இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

47. நித்திய சீவியத்தைப்பற்றித் துன்பமெல்லாவற்றையும் சகிக்க வேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நம்மைப்பற்றி நீ இதுவரையில் பட்ட பிரயாசைகளில் மனதைரியத்தைக் கைவிடாதே, துன்ப துரிதங்களால் நீ கொஞ்சமேனும் கலக்கம் கொள்ளாதே; ஆனால் என்ன சம்பவித்தாலும் வாக்குத்தத்தத்தை நினைத்துத் திடனையும் ஆறுதலையும் அடையக்கடவாய். சகல அளவும் சகல அணையும் கடந்த வகையாய் நாம் சம்பாவனை கொடுக்க வல்லவர். இங்கே நீ வெகுகாலத்துக்கு உழைக்க மாட்டாய்; எப்போதும் உன்னைத் துன்ப துரிதங்கள் வருத்தப்படுத்தவும் மாட்டாது. கொஞ்சம் பொறுமையாயிரு, தீமைகள் வெகு சீக்கிரமாய் ஒழிந்து போவதைக் காண்பாய். பிரயாசமும் கலக்கமும் ஒழியும் காலம் வரும். காலத்தோடு கடந்து போகிறதெல்லாம் சொற்பமும் நிலையற்றதுமாம்.

2. ஆதலால் நீ செய்து வருவதை நன்றாகச் செய்; நமது திராட்சைத் தோட்டத்தில் பிரமாணிக்கமாய் வேலை செய். “நாமே உன் சம்பாவனையாயிருப்போம்.” எழுது, படி, பாடு, அழு, மெளனமாயிரு, வேண்டிக்கொள், துன்ப துரிதங்களைத் தைரியமாய்ச் சகித்துவா. நித்திய சீவியமானது இந்த யுத்தங்களுக்கும், இவைகளை விட இன்னும் அதிகப் பெரிய யுத்தங்களுக்கும் ஏற்ற சம்பாவனையா யிருக்கிறது. தேவனால் நியமிக்கப்பட்ட நாளில் உனக்குச் சமாதானம் உண்டாகும். தற்காலத்தைப் போல அக்காலத்தில் பகலுமிராது, இரவுமிராது; ஆனால் நித்தியப் பிரகாசம், அளவில்லாத சோதி, நிலையுள்ள சமாதானம், அச்சமற்ற இளைப்பாற்றி உண்டாகும். “சாவுக்குரிய இச்சரீரத்தினின்று என்னை விடுதலை செய்பவர் யார்?” என்று அப்போது சொல்ல மாட்டாய். “ஐயோ! என் பரதேசக் காலம் எவ்வளவோ நீடித்திருக்கின்றது” என்றும் கூவ மாட்டாய். ஏனெனில் மரணம் அழிந்து போயிருக்கும், இரட்சணியமோ நித்தியமாய் இருக்கும்; அப்பொழுது ஏக்கமிராது, ஆனால் பேரானந்தத்தால் அகமகிழ்வாய், இனிமையும் அழகுமுள்ள சபையில் வாழ்வாய். இதோ அர்ச்சியசிஷ்டவர்கள் மோட்சத்தில் தரித்திருக்கிற நித்திய முடிகளையும், இவ்வுலகின்கண் நிந்திக்கப்பட்டு, சீவிக்கத் தகுதி யற்றவர்களென மதிக்கப்பட்டவர்கள் இப்போது அடைந்திருக்கிற ஆச்சரியத்துக்குரிய மகிமையையும் நீ பார்த்தால், அந்தக் கணமே உன்னைத் தரை வரையில் தாழ்த்தி ஒரேயொருவன் பேரில் அதிகாரம் செலுத்துகிறதை விட எல்லாருக்கும் கீழ்ப்பட்டிருக்க ஆசைப் படுவாய். இச்சீவியத்தின் சந்தோஷ நாட்களை விரும்ப மாட்டாய், அதற்கு மாறாக சர்வேசுரனைப் பற்றி அதிகமாய்த் துன்பப்படுவதில் சந்தோஷம் கொள்வாய், மனிதருக்குள்ளாக ஒரு மதிப்புமில்லா தவன் என்று எண்ணப்படுவது பெருத்த இலாபமென்று கண்டு பிடிப்பாய்.

