இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

40. மனிதன் சுபாவமாய் ஒரு நன்மையும் இல்லாதவன்; அவன் எதைக் குறித்தும் பெருமை பாராட்டக் கூடாது

1. (சீஷன்) ஆண்டவரே! “நீர் மனிதனை நினைப்பதற்கு அவனென்ன? நீர் மனிதப் புத்திரனைச் சந்திப்பதற்கு அவனென்ன?” நீர் உமது வரப்பிரசாதத்தைக் கட்டளையிடுவதற்கு அவன் என்ன பேறுபெற்றவன்? ஆண்டவரