இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

55. சுபாவக் கெடுதல்களின்பேரிலும் தேவ வரப்பிரசாதச் சக்தியின்பேரிலும்.

1.  (சீஷன்) ஆண்டவரே! என்னை உமது ரூபமாகவும் சாயலாகவும் உண்டாக்கின என் சர்வேசுரா! பாவத்திற்கும் நித்திய கேட்டிற்கும் என்னை இழுக்கிற எனது தீய சுபாவத்தை நான் மேற்கொள்ளும்படி நீர் எனக்குக் காட்டினதுபோல மேன்மையும் இரட்சணியத்திற்கு மிகவும் அவசரமுமான வரப்பிரசாதங்களை எனக்குத் தந்தருளும். ஏனெனில் “என் புத்தியின் சட்டத்துக்கு விரோதமான பாவத்தின் சட்டத்தை என் அங்கங்களில் வீற்றிருக்கக் காண்கிறேன்.” அது நான் தீய ஆசாபாசங்களுக்கு அடிமைபோலக் கீழ்ப்படியும்படி என்னை அடிக்கடி தூண்டுகிறது. அப்போது உமது பரிசுத்த வரப்பிரசாதம் என் இருதயத்தில் ஏராளமாய்ப் பாய்ந்து ஒத்தாசை செய்யாவிட்டால் அந்த ஆசாபாசங்களை அடக்கக் கூடாதவனாவேன்.

2. “இளமையிலிருந்து எப்போதும் தின்மையை நாடுகிற சுபாவத்தை” ஜெயிக்க உம்முடைய வரப்பிரசாதம் ஏராளமாய் வேண்டியது மிக்க அவசரம். ஏனெனில் சுபாவம் ஆதிமனிதனான ஆதாமில் இழிந்து பாவத்தால் பழுதுபட்டு, சகல மனிதர்களிடமும் அப்பாவக்கறை படர்ந்திருக்கிறது. ஆகையினால் நீர் நன்மையிலும் ஒழுங்கிலும் உண்டாக்கியிருந்த அந்தச் சுபாவத்திலே இப்போது பலவீனமும் துர்க்குணமும்தான் காணப்படுகின்றது. எப்படியெனில் அது தன் சுய சக்தியோடு விடப்பட்டால் தின்மைக்கும் உலகப் பற்றுதலுக்குமே நம்மை இழுக்கிறது. அதில் தங்கியிருக்கும் சொற்ப சக்தி சாம்பலில் மறைந்திருக்கும் நெருப்புப்பொறி போலிருக்கிறது. அந்தச் சொற்ப சக்தி அடர்ந்த இருளால் சூழப்பட்டிருக்கிற நமது சுபாவப் புத்தியாம்; அது இன்னும் நன்மை தின்மை, பொய் மெய் பகுத்தறியும், ஆனால் தான் அங்கீகரிக்கும் அநேக காரியங்களை நிறைவேற்ற சக்தியுடையதாயில்லை, சத்தியத்தின் பூரணவொளி அதற்கு இனியில்லை, அதன் பற்றுகள் இனி பரிசுத்தமானவையல்ல.

3. ஆனதினாலே, ஓ! என் ஆண்டவரே, எவ்வித பாவத்தையும் தின்மையையும் விட்டு விலக வேண்டும் என்னும் “உமது கற்பனை உத்தமமும் நீதியும் பரிசுத்தமும் உள்ள”தென்று ஒத்துக்கொண்டு “உள்ளந்தர மனிதனாகிய மட்டும் நான் உமது கட்டளையில் பிரியங் கொள்கிறேன். ஆனால் நான் நியாயத்திற்குக் கீழ்ப்படியாமல் புலன்களின் போக்கிற்குப் பணிந்து வருகிறபொழுது “பாவத்தின் சட்டத்திற்கு அடிமைப்பட்டவனாயிருக்கிறேன்.” 

