இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

45. எல்லாருடைய பேச்சையும் நம்பலாகாது, பேச்சிலே தப்பிதம் செய்வது எளிது.

1. (சீஷன்) ஆண்டவரே! மனிதன்பேரில் வைக்கிற நம்பிக்கை வீணானது என்பதால், என் இடையூறுகளில் நீரெனக்கு உதவி புரிந்தருளும். நான் பிரமாணிக்கத்தைக் காண்பேன் என்று நினைத்திருந்த இடத்தில் எத்தனையோ முறை அதைக் காணாமல் போனேன். காண்பேன் என்று நினையாத இடத்தில் எத்தனையோ முறை அதைக் கண்டேன். ஆகையால் மனிதரை நம்புதல் வியர்த்தம். என் சர்வேசுரா! நீர் மட்டும் நீதிமான்களின் இரட்சணியமாயிருக்கிறீர். ஆண்டவராகிய என் தேவனே! எங்களுக்குச் சம்பவிக்கிற சகல காரியங்களிலும் உமக்குத் தோத்திரம் உண்டாகக் கடவது.

2. நாங்கள் பலவீனர், நிலையற்றவர்கள், வெகு சீக்கிரத்தில் மோசம் போகிறோம், மாறிவிடுகிறோம். ஒருபோதும் எந்த மோசத் துக்கும் எந்த விசனத்திற்கும் உள்ளாகாதிருக்கும் படியான ஜாக்கிரதையோடும் எச்சரிக்கையோடும் சகலத்திலும் நடந்துகொள்ளக் கூடுமானவன் யார்? ஆனால் ஆண்டவரே! உமது பேரில் நம்பிக்கை வைத்து, கபடற்ற மனதோடு உம்மைத் தேடுகிறவன் அவ்வளவு இலேசாய்த் தவறிப்போக மாட்டான். அவன் யாதோர் துன்பத்தில் அகப்பட்ட போதிலும், அவன் அதில் எவ்விதமாய்ச் சிக்கிக் கொண்டிருந்தாலும், சீக்கிரத்தில் உம்மால் விடுதலையுமாவான், ஆறுதலுமடைவான். ஏனெனில் உம்மை நம்பிக்கொண்டே வருகிறவர்களை நீர் கைவிடுவதில்லை. தன் சிநேகிதனுக்கு நேரிடும் சகல துன்பங்களிலும் எப்போதும் அவனுக்குப் பிரமாணிக்கமாய் இருக்கிற நேசனைக் காண்பது அரிது. ஆண்டவரே! நீர் ஒருவர் சகலத்திலும் மிக்க பிரமாணிக்கமுள்ளவர்; உம்மையன்றி அப்பேர்ப்பட்டவர் வேறு எவருமில்லை.

3. “என் மனது கிறீஸ்துநாதரின் மேல் ஊன்றி உறுதிப்படுத்தப் பட்டது” என்று சொன்ன பரிசுத்த ஆத்துமா எவ்வளவோ ஞான முள்ளது (அர்ச். ஆகத்தம்மாள்). எனக்கும் அப்படியிருக்குமானால், மனிதருக்குப் பயந்து எளிதாய்க் கவலைக்குள்ளாக மாட்டேன்; அவர்கள் பேசும் கொடிய சொற்களால் அசைக்கப்பட மாட்டேன். எவன் சகலத்தையும் முன்னறிந்து வரப்போகிற தின்மைகளைப் பற்றி எச்சரிக்கையாயிருக்கக் கூடும்? நாம் முன்னதாய் அறிந்த தின்மை களாலேயே அநேக முறை குத்தப்படுகிறோமானால், அறியாத தின்மை களால் எவ்வளவோ வருத்தமாகும். ஆனால் நிர்ப்பாக்கியனான நான் முன்ஜாக்கிரதையாய் ஏன் இராமல் போனேன்? மேலும் அவ்வளவு இலேசாய்ப் பிறரை ஏன் நம்பினேன்? ஐயோ! நாங்கள் மனிதர், அநேகரால் சம்மனசுகளாக நாங்கள் மதிக்கப்பட்டு அழைக்கப்பட்ட போதிலும், நாங்கள் பலவீனமுள்ள மனிதரேயன்றி வேறல்ல. ஆண்டவரே! நான் உம்மைத் தவிர யாரை நம்புவேன்? நீர் உண்மையா யிருக்கிறீர். நீர் எவராலும் ஏமாற்றப்படக் கூடியவருமல்ல, எவரையும் ஏமாற்றுபவருமல்ல. ஆனால் “எந்த மனிதனும் பொய்யன்,” பலவீனன், நிலையற்றவன், பிசகிப் போகிறவன், விசேஷமாய்ப் பேச்சில்; ஆகவே ஒருவன் யாதொன்றைக் கபடற்றதனமாய்ச் சொல்கிறான் என்று தோன்றும்போது முதலாய் அவ்வளவு எளிதாய் அதை நம்ப முடியாது.

4. “மனிதனுடைய சத்துருக்கள் அவனுடைய வீட்டு மனிதரே” என்றும், “கிறீஸ்துவானவர் இதோ இங்கே, அதோ அங்கே இருக்கிறாரென்று யார்தான் சொன்ன போதிலும், நம்பத்தகாது” என்றும் சொல்லி, நாங்கள் மனிதரிடத்தில் எச்சரிக்கையாய் நடந்து கொள்ளும்படி எவ்வளவோ ஞானத்தோடு எங்களுக்கு முன்னறி வித்திருக்கிறீர். எனக்கு உண்டான நஷ்டத்தைக் கொண்டு அதை நான் நன்றாய் அறிந்து கொண்டேன். அதுதான் இனிமேல் நான் மதியீனனாயிராமல் அதிக எச்சரிக்கையாயிருக்க உதவக் கடவது! மவுனமாயிரு, இரகசியத்தைக் காப்பாற்று, சொன்னதை யாரிடமும் சொல்லாதே என்று ஒருவன் என்னிடம் சொல்லுகிறான். நான் மவுனமாயிருந்து, அவன் சொன்னது இரகசியமென்று நம்பி யிருக்கும்போது, நான் காப்பாற்ற வேண்டுமென்று கேட்ட இரகசியத்தை அவனே காப்பாற்ற மாட்டாமல், ஒருமிக்க என்னையும் தன்னையும் காட்டிக் கொடுத்துச் சதி செய்து விட்டு அப்புறம் போய் விடுகிறான். ஆண்டவரே! இவ்வித வீண் இரகசிய அறிக்கைகளில் நின்றும், இவ்வித வாயாடி மனிதரிடத்தினின்றும் என்னைக் காப் பாற்றும்! அவர்களுடைய கையில் நான் விழாதிருக்கக் கடவேன். நானும் அவ்விதக் காரியங்களை ஒருபோதும் செய்யாதிருக்கக் கடவேன். உண்மையும் நிச்சயமுமான வார்த்தையை என் வாய்க்குத் தந்தருளும்; கபடான பேச்சு எதையும் என் நாவை விட்டுத் தூரமாய் அகற்றிவிடும். என்னால் பிறரில் சகிக்கப்படாததை நானே செய்யா திருக்கக் கவனம் செலுத்திவரக் கடவேன்.

5. மற்றவர்களைப் பற்றி ஒன்றும் பேசாதிருப்பதும், ஆராய்ந்து பார்க்கிறதற்கு முந்தி எதையும் நம்பாதிருப்பதும், கேட்டது எதையும் இலேசாய் மற்றவர்களிடம் சொல்லாதிருப்பதும், சிலருக்கு மாத்திரம் தன் மனதைத் திறந்து காண்பிப்பதும், இருதயத்தின் கருத்துக்களுக்கு சாட்சியாக உம்மை எப்போதும் தேடுவதும், பிறருடைய வார்த்தை களால் அலைக்கழிக்கப்படாதிருப்பதும், ஆனால் தன் உள்ளத்திலும் வெளிப்புறத்திலும் சகலமும் உமது சித்தத்திற்கு இஷ்டமானபடி நிறைவேற ஆசிப்பதும் எவ்வளவோ நேர்த்தியும் அமைதியுமா யிருக்கின்றது. மனிதருடைய கண்ணுக்குக் கனமாய்க் காணப் படுவதை விலக்குகிறதும், நாம் மற்றவர்களால் புகழப்படும்படியாக எதையும் ஆசிக்காமலிருப்பதும், நம் சீவியத்தைத் திருத்தவும் நம் பக்தியைப் பெருகச் செய்யவும் அத்தியந்த கவனத்தோடு முயன்று வருவதும், தேவ வரப்பிரசாதத்தைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவோ உறுதியான உபாயம். தக்க காலத்துக்கு முன்னே தங்கள் புண்ணியக் செயல்கள் பிரசித்தமாகிப் புகழப்பட்டதினால், எத்தனையோ பேருக்குக் கேடு நேர்ந்தது. தந்திர சோதனையிலும் போரிலுமே கடந்து போகிற இந்த அழிவுக்குரிய சீவிய காலத்தில் தாங்கள் பெற்றுக்கொண்ட தேவ வரத்தைக் காப்பாற்றுவதற்கு, மெளன மானது எத்தனையோ பேருக்குப் பிரயோசனமாயிற்று.

