இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

49. நித்திய சீவியத்தின் மேல் ஆசை, யுத்தம் செய்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிற நன்மைகள்.

1. (கிறீஸ்துநாதர்) நித்திய பாக்கியத்தின் ஆசை பரலோகத் தினின்று உனக்கு அளிக்கப்படுவதாக நீ உணர்ந்து, மாற்றமின்றி நமது சோதியை நீ காணக் கூடுமாயிருக்கும்படி உன் சரீரத்தின் சிறைக் கூடத்தினின்று வெளிப்பட நீ விருப்பம் கொள்ளுகிறபொழுது, உன் இருதயத்தை விசாலமாக்கி அப்பரிசுத்த உணர்ச்சியின் தூண்டுதலை மிக்க ஆசையோடு ஏற்றுக்கொள். அவ்விதம் உன் விஷயத்தில் அவ்வளவு தயவாய் நடந்து, கிருபையோடு சந்தித்து, உருக்கமாய் உன்னைத் தூண்டி, உன் சுய பளுவினால் நீ கீழே இழுத்துக் கொள்ளாத படிக்குப் பலமாய் உன்னைத் தூக்கி வருகிற உத்தம நன்மை யானவருக்கு மகத்தான நன்றியறிந்த தோத்திரம் செய்யக் கடவாய். ஏனெனில் அந்த நல்ல உணர்ச்சியை உன் நினைவினாலுமல்ல, உன் பிரயாசையினாலுமல்ல, ஆனால் தேவன் உன் மீது கிருபை கூர்ந்து அளித்தருளிய வரப்பிரசாதத்தினால் மாத்திரம் அடைகிறாய்; எதற்காக என்றால், புண்ணியத்திலும் தாழ்ச்சியிலும் நீ அதிக வளர்ச்சி யடையவும், வரப்போகிற யுத்தங்களுக்கு நீ உன்னை ஆயத்தப்படுத் தவும், இருதயத்தின் முழுப்பற்றுதலோடு நம்மை அண்டி, உருக்க முள்ள மனதோடு நமக்கு ஊழியம் செய்யக் கற்றுக்கொள்ளவுமே.

2. மகனே! நெருப்பு அநேக முறை உக்கிரமாய் எரிந்தும், சுவாலை புகையில்லாமல் எழும்புவதில்லை. இதே விதமாக, சிலர் மோட்சத்தை வெகுவாய் ஏங்கித் தேடுகிறார்கள், ஆயினும் இந்த ஏக்கமுள்ள தேடுதலில் சுய பற்றுதலுக்கு இடம் கொடாமலிருக்க மாட்டார்கள். ஆனதால் அவர்கள் அவ்வளவு வேகத்துடன் மன்றாடிக் கேட்கும் காரியங்களில், தேவனுடைய மகிமையை மட்டும் தேட மாட்டார்கள். நீ காட்டுகிற மிகுந்த ஆசை அநேகம் விசை அப்படிப்பட்டதேயாகும். ஏனெனில் சுயநலத்தால் கறைப் படாததுதான் சுத்தமானதும் உத்தமமானதுமாயிருக்கிறது.

