இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

54. சுபாவத்தினாலும் வரப்பிரசாதத்தினாலும் உண்டாகிற வெவ்வேறு உணர்ச்சிகள்.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! சுபாவத்தின் செயல்களையும் வரப் பிரசாதத்தின் செயல்களையும் நிதானமாய்க் கவனித்துப் பார். அவைகளுக்கு இவைகள் மிகவும் எதிரிடையானவைகள். ஞான காரியங்களில் தேர்ந்து, முற்றும் ஞானத் தெளிவடைந்தவன் மாத்திரம் அவைகளுக்கு இடையேயுள்ள வேற்றுமையை உணரக் கூடும்; ஏனெனில் காண்பதற்கு அவ்வளவு அரிதானவையா யிருக்கின்றன.

சகலரும் நன்மையைத் தேடுகிறார்கள். தங்களுடைய வார்த்தை களிலாவது கிரியைகளிலாவது அவர்கள் கருதுவது யாதோர் நன்மை யையே; ஆதலால் நன்மையின் சாயலால் அநேகர் மோசம் போகிறார்கள்.

2. சுபாவம் கபடுள்ளது; அநேகரை இழுத்துக் கொண்டு போய், தன் கண்ணியில் சிக்கிக்கொள்ளச் செய்து, மயக்கி வசப்படுத்திக் கொள்ளும்; எப்போதும் தன்னையே கதியாகக் கொள்கிறது. ல் வரப்பிரசாதமோ கபடற்றதனமுள்ளது; தின்மையின் நிழலைக் கூட விலக்குகின்றது; மாறுபாடு செய்யாது; சகலத்தையும் கடவுளைப் பற்றிச் சுத்தக் கருத்தோடு செய்கின்றது, ஏனெனில் அவரைத் தன் கதியாகக் கொண்டு அவரிடத்தில் இளைப்பாறுகின்றது.

3. சுபாவம் மனதார மரணமடையச் சகியாது; கட்டாயப் படவும் தோற்கடிக்கப்படவும் தாழ்த்தப்படவும் வலிய கீழ்ப்படி யவும் சம்மதியாது. வரப்பிரசாதமோ சுய ஒறுத்தலில் பழகும், சுகபோகப் பற்றை அடக்கும், கீழ்ப்படிய வேண்டிய நிலையைத் தேடும், ஜெயிக்கப்பட ஆசிக்கும்; தன் சுயாதீனத்தைப் பயன் படுத்திக்கொள்ள விரும்பாது; ஒழுங்கு திட்டத்திற்கு உட்படப் பிரியப்படும், பிறர் மேல் அதிகாரம் செலுத்த ஆசை கொள்ளாது; சர்வேசுரனுடைய கரத்தின் கீழே நடக்கவும், நிற்கவும், நிலை கொள்ளவும் எப்போதும் ஆயத்தமாயிருக்கும். சர்வேசுரனைப்பற்றி எந்த மனித சிருஷ்டிக்கும் தாழ்ச்சியாய்ப் பணிந்திருக்கவும் ஆயத்தமாயிருக்கும்.

4. சுபாவம் தன் சுய நலத்தைத் தேடுகிறது; பிறரால் தனக்குண்டாகக்கூடிய இலாபம் என்னவென்று கவனிக்கிறது. ல் வரப்பிரசாதமோ, தனக்குப் பிரயோசனமும் சுகமுமானதையல்ல, பிறருக்கு உதவியானதைத்தான் கவனிக்கின்றது.

சுபாவம் பெருமையையும் பிறர் மதிப்பையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறது; வரப்பிரசாதமோ, சகல பெருமையையும் மகிமையையும் சர்வேசுரனுக்குத் தப்பாமல் ஒப்புக்கொடுக்கின்றது.

சுபாவம் அவமானத்திற்கும் நிந்தைக்கும் அஞ்சுகிறது. வரப்பிரசாதமோ, “சேசுவின் நாமத்திற்காக நிந்தை அனுபவிப்பதில்” பிரியம் கொள்கின்றது.

சுபாவம் சோம்பலையும் சரீர இளைப்பாற்றியையும் விரும்பும். வரப்பிரசாதமோ, சும்மாயிருக்கச் சகியாது, ஆனால் மனச் சந்தோஷமாய் வேலை செய்யும்.

