இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

42. மனிதரிடத்தில் சமாதானம் அடையலாம் என்று எண்ணத் தகாது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! யாதொருவன் உன்னைப் போல் நினைப்பதைப் பற்றியும், உன்னுடன் ஒத்து வாழ்வதைப் பற்றியும், அவன்பேரில் உன் மன அமைதியை நாட்டுவாயாகில், நீ கவலைக்கும் கலக்கத்துக்கும் உள்ளாவாய். ஆனால் சதாகாலம் சுயஞ்சீவியராய் நிலைத்திருக்கும் சத்திய சுரூபியை நீ அண்டிப் போனால், உன் சிநேகிதன் உன்னைவிட்டு அகலுவதாலும், அல்லது இறந்து போவ தாலும் அவதைரியத்துக்குள்ளாக மாட்டாய். எந்தச் சிநேகமும் நமதுபேரில் ஊன்றியிருக்க வேண்டியது; இப்பூவுலகில் உனக்கு நல்லவராகக் காணப்படுகிறவர்களையும் உனக்கு மிகவும் பிரிய முள்ளவர்களையும் நம்மைப் பற்றியே நேசிக்க வேண்டியது. நம்மையன்றி எந்தச் சிநேகமும் உறுதியும் நிலையும் கொள்ளாது; நமது பேரில் ஊன்றப்படாத சிநேகம் மெய்யானதுமல்ல, சுத்தமானதுமல்ல. அந்த மானிட நேசத்துக்கு நீ எவ்வளவு மரித்தவனாயிருக்க வேணடியதெனில், கூடுமாயிருந்தால் எவ்வித மனித சகவாசமுமின்றி வாழ நீ ஆசிக்க வேண்டியது. மனிதன் எவ்வளவுக்கு இவ்வுலக ஆறுதல்களைத் தேடாமலிருப்பானோ, அவ்வளவுக்கு சர்வேசுரனை நெருங்கி வருகிறான். அவன் எவ்வளவு ஆழமாய்த் தன்னைத் தாழ்த்தி எவ்வளவிற்கு தன்னையே அதிகமாய் நிந்தித்துக் கொள்கிறானோ, அவ்வளவுக்கு அதிகமாய் உயர்ந்து சர்வேசுரனுடன் ஐக்கியப்படுவான்.

2. ஆனால் யாதொரு நன்மை, தன்னாலேயே தன்னிடத்தில் உண்டென்று மதிக்கிறவன், தேவனுடைய வரப்பிரசாதம் தன்னிடம் வருவதைத் தடுக்கிறான். ஏனெனில் இஸ்பிரீத்துசாந்து தம் தேவ உதவிகளைக் கொடுக்கத் தாழ்ச்சியுள்ள இருதயத்தை எப்போதும் தேடுகிறார். நீ உன்னை முற்றும் பரித்தியாகம் செய்து சிருஷ்டியின் பேரிலுள்ள பற்றுதல் அனைத்தையும் விட்டுவிட அறிவாயாகில், அப்போதுதான் நாம் உன்னிடம் ஏராளமான வரப்பிரசாதத்துடன் வந்து வாசம் பண்ணுவோம். நீ சிருஷ்டிகளை அன்பாய் நோக்கும் போது, சிருஷ்டிகரை நினைக்காமல் போகிறாய். சிருஷ்டிகரைப் பற்றி நீ சகலத்திலும் உன்னை ஜெயிக்கக் கற்றுக்கொள். அப்போது சர்வேசுரனை அறியக்கூடுமாயிருக்கும். சொற்பமான காரியத்தின் பேரிலுள்ள ஒழுங்கற்ற ஆசைப்பற்றுதலும் முதலாய் ஆத்துமத்தின் சுகத்தைக் கெடுத்துச் சர்வ நன்மையாகிய சர்வேசுரனிடத்தில் நின்று அகற்றி விடுகிறது.

யோசனை

சந்நியாசம் சகலத்தையும் பரிசுத்தப்படுத்துகின்றது. பாவத்தைத் தவிர மற்றெதையும் அழித்து விடுவதில்லை. சுபாவ நேசத்தை அது விலக்குவதில்லை; அதற்கு விரோதமாய்ச் சிலவற்றைக் கற்பிக்கின்றது. ஒருவர் ஒருவரை நேசிக்க வேண்டுமென்பது சுவிசேஷக் கட்டளை; “ஒருவர் ஒருவரை நேசிக்கக் கடவோம்” என்று அர்ச். அருளப்பர் அடிக்கடி சொல்கிறார்; “நேசியாதவன் மரணத்தில் நிலைத்திருக் கிறான்.” “சர்வேசுரனை அவன் அறிவதில்லை, ஏனெனில் சர்வேசுரன் நேசமாயிருக்கிறார்.” இராப்போசனத்தின்போது சேசுநாதர் “நேசித்த சீஷன்” அவருடைய இருதயத்தின்மேல் சாய்ந்திருக்கவில்லையோ? ஆனால் நமது நேசம் சுத்தக் கருத்துள்ளதாயிருப்பதற்குச் சர்வேசுரனையே காரணமாகவும், அவருடைய சித்தத்தையே சட்ட மாகவும் கொண்டிருக்க வேண்டியது. அப்படியானால் அது பூலோகத்தைச் சார்ந்த காரியமல்ல, அது ஆத்துமத்தைக் கலக்கத் துக்கு உள்ளாக்குவதில்லை; அது நித்தியத்துக்குச் சம்பந்தப்பட்டிருக் கின்றது. மாறுவதில்லை, எப்போதும் அமைதியாயிருக்கின்றது. இருதய சமாதானத்தைக் கெடுக்கிற பற்றுதல்களை நம்பாதே. கடவுளின் சித்தப்படியே நாம் சகல சிருஷ்டிகளையும் நேசிக்க வேண்டியது. நமது நண்பர் நம்மைவிட்டுப் பிரிந்து போனாலும் சரி, மரித்துப் போனாலும் சரி, நாம் என்றும் ஒரே சீராய் தேவனின் சித்தத்துக்கு அமைந்தவர்களாயிருக்க வேண்டியது. அர்ச். சின்னப்பர் தெசலோனிக்கேயருக்கு எழுதினது: “இறந்து போனவர்களின் விஷயத்தில் சிலர் நம்பிக்கையற்றிருக்கிறார்கள். அவர்களைப் போல நீங்களும் காரியத்தைக் கண்டுபிடியாமல் துக்கம் கொண்டாட வேண்டாம். ஏனெனில் சேசுநாதர் மரித்தார். பிறகு உயிரோடு எழுந் தருளினார் என்று விசுவசிப்போமானால், சேசுநாதருக்குள் மரண நித்திரை போனவர்களையும் சர்வேசுரன் அவரோடு கூட அவ்விதமே எழுந்திருக்கச் செய்வார். ஆண்டவருடைய வார்த்தையை நம்பி நாங்கள் உங்களுக்குத் திட்டமாய்ச் சொல்வது என்னவென்றால், ஆண்டவர் வரவுக்குக் காக்க வைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாம் முன்பு மரித்தவர்களுக்கு முந்தினவர்களாக மாட்டோம். எப்படி யெனில் ஆண்டவர் கட்டளைப்படி அதிதூதன் தொனிக்க, சர்வேசுர னுடைய எக்காளம் முழங்க, வானத்தினின்று அவர் இறங்கி வருவார். அப்போது கிறீஸ்துநாதரிடமாய் மரித்தவர்கள் முந்தி உயிர்ப்பார்கள். பிறகு இக்காலத்தில் உயிரோடு விடப்பட்டிருக்கிற நாமும் அவர் களோடு கூட ஆகாயத்தில் மேகமண்டலங்களின் மேல் எடுக்கப் பட்டு கிறீஸ்துநாதர் முன்பாகப் போவோம். அதன்பிறகு ஆண்டவ ரோடு எப்போதும் இருப்போம். ஆகவே இந்த வார்த்தைகளை நம்பி ஒருவரோடு ஒருவர் தேற்றரவு அடைந்து கொள்ளுங்கள்” என்று எழுதினார்.