இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

52. மனிதன் தான் ஆறுதலுக்குத் தகுதியானவன் என்றெண்ணாமல் தண்டனைக்கு அதிக தகுதியுடையவன் என்று எண்ணவேண்டும்.

1. (சீஷன்) ஆண்டவரே! உமது ஆறுதலுக்கும் நீர் என்னைச் சந்திப்பதற்கும் நான் தகுதியுடையவனல்ல; ஆனதால் நான் ஞான சலிப்புக்கும் மனத்துன்பங்களுக்கும் ஆளாவதே நியாயம். ஏனெனில் நான் கடலளவு கண்ணீர் சொரிந்தாலும், உமது ஆறுதலுக்கு நான் இன்னும் தகுதியுள்ளவனாக மாட்டேன். வருத்தப்படவும் தண்டிக்கப் படவும் நான் தகுதியுடையவனேயன்றி வேறல்ல; ஏனெனில், அடிக்கடி மிகக் கனமாயும் உமக்குத் துரோகங்கள் செய்தேன், அநேக காரியங்களில் மிகவும் குற்றவாளியானேன். ஆனதால் உண்மையாகவும் உள்ளபடியும் அற்ப ஆறுதலுக்கு முதலாய் நான் தகுதியடையவனல்ல. ஆனால் தயாளமும் இரக்கமும் உள்ள என் சர்வேசுரா! நீர் உண்டாக்கினது எல்லாவற்றையும் யாதோர் கேடின்றிக் காப்பாற்ற ஆசையுள்ள சர்வேசுரா! உமது தயாளத்தின் அளவில்லாத விஸ்தாரத்தை உமது இரக்கத்தின் அத்தாட்சியா யிருக்கிற எங்கள் பேரில் காண்பிக்கும் பொருட்டு, உமது ஊழியனை அவனது தகுதிக்கும் மானிட அளவுக்கும் மிஞ்சின விதமாய் ஆறுதல் படுத்தச் சித்தமாகிறீர். ஏனெனில் மனிதரின் தேறுதலான வீண் வார்த்தைகளைப் போலல்ல உமது ஆறுதல்கள்.

2. ஆண்டவரே! பரலோக ஆறுதல்களை நீர் எனக்கு அளித் தருள நான் என்ன செய்தேன்? நான் நன்மையானது ஏதாவது செய்த தாக எனக்கு ஞாபகமில்லை. ஆனால் எப்போதும் துர்க்குணங்களை நாடினேன், என்னைத் திருத்திக் கொள்ளுவதில் சோம்பலானேன். இது உண்மை, இதை நான் மறுதலிக்க முடியாது; வேறுவிதம் நான் சொல்லுவேனேயாகில், நீர் எனக்கு விரோதியாக நிற்பீர், அப்போது என்னைப் பாதுகாக்க எவனும் இருக்க மாட்டான்.

என் பாவங்களால் நான் நரகத்துக்கும் நித்திய அக்கினிக்கும்தான் ஆளாயிருக்கிறேன். உண்மையாகவே நான் ஒத்துக்கொள்ளுவது என்னவென்றால், சகலவித அவமானத்திற்கும் நிந்தைக்கும் நான் தகுதி யுடையவன்; உம்மை நேசிக்கிறவர்களில் ஒருவராக எண்ணப் படுவதற்கு நான் பாத்திரவானல்ல. அப்படி சொல்வதைக் கேட்பது எனக்கு மன வருத்தமாயினும், உமது இரக்கத்தைச் எளிதாய் அடைவதற்குத் தகுதியுள்ளவனாகும்படி நான் எனக்கே விரோதமாக உண்மைக்குச் சாட்சியாய் நின்று என் பேரிலேயே என் பாவங்களைச் சாட்டிக் கொள்வேன்.

3. குற்றவாளியான நான், சர்வ வெட்கமும் நிறைந்த நான், என்ன சொல்லப் போகிறேன்? பேச எனக்கு நாவில்லை; ‘ஆண்டவரே! பாவம் செய்தேன்; பாவம் செய்தேன், என் மேல் இரக்கமாயிரும். எனக்குப் பொறுத்தல் கொடும்’ என்று மாத்திரம் சொல்லுவேன். “இருள் அடர்ந்து மரணத்தின் நிழலால் மூடப்பட்ட ஸ்தலத்திற்கு நான் போகுமுன் என் துயரத்தை நினைத்து நான் அழும்படி உத்தர வளித்தருளும்.”