ஆனதினால் “நன்மைசெய்ய எனக்கு மனது உண்டாயினும் அதனை முடிக்க வகை காணாமல் இருக்கிறேன்;” அடிக்கடி நல்ல தீர்மானங்களைச் செய்கிறேன், ஆனால் வரப்பிரசாதம் என் பலவீனத் துக்கு உதவி செய்யாதிருப்பதால், சொற்ப எதிர்ப்பினால் சோர் வடைந்து என் முயற்சியைக் கைவிடுகிறேன்; சாங்கோபாங்க மார்க் கத்தை நான் கண்டறிந்து, செய்ய வேண்டியது என்னவென்று தெளி வாய்க் காண்கிறேன். ஆனால் எனது பழுதுள்ள சுபாவத்தின் பளுவினால் அமிழ்த்தப்பட்டு உத்தமக் காரியங்களைச் செய்யக் கூடாமல் போகிறேன்.

4. ஓ! ஆண்டவரே! நன்மையைத் தொடங்கவும் அதனில் வளரவும், சாங்கோபாங்கமடையவும் உம்முடைய வரப்பிரசாதம் எவ்வளவு அவசரமாய் வேண்டியிருக்கிறது! ஏனெனில் அது இல்லா விடில் நான் ஒன்றும் செய்ய முடியாது; “ஆனால் உமது வரப்பிரசாதத்தினால் பலப்படுத்தப்பட்டால் எல்லா நன்மையும் செய்ய வல்லவனாயிருக்கிறேன்!” 

ஓ! மெய்யான மோட்ச வரப்பிரசாதமே! உன்னையல்லாமல் பேறுபலன்களும் கிடையாது, சுபாவ வரங்களும் மதிப்பற்றவை களாயிருக்கின்றன. ஓ! ஆண்டவரே! உமது வரப்பிரசாதமின்றி, திறமை, செல்வம், அழகு, பலம், விவேகம், வாய்ச்சாலகம் முதலிய வைகள் உம்மிடம் பேறு பெறாது. ஏனென்றால் சுபாவ நற்குணங்கள் நல்லவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் பொதுவானவை. ஆனால் தெரிந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு விசேஷித்த வரமாயிருப்பது உமது இஷ்டப்பிரசாதமே அல்லது தெய்வீக சிநேகமே; இதுவே அவர்களுக்குக் குறிப்படையாளம்; இதுவே அவர்களை நித்திய ஜீவியத்திற்குப் பாத்திரவான்கள் ஆக்குகின்றது.

இந்த வரப்பிரசாதம் எவ்வளவு மேன்மையானதென்றால் தீர்க்கதரிசன வரமும் புதுமைசெய்கிற வரமும் உன்னத தியான வரமும் இருக்குமிடத்தில் வரப்பிரசாதம் சேர்ந்தாலன்றி அவைகள் மதிக்கத்தக்கவைகளல்ல. விசுவாசமும் நம்பிக்கையும் இன்னும் மற்ற புண்ணியங்களும் தெய்வ சிநேகமில்லாமலும் தேவ இஷ்டப்பிரசாத மில்லாமலும் இருக்கும் பட்சத்தில், அவைகளும் உம்மால் அங்கீகரிக்கப்பட்டவைகளல்ல.

5. ஓ! மனத்தரித்திரனைப் புண்ணியங்களில் செல்வந்தனாக்கி மனத்தாழ்ச்சியுள்ளவனைத் திரவியவானாக்குகிற பேருபகாரியான தேவப்பிரசாதமே! வா, என் மீது இறங்கி வா, என் மனது ஆயாசத் தினாலும் வறட்சியினாலும் களைத்துப் போகாதபடிக்குத் தாமதமின்றி உன் ஆறுதலை என் ஆத்துமத்தில் நிரப்பக் கடவாய்.

என் ஆண்டவரே! உமது கிருபையை அடைய உம்மை மிகவும் கெஞ்சி மன்றாடுகிறேன். ஏனென்றால் சுபாவத்துக்குப் பிரியமான பொருட்களை நான் அடையாவிட்டாலும், உமது வரப்பிரசாதங்களை அடைகிறேனேயாகில் எனக்குப் போதுமானது. எனக்கு அநேக உபத்திரவங்கள் துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் உம்முடைய வரப்பிரசாதம் என்னிடமிருக்கும் மட்டும் நான் அவைகளுக்குப் பயப்பட மாட்டேன்.

