர சுகப் பிரியர்களுமான மனிதர்கள் அர்ச்சியசிஷ்டவர் களுடைய மகிமையைக் குறித்துத் தர்க்கிப்பதை விட்டு விடட்டும்; அவர்கள் சத்திய சுரூபியாகிய சர்வேசுரன் சித்தத்தின்படியல்ல, ஆனால் தங்கள் ஆசையின்படியே அதைக் குறைக்கிறார்கள் அல்லது அதிகரிக்கிறார்கள்.

6. அநேகர் அறியாமையினால் அவ்விதம் பேசுவதும் உண்டு. விசேஷமாய் யாரென்றால், சொற்பமான ஞானத் தெளிவடைந்து, முழு பரிசுத்த ஞான நேசத்தோடு யாரையாவது நேசிக்க அநேகமாய் அறியாதவர்கள். அவர்கள் சுபாவத் தன்மையால், மானிட நேசத்தால் இழுக்கப்பட்டு இன்னின்ன அர்ச்சியசிஷ்டவர் பேரில் பற்று வைக் கிறார்கள்; பூலோக விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போலவே பரலோகக் காரியங்களைப் பற்றியும் எண்ணம் கொள்கிறார்கள்.

ஆனால் புண்ணியத்தில் குறைந்தவர்களுடைய எண்ணங் களுக்கும் சர்வேசுரனின் ஞானத் திருவுளத்தால் தெளிந்த ஞானிகளின் எண்ணங்களுக்கும் வெகுதூர வித்தியாசமுண்டு.

7. ஆனதால் மகனே! உன் புத்திக்கு எட்டாத அக்காரியங் களைப்பற்றி விநோதப் பிரியமாய்ப் பேச வேண்டாம். அதை விட்டு மோட்சராச்சியத்தில் கடைசி ஸ்தலத்தையாவது சம்பாதிக்க ஆசையும் பிரயாசையும் படு. பரலோகத்தில் ஒருவர் மற்றொருவரை விட அதிக அர்ச்சியசிஷ்டவராக அல்லது அதிகப் பெரியவராக இருக்கிறார் என்று யாராவது ஒருவன் அறிந்திருந்தால், அதனால் அவன் நமது சமூகத்தில் தன்னைத் தாழ்த்தி நமது நாமத்தை அதிக பக்திச் சுறுசுறுப்புடன் தோத்தரித்தாலன்றி மற்றப்படி அவனுக்கு உண்டாகும் பிரயோசனமென்ன? அர்ச்சியசிஷ்டவர்களுக்குள்ளே பெரியவர் யார் என்றும் சிறியவர் யார் என்றும் தர்க்கிக்கிறவனைவிட, தன் பாவங்களின் கனாகனத்தையும் தன் புண்ணியங்களின் சொற்பத் தனத்தையும் உணர்ந்து அர்ச்சியசிஷ்டவர்களின் சாங்கோபாங்கத் திற்குத் தான் எவ்வளவு தொலைவில் இருக்கிறானென்று நினைக்கிறவன் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியமுள்ளவனாகிறான். அர்ச்சியசிஷ்டவர் களுடைய ஆச்சரியத்துக்குரிய மாட்சிமையை வீணாண ஆராய்ச்சி யினால் பரிசோதிப்பதைவிட பக்தியுள்ள செபங்களாலும் கண்ணீ ராலும் அவர்களை நோக்கி மன்றாடுவதும், தாழ்ந்த மனதோடு அவர்களுடைய மேலான ஒத்தாசைகளைக் கெஞ்சிக் கேட்பதும் அதிக உத்தமம்.

8. அவர்கள் திருப்தியாயிருக்கிறார்கள், பூரண திருப்தியாயிருக் கிறார்கள். அதையறிவதே போதுமென்று நாமும் திருப்தியடைந்து வீண் தர்க்கங்களை எல்லாம் நிறுத்தக் கடவோம். தங்களுடைய பேறுபலன்களைப்பற்றி அவர்கள் மகிமை கொள்வதில்லை, ஏனெனில் நமது அளவிறந்த நேசத்தால் எல்லாம் நாமேதங்களுக்குக் கொடுத் தோம் என்றறிந்தவர்களாய், அவர்கள் நன்மை யாதொன்றும் தங்களுக்குச் சொந்தம் என்று கருதாமல், எல்லாம் நமக்கே ஒப்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் எவ்வளவிற்கு தேவ சிநேகத்தாலும் அணை கடந்த சந்தோஷத்தாலும் பூரித்துப் போயிருக்கிறார்களென்றால், அவர்களது மகிமைக்கு அற்பக் குறையுமிருப்பதில்லை, அவர்களுடைய பாக்கியத்திற்கும் யாதோர் குறைவும் இருக்க முடியாது.

அர்ச்சியசிஷ்டவர்கள் மகிமையில் எவ்வளவுக்கு உயர்ந்திருக் கிறார்களோ, அவ்வளவுக்குத் தங்களுக்குள்ளே தாழ்ச்சியுள்ளவர் களாயும், நம்மை நெருங்கினவர்களாயும், நமக்குப் பிரியமானவர் களாயும் இருக்கிறார்கள். இதைப் பற்றித்தான், “அவர்கள் சர்வேசுர னுக்கு முன்பாகத் தங்களுடைய முடிகளைக் கழற்றி வைத்தார்கள், செம்மறிப் புருவைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள், சதாகாலமும் சீவியராகிய கடவுளை ஆராதித்தார்கள்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.

