இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

43. தேவகாரியங்களைச் சேராத வீண் கல்வி.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! மனிதர் அலங்காரமாயும் சூட்சமாயும் பேசும் பேச்சினால் மயங்கிப் போகாதே, ஏனெனில் “சர்வேசுரனின் இராச்சியமானது பேச்சிலேயல்ல, ஆனால் புண்ணியத்தில் அடங்கியிருக்கின்றது.” நமது வாக்கியங்களுக்குக் கவனமாய்ச் செவிகொடு. அவைகள் இருதயத்தில் தேவசிநேக அக்கினியை மூட்டுகின்றன, புத்திக்குப் பிரகாசம் தருகின்றன, மனஸ்தாபத்தைத் தூண்டுகின்றன, அநேக விதமாய் ஆறுதல் வருவிக்கின்றன. நீ பெரிய சாஸ்திரியாகவும் ஞானியாகவும் காணப்பட வேண்டுமென்ற கருத்தோடு ஒருக்காலும் படிக்காதே. அநேக அருமையான காரியங்களைக் கண்டுபிடிப்பதை விட உன் துர்க் குணங்களை அடக்கப் பிரயாசைப்படுவது உனக்கு அதிக நலமாயிருக்கும். 

2. நீ அதிகமாக வாசித்துக் கற்றபின், சகலத்திற்கும் மூலாதாரம் நாமேயென்று எப்பொழுதும் நிச்சயமாய் உணரக்கடவாய். மனிதனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறவர் நாமே. மனிதர் கொடுக்கக் கூடுமானதை விட நாம் சிறியோர்க்கு அதிக தெளிவைக் கொடுக்கிறோம். நாம் யாரிடம் பேசுகிறோமோ, அவன் சீக்கிரமாய் ஞானியாவான். சாங்கோபாங்கத்தில் வெகு வளர்ச்சி அடைவான். அநேக விநோதக் காரியங்களை மனிதரிடத்தில் கற்கப் பிரயாசைப்பட்டு, நம்மைச் சேவிக்க வேண்டிய வழிவகைகளைக் கற்க அற்பமேனும் கவலை கொள்ளாதவனுக்குக் கேடு. சகல மனிதரையும் பாடம் கேட்பதற்கு, அதாவது ஒவ்வொருவருடைய மனச்சாட்சியை சோதிப்பதற்கு, ஆசிரியர்களுக்குள் ஆசிரியரும் சம்மனசுக்களுடைய ஆண்டவருமாகிய கிறீஸ்துநாதர் தரிசனையாகிற காலம் வரும்; “அப்போது தீபம் பிடித்துக்கொண்டு ஜெருசலேமெங்கும் சோதித்துப் பார்ப்பார், இருளில் ஒளிந்திருந்தது எல்லாம் வெளிப்படும்,” வீண் வாக்குவாதம் செய்ய மனிதனுக்கு நாவு எழாது.

3. பத்து வருஷ காலமாக மனிதரிடத்தில் படித்துக் கற்றுக் கொள்வதைவிட, மனத்தாழ்ச்சியுள்ளவன் நித்திய ஜீவியத்தைச் சேர்ந்த இரகசியங்களை அதிகமாய் அறியும்படி ஒரே கணத்தில் அவனுக்கு உயர்ந்த புத்தியை அளிக்கிறோம். பேச்சு சந்தடி யில்லாமலும், தர்க்கம் வாக்குவாதம் இல்லாமலும் நாம் படிப்பிக் கிறோம். நாம் எதைப் படிக்கச் செய்கிறோமென்றால், உலகக் காரியங்களை நிந்திக்கவும், நிகழ் காரியங்களை வெறுத்து நித்திய மானவைகளைத் தேடிச் சுகிக்கவும் சகல நம்பிக்கையும் நமதுபேரில் வைக்கவும், நம்மையன்றி மற்ற எதையும் ஆசியாதிருக்கவும், சகலத்துக்கு மேலாக நம்மைத் தீவிரமாய் நேசிக்கவும் கற்றுக் கொடுக்கிறோம்.