5. சுபாவம் வினோதத்தையும் அழகையும் தேடி இழிவானவை களையும் பெருமைக்குரியவைகளையும் அருவருக்கும். வரப்பிர சாதமோ, சாதாரண காரியங்களிலும் தாழ்ந்த காரியங்களிலும் பிரியம் கொள்ளும்; கஷ்டமான வேலை செய்யவும் பழங்கந்தைகளை அணிந்து கொள்ளவும் பின்வாங்குவதில்லை.

சுபாவம் இவ்வுலகப் பொருட்களை நாடி அவற்றைச் சேர்த்து செல்வந்தனாவதில் சந்தோஷம் கொள்கிறது; அவை நஷ்டப் பட்டால் கஸ்தியடைகிறது; நிந்தையான ஒரு சொற்ப வார்த்தையை முன்னிட்டுக் கோபம் கொள்கிறது. வரப்பிரசாதமோ நித்திய காரியங்களை மட்டும் கவனித்து இலெளகீக வஸ்துகளின்மேல் பற்றுதல் வைப்பதில்லை, பொருள் நஷ்டத்தால் கலக்கம் கொள் வதில்லை, அதிகக் கொடுமையான சொற்களாலும் சினந்து கொள்வதில்லை, ஏனெனில் ஒன்றும் அழியாதிருக்கிற பரலோகத்தில் தன் பொக்கிஷத்தையும் சந்தோஷத்தையும் ஸ்தாபித்திருக்கின்றது.

6. சுபாவம் பேராசையுள்ளது, கொடுப்பதைவிடப் பெற்றுக் கொள்ள அதிகப் பிரியப்படுகின்றது; தன் சுய சொந்தப் பொருட் களை நேசிக்கின்றது. வரப்பிரசாதமோ, உதாரமுள்ளது, எல்லா ருக்கும் பகிர்ந்து கொடுக்கின்றது; அதிசயமானதை விலக்கும்; சொற்பத்தில் திருப்தியடையும்; பெற்றுக்கொள்வதை விட கொடுப்பது அதிக பெரிய பாக்கியமென்று எண்ணுகின்றது.

சுபாவம் சிருஷ்டிகளையும், தன் சுய சரீரத்தையும், வீண் காரியங்களையும் உபாய தந்திரங்களையும் நாடுகின்றது. வரப் பிரசாதமோ, தேவனையும் புண்ணியத்தையும் நோக்கி இழுக்கின்றது; உலகத்தைக் கண்டு ஓடிப்போகின்றது, சிருஷ்டிகளைத் துறந்து விடுகின்றது, மாமிச இச்சைகளை வெறுக்கின்றது, அங்குமிங்கும் திரிய விடுவதில்லை. வெளியிடங்களில் காணப்பட வெட்கப்படும்.

சுபாவம் புலன்களுக்குப் பிரியம் உண்டாக்க வேண்டி வெளி ஆறுதலை நாடித் தேடுகின்றது. வரப்பிரசாதமோ தேவனிடத்தில் மாத்திரம் ஆறுதலடையவும், காணப்பட்ட வஸ்துகள் யாவற்றிற்கும் மேலாக உத்தமநன்மையானவரிடத்தில் பிரியம் கொள்ளவும் ஆசிக்கின்றது.

7. சுபாவம் சகலத்திலும் தன்னுடைய இலாபத்தையும் சொந்தப் பிரயோசனத்தையும் தேடுகின்றது; இலவசமாய் ஒன்றும் செய்யாது, ஆனால் தான் செய்கிற உபகாரங்களுக்குப் பதிலாக, சரிசமமான அல்லது அதிக பெரிய சம்பாவனை, அல்லது தோத்திரம் அல்லது தயவு அடையக் காத்திருக்கின்றது; தன் செயல்களையும் கொடைகளையும் பிறர் கனமாய் மதிக்கும்படி ஆசிக்கின்றது. ல் வரப் பிரசாதமோ, உலக நன்மையொன்றும் தேடுவதில்லை; சர்வேசுர னைத் தவிர வேறு சம்பாவனை தன் சம்பளமாகக் கேட்பதில்லை. அவசியமான இலெளகீகப் பொருட்களில், நித்திய நன்மையை அடைவதற்குத் தனக்கு உதவியாயிருக்கக் கூடுமான அளவு மாத்திரம் ஆசிக்கின்றது.