குற்றவாளியும் நிர்ப்பாக்கியனுமான பாவி தன் பாவங்களுக்காக மனம் நொந்து தன்னைத் தாழ்த்த வேண்டுமென்பது அல்லவோ நீர் அவனிடம் கேட்கிற முக்கியமான காரியம்?

மெய்யான மனஸ்தாபத்தாலும் இருதயத் தாழ்ச்சியாலும் பொறுத்தலின் நம்பிக்கை உருவாகின்றது. கலக்கமடைந்த மனசாட்சி தேவனோடு சமாதானமாகிறது. இழந்துபோன வரப் பிரசாதம் மீண்டும் கிடைக்கிறது, வரப்போகிற கோபத்தினின்று பாவி காப்பாற்றப்படுவான்; சர்வேசுரனும் மனஸ்தாபப்படுகிற ஆத்துமமும் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பரிசுத்த முத்த மிட்டு மறுபடி உறவாடுகிறார்கள்.

4. ஆண்டவரே! பாவிகளுடைய தாழ்ச்சியுள்ள மனஸ்தாபம் உமக்குப் பிரியமானதும் சாம்பிராணியை விட இனிய வாசனை யுள்ளதுமான பலியாயிருக்கின்றது. அதுவே உமது திருப்பாதங்களில் வார்க்கும்படி, நீர் அனுமதித்த சுகந்த பரிமளத் தைலமாய் இருக்கிறது. ஏனெனில், “நீர் ஒருபோதும் மனஸ்தாபமும் தாழ்ச்சியுமுள்ள இருதயத்தைத் தள்ளிவிடுவதில்லை.” பகைவனுடைய கோபத்தின் எதிரான தஞ்ச ஸ்தலமதுவே; வெளியில் உண்டான பாவங்களும் துர்ப்பழக்கங்களும் சுத்திகரிக்கப்படுவதும் திருத்தப்படுவதும் அதனாலேதான்.

சிலர் வெகு ஆவலோடு பரலோக ஆறுதலைத் தேடுகிறார்கள். அந்த ஆறுதல் அவர்களிடத்தினின்று எடுபட்டுப் போனவுடனே மிகுந்த கஸ்திக்குள்ளாகிறார்கள். அதிவேகமுள்ள நேசத்தினால் நிறைந்த ஆத்துமங்களுக்குச் சம்பாவனையாகவாவது, தபசின் முயற்சிகளைச் சகிக்கிறதற்கு இன்னும் பலவீனமாயிருக்கிற ஆத்துமங் களுக்குத் தைரியம் கொடுக்கவாவது சர்வேசுரன் அந்த ஆறுதலைத் தந்தருளுகிறார். ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் தகுதியானவர்கள் அல்ல. சேசுநாதருடைய மாதிரிகை நம்மிடத்தில் காணப்படும்படி சேசுநாதருடைய ஒறுத்தல் எப்போதும் நம்மிடத்தில் விளங்கும்படி நாம் செய்ய வேண்டியது. நாம் சகிப்பதற்கு ஒன்றுமில்லாமல் போனால், நமது துன்பங்களைத் தணிக்க தேவ ஆறுதல் எப்போதும் நமக்குக் கிடைத்து வருமானால், நாம் உத்தரிப்பதெப்படி? பேறு பலன்களை அடைவதெப்படி? நிர்ப்பாக்கியப் பாவிகளான நாம் தண்ட னைக்கு மாத்திரமே தகுதியுடையவர்கள். இவ்வுலகத்திலேயே பரலோக பாக்கியத்தை அனுபவிக்கத் தேடலாமோ? ஆ! ஆண்டவ ருடைய இரக்கம் எம்மாத்திரம் ஸ்துதிக்குரியது! நித்திய கால வேதனைகளுக்குப் பதிலாக நமக்குத் துன்பங்களை இவ்வுலகத்தில் வர விடுகிறார். நாம் அவருடைய நீதிக்குச் செலுத்த வேண்டியவைகளைப் பிற்பாடு அவர் எப்போதும் மறந்துவிடுவதற்காகவும், இவ்வுலகத்தில் நம்மைத் தண்டிப்பதற்காகவும், அவருக்கு நன்றி செலுத்தக் கடவோம். நமது முழு இருதயத்தோடு அவரை நோக்கி: “ஆண்டவரே! என் அக்கிரமத்தினின்று அதிகமதிகமாய் என்னைக் கழுவத் தயை புரியும். என் பாவத்தினின்று என்னைச் சுத்திகரியும். ஏனெனில் நான் என் அக்கிரமத்தை அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்போதும் என் கண் முன்னே இருக்கின்றது” என்று சொல்வோமாக.