யோசனை

மனிதரை நம்பாதே, ஏனெனில் இப்போதோ, இன்னும் கொஞ்சத்திலோ, உன்னைக் கைவிட்டு விடுவார்கள். மனிதன் பலவீனன், விவேகமற்றவன், திடமற்றவன், யோசனையற்றவன், சகலத் திலும் சுயபெருமை கொண்டாடுகிறவன், கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டாலும், உன்னை விட்டு அகன்று போவான். சொற்ப லாபத்துக்கு இடமிருந்தால், உடனே பகைவனாக மாறிப்போவான். அப்போது தனது சுயரூபத்தைக் காண்பிக்கிறான். அவன் உன்னை நேசித்தது மெய்தான். ஆனால் தன்னைப்பற்றியே. ஏதோவொரு லாபத்தை முன்னிட்டே உன்னை நேசித்தான். இந்தப் பொய்யான பூலோகச் சிநேகிதரை விட்டு ஓடிப்போ. ஒருவன் உன்னைக் காட்டிக் கொடுக்கிறான், மற்றொருவன் உன்னை மோசம் செய்கிறான். அவர்களுடைய தயவை நீ தேடும்படி நேரிடுகிறதோ? “சகலரும் சாக்குப்போக்குச் சொல்லத் துவக்குகிறார்கள், முந்தினவன்: நான் ஒரு நிலம் வாங்கினேன், அதை நான் போய்ப் பார்க்க வேண்டியிருக் கிறது, என்னை மன்னிக்கும்படி மன்றாடுகிறேன் என்கிறான். மற்றொருவன்: ஐந்து ஜோடி மாடுகள் வாங்கினேன். அவைகளை வண்டியில் கட்டிப் பரீட்சை பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க மன்றாடுகிறேன் என்கிறான். வேறொருவன்: நான் இப்போதுதான் கலியாணம் செய்தேன். ஆனதால் என்னால் வரமுடியாது என்கிறான்.” இதுதான் மனிதருடைய சிநேகம். ஆண்டவரே! நீர் ஒருவரே உம்மை நேசிக்கிறவர்களை, உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடுகிறதில்லை; அவர்களைத் தேற்றரவு செய்யவும், அவர்களுக்கு ஆறுதல் வருத்துவிக்கவும், எப்போதும் அவர்களண்டையில் இருக்கிறீர்; அவர்களுடைய அழுகைப் புலம்பலுக்குச் செவிகொடுக்கிறீர்; அவர்களுடைய முறைப்பாடுகளைக் கேட்கிறீர்; அவர்களுடைய கண்ணீரை ஏற்றுக்கொள்கிறீர்; எல்லோரையும் அரவணைக்கிறீர். மனிதர் கண்ணுக்கு முன்பாக நிந்தைக்குரிய மனிதனை, சகலராலும் கைவிடப்பட்டவனை நீர் ஏற்றுக்கொண்டு, அவனுக்கு உதவி புரிகிறீர். அவனுடைய கஸ்தியின் படுக்கையில், ஆண்டவரே! அவனுக்கு ஒத்தாசை செய்கிறீர். அவன் தன் வியாதியில் இளைப்பாற அவன் படுக்கையை உமது கரம் திருப்பிப் போடுகின்றது; இவ்வுலகத்தில் அவனுடைய வேலை முடியும்போது, நித்திய சமாதானத்தில் அவனை எடுத்துக் கொள்கிறீர்.