இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

56. நாம் நம்மை வெறுத்து, சிலுவையைக் கொண்டு கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கவேண்டும்.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ உன்னை எவ்வளவு விட்டு விடுவாயோ, அவ்வளவாக நம்முடன் ஐக்கியமாவாய். புற நன்மைகளின்மேல் ஆசை வையாமலிருப்பது மனச் சமாதானத்திற்குக் காரணமாவது போல் மனப் பரித்தியாகமானது நம்முடன் ஒற்றுமை செய்ததற்குக் காரணமாகின்றது.

தடைசெய்யாமலும் முறையிடாமலும் நம் சித்தத்திற்கு இணங்கும்படி நீ உன்னை உத்தமமாய் வெறுக்கும் வகையைக் கற்றுக் கொள்ளக்கடவாய். “நம்மைப் பின்செல்; நாம் வழியும், உண்மையும், சீவியமுமாயிருக்கிறோம்.” வழியில்லாமல் சீவிக்க முடியாது; நீ கடக்க வேண்டிய வழியாயிருக்கிறோம், நீ விசுவசிக்க வேண்டிய சத்தியமாயிருக்கிறோம், நீ நாடித் தேட வேண்டிய சீவியமாயிருக் கிறோம். நாம் தவறச் செய்யாத வழி, ஏய்க்காத சத்தியம், முடிவில்லாத சீவியம். நாம் முற்றும் நேரான வழி, மேலான சத்தியம், மெய்யான சீவியம், பாக்கியமான சீவியம், சிருஷ்டிக்கப்படாத சீவியம், நமது வழியில் நீ நிலைத்தால், “சத்தியத்தை நீ அறிந்து கொள்வாய், சத்தியமும் உன்னை இரட்சிக்கும், நித்திய சீவியத்தையும் கைக்கொள்ளுவாய்.” 

2. “சீவியத்தில் பிரவேசிக்க உனக்கு மனதானால் கட்டளைகளை அநுசரி. சத்தியத்தை அறிய மனதானால், நம்மை விசுவசி. உத்தமனாக மனதானால், எல்லாவற்றையும் விற்றுப் போடு.” 

நம் சீஷனாயிருக்க உனக்கு மனதானால் உன்னைப் பரித்தியாகம் செய்.” 

நித்திய சீவியத்தை அடைய மனதானால், இவ்வுலக சீவியத்தை நிந்தித்து விடு.

நீ பரலோகத்தில் உயர்த்தப்பட வேண்டுமானால், பூலோகத்தில் உன்னைத் தாழ்த்து.

நீ நம்மோடு ஆட்சி செலுத்த வேண்டுமானால், நம்மோடு சிலுவையைச் சுமந்து வா; சிலுவையின் அடிமைகள் மட்டுமே நித்திய பாக்கியத் தினுடையவும் மெய்யான ஒளியினுடையவும் மார்க்கத்தைக் கண்டு பிடிப்பார்கள்.

3. (சீஷன்) ஆண்டவராகிய சேசுவே, உமது சீவியம் தரித்திர முள்ளதாயும், உலகத்தால் நிந்திக்கப்பட்டதாயும் இருந்தது, ஆனதால் நான் உலகத்தை நிந்தித்து உம்மைக் கண்டுபாவிக்கச் செய்தருளும். “ஏனெனில் ஊழியன் தன் எஜமானை விடப் பெரியவனல்ல, சீஷன் தன் குருவைவிட மேலானவனல்ல.” உமது ஊழியனாகிய அடியேன் உமது சீவியத்தைக் கண்டுபாவிக்கக்கடவேன், ஏனெனில் அதிலேதான் இரட்சணியமும் மெய்யான பரிசுத்ததனமும் இருக்கின்றன. அச்சீவியத்தைச் சேராத எதை வாசித்தாலும் எதைக் கேட்டாலும் அது எனக்கு ஆறுதல் தராது, பூரண சந்தோஷம் கொடாது.

4. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ இவையெல்லாவற்றையும் படித்துச் சரியாய் அறிந்து “இவைகளை அனுசரித்தால் நீ பாக்கிய வானாவாய்.” நமது கற்பனைகளை அறிந்துகொண்டு அவைகளை அநுசரிக்கிறவனே நம்மைச் சிநேகிக்கிறவன், நாமும் அவனைச் சிநேகிப்போம், நம்மை அவனுக்கு வெளிப்படுத்துவோம், நமது பிதாவின் இராச்சியத்தில் அவனை நம்மோடு வீற்றிருக்கச் செய்வோம்.

