இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

51. மேலான நற்செயல்களைச் செய்யச் சக்தியற்றபோது, சாதாரணச் செயல்களைச் செய்ய வேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! புண்ணியத்தின்பேரில் எப்போதும் அதிவேகமுள்ள ஆவலில் நிலைத்திருப்பதும், அதிக மேலான தியானத்தில் நிலைகொண்டிருப்பதும் உன்னால் ஆகக்கூடுமான காரியமல்ல. ஆனால் ஜென்மப் பாவ தோஷத்தினிமித்தம், அம்மேலான பதவியை விட்டு இறங்கி உன் மனதுக்கு விரோதமாகவும் சலிப்போடு முதலாய் இந்த அழிவுக்குரிய வாழ்க்கையின் சுமையைத் தாங்குவது சிற்சில சமயங்களில் அவசியமாயிருக்கிறது. இந்தச் சாவுக்குரிய சரீரத்தோடு நீ இருக்கிறவரையில், உனக்குச் சலிப்பும் மனத் துன்பமும் உண்டாயிருக்கும். ஆனதால் நீ இச்சரீரமுடையவனாய் இருக்கும் வரையும் சரீரச் சுமையைப் பற்றி, அதாவது ஞானக் காரியங்களிலும் தேவனுடைய தியானத்திலும் இடைவிடாமல் கவனிப்பது உன்னால் சாத்தியப்படாததைப் பற்றி, அநேகமுறை நீ அழுது புலம்ப வேண்டியது.

2. அத்தகைய சமயங்களில், தாழ்ந்த வெளிச்செயல்களைச் செய், அவைகளால் தேற்றிக்கொள்; நமது வருகைக்கும், சந்திப்புக்கும் உறுதியான நம்பிக்கையோடு காத்திரு; நாம் உன்னை மறுபடி சந்தித்து, உன் சகல ஏக்கங்களிலும் நின்று உன்னை விடுதலை செய்கிற வரையில் இந்தப் பரதேச வாழ்வையும் ஞான வறட்சியையும் பொறுமையோடு சகித்து வா; இப்படி எல்லாம் சகித்து வருவது உனக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும். ஏனெனில் நீ உன் வருத்தங்களை மறந்து விடவும், மன இளைப்பாற்றி அனுபவிக்கவும் உனக்குக் கிருபை புரிவோம்; வேதாகமங்களின் பொருள் நிறைந்த இனிய வாக்கியங்களின் அர்த்தத்தை உனக்குத் தெளிவாக்குவோம், அப்போது உன் மனம் தேறியிருந்து நம் கற்பனைகளின் மார்க்கத்தில் நேர்மை யாய் நடக்கத் தொடங்குவாய். அப்போது நீ “எங்களிடத்தில் காணப்படும் மோட்ச மகிமைக்கு இவ்வுலக துன்பங்கள் இணையிடப் படத் தக்கவையல்ல” என்று சொல்லுவாய்.

யோசனை

கடவுளைத் தியானிப்பதும், அவரை நேசிப்பதும் மேலும் மேலும் அவரைத் தியானிப்பதும், மேலும் மேலும் அவரை நேசிப்பதும்: இதுவே மோட்சம். இவ்வுலகத்தில் ஆத்துமம் சில சமயங்களில் அந்த மோட்சத்தின் இன்பத்தை முன்னதாகவே சுவை பார்க்கின்றது. அப்போது தனக்கு மேல் உயர்ந்து, பக்தி உருக்கம் நிறைந்திருப் பதாகக் காணுகின்றது. ஆனந்தத்தில் மூழ்கி “இவ்விடத்தில் தங்கியிருப்பது நலம்” என்று சொல்லிக் கொள்கின்றது. ஆனால் உடனே சோதனைக்காலம் வருகிறது. அப்போது தபோர் மலை யினின்று இறங்கிச் சிலுவையின் பாதையில் நடக்க வேண்டியது. மன வறட்சியிலும் பாடுகளிலும் சோர்வடையாமலும் முறுமுறுக் காமலும் சமாதானத்தில் நிலைத்திருக்கிற ஆத்துமம் பாக்கியம் பெற்றது; மரிக்கப் போகிற சேசுநாதருக்குப் பிரமாணிக்கமாயிருந்து, கல்வாரிக்கு அவரைத் தைரியமாய்ப் பின்செல்கின்றது; பத்தாவின் பந்திக்குப் பங்காளியான பிறகு அவருடைய பலியிலும் பங்கடைய ஆசைகொண்டு, “நாமும்கூட, அவரோடு போய், மரிப்போம்” என்று அப்போஸ்தலரோடு சொல்லும்.