8. சுபாவம் தனக்கு நண்பரும் உறவினரும் அநேகர் உண்டென்று சந்தோஷம் கொள்ளும், தனது மேலான அந்தஸ் தையும் உயர்ந்த குலத்தையும் பற்றி மகிமை பாராட்டும்; வலியவர் களுக்குச் சந்தோஷ முகம் காட்டும், செல்வந்தரோடு முகஸ்துதி யாகப் பேசும், தனக்குச் சரிசமானமானவர்களை மெச்சிக் கொள்ளும். வரப்பிரசாதமோ, பகையாளிகளையும் நேசிக்கும்; தனக்கு நண்பர் அநேகர் உண்டென்று பெருமை கொள்ளாது; மேலான அந்தஸ் துடனும் குலத்துடனும் அதிகப் புண்ணியமிருந்தாலன்றி மற்றபடி அவைகளைமதியாது; செல்வந்தனுக்கிருப்பதைவிட எளியவனுக்கு அதிக தயவாயிருக்கும். வல்லபனைவிட மாசற்றவனுக்கு அதிக இரக்கம் காண்பிக்கும்; பொய்யனுக்கு அகன்றுபோய் மெய்ய னுடைய நட்பைத் தேடும்; நல்லோர் இன்னும் அதிக பிரயோசனமுள்ள வரங்களை நாடவும் தங்கள் புண்ணியங் களால் தேவசுதனுக்கு ஒத்தவர்களாகவும் செய்ய எப்போதும் அவர்களைத் தூண்டும்.

9. சுபாவம் யாதோர் குறையின்பேரிலும் சங்கடத்தின் பேரி லும் உடனே முறையிடும். வரப்பிரசாதமோ வறுமையைத் திடமாய்ச் சகிக்கும்.

சுபாவம் எல்லாவற்றையும் தன்னை வேண்டியே செய்கின்றது, தனக்காகப் போராடி வாக்குவாதம் செய்கின்றது. வரப்பிரசாதமோ, சர்வத்திற்கும் ஆதி ஊறணியாகிற சர்வேசுரனிடத்தில் சகலத்தையும் சேர்க்கின்றது. யாதோர் நன்மைதன்னாலாயிற்றென்று சொல்வதில்லை, கர்வமாய் நடந்துகொள்வதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை, தன் அபிப்பிராயத்தை மற்றவர்களுடையதற்கு மேலாக எண்ணு கிறதில்லை, ஆனால் தன்னுடைய சகல எண்ணங்களிலும் அபிப் பிராயத்திலும் நித்திய ஞானத்திற்கும் தேவ தீர்மானத்திற்கும் தன்னைக் கீழ்ப்படுத்துகின்றது.

சுபாவம் இரகசியங்களை அறியவும் நூதனங்களைக் கேட்கவும் ஆசைப்படுகின்றது; வெளியில் காணப்படவும், புலன்களால் பல சுகங்களை அனுபவிக்கவும் விரும்புகின்றது; பிறரால் அறியப்படவும், புகழ்ச்சியும் ஆச்சரியமும் வருவிக்கிற காரியங்களைச் செய்யவும் தேடுகின்றது. ஆனால் வரப்பிரசாதம் நூதனமும் விநோதமுமான காரியங்களைக் காணக் கவலை கொள்வதில்லை; ஏனெனில் புதிதும் நிலையுள்ளதுமான யாதொன்றும் பூலோகத்தில் இராததினால், அதெல்லாம் பழைய மனிதனுடைய கெடுதியினின்று உற்பத்தி யானது.

10. ஆனதால் புலன்களை அடக்கவும், வீண் பெருமையையும் செருக்கையும் விலக்கவும், புகழ்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உரிய தைத் தாழ்ச்சியோடு மறைக்கவும், எந்தக் காரியத்திலும் எந்தச் சாஸ்திரத்திலும் பிரயோசனப் பலனையும் சர்வேசுரனுடைய தோத்திரத்தையும் மகிமையையும் தேடவும் வரப்பிரசாதம் கற்பிக் கின்றது. தன்னையும் தன் செயல்களையும் பற்றிப் பிரசித்தப்படுத்த அதற்கு மனமிருப்பதில்லை, ஆனால் சுத்த அன்பை முன்னிட்டுச் சகலமும் அளித்தருளும் தேவன் அவருடைய வரங்களைப் பற்றி வாழ்த்தப்பட வேண்டுமென்று ஆசிக்கின்றது.

