இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

44. வெளிக் காரியங்களில் உட்பட்டு கலங்கக்கூடாது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ அநேக காரியங்களை அறியாமல் இருப்பது உனக்கு நலம்; நீ “பூலோகத்திற்குச் செத்தவனாகவும், உனக்குப் பூலோக முழுமையும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறதாகவும்” எண்ண வேண்டியது. மேலும் அநேக காரியங்களைக் காது கேளாதவன் போல விட்டுவிட்டு உன் மனச் சமாதானத்துக்கு அடுத்ததை அதிகமாய்க் கவனிக்க வேண்டியது. வாக்குவாதங்களுள் புகுவதைவிட, உனக்குப் பிரியமில்லாத அபிப்பிராயங்களைப் பாராமல் ஒவ்வொருவனையும் தன்னிஷ்டப்படி நினைக்க விட்டு விடுவது அதிக உத்தமம். நீ சர்வேசுரனோடு ஒரே மனமுள்ளவனாய் அவருடைய தீர்மானம் எதுவோ அதுவே சரியென்றிருந்தால், உன் கொள்கை தப்பென்று பிறர் கூறுவதை அதிக எளிதாய்ச் சகிப்பாய்.

2. (சீஷன்) ஆண்டவரே! எங்களுடைய மதிகேட்டை என்ன வென்று சொல்லலாம்? ஒரு இலெளகீக நஷ்டத்தைப் பற்றிக் கண்ணீர் விடுகிறோம். சொற்ப இலாபத்தை முன்னிட்டுப் பிரயாசைப்படுகிறோம், ஓடுகிறோம். ஆனால் ஆத்தும நஷ்டங்களைக் கவனிக்கிறதில்லை, கவனித்தாலும் தாமதத்தோடு கவனித்து வருகிறோம். சொற்பப் பிரயோசனமுள்ள அல்லது சுத்தமாய்ப் பிரயோசனமற்ற காரியத்தைப்பற்றி வெகுவாய்க் கவனிக்கிறோம்; மிகவும் அவசரமான காரியத்தையோ, அசட்டையாய் விட்டு விடுகிறோம்; ஏனெனில் நம் ஆத்துமம் முழுமையும் பற்பல வெளிக் காரியங்களில் மூழ்கிக் கவலைப்படுகிறது. அது சீக்கிரத்தில் திரும்பித் தனக்குள்ளே வந்து சேர்ந்தால் தவிர மற்றபடி வெளிக் காரியங்களின் பேரில் தன் கவனமெல்லாம் செலுத்திக் கொண்டிருக்கும்.

யோசனை

நாளைக்கு செத்துப்போவாய் என்று நீ அறிந்திருந்தால், பூலோகக் காரியங்களாலும் அதில் நடக்கும் சம்பவங்களாலும், உன்னைப் பற்றிச் சொல்லப்படும் வார்த்தைகளாலும் உனக்கு உண்டாகக்கூடும் பிரயோசனம்தான் என்ன? சரி, நாளைக்குச் சாவாய் என்று நினைத்துக் கொள். சீவியகாலம் சொற்பம்; நித்தியம் உனக்குத் திறக்கப்படும் போது நீ எவ்விதமிருக்க ஆசிக்கிறாயோ அவ்விதமிருக்க இப்போதே துவக்கு; கல்வியாகட்டும், ஆஸ்தியாகட்டும், பூலோகத்தில் உண்டான எந்தப் பொருளாகட்டும், தேவனுடைய தீர்வையின்போது உனக்கு ஒன்றுக்கும் பயன்படாது. உன் செயல்களை மாத்திரம் உன்னுடன் கொண்டுபோவாய். அர்ச். லூக்காஸ் எழுதியிருக்கிறதாவது: “பணக்காரனான ஒரு மனிதனுடைய வயல் மிகுந்த பலன் தந்தது. ஆதலால் எனக்குண்டான பலன்களைச் சேகரித்து வைக்க எனக்கு இடமில்லாமையால் என்ன செய்வேன் என்று தனக்குள் சிந்தித்து, தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாவது: என் களஞ்சியங்களை இடித்து அதிகப் பெரிதானவைகளைக் கட்டுவேன்; எனக்கு விளைந்த யாவற்றையும், என் ஆஸ்திகளையும் அங்கே சேர்த்து வைப்பேன்; அன்றியும் என் ஆத்துமத்தை நோக்கி: ஆத்துமமே! அநேக வருஷங்களுக்கு வைத்திருக்கிற ஆஸ்திகள் உனக்குப் பல உண்டு. ஆதலால் இளைப்பாறு, சாப்பிடு, குடி, விருந்து செய் என்பேன் என்றான். ஆனால் கடவுள் அவனை நோக்கி: மதியீனனே, இந்த இராத்திரியில் உன் ஆத்துமத்தை உன்னிடமிருந்து பறித்துக் கொள்வார்கள்; அப்படியிருக்க நீ சேர்த்து வைத்த பொருள் யாரைச் சேரும்?” என்றருளிச் செய்தார். சர்வேசுரனிடத்தில் செல்வந்தனாயிராமல், தனக்கு இவ்வுலகத் திரவியங்களைச் சேர்க்கிறவன் இவ்விதமாகிறான் என்று எழுதப்பட்டிருக்கிறது.