இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

46. பிறர் நாவினால் நம்மைக் குத்துகையில் நாம் சர்வேசுரன் பேரில் நம்பிக்கை வைக்க வேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! உறுதியாயிரு. நம்மை நம்பு. வார்த்தைகள் வார்த்தைகளேயன்றி, வேறென்ன? அவைகள் ஆகாயத்தில் பறக்கின்றனவேயன்றிக் கல்லை மோதி உடைப்பதில்லை. நீ குற்றவாளியானால், நீ உன்னைத் திருத்திக் கொள்ள நினை. நீ குற்றவாளி இல்லாவிடில், தேவனைப் பற்றி அந்த அவமானத்தைச் சகிக்க நினை. பலமான அடிகளை இன்னும் பொறுக்கமாட்டாத நீ வார்த்தைகளையாவது சற்றுக்குச் சற்றே சகிக்கக்கடவாய். நீ இன்னும் இவ்வுலகப் பற்றுதலுள்ளவனாய் இருப்பதாலும், மனிதர் சொல் வதையும் செய்வதையும் அதிகமாய்க் கவனிக்கிறவனாய் இருப் பதாலும் அல்லவா அவ்வளவு சொற்ப அம்புகள் உன் இருதயத்தை ஊடுருவிக் குத்துகின்றன. நிந்தனைக்குப் பயப்பட்டல்லவா உன் தப்பிதங்களைப் பற்றிக் கண்டிக்கப்படாதபடிக்கு அவைகளை மறைக்க வீண் சாக்குபோக்குகளைத் தேடுகிறாய்.

2. ஆனால் உன்னை அதிக நன்றாய்ச் சோதித்துப் பார்த்தால் இன்னும் உன்னிடத்தில் உலகமும், மனிதருக்குப் பிரியப்பட வேண்டுமென்ற வீண் ஆசையும் இருப்பதையறிந்து கொள்வாய். ஏனெனில் நீ சிறுமைப்படவும், உன் தப்பிதங்களுக்காக வெட்கம் அனுபவிக்கவும் அஞ்சுவதால் நீ மெய்யான தாழ்ச்சியுள்ளவன் அல்ல என்றும் உலகத்துக்கு நீ மெய்யாகவே மரித்தவன் அல்லவென்றும், உலகம் உனக்குச் சிலுவையிலறையப்பட்டதாக இல்லையென்றும் தெளிவாகிறது. ஆனால் நமக்குச் செவிகொடுப்பாயானால், மனித ருடைய பத்தாயிரம் வார்த்தைகளைக் கவனிக்க மாட்டாய். இதோ! எண்ணக்கூடிய துஷ்டத்தனமெல்லாம் நிறைந்த சகல அவதூறுகள் உனக்கு விரோதமாகச் சொல்லப்பட்டாலும், அவைகளைக் கவனியாமலும், ஒரு துரும்பைவிட அதிகமாய் எண்ணாமலு மிருப்பாயாகில், அவைகளால் உனக்கு வரும் நஷ்டமென்ன? உன் தலைமயிரில் ஒன்றை முதலாய் அவைகள் உதிர்க்கக் கூடுமோ?

3. மனவொடுக்கமின்றியும் தேவனுடைய சன்னிதானத்தில் நடக்காமலும் சீவிக்கிறவன் நிந்தையான ஒரே வார்த்தையால் எளிதாய்க் கலங்கிப் போகிறான். நமது மட்டில் நம்பிக்கை வைத்துத் தன் சுய தீர்மானத்தில் நிலைகொள்ள ஆசியாதவனோ, மனிதனுக்கு நிச்சயமாகப் பயப்பட மாட்டான். ஏனென்றால் நாமே நீதிபதி, சகல இரகசியங்களையும் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு காரியமும் எவ்விதம் நடந்ததென்று நமக்குத் தெரியும்; நிந்திக்கிறவனையும், நிந்திக்கப்பட்டவனையும் நாம் அறிவோம். நமது திருவுளத்தின் பேரிலேதான் இன்னின்ன பேச்சு உச்சரிக்கப்பட்டது. நமது உத்தரவின் மேலேதான் இன்னின்ன துரதிர்ஷ்டம் சம்பவித்தது. ஏனெனில் “அநேகருடைய இருதயங்களினின்று நினைவுகள் வெளி யாகும்படிக்கேயாம்.” குற்றவாளிக்கும் மாசற்றவனுக்கும் நாம்தான் நடுத்தீர்ப்போம். ஆனால் முன்னதாய் இருவரையும் இரகசியமான தீர்மானத்தால் பரிசோதிக்கச் சித்தமானோம்.

4. மனிதருடைய சாட்சி அநேகமுறை ஏமாற்றிவிடுகிறது; நமது தீர்மானமோ மெய்யானதும் நிலைமையுள்ளதுமாய் இருக்கிறது, ஒன்றும் அதை மாற்றமாட்டாது. அநேகமாய் அது மறைந்திருக் கிறது; கொஞ்சம் பேருக்கு மாத்திரம் அது ஒவ்வொரு காரியத்திலும் வெளியாகின்றது. ஆனால் மதியீனருடைய கண்களுக்கு அது நியாயமாகத் தோன்றாத போதிலும் பிசகிப் போவதில்லை, பிசகிப் போகவும் முடியாது. ஆகையால் எந்தத் தீர்மானத்திற்கும் நம்மை நாடி வர வேண்டியது. தன் சுய அபிப்பிராயத்தின் பேரில் ஊன்றி யிருக்கக் கூடாது. ஆனபடியால்தான் நீதிமானுக்குச் சர்வேசுர னுடைய கட்டளையால் என்னென்ன சம்பவித்தபோதிலும், அவன் மனங்கலங்க மாட்டான். அவன்பேரில் அநியாயமாய் என்னென்ன குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அதைப் பற்றிக் கவலை கொள்ள மாட்டான். அதுபோல் மற்றவர்கள் சரியான நியாயங்களைக் கொண்டு அவன் குற்றவாளியல்லவென்று எண்பித்தாலும், அதனால் வீண் பெருமைகொள்ளவும் மாட்டான். ஏனெனில், இருதயங்களைப் பரிசோதிக்கிறவர் நாமே என்று அறிவான். வெளித் தோற்றத்தின்படி தீர்மானிக்க மாட்டான். மனிதருடைய தீர்மானத்தில் புகழ்ச்சிக் குரியதாக எண்ணப்படுவது அநேக முறை குற்றமுள்ளதாக நமது கண்களுக்கு முன்பாகக் காணப்படுகின்றது.

5. (சீஷன்) ஆண்டவராகிய சர்வேசுரா! நீதியும் திடமும் பொறுமையுமுள்ள நடுவரே! மனிதருடைய பலவீனத்தையும் துர்க்குணத்தையும் அறிந்திருக்கிறவரே! எனக்குப் பலமும் முழு நம்பிக்கையுமாயிரும், ஏனெனில் என் மனசாட்சியின் அத்தாட்சி எனக்குப் போதுமாயில்லை. நான் அறியாததை நீர் அறிவீர்; ஆனதால் நான் கண்டிக்கப்படும்போதெல்லாம் என்னைத்தானே தாழ்த்திக் கொண்டு சாந்த குணத்தோடு அதெல்லாவற்றையும் சகிக்க வேண்டியதாயிருந்தது. நான் அவ்விதம் செய்யாமல் போனதற் கெல்லாம் என்மேல் இரக்கம் வைத்து பொறுத்தல் தந்தருளும்; இனி அதிகப் பொறுமையோடு சகிக்க எனக்கு உதவி செய்தருளும். ஏனெனில் தன்னையே சரியாய் அறியாத என் மனசாட்சியை நம்பி என்னிடம் குற்றமில்லை என்று இருப்பதை விட, உமது அளவில்லாத இரக்கத்தை நம்பி பொறுத்தல் அடைவதே மேலானது.

“என் மனச்சாட்சி என்னிடத்தில் ஒரு குற்றமுமில்லையென்று சொன்னாலும், நான் நீதிமானென்று இதைப்பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடாது;” ஏனெனில் உமது இரக்கமின்றி “இவ்வுலகில் வாழும் மனிதன் எவனும் உமது சமூகத்தில் பரிசுத்தனாக மாட்டான்.

யோசனை

“மற்றவர்கள் உங்களைச் சபிக்கும்போதும், உங்களை நிர்ப்பந்தப் படுத்தும்போதும், உங்கள் பேரில் சகலவித அவதூறு சொல்லும் போதும், நீங்கள் பாக்கியவான்கள்; அப்போது சந்தோஷப்படுங்கள், ஏனெனில் பரலோகத்தில் உங்கள் சம்பாவனை மகத்தானதா யிருக்கும்.” ஆயினும் நமக்குள்ளாக எத்தனையோ பேர், அந்த வாக்குத் தத்தத்தைக் கவனியாமல், மனிதருடைய சம்பாஷணைகளையும் தீர்மானங்களையும் கேட்டுக் கலக்கத்துக்கு உள்ளாகிறார்கள். பிறர் நம்மைத் தாழ்த்துவதை நாம் சகிப்பதில்லை; எவ்வித பாடுபட்டாவது புகழ்ச்சியடையத் தேடுகிறோம். கீர்த்தியடைய வேண்டுமென்கிற ஆசையினால், சர்வேசுரனையும் அவருடைய போதகங்களையும் வாக்குத்தத்தங்களையும் மறந்து விடுகிறோம். இது ஆங்காரத்தினால் விளையும் தீமை. நமது இருதயத்தில் ஆங்காரம் குடிகொண்டிருக் கின்றது. நிந்தையினாலும், அவமானத்தினாலும், அவதூறினாலும் உனக்கு உண்டாவதென்ன? நீ கஸ்திப்படுவது ஏன்? வருத்தப்படுவது ஏன்? அநியாயமாய் உன் பேரில் அபாண்டமான குற்றஞ்சாட்டு கிறார்கள் என்று முறையிடுகிறாயோ? அப்படியானால் நியாயமாய் உன்பேரில் குற்றம் சாட்டினால் உனக்குத் திருப்தியாயிருக்குமோ? உன்பேரில் அவர்கள் சாட்டும் குற்றத்தை நீ கட்டிக் கொள்ளவில்லை யென்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் சாட்டாத குற்றங்கள், அவர்கள் அறியாத குற்றங்கள் நீ எத்தனையோ கட்டிக் கொண்டிருப் பாய். அவைகளுக்கெல்லாம் உத்தரிக்கிறதெப்படி? அவைகளைப் பற்றி நீ தேவனிடத்தில் கணக்குக் கொடுக்க வேண்டிய காலம் வரும், சீக்கிரம் வரும். அந்நேரத்தை நினைத்துப் பார்த்தால், உனக்கு இவ்வுலகில் உண்டாகிற நிந்தை அவமானங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டாய், ஏக்கம் கொள்ள மாட்டாய், ஆங்காரப்படமாட்டாய்.