அதுவே எனக்குப் பலம், அது எனக்கு உதவியையும் நல்லுணர்ச்சியையும் கொடுக்கும். அது எல்லா சத்துருக் களையும் விட அதிக வல்லமையுடையதும் சகல ஞானிகளிலும் அதிக விவேக முள்ளதுமாயிருக்கின்றது. 

6. அது சத்திய போதகரும், ஒழுங்கைக் கற்பிக்கும் ஆசிரியரும், இருதயத்திற்குப் பிரகாசமும் துன்பத்தில் ஆறுதலுமாயிருக்கின்றது; அது துயரத்தை ஓட்டி, அச்சத்தை அகற்றி, பக்தியை வளரச் செய்து பச்சாத்தாபக் கண்ணீரை உண்டாக்கும். அது இல்லா விட்டால், நான் உலர்ந்து போன மரக்கிளையும், ஒன்றுக்கும் உதவாது பிடுங்க வேண்டிய மரவேருமல்லாமல் வேறென்ன? ஆண்டவரே! உமது வரப்பிரசாதம் எப்போதும் என்னைத் தூண்டி என்னோடிருந்து என்னை எப்போதும் நற்கிரியைகளைச் செய்ய வைக்கும்படி உமது திவ்விய குமாரனாகிய சேசுகிறீஸ்துநாதரின் நாமத்தால் உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.

யோசனை

சந்நியாசம் இரண்டு காரியங்களைச் செய்கின்றது: நமது நிர்ப்பாக்கியத்தைக் காண்பிக்கிறது, அதற்கு மருந்து தருகின்றது, ஈடேற்றத்திற்காக நம்முடைய சொந்த பலனால் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்றும் ஆனால் நம்மைத் திடப்படுத்துகிறவர் உதவியைக் கொண்டு சகலமும் செய்யக் கூடுமென்றும் அது போதிக்கின்றது. ஆனதுபற்றித் தான் அர்ச். சின்னப்பர்: “சேசுகிறீஸ்துநாதருடைய வல்லமைஎன்னிடத்தில் வாசம் செய்யும்படி என் பலவீனங்களைப் பற்றி நான் மகிமை பாராட்டுவேன் என்றும், ஆம், என் பலவீனங் களைப் பற்றியே நான் சந்தோஷப்படுகிறேன்; ஏனென்றால், நான் பலவீனனாகக் காணப்படுகையில்தான் பலமுள்ளவனாயிருக் கிறேன்,” என்றும் கூறியிருக்கிறார். அப்போஸ்தலருடைய கருத்தை நாமும் பின்சென்று நம்மைத் தாழ்த்தவும், நமது பலவீனத்தையறிந்து கொள்ளவும் நமது ஒன்றுமில்லாமையைப்பற்றிச் சந்தோஷப்படவும் கற்றுக் கொள்ளக் கடவோம். நம்மைப்பற்றின வீண் எண்ணங்கள் எல்லாம் நாம் ஒழித்துவிட்டுத் தாழ்ச்சியில் நாம் அமிழ்ந்துபோன பிறகு, தேவ வரப்பிரசாதம் ஏராளமாய் நமக்குக் கொடுக்கப்படும், பூமியில் சமாதானம் நமக்குத் தந்தருளப்படும். ஏனெனில் தன்னைத்தானே மறந்து தன்னையே நிந்தித்துச் சர்வேசுரன் மட்டில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருக்கிறவனுடைய சமாதானத்தைக் கெடுக்கக் கூடுமானது யார்? நல்ல மனதுள்ள மனிதருக்கும், இருதயத் தாழ்ச்சியுள்ளவர்களுக்கும் சமாதானமாகும்; இவ்வுலகத்தில் சமாதானமும், மறுவுலகத்தில் மகிமையின் சம்பூரணமும் ஆகும்.