இந்த வரப்பிரசாதமானது சுபாவத்துக்கு மேற்பட்ட ஒளியுமாய், சர்வேசுரனுடைய விசேஷக் கொடையுமாய், தெரிந்து கொள்ளப் பட்டவர்களுடைய முக்கிய அடையாளமுமாய், நித்திய ஈடேற் றத்தின் பிணையுமாய் இருக்கின்றது. மனிதன் உலகக் காரியங்களை விட்டுப் பரலோகக் காரியங்களை நேசிக்குமளவிற்கு அவனை உயர்த்து கின்றது, சரீர இச்சையுள்ள அவனை ஞானமுள்ளவனாக்குகின்றது.

ஆகையால் சுபாவம் எவ்வளவுக்கதிமாய் அடக்கப்பட்டுத் தோல்வி அடையுமோ, அவ்வளவுக்கு அதிக வரப்பிரசாதம் கொடுக்கப்படுகிறது; அவ்விதம் உள்ளந்தரங்க மனிதன் தான் நாள்தோறும் பெற்றுக்கொள்ளும் தேவ மினவுதலால் அவருடைய சாயலாக மாற்றப்படுவான்.

யோசனை

அப்போஸ்தலர் நமக்குப் போதித்திருப்பது போல நம்மிடத்தில் ஒன்றுக்கொன்று விரோதமான இரண்டு கட்டளைகள் உண்டு. மாமிசக் கட்டளை, அது நம்மைப் பாவத்திற்கு உட்படுத்துகிறது. தேவ கட்டளை, அது சேசுநாதர் நமக்காகப் பெற்ற பேறுகளால் உண்டாகும் வரப்பிரசாத உதவியினால் நம்மை ஒழுங்குக் கிரமத்தில் காப்பாற்று கின்றது. இந்த இரண்டு கட்டளைகளுக்கு நடுவில், ஓயாமல் போராடும் சரீரத்திற்கும் ஆத்துமத்திற்கும் நடுவில், நன்மைக்கும் தின்மைக்கும் நடுவில், கடவுளுக்கும் உலகத்திற்கும் நடுவில் நாம் மிதக்கிறவர்களைப் போலிருக்கிறோம்; சுபாவம் நம்மை ஓர் பக்கம் இழுக்கின்றது. வரப் பிரசாதம் மறறோர் பக்கம் இழுக்கிறது. வரப்பிரசாதம் மகா பெரிய பாவிகளை முதலாய் முற்றிலும் கைவிட்டுப் போவதில்லை; அவ்வண்ணமே ஆசாபாசங்களும் நீதிமான்களைத் சோதனை செய் வதில் ஓய்வதுமில்லை. இந்தப் பயங்கரமான யுத்தத்தில் அகப்பட்ட நமது ஆத்துமம் என்னவாகும்? இந்த யுத்தம் எப்படித்தான் முடியுமென்று அது எவ்வளவோ பயப்பட வேண்டியது! அர்ச். சின்னப்பர் சொல்லுவது: “அதனால்தான் சகல சிருஷ்டிகளும் பிரலாபிக்கின்றன. பேறுகாலத்தின் ஆராட்டத்தில் அவதிப்படுவதுபோல் இருக்கின்றன; இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களை அடைந்த நாமும், சர்வேசுரனுடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்படவும், நமது சரீரத்தினின்று மீட்கப்படவும் காத்துக் கொண்டிருக்கிற நாமும் நம்மிலே பிரலாபிக்கிறோம்” என்று சொல்கிறார். அந்த பாக்கியமான நாள் எப்போது வரும்? மாறாத நேசத்தின் இன்பமான சமாதானத்தை நாம் எப்போது சுகிக்கப் போகிறோம்? சேசுகிறீஸ்து நாதரோடு இருக்கும்படி என் சரீரம் கரைந்துபோக வேண்டுமென்று ஆசித்தேன். “வல்லவரும் சீவியருமான கடவுள்மட்டில் என் ஆத்துமம் தாகமாயிருக்கின்றது. என் தேவனுடைய முகத்திற்கு முன்பாக நான் எப்போது வந்து நிற்பேன்?” என்று அர்ச். சின்னப்பரோடு சொல்லக்கடவாய்.