இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

50. துன்புறுகிறவன் சர்வேசுரனுடைய கரத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கிற விதம்.

1. (சீஷன்) ஆண்டவராகிய சர்வேசுரா! பரிசுத்த பிதாவே! இப்போதும், எப்போதும் உமக்குத் தோத்திரம் உண்டாகக் கடவது; ஏனெனில் உமது சித்தத்தின்படியே சகலமும் நிறைவேறிற்று. நீர் செய்வதெல்லாமோ நன்மையே. அடியேன் என்னிடத்திலல்ல, மற்றொருவனிடத்திலல்ல, தேவரீரிடத்திலேயே சந்தோஷம் கொள்ளக்கடவேன்; ஏனெனில் ஆண்டவரே! நீர் ஒருவரே மெய்யான சந்தோஷம், நீரே என் நம்பிக்கையும் கிரீடமும், நீரே என் ஆனந்தமும் பெருமையுமாயிருக்கிறீர். “உம்மிடத்தினின்று பெற்றுக் கொண்டதைத் தவிர உமது ஊழியனிடத்தில் வேறென்ன இருக்கிறது?” அதனைப் பெறுவதற்கோ தகைமையொன்றும் என்னிடம் இல்லாவிடினும் தேவரீர் தந்தருளக் கிருபை புரிந்தீர். சகலமும் உம்முடையதே. ஏனெனில் நீரே சகலத்தையும் உண்டாக்கினீர். கொடுத்தீர். “நான் எளியவன், இளம் வயது முதல் கஷ்டத்தில் சீவிக்கிறேன்;” அநேக முறை கஸ்தியின் அகோரத்தால் வருத்தப்பட்டு என் இரு கண்களினின்று கண்ணீர் சொரிகின்றது; அநேக சமயங்களில் சோதனைக்கு உட்படுத்தும் என் ஆசாபாசங்களால் கலங்குகிறேன்.

2. மன சந்தோஷத்தைத் தரும் சமாதானத்தை ஆசிக்கிறேன்; உம்முடைய ஆறுதல்களின் ஒளியில் உம்மாலேயே வளர்க்கப்பட்ட உமது நேசர்களின் சமாதானத்தை ஆசிக்கிறேன். நீர் இந்தச் சமாதா னத்தை எனக்கு அளித்து, இந்தப் பரிசுத்த சந்தோஷத்தை என்னில் பொழிந்தால் உமது ஊழியனுடைய ஆத்துமம் தோத்திரங்களைப் பாடி உம்மைப் புகழுவதில் உருக்கமுள்ளதாயிருக்கும். ஆனால் நீர் அடிக்கடி செய்வதுபோல், அகன்று போவீரானால், உமது கட்டளை களின் வழியில் உமது ஊழியன் ஓடக் கூடாதவனாய், மனஸ்தாப மிகுதியினால் முழந்தாட்படியிட்டு மார்பில் தட்டிக் கொள்வான். “ஏனெனில் முந்தி அவனுக்கு இருந்தது போல் இப்போதில்லை; அப்போது உமது ஞானவொளி அவன் சிரசின்மேல் பிரகாசித்துக் கொண்டிருந்ததும் அல்லாமல்” தன்பேரில் வரும் சோதனைகளி னின்று உமது சிறகுகளின் நிழலில் காப்பாற்றப்பட்டுக் கொண் டிருந்தான்.

3. நீதியுள்ள பிதாவே! எப்போதும் புகழப்பட வேண்டியவரே! உமது ஊழியனைப் பரிசோதிக்க நேரமாயிற்று. நேசத்துக்குரிய தந்தையே! உமது ஊழியன் இந்நேரத்தில் உம்மைப்பற்றி ஏதேனும் துன்பம் அனுபவிப்பது நியாயமே. சதாகாலத்திற்கும் ஆராதனைக் குரிய பிதாவே! நீர் ஆதிமுதல் நியமித்த நேரம் இதோ வந்து விட்டது. இந்நேரத்தில் உமது ஊழியன் கொஞ்ச காலத்துக்கு, உள்ளத்தில் உம்மோடு எப்போதும் ஜீவித்தும், வெளிக்குத் தோல்வி யடைய வேண்டியது; கொஞ்சமாக அவன் அவமதிக்கப்படவும், தாழ்த்தப் படவும், மனிதருக்கு முன்பாகச் சிறுமைப்படவும், சோர்வினாலும் பிணிகளாலும் உபாதிக்கப்படவும் வேண்டியது; பிறகு புதிய ஒளியின் உதயத்தில் அவன் உம்முடன் உயிர்த்து பரலோகத்தில் கீர்த்தியடைவான். பரிசுத்த பிதாவே! நீர் அவ்விதம் கட்டளை செய்தீர். அவ்விதம் செய்யச் சித்தமானீர். நீரே கற்பித்தது நிறை வேறிற்று.