5. (சீஷன்) ஆண்டவராகிய சேசுவே! நீர் சொன்னபடியும் வாக்குத்தத்தம் செய்தபடியும் எனக்கு ஆகக் கடவது. அந்தப் பாக்கியத்திற்கு நான் பாத்திரவானாகக் கடவேன். ஆம், உமது கரத் தால் எனக்குச் சிலுவையை அளித்தீர்; நான் அதை ஏற்றுக் கொண் டேன்; இனிமேலும் நீர் அதை என்மேல் சுமத்தினபடி அதை மரணம் வரை சுமந்து கொள்வேன். உள்ளபடியே உத்தம துறவியின் சீவியம் சிலுவையாம், ஆனால் அது மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டுபோகும். துவக்கியாயிற்று. பின்னிட்டுப் போகலாகாது, யுத்தம் விட்டுவிடவும் தகாது.

6. வாருங்கள்! சகோதரரே! ஒன்றுசேர்ந்து போவோம், சேசுநாதர் நம்முடனிருப்பார். சேசுநாதரைப் பற்றி சிலுவையைச் சுமந்துகொண்டோம்; சேசுநாதரைப் பற்றி அச்சிலுவைப் பாதையில் நிலைத்திருப்போமாக. அவர் நமக்குத் தலைவரும் வழிகாட்டியுமா யிருப்பது போல் நமது துணைவருமாயிருப்பார். அவரே நம் அரசர்; நமக்கு முன்னே நடக்கிறார், அவர் நமக்காக யுத்தம் செய்வார். தைரியமாய் அவரைப் பின்செல்லக்கடவோம்; ஒருவரும் அஞ்ச வேண்டியதில்லை; யுத்தத்தில் தைரியமாய்ச் சாக ஆயத்தமாயிருப்போமாக; சிலுவைக்குப் பயந்து ஓடிப் போய் நமது மகிமையைப் பங்கப்படுத்தாதிருப்போமாக.

யோசனை

“உன் ஆத்துமத்தை நினை, ஏனெனில் காலம் கடந்து போகின்றது, நித்தியம் நெருங்கி வருகின்றது; நாளைக்கு, சில வேளை இன்றைக்கே, அது உனக்குத் துவக்கி விட்டது” என்று நாம் அடிக்கடி மனிதனுக்கு நினைப்பூட்ட வேண்டுமென்பது ஆச்சரியமாயிருக்கிறது. ஆயினும் மணிக்கு மணி நாம் அவனுக்கு இந்தப் பயங்கரமான சத்தியத்தை நினைப்பூட்டாவிட்டால் மணிக்கு மணி அதை மறந்து போகிறான்; ஏனெனில் உலக மாய்கை கெட்டுப்போன சிருஷ்டியின் மேல் அவ்வளவு பலமாயிருக்கின்றது. தூக்க மயக்கத்தினின்று எழுந்திரு. உனக்கு அவசரமாயிருக்கிற காரியத்தைக் கவனிக்கத் தாமதியாதே; நாளிருக்கும்போதே, காலமிருக்கும் போதே வேலை செய்; இராக் காலம் வருகின்றது. அப்போது எவனும் வேலை செய்ய முடியாது; அது பயங்கரமான இரவு, பிரலாபத்திற்குரிய இரவு, விடியாத இரவு, அழிவின் விசாலமான பாதையை உடனே விட்டுவிடு, தாமதமின்றி நித்திய சீவியத்தின் வழியில் வந்து சேர். கெடுதியையே எப்போதும் நாடியிருக்கும் சுபாவத்தின் தீய ஆசைகளை எதிர்த்துத் தைரியமாய்ப் போராடு; உன்னைத் தானே வெறுத்து உன்னுடைய சிலுவையைச் சுமந்து போ. சிலுவையிலே பலம், சிலுவையிலே நம்பிக்கை, சிலுவையிலே இரட்சணியம். அர்ச். சின்னப்பரைப் போல, சேசு நாதரை, சிலுவையிலறையுண்ட சேசுநாதரை மாத்திரம் அறிந்திருக்கிறவன் பாக்கியவான்; அவன் கடைசி நாளில் “என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே! உலகாதி முதல் உனக்காக ஆயத்தப் படுத்தப்பட்ட இராச்சியத்தைக் கைக்கொள்ள வா” என்ற நித்திய சந்தோஷமான வாக்கியங்களைக் கேட்பான். ஆனால் சிலுவையை நிந்தித்துத் தங்கள் சுகத்தை மாத்திரம் தேடிக் கொள்கிறவர்கள் வேறு கதியடைவார்கள்: “சபிக்கப்பட்ட பாவிகளே! நித்திய அக்கினிக்குப் போங்கள்” என்ற பயங்கரமான வாக்கியங்களைக் கேட்பார்கள்; நித்தியத்திற்கும் நரகத்தில் புதைக்கப்படுவார்கள்.