9. தேவனுடைய இராச்சியத்தில் அதிக பெரியவர் யார் என்று அநேகர் விசாரிக்கிறார்கள், ஆனால் கடைசி ஸ்தலங்களிலாவது ஓர் ஸ்தலத்தையடைய தாங்களே பாத்திரவான்களாயிருக்கிறார்களா இல்லையாவென்று அறியார்கள்.

பரலோகத்தில் மிகவும் சிறியவன் பெரியவனாகவே இருக்கிறான். அவ்விடத்தில் எல்லோரும் பெரியவர்கள், ஏனென்றால் “எல்லோரும் தேவ மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், தேவ மக்களாகவே இருக்கிறார்கள்.” 

மோட்சத்தில் “மிகவும் சிறியவர் ஆயிரம் பேருக்கு அதிகாரி யைப் போலிருப்பார்,” இவ்வுலகத்தில் “நூறு வயதுள்ள பாவியோ சாவான்.” ஏனெனில் மோட்ச இராச்சியத்தில் அதிகப் பெரியவர் யாரென்று அவரின் சீஷர்கள் கேட்ட போது, மறுமொழியாக: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், மோட்ச இராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்; ஆனதால் இச்சிறுவனைப் போலத் தன்னைத் தாழ்த்துகிற எவனும் மோட்ச இராச் சியத்தில் அதிக பெரியவனாயிருக்கிறான்” என்று சொல்லப்பட்டது.

சிறு பிள்ளைகளோடு தங்களை மனது பொருந்தித் தாழ்த்திக் கொள்ள அசட்டை செய்கிறவர்களுக்கு ஐயோ கேடு, ஏனெனில் மோட்சத்தின் தாழ்ந்த வாசல் அவர்களை அதில் பிரவேசிக்கவிடாது.

இங்கே ஆறுதலடைந்த செல்வந்தர்களுக்கும் கேடு! ஏழைகள் தேவனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கும்போது அவர்கள் வெளியில் புலம்பிக்கொண்டு நிற்பார்கள்.

தாழ்ச்சியுள்ளவர்களே! சந்தோஷப்படுங்கள்; “ஏழைகளே! அகமகிழுங்கள்; ஏனெனில் தேவனுடைய இராச்சியம் உங்க ளுடையது,” ஆயினும் சத்தியவழியில் நடந்தால்தான். 

யோசனை

அதிக முக்கியமான வேத சத்தியங்களைப்பற்றி அநேகமாய் விசாரியாமல் வீணான அநேக விஷயங்களைப்பற்றி மிகவும் கவலை யெடுத்துக் கொள்கிறார்கள், மிகவும் அவசியமான காரியத்தைத் தவிர மற்றதெல்லாவற்றையும் அறிய ஆசைப்படுகிறார்கள். ஏறக் குறைய எப்போதும் ஆபத்திற்குரிய காரியங்களை அல்லது இரட்சணியத்திற்கு முற்றுமே பிரயோசனமற்ற காரியங்களை விசாரிப்பதில் அவர்களுடைய ஆங்காரம் பிரியம் கொள்கிறது. கண்டுபிடிக்கக் கூடாத இரகசியங்களை முற்றும் கண்டறியத் தங்களாலான முயற்சி செய்து சர்வேசுரனுடைய இரகசியங்களைக் கடைசியாய்க் கண்டு பிடித்ததாக அவர்கள் நினைக்கிறபோதே தங்களுடைய எண்ணங் களில் மோசம் போகிறார்கள், தப்பறையில் விழுந்து விடுகிறார்கள். இதுதான் அவர்கள் பிரயாசையினால் சம்பாதிக்கிற இலாபம். “உன் புத்திக்கு எட்டாததை நீ ஆராயாதே, உன்னை விட அதிக பலமாயிருப் பதை நீ பரிசோதியாதே; ஆனால் கடவுள் உனக்குக் கட்டளையிடுவதை அடிக்கடி நினை, அவருடைய செய்கைகளைக் கண்டுபிடிப்பதற்கு வீணாசை கொள்ளாதே; ஏனெனில் மறைந்திருப்பவைகளை நீ உன் கண்களால் காண வேண்டிய அவசியமில்லை” என்று எவ்வளவு நியாயத் தோடு ஞானியானவர் சொல்லியிருக்கிறார். அவ்விதம் நடந்து கொள்வது நமக்கு எவ்வளவோ நன்மையாய் இருக்கும். நம்மைப் பற்றியும், நமது கடமைகளைப் பற்றியும், நமது செயல்களுக் காகவும் வார்த்தைகளுக்காகவும் நாம் கொடுக்க வேண்டிய கடின மான கணக்கைப் பற்றியும் நாம் யோசிப்போம். அந்த வேலையே நமக்குப் போதுமானது. நமது சீவிய காலத்தை அதில் செலவழிப்போம். அதற்காகவே நமக்கு ஜீவிய காலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.