3. உனக்குப் பிரியமும் சுகமுமானதையல்ல, ஆனால் நமக்குப் பிரியமும் மகிமையுமானதைக் கேள்; ஏனெனில் நீ நன்றாய் யோசித்துப் பார்த்தால், உன்னாசையும் ஆசிக்கப்படக் கூடிய தெல்லாவற்றையும் விட நமது சித்தத்தை நீ தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்ற வேண்டியது. உன் ஆசையை நாம் அறிந்திருக் கிறோம். அடிக்கடி உன் அழுகைப் புலம்பலைக் கேட்டோம்; மோட்சவாசிகள் அனுபவிக்கிற சுயாதீனத்தையும் மகிமையையும் நீ இதற்குள்ளாகச் சுதந்தரிக்க ஆசிக்கிறாய். அளவில்லாத சந்தோஷம் நிறைந்த பரலோக நித்திய வீட்டின் நினைப்பே உனக்கு மிகவும் இன்பமாயிருக்கின்றது. ஆனால் அந்நேரம் இன்னும் வரவில்லை; இப்போது உள்ள காலம் வேறு, இது யுத்தகாலம், பிரயாசையின் காலம், சோதனையின் காலம். சர்வ நன்மையானவரால் நிறைந்து திருப்தியடைய விரும்புகிறாய்; ஆனால் இப்போதே நீ அதை அடைய முடியாது; நாமே உத்தம நன்மையானவர்; “சர்வேசுரனுடைய இராச்சியம் வருகிற வரையில் நமக்காகக் காத்திரு” என்று ஆண்டவர் திருவுளம்பற்றுகிறார்.

4. நீ பூமியில் இன்னும் பரிசோதிக்கப்படவும் அநேகக் காரியங் களில் கஷ்டப்படவும் வேண்டியது. அவ்வப்போது சற்று உனக்கு ஆறுதல் அளிக்கப்படும்; ஆனால் பூரண திருப்தி இன்னும் கொடுக் கப்பட மாட்டாது. ஆனதால் சுபாவத்துக்கு விரோதமான காரியங் களைச் செய்வதிலும் சகிப்பதிலும் “உன்னைத் தைரியப்படுத்திக்கொள், திடனாயிரு, நீ புதுமனிதனைத் தரித்துக்கொள்ள வேண்டியது,” வேறு மனிதனாக மாற வேண்டியது, அநேக முறை நீ ஆசியாததைச் செய்ய வேண்டியது. நீ ஆசிப்பதை விட்டு விட வேண்டியது. மற்றவர் களுக்குப் பிரியப்படுவது கைகூடி வருவதையும், உனக்குப் பிரியப் படுவது கைகூடி வராதிருப்பதையும் காண்பாய். மற்றவர்கள் சொல்வது கேட்கப்படும். நீ சொல்வது அசட்டை செய்யப்படும். மற்றவர்கள் கேட்டால் அடைவார்கள்; நீ கேட்டால் அடையப் போவதில்லை, மற்றவர்களை மிகவும் மெச்சுவார்கள்; உன்னைப் பற்றியோ ஒருவரும் பேசமாட்டார்கள். மற்றவர்களுக்கு இந்த வேலையோ, அந்த வேலையோ கொடுக்கப்படும்; நீயோ ஒன்றுக்கும் உதவாத வனாக மதிக்கப்படுவாய். இதனால் உன் சுபாவம் சில சமயங்களில் கஸ்தியில் அமிழும். அப்போது அதை முறைப்பாடின்றிச் சகித்தால் பெரிய காரியமாக இருக்கும்.

5. சொல்லப்பட்ட சமயங்களிலும் இன்னும் அவைகளைப் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் ஒருவன் தேவனுடைய பிரமாணிக்கமுள்ள ஊழியனாயிருக்கிறானோ இல்லையோ என்றும் அவன் தன்னை சகலத்திலும் எவ்வளவிற்கு அடக்கிப் பரித்தியாகம் செய்யக் கூடுமென்றும் தெரிய வருகிறது. உனக்குச் சரிப்படாத காரியங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவும் வேண்டியதாயிருக்கை யிலும், முக்கியமாய் உனக்கு நியாயமற்றது என்றும் உதவியற்றது என்றும் தோன்றுகிற கட்டளைகளை உனக்கு இடுகையிலும், உனக்கே நீ மரித்திருப்பது எவ்வளவு அவசியம் என்று அதிக நன்றாய்க் கண்டு பிடிப்பாய். அப்பொழுது உன் பேரில் அதிகாரம் கொண்டவனுக்கு விரோதமாய் நடக்க நீ துணிய மாட்டாதவனாய் இருப்பதால், பிறர் இஷ்டப்படி நடப்பதும் உன் சுய மனதை விட்டு விடுவதும் உனக்குக் கஷ்டமாய்த் தோன்றுகிறது.

