இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

57. யாதொரு தப்பிதத்தில் விழுந்திருக்கையில் மிதமிஞ்சின கஸ்திப்படலாகாது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! சந்தோஷக் காலத்தில் ஒருவனுக்குண்டாகும் ஆறுதல்களையும் பக்தி சுறுசுறுப்பையும்விட, துன்பத்தில் அவன் காட்டும் பொறுமையும் தாழ்ச்சியும் நமக்கு அதிக பிரியம். உனக்குச் செய்யப்பட்ட ஓர் அற்பக் கண்டனத்தைக் குறித்து நீ கலங்குவது ஏன்? அது அதிக கனமுள்ளதாயிருந்தாலும் கலங்குவது உனக்கு நியாயமில்லை. அதெல்லாம் கடக்கட்டும்; அந்தத் துன்பம் புதிதானதல்ல, நீ படுகிறது முதல் துன்பமல்ல; நெடுநாளாய் உயிருட னிருப்பாயானால் அது கடைசி துன்பமுமல்ல.

உனக்கு இடையூறு ஒன்றும் நேரிடாத வரையில், தைரியமாய்த் தான் இருக்கிறாய்; மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனையும் கொடுக்கிறாய், உன் வார்த்தைகளால் பிறரைத் திடப்படுத்தவும் அறிவாய். ஆனால் திடீரென்று துன்பம் உன் வாசலில் வந்தால் யோசனையிலும் தைரியத்திலும் குன்றிப் போகிறாய். அப்போது உன் பலவீனம் எவ்வளவு என்று பார்; அதிக சொற்ப இடைஞ்சல்களிலும் எத்தனையோ தடவை மன தைரியம் இழந்து போனாய். ஆயினும் அதெல்லாம் நேரிடும்போது உன் இரட்சணியத்திற்காகவே சம்பவிக்கின்றது.

2. உன்னால் ஆனமட்டும், நல்ல மனதோடு அவைகளைச் சகித்து வா. யாதொரு துன்பம் உன்னைப் பிடித்தால் அதனால் நீ அவதைரியப்படாமலும் வெகுநேரம் கலங்காமலும் இரு. அதை நீ சந்தோஷமாய்ச் சகிக்கக் கூடாமல் போனால், பொறுமையோடாவது சகித்துக் கொள்.

உன்பேரில் சொல்லப்படுவதைக் கேட்க உனக்குச் சங்கட மானால், கோபம் எழும்புமேயாகில், உன்னை அடக்கு, சிறியவர் களுக்குத் துர்மாதிரிகை கொடுக்கக் கூடிய தகாத வார்த்தை யாதொன்றும் உன் வாயினின்று புறப்பட விடாதே; அவ்விதம் நடந்தால் கிளம்பின கோபம் வெகு சீக்கிரம் அடங்கிவிடும், வரப்பிரசாதம் திரும்பி வரவே மன சஞ்சலம் தணிந்து போகும்.

நீ நமது மட்டில் நம்பிக்கை வைத்து நம்மைப் பக்தியுடன் மன்றாடினால், உனக்கு உதவி புரியவும் முன்பை விட அதிகமான ஆறுதலைக் கொடுக்கவும் மனதாயிருக்கிறோம் என்று சர்வேசுரன் சொல்கிறார்.

3. அதிக மன அமரிக்கையாயிரு, இன்னும் அதிக திடனாய் நிற்பதற்கு உன்னை ஆயத்தப்படுத்து. நீ அடிக்கடி துன்பத்தில் விழுந்தும், கனமாய்ச் சோதிக்கப்பட்டாலும், எல்லாம் கெட்டுப் போகவில்லை. நீ மனிதன், கடவுளல்ல; நீ மாமிசம், அரூபியல்ல. ஆதலால் மோட்சத்திலிருந்த சம்மனசுக்களும் சிங்காரத் தோப்பில் வாசம் செய்த ஆதி மனிதனும் ஒரே புண்ணிய நிலையில் நிற்க முடியாதவர்களாயிருக்கையில் நீ எப்பொழுதும் அதிலேயே நிற்க முடியாதிருப்பது ஆச்சரியத்துக்குரியதா? தைரியமிழந்து போனவர்களை எழுப்பி மீட்கிறவர் நாம்தாமே! தங்கள் பலவீனத்தை அறிந்தவர்களை நமது தெய்வத்துவம் வரையில் உயர்த்துகிறவர் நாம்தாமே! 