4. அவ்விதம் முழுமனதோடு நம்மை நேசித்ததினால் சிலர் தேவ காரியங்களைக் கற்றுக்கொண்டு அவைகளைக் குறித்து அதிசய மாய்ப் பேசினார்கள். சூட்சமான காரியங்களைப் படிப்பதால் அவர்களுக்கு உண்டாயிருக்கும் இலாபத்தை விட, எல்லாவற்றையும் விட்டு விட்டதால் அவர்களுக்கு அதிக அறிவுண்டாயிற்று. ஆனால் சிலரிடத்தில் எல்லாருக்கும் தகுந்தவைகளையும் வேறு சிலரிடத்தில் அவர்களுக்கு விசேஷித்தவைகளையும் சொல்கிறோம்; சிலரை அடையாளங்களையும் உவமைகளையும் கொண்டு படிப்பிக்கிறோம். வேறு சிலருக்கோ பரம ஒளியை வீசி நமது இரகசியங்களை வெளிப் படுத்துகிறோம். புஸ்தகங்களின் வாக்கியம் எல்லாருக்கும் ஒன்றே யாயினும் அதை எல்லாரும் ஒரே விதமாகக் கண்டுபிடிப்பதில்லை; ஏனெனில் உள்ளத்தில் சத்தியத்தைப் போதித்து இருதயத்தைப் பரிசோதித்து, நினைவுகளையறிந்து செயல்களைத் தூண்டிவருகிற நாம் தான் அவரவர் தகுதிக்குத் தக்கபடி நமது வரங்களை அவரவருக்குப் பகிர்ந்து கொடுக்கிறோம்.

யோசனை

மிகுந்த சிரமத்துடனும் வருத்தத்துடனும் அநேகர் கல்வி சாஸ்திரங்களைக் கற்றுக்கொள்ள முயன்று வருகிறார்கள். “இது வியர்த்தமென்றும் புத்தியின் வேலையும் துன்பமென்றும் கண்டு கொண்டேன்” என்று ஞானியானவர் கூறியிருக்கிறார். இவ்வுலகக் காரியங்களை அறிவதனால் உனக்கென்ன பிரயோசனம்? உலகம் வெகு சீக்கிரத்தில் கடந்து போகும். கடைசி நாளில், நீ உலகத்தில் என்ன கற்றறிந்தாய் என்றல்ல, ஆனால் என்ன செய்தாய் என்றல்லவா உன்னைக் கடவுள் கேட்பார். “நீ நரகத்தை நோக்கி விரைந்து போகிறாய், நரகத்தில் கல்வி சாஸ்திரமில்லை.” வீண் பிரயாசையை விட்டுவிடு. நீ யாராயிருந்தாலும் சரி, சாவுக்குக் காரணமான கனிகளைக் கொடுக்கும் மரத்தை வளர்த்தது போதும். ஆங்காரத்தைப் போஷிக்கும் கல்வியையும், கர்வம் கொள்ளும் சாஸ்திரத்தையும் விட்டு விட்டு, தாழ்ச்சியையும், பரிசுத்ததனத்தையும் பிறர் சிநேகத் தையும் அடையத் தேடுவதே உன் ஏக கவலையாயிருக்கக்கடவது. உன்னையே தாழ்த்தவும், உன் வறுமையையும் நீசத்தனத்தையும் அறியவும் கற்றுக்கொள். அப்போது கடவுள் உன்னிடம் வருவார். அவருடைய ஞான ஒளி உன்னிடம் பிரகாசிக்கும். அப்போது ஞானக் கல்வியைக் கற்பிப்பார். அந்த ஞானக் கல்வியைப்பற்றி சேசுநாதரே சொன்னது என்னவெனில்: “பரலோக பூலோக ஆண்டவராகிய என் பிதாவே! நான் உம்மைத் தோத்தரிக்கிறேன், ஏனெனில் பூலோக ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இந்தக் கல்வியை மறைத்து வைத்தீர். சிறியவர்களுக்கோ அதை வெளிப்படுத்தினீர். ஆனதால் உமக்குத் தோத்திரமுண்டாகக் கடவது” என்று திருவாய் மலர்ந்தருளினார்.