6. ஆனால் மகனே! இந்தக் கஷ்டம் எவ்வளவோ உனக்குப் பலனுள்ளதாயும், எவ்வளவோ சீக்கிரத்தில் முடிவு பெறுகிறதாயும், எவ்வளவோ மகத்தான சம்பாவனைக்குப் பொருந்தியதாயும் இருக் கிறதை யோசித்துப் பார்த்தால், அப்போது கஸ்தியின் பளுவை உணராமல், அதைப் பொறுமையோடு சகிப்பதில் மிகுதியான ஆறுதல் அடைவாய். ஏனெனில் நீ இப்போது உனது ஒரு நாளைய இஷ்டங்களை வலிய அடக்குவதால் பரலோகத்தில் எப்போதும் உன் மனது சம்பூரணத் திருப்தியடையும்; அவ்விடத்தில் யாதொரு குறைவின்றி உன் மனதிற்கும் ஆசைக்கும் பிரியமானதெல்லாம் கொடுக்கப்படும்; இழந்துபோவோமென்கிற அச்சமின்றி சர்வ நன்மைகளையும் அங்கே வைத்திருப்பாய். அங்கே உன் மனது நம்மோடு எப்போதும் ஒன்றித்து, நம்மைவிட வேறெதையும், உன் சுய நேசத்திற்கேற்ற எதையும் ஆசிக்காது. அங்கே ஒருவனும் உன்னை எதிர்க்க மாட்டான், ஒருவனும் உன்பேரில் முறையிட மாட்டான், ஒருவனாலும் உனக்குத் தடையாவது விக்கினமாவது யாதொன்றும் செய்யப்படாது; மாறாக நீ ஆசிப்பதெல்லாம் ஒருமிக்க உனக்குக் கிடைக்க, உன் மனம் திருப்தியடையும், உன் இருதயம் நேசத்தின் மிகுதியால் பூரிக்கும். நீ அனுபவித்த அவமானங்கள் அங்கே மகிமை யாக மாறிவிடும், நீ பட்ட துன்பத்திற்குப் பதிலாய்ச் சந்தோஷப் போர்வை அணியப் பெறுவாய்; நீ இவ்வுலகில் தெரிந்து கொண்ட கடைசி இடத்திற்குப் பரலோகத்தில் நித்திய காலமும் சிம்மாசனத் தைக் கொடுப்போம். அங்கே கீழ்ப்படிதலுக்குத் தக்க சம்பாவனை கொடுக்கப்படும். நீ தவமுயற்சிகளைச் செய்ததற்கு அகமகிழ்வாய், உன் தாழ்மையுள்ள அடக்கவொடுக்கத்திற்குப் பிரதிபலனாய் மகிமைப்படுத்தப்படுவாய். 

7. ஆகையால் பேசினது யார் என்றும் கட்டளையிட்டது யார் என்றும் விசாரியாமல், இப்பொழுது சகலருடைய அதிகாரத்துக்குத் தாழ்ச்சியாய்க் கீழ்ப்படிந்து நட. யாதொன்றைக் கேட்கிறவர் அல்லது கட்டளையிடுகிறவர் ஒரு பெரியவரோ, சிறியவரோ, சரிசமானமானவரோ, யார் எவர் ஆனாலும், நன்மையாகவே சகலத் தையும் ஏற்றுக்கொள்வதிலும் நல்ல மனதோடு அதை நிறைவேற் றும்படி முயலுவதிலும் மிகுந்த கவனம் செலுத்து. ஒருவன் இதைத் தேடட்டும், மற்றொருவன் அதைத் தேடட்டும்; இவன் இதில் மேன்மைகொள்ளட்டும், அவன் அதில் மேன்மைகொண்டு ஆயிரமாயிரமான புகழ்பெறட்டும்; நீயோ, இதிலும் அதிலும் சந்தோஷம் கொள்ளாமல், சுய நிந்திப்பிலும், நம் ஒருவருடைய சித்தத்திலும் தோத்திரத்திலும் மாத்திரம் சந்தோஷம் கொள்ளக் கடவாய். உன் சீவியத்திலும் சரி, மரணத்திலும் சரி, கடவுள் உன்னிடத்தில் எப்போதும் தோத்திரம் அடையும்படியாய் நீ ஆசிக்க வேண்டியது.