4. இவ்வுலகத்தில், உமது உத்தரவின்படியான தடவை களிலும், பேர்வழிகளாலும் உமது நேசத்தைப் பற்றிப் பாடுபடுவதும் துன்பப்படுவதும் நீர் உமது நேசருக்குச் செய்து வருகிற ஒரு பெருத்த உபகாரமாயிருக்கின்றது. உமது யோசனையின்றி, உமது சித்தமின்றி, காரணமின்றி, பூமியில் ஒன்றும் நடப்பதில்லை. ஆண்டவரே! நான் உமது நியாயப் பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளும்படியாகவும், என் மனதினின்று ஆங்காரத்தையும் சிலாக்கியத்தையும் அகற்றி விடும்படியாகவும் என்னை நீர் தாழ்த்தினதே எனக்கு மிகவும் நன்மையான காரியம். என் முகம் வெட்கத்தால் கலங்கினது எனக்குப் பிரயோசனமே. ஏனெனில் அது மனிதரிடமன்றி உம்மிடமே நான் ஆறுதலைத் தேடச் செய்தது. இன்னமும், அதனால், புத்திக்கு ஏற்காத உமது தீர்மானத்திற்கு அஞ்சக் கற்றுக் கொண்டேன். ஏனெனில் நீர் அக்கிரமியோடு நீதிமானையும் தண்டிக்கிறீர், ஆயினும் எப்போதும் நீதி நியாயத்தோடு அவ்விதம் செய்வீர்.

5. என் குற்றங்களுக்குத் தண்டனையாக அகோரத் துன்பங் களால் என்னை முறித்து சரீரத்திலும் ஆத்துமத்திலும் என்னை வருத்திக் கொடூர அடிகளால் என்னைத் தண்டித்ததால் உமக்கு நன்றியறிதலைச் செலுத்துகிறேன். வான மண்டலத்தின் கீழிருக்கும் சகலத்திலும் எனக்கு ஆறுதல் வருத்துவிப்பது ஒன்றுமில்லை; நீர் ஒருவரே, ஆண்டவராகிய சர்வேசுரா! எனக்கு ஆறுதலைத் தருகிறவர்; நீர் ஆத்துமங்களின் திவ்விய வைத்தியர்; “அடிக்கிறீர், ஆனால் குணப் படுத்துகிறீர், பாதாளம் மட்டும் கூட்டிப் போகிறீர், ஆனால் திரும்பக் கொண்டு வருகிறீர்.” “நான் உமது அதிகாரத்தின் கீழிருக்கிறேன்; உமது தண்டனைகள் முதலாய் எனக்கு நற்புத்தி கற்பிக்கின்றன.” 

6. நேச பிதாவே! இதோ நான் உமது கரங்களில் இருக்கிறேன். உமது தண்டனைக்குட்படச் சித்தமாயிருக்கிறேன்; என்னிடம் ஒழுங் கற்றவை அனைத்தும் உமது சித்தத்தின் கொள்கைப்படி ஒழுங்குப் படும்படி, சிரசிலும் முதுகிலும் அடிப்பீராக. உமது இஷ்டத்தின் படி நான் எப்போதும் நடந்து உமக்கு பக்தியும் தாழ்ச்சியும் உள்ள சீடனாக்கியருளும்; அதற்கான வழி உமக்கு நன்றாய்த் தெரியுமே. நீர் என்னைத் திருத்தும்படி என்னையும் எனக்குச் சொந்தமான யாவற் றையும் உம்மிடத்தில் ஒப்பிக்கிறேன். மறுவுலகத்தில் தண்டிக்கப் படுவதைவிட இவ்வுலகில் தண்டிக்கப்படுவதே மேல். நீர் சகலத் தையும் ஒவ்வொன்றாய் அறிந்திருக்கிறீர், மனிதரின் மனசாட்சியில் உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. வருவதை வருமுன் அறிவீர்; பூமியில் சம்பவிக்கிறவைகளைப் பற்றி எவனாவது உமக்குத் தெரிவிக்க அவசியமில்லை. என்னுடைய புண்ணிய வளர்ச்சிக்கு எது பிரயோசன மென்றும், என் துர்க்குணக் கறையைப் போக்கத் துன்பம் எவ்வளவு உதவுகிறதென்றும் நீர் அறிவீர். என்னிடத்தில் உமது இஷ்டத்தை நிறைவேற்றும்; மற்றவர்களை விட, நீரே நன்றாயும் அதிகத் தெளிவாயும் அறிந்திருக்கிற பாவம் நிறைந்த என் சீவியத்தைப் பற்றி என்னைத் தள்ளி விடாதேயும்.

