இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

53. இவ்வுலகக் காரியங்களின்பேரில் பற்றுதல் வைக்கிறது தேவ வரப்பிரசாதத்தை அடைவதற்குத் தடையாயிருக்கிறது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நமது வரப்பிரசாதம் விலையேறப்பெற்றது; அது வெளிக்காரியங்களோடும் பூலோக ஆறுதல்களோடும் கலந்திருக்கச் சகியாது. ஆனதால் அந்த வரப் பிரசாதத்தை நீ அடைய ஆசைப்படுவாயாகில் அதற்குத் தடையான விக்கினங்கள் யாவற்றையும் அகற்றிவிட வேண்டியது. தனிமையான இடம் தேடு; நம்முடனே தனிவாசம் செய்ய விரும்பு. எவருடைய உரையாடலையும் தேடாதே; ஆனால் மனஸ்தாபமும் ஆத்தும பரிசுத்தமும் உன்னிடத்தில் நிலைகொள்ளும்படி சர்வேசுரனுக்கு அதிக பக்தியுள்ள செபத்தை ஒப்புக்கொடு.

பூலோக முழுமையும் வியர்த்தமென்று நினைத்துக்கொள், வெளிக் காரியங்கள் எல்லாவற்றையும் விட தேவன் பேரில் நினைவாய் இருப்பதை அதிகமாக விரும்பு. ஏனெனில் நீ நமது பேரில் சிந்தையாயிருப்பதும், அதே நேரத்தில் உலகக் காரியங்களின்மேல் பிரியம் கொள்வதும் கூடாது. அறிமுகமானவர்களுடையவும் சிநேகிதர்களுடையவும் பழக்கத்தை விட்டுவிடவும் உலக ஆறுதல் யாவற்றிலும் நின்று மனதை அகற்றிவிடவும் வேண்டியது. அப்படியே கிறீஸ்துநாதருடைய விசுவாசிகள் “அந்நியர் போலும் வழிப்போக்கர் போலும்” இவ்வுலகத்தில் நடந்துகொள்ள வேண்டு மென்று அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

2. இவ்வுலகக் காரியங்களின்மேல் முற்றும் பற்றுதல் இல்லாத வனுடைய நம்பிக்கை மரணத் தருவாயில் எப்பேர்ப்பட்டதா யிருக்கும்! ஆனால் “மிருக புத்தியுடைய மனிதன்” சகலத்தையும் துறந்துவிட்டிருக்கிற மனிதருடைய சுயாதீனத்தை அறியமாட்டான்; அதுபோல, இவ்வுலகப் பற்று என்கிற வியாதியால் இன்னும் பீடிக்கப்பட்டவன், மனதில் எவ்விதப் பற்றுதலில்லாமலிருப்பது என்றால் என்ன என்று கண்டுபிடிக்க மாட்டான். ஆயினும் அவன் உண்மையாகவே ஞான காரியத்தை நாடினவனாய் இருக்க மனதானால், தன் உறவினரையும் அயலாரையும் முற்றும் துறந்துவிட வேண்டியது; மேலும் எல்லாரையும்விட தன்னைத்தானே அதிகமாய் நம்பாதிருக்க வேண்டியது.

நீ உன்னையே முழுமையும் வென்றால், மற்றதையெல்லாம் எளிதாய்க் கீழ்ப்படுத்துவாய். தன் பேரிலேயே வெற்றி கொள்ளுவதே உத்தமமான வெற்றி. புலன்கள் புத்திக்கும், புத்தி நமக்கும் சகலத்திலும் கீழ்ப்படியும் வண்ணம் தன்னையே அடக்கி வைத்திருக் கிறவன் தன்னை மெய்யாகவே ஜெயித்தவன், அவனே உலக அதிபதி.

3. நீ இந்த உயர்ந்த படியில் ஏற ஆசை கொண்டால், உடனே தைரியமாய் வேரிலே கோடரியை வைத்து உன் பேரிலும் சுய நன்மையின் பேரிலும் இலெளகீக நன்மையின் பேரிலும் உன்னிடம் ஒளிந்திருக்கிற ஒழுங்கற்ற நாட்டத்தைப் பிடுங்கி அழித்துவிடு. மனிதன் தன்னையே மிதமிஞ்சி நேசிக்கச் செய்யும் அத்துர்க்குணத் தினின்றே, அவன் வேரோடு பிடுங்க வேண்டிய தின்மையெல்லாம் உற்பத்தியாகிறது; அந்தத் தீக்குணத்தை ஜெயித்து அடக்கி விட்டால் தாமதமின்றிப் பெருத்த சமாதானமும் அமைதியும் உண்டாகும். ஆனால் கொஞ்சம்பேர் மாத்திரம் தங்களுக்குத்தானே முழுதும் மரிக் கவும் தங்களை முழுதும் விட்டுவிடவும் பிரயாசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் தங்கள் சுயநலத்தைத் தேடுகிறவர்களாயிருக்கின்றனர்; தங்களுக்கு மேலான ஒன்றையும் தேட முடியாது.

மனச் சுயாதீனமாய் நம்முடன் நடக்க ஆசைப்படுகிறவனோ, ஒழுங்கற்றதும் கெட்டதுமான தனது பற்றுதல்கள் யாவற்றையும் அடக்குவதும், எந்தச் சிருஷ்டியின் மேலும் விசேஷ நேசத்தினால் பிடிமானமாயிராதிருப்பதும் முழுதும் அவசியம்.

யோசனை

“எவனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வது கூடாத காரியம், ஏனெனில் ஒருவனை நேசிப்பான், மற்றொருவனைப் பகைப்பான்; ஒருவனோடு ஒற்றுமையாயிருப்பான், மற்றொருவனை அருவருப்பான்.” ஒரே சமயத்தில் கடவுளுக்கும் உலகத்திற்கும் நாம் ஊழியம் செய்வது முடியாத காரியம்; தேவனுடைய மக்களின் சுயாதீனத்தைப் பெறுவதற்கு உலகத்தின் அடிமைத்தனத்தினின்று தன்னையே விடுதலை செய்து கொள்வதில் கிறீஸ்தவ ஜீவியம் அடங்கி யிருக்கின்றது. உலகத்திற்கு நம்மை இழுக்கும் நம்முடைய கெட்டுப் போன சுபாவத்திற்கு விரோதமாய் தேவ வரப்பிரசாதம் சர்வேசுர னுக்காக நமக்குள் யுத்தம் செய்கின்றது. அது பயங்கரமான யுத்தம்; தனக்கும், தன் நினைவுகளுக்கும், தன் இச்சைகளுக்கும், தன் நாட்டங் களுக்கும் மரித்தால் மாத்திரம் வெற்றியடையலாம். சுபாவத்திற்கும் தேவ வரப்பிரசாதத்திற்கும் உண்டான யுத்தத்திற்கு எப்போதைக்கும் முடிவு கட்டுகிற சரீர மரணமே, கிறீஸ்துவினுடைய கடைசி வெற்றி; ஆனதினாலேதான் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர்: “சாவுக் குரிய இந்தச் சரீரத்தினின்று என்னை இரட்சிப்பவர் யார்?” என்று வசனித்திருக்கிறார். சாகிறதற்குப் பழகி உலகத்தினின்றும் உலகக் காரியங்களினின்றும் முற்றிலும் நம்மை நீக்கிக் கொள்ளக் கடவோம்; நம்மிடத்தினின்றும் நம்மை நீக்கிக் கொண்டு தேவனுக்கு மாத்திரம், தேவனிடத்தினின்று மாத்திரம், தேவனுக்காக மாத்திரம் ஓ! “அவர் இருப்பதுபோல முகமுகமாய் அவரைத் தரிசிப்பதற்கும், அவருடைய தெய்வத் தன்மையாலும், மகிமையாலும் நாம் திருப்தி யடைவதற்கும் பாக்கியம் கொடுத்து வைக்கும் காலம் எப்போது?” நமது நித்தியத்தை நிலைநாட்டும் அந்தக் காலத்தைத் துரிதப் படுத்துவோம்; நம் ஆசையின் உருக்கத்தில் தீர்க்கதரிசியோடுகூட: “ஐயோ! நான் நிர்ப்பாக்கியன்: ஏனெனில் என் பரதேச வாசம் அதிகக் காலம் நீடிக்கின்றது! சேதார் சனங்களோடு வசித்து வந்தேன். அவர்கள் மத்தியில் என் ஆத்துமம் அந்நியனைப் போலிருந்தது” என்று சொல்லக் கடவோம்.