3. ஆ! இதை நீ கண்டுபிடித்து, இது உன் இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்குமானால், ஒரேயொரு விசை முதலாய் நீ முறையிட எப்படித் துணிவாய்? நித்திய சீவியத்தை வேண்டிப் பிரயாசையான எல்லாவற்றையும் சுகிக்க வேண்டியதில்லையோ? மோட்ச இராச் சியத்தைச் சம்பாதிக்கிறது, அல்லது அதை இழந்துபோகிறது சொற்பக் காரியமல்ல. ஆகையால் உன் முகத்தைப் பரலோகம் நோக்கித் திருப்பு: அங்கே நம்மையும் நம்முடன் நமது சகல அர்ச்சிய சிஷ்டவர்களையும் பார்; இவர்கள் இவ்வுலகத்தில் பெருத்த யுத்தம் செய்தார்கள், ஆனால் இப்போது சந்தோஷப்படுகிறார்கள், இப்போது ஆறுதலடைகிறார்கள், இப்போது அச்சமற்றிருக்கிறார்கள், இப்போது இளைப்பாறுகிறார்கள், முடிவில்லாத காலத்திற்கு நம்மோடு நமது பிதாவின் இராச்சியத்தில் நிலைபெற்றிருக்கிறார்கள்.

யோசனை

இச்சீவியம் நமக்குப் பாரமாய்த் தோன்றும்போது, இப்பரதேச துன்பங்களில் நாம் மூழ்கிப் போகவிருக்கும் தருணத்தில், நமது கண்களை ஏறெடுத்து, நமது இரட்சணியத்தின் உதய காலத்தை நோக்கிப் பார்ப்போமாக! ஏனெனில் சாவுக்குரிய சரீரம் கொஞ்சங் கொஞ்சமாய் அழிவை நாடுகிறது. “ஆனால் உள்ளரங்க மனிதன் நாளுக்கு நாள் தன்னைப் புதுப்பிக்கிறான்.” காத்திருப்போமாக; சமாதானமாய்ச் சகித்துக் கொள்வோமாக: இளைப்பாற்றி நேரம் நெருங்கி வருகின்றது. நிமிஷத்தில் கடந்துபோகும் இச்சீவியத்தின் சொற்ப துன்பங்கள் நம்மை மிகவும் உயர்த்தி அளவற்றதும் கனமானதுமான நித்திய மகிமையை நம்மிடத்தில் விளைவிக்கின்றன. இவ்வுலகத்தில் கொஞ்சம் களைப்பு, கொஞ்சம் பிரயாசையுண்டானால் அதனாலென்ன? நாம் கடந்து போகிறோம்; “இவ்விடத்தில் நமக்கு நிலையான பட்டணமில்லை.” சேசுநாதர் தமது பிதாவின் அரண் மனையில் நமக்கு ஓர் இடம் ஆயத்தம் செய்யும்படியாக நமக்கு முன்பு போயிருக்கிறார். பிறகு அவர் வருவார், நம்மைத் தம்முடன் கூட்டிப் போவார். அவருடன் நாமும் வாசம் செய்வோம். ஓ, என் இரட்சகரே! என் ஆத்துமம் உம்மைத் தேடுவதில் களைத்துப் போகின்றது. “தாகத் தினால் வருந்தும் கலைமான் தண்ணீரூற்றைத் தேடுவது போல் என் ஆத்துமம் உம்மை ஆவலோடு தேடுகின்றது.” ஆண்டவரே! எழுந் தருளி வாரும்! தாமதியாதேயும்; நாங்கள் உம்மைவிட்டு அகன் றிருக்கும்போது “சாவின் நிழலில் உட்கார்ந்திருக்கிறோம்.” ஆண்ட வரே! விரைந்து வாரும், உமது சமூகத்தின் பிரகாசத்தை எங்கள் மேல் வரவிடும். பரலோக ஜெருசலேமில் செம்மறியாட்டுக் குட்டியின் சிம்மாசனத்தருகில் அந்தத் திவ்விய பிரகாசம் எங்களைக் கூட்டிக் கொண்டு போகக் கடவது. அவ்விடத்தில் தேவசிநேக மிகுதியால் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்துள்ள தூதரும் அர்ச்சியசிஷ்ட வர்களும் சர்வேசுரனைத் துதித்து: பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்று நித்தியமாய் வாழ்த்துகிறார்கள். “நானோ ஆண்டவரே! பாபிலோன் நதிக்கரையோரமாய் நின்று சீயோனை நினைத்தழுதேன். என் ஆத்துமமே! ஆறுதலடையக் கடவாய்! செவி கொடுத்துக் கேள்! தெய்வீக பத்தா தூரத்தில் வருகிற மெல்லிய தொனி உன் காதில் விழ வில்லையோ? இன்னுமோர் நிமிஷத்தில் நீ அவரைக் காண்பாய்; இன்னுமோர் நிமிஷம் கடந்து நீ அவரிடத்தினின்று இனியொரு போதும் பிரிக்கப்படப் போகிறதில்லை.