4. (சீஷன்) ஆண்டவரே! உமது வாக்கியம் வாழ்த்தப்படக் கடவது, அது தேனினும் தேனடையிலும் என் வாய்க்கு அதிக இன்பமாயிருக்கின்றது. நீர் உமது பரிசுத்த வாக்கியங்களால் என்னை உறுதிப்படுத்தாவிட்டால் இத்தனை துன்பங்களிலும் இடையூறு களிலும் நான் என்ன செய்வேன்? நான் இப்போது என்னதான், எவ்வளவுதான் பாடுபட்ட போதிலும் எனக்குக் கவலை இல்லை; நான் கடைசியில் இரட்சணியத்தின் துறைமுகம் சேர்ந்தால் போதுமானது. நன்முடிவை எனக்குத் தந்தருளும். இவ்வுலகத்தை விட்டு நான் பத்திரமாய்ப் பிரயாணம் போகத் தயைபுரியும். என் சர்வேசுரா! என்னை நினைத்தருளும்; உமது இராச்சியத்திற்குச் செவ்வையான வழியில் என்னை நடப்பித்தருளும். ல்ஆமென்.

யோசனை

பிறரோடு மாத்திரம் பொறுமையாயிருப்பது போதாது, தன்னோடு தானே பொறுமையாயிருக்க வேண்டியது. யாதாமொரு குற்றத்தை நாம் கட்டிக் கொண்ட பிறகு, ஒரு விதமான வருத்தம், கோபம் நமது பேரில் உண்டாவது ஆங்காரத்தினால் அன்றி மனஸ்தாபத்தினாலல்ல. தன் பலவீனத்தை அறிந்திருக்கிற தாழ்ச்சியுள்ள மனிதன் தான் குற்றஞ் செய்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதில்லை; தப்பிதத்தைப் பற்றிப் புலம்பியழுகிறான். பொறுத்தலை மன்றாடுகிறான், தைரியத்தோடு யுத்தம்செய்யத் திரும்பவும் எழுந்திருக்கிறான். பாவத்தில் விழுகிறது தின்மைதான், ஆனால் அதைப்பற்றிக் கலங்கினால் அத்தின்மையுடன் ஒரு புதுத் தின்மையாகின்றது. கலக்கம் எதினின்று உண்டாகிற தென்றால், தான் அவ்வளவு பலவீனனென்று காணும்போது ஆங்காரம் குன்றிப் போகின்றது, வருத்தமுண்டாகிறது. இதுவும் தவிர நமது பலவீனத்தைப் போக்குகிறவர் மீது நாம் நம்பிக்கை கொள்ளாததினாலும், கலக்கம் உண்டாகிறது. “நீங்கள் சோதனைக் குள்ளாகாதபடி விழித்திருந்து வேண்டிக் கொள்ளுங்கள்;” தந்திரம் வந்து நீ விழுந்து விட்டால், இன்னுமதிகமாக விழித்திருந்து வேண்டிக் கொள்; ஆனால் அமரிக்கையை விட்டு விடாதே, ஏனெனில் நமது ஆண்டவர் “சமாதானத்தின் தேவனாயிருக்கிறார்; சமாதானத்தில் தான் நம்மை அழைக்கிறார்;” நமது ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாத ருடையவும், பிதாவாகிய சர்வேசுரனுடையவும் வரப்பிரசாதமும் இரக்கமும் சமாதானமும் நம்முடன் எப்போதும் இருந்து, இவ்வுலகத்தைக் கடந்து நித்தியத்தின் சந்தோஷத்தில் நம்மைச் சேர்க்கக்கடவன.