யோசனை

தன்னையே மறுப்பதிலும் தன் மனதைச் சர்வேசுரனின் சித்தத் திற்கு ஒத்திருக்கச் செய்வதிலும்தான் சகல சாங்கோபாங்கமும் அடங்கியிருக்கிறதென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனதால் பரலோக பாக்கியத்தை நாடி எப்போது அதை அடையக் கூடுமென்று நாம் ஆசைப்பட வேண்டியிருந்தாலும், நமது பரதேசம் நீளித்திருப்பதைப் பற்றி நாம் முறையிட்டாலும், நாம் மகா பொறுமையோடிருக்க வேண்டியது. தேவ சித்தத்தால் இவ்வுலகில் நமக்கு வரும் துன்ப துரிதங்களிலும், சோதனைகளிலும் நாம் பிரியம் கொள்ள வேண்டியது. ஏனெனில் அவை யாவும் நமது இரட்சணியத் திற்கு வெகு பிரயோசனமாயிருக்கின்றன. அவைகள் சர்வேசுரன் தமது நீதியைத் திருப்திப்படுத்தத் தெரிந்துகொண்ட உபாயங்களே. அவைகளைக் கொண்டு அவர் தமது அளவில்லாத இரக்கத்தை வெளிப்படுத்துகிறார், தமது மகிமையை விளங்கச் செய்கிறார். பாவிகளாயிருக்கிற நாம் நம்மை இரட்சித்தவருடைய பாடுகளுக்குப் பங்காளிகளாக வேண்டியது; சேசுநாதருடைய சீஷராகிய நாம் நமது எஜமானுடைய காலடிகளைப் பின்செல்ல வேண்டியது; சிலுவையைச் சுமந்து பாடுகளின் பாத்திரத்தை உட்கொண்டு, அவருடைய மாதிரிகையை நாம் கண்டுபாவிக்க வேண்டியது; யுத்தம் செய்யாதவன் முடிசூடப் போவதில்லை. “சோதனையை அனுபவிக்கிறவன் பாக்கியவான்! ஏனெனில் சோதிக்கப்பட்ட பிறகு, தம்மை நேசிக்கிறவர்களுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் செய்திருக்கிற நித்திய சீவியத்தின் முடியைப் பெறுவான்.” அவர் குறித்த நேரம் வரையிலும் காத்திருப்போம். நமது பிரயாணத்தைச் சமாதானத்தில் தொடர்ந்து நடத்துவோம். நம்பிக்கையுள்ளவனுக்கு ஒன்றும் சிரமமாய்த் தோன்றாது. நாம் அவநம்பிக்கைப்படும்போது இந்த எண்ணம் நமக்குத் தைரியம் வருத்துவிக்கக் கடவது. இவ்வுலக சமுத்திரத்தில் அநேகர் அமிழ்ந்துபோகும்போது, இரக்கமுள்ள தேவன் பரலோகத்தினின்று நம்பிக்கையென்னும் வடக்கயிற்றைத் தொங்கவிடுகிறார். அது இவ்வுலக நிர்ப்பாக்கிய அலைகளினின்று கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை இழுத்துப் பரலோகமட்டும் தூக்கி வைக்கின்றது என்று அர்ச். கிறிசோஸ்தம் அருளப்பர் சொல்கிறார்.