7. ஆண்டவரே! அறிந்து கொள்ள வேண்டியதை அறியவும், நேசிக்க வேண்டியதை நேசிக்கவும், உமக்கு அதிகப் பிரியமானதைப் புகழவும், உமக்கு மதிப்புள்ளதை மதிக்கவும், உமது கண்களுக்கு முன்பாக அசுத்தமானதை வெறுக்கவும் எனக்குக் கிருபை செய் தருளும். வெளித் தோற்றங்களைக் கொண்டு நான் யாதொன்றை மதிக்கவும், அற்ப நியாயமுடையவர்கள் சொல்லுவதைக் கேட்டு நான் எதையாவது தீர்மானிக்கவும் என்னை விடாதேயும். ஆனால் வெளியான காரியங்களையும் ஞான காரியங்களையும் நன்றாய் ஆராயவும், சகலத்துக்கு மேலாக உமது திருவுளத்தின் சித்தத்தை எப்போதும் தேடவும் எனக்கு அருள் புரிந்தருளும்.

8. தீர்மானிப்பதில் மனிதருடைய பலன்கள் அநேகமுறை மோசம்போகின்றன; காணப்படும் பொருட்களை மாத்திரம் நேசிக்கும் உலகப் பிரியரும் மோசம் போகிறார்கள். ஒருவன் மனிதரால் மிகப் பெரியவனாக எண்ணப்படுவதினால் அவன் உத்தமனாகிவிடுகிறானோ? இப்படி ஒரு மனிதன் மற்றொருவனை முகஸ்துதி செய்யும்போது, பொய்யன் பொய்யனையும், வீணன் வீணனையும், குருடன் குருடனையும், பலவீனன் பலவீனனையும் மோசம் செய்வதாகிறது; அவ்வித வீண்புகழ்ச்சி அவமதிப்பேயன்றி வேறு என்ன? ஏனெனில் “மனிதன் உமது கண்களுக்கு எத்தன்மையானவனோ, அத்தன்மை யானவனேயன்றி மற்றபடி அதிகமானவனல்ல” என்று தாழ்ச்சியில் சிறந்த அர்ச். பிரான்சிஸ் அசிசியார் கூறியுள்ளார்.

யோசனை

சில சமயங்களில் நம் ஆத்துமம் கைவிடப்பட்டதைப் போலிருக்க கடவுள் விட்டு விடுகிறார். ஆறுதலில்லை, ஞானப் பிரகாசமில்லை; ஆனால் எப்பக்கத்திலும் துன்பம், சோதனை, கஸ்தி; விழுந்து போகிற சமயமாயிற்றென்று எண்ணுகிறது, ஏனெனில் தன்னை ஆதரிக்கிற கரத்தைக் காண்பதில்லை; அப்போது என்ன செய்கிறது? “என் சர்வேசுரா! என் சர்வேசுரா! என்னை ஏன் கைநெகிழ்ந்தீர்” என்று சேசுநாதரோடு சொல்வோம்; ஆயினும் “நிழல் மறைந்து, புதிய நாளின் உதய காலத்தை நாம் காண்கிற வரையிலும்” பாடுகளிலும் இருளிலும் சமாதானத்தில் நிலைத்திருப்போமாக. இந்த அந்தஸ்து தேவ விசுவாசத்தின் மேலான புண்ணிய முயற்சி; இது ஆத்துமத் திற்கு மரணத்தின் சாயலாக இருக்கின்றது; குளிர்ந்துபோய், அசைவில்லாமல், பார்வைக்கு உணர்ச்சியில்லாமல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதைப் போல் இருக்கின்றது; தேவனிடத்தில் சிறிதளவு மட்டுமே ஒன்றித்திருப்பதுபோல் இருக்கின்றது. இந்தப் பெரும் துயரத்தைப் பொறுமையோடும் தாழ்ச்சியோடும் சகித்தால் எவ்வளவோ திரளான வரப்பிரசாதங்களை ஆத்துமம் அடையலாம்; எவ்வளவோ பாவங்களுக்கு மன்னிப்படையலாம்; அப்போதுதான் இரட்சணியத்தின் இரகசியம் நம்மிடத்தில் நிறைவேற்றப்படு கின்றது, அப்போதுதான் நாம் சேசுநாதருக்கு ஒத்தவர்களாகிறோம். ஆனால் முழு விசுவாசத்தோடும் அசைக்கப்படாத நம்பிக்கை யோடும், அமைந்த மனதோடும் நாம் சொல்ல வேண்டியது என்ன வென்றால், “ஆம், என் பிதாவே! நான் இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன், கடைசி துளி வரைக்கும் உட்கொள்வேன். ஆம், என் பிதாவே! உமது சித்தம் இப்படியிருக்கின்றது” என்று சேசுநாதரோடு கூடச் சொல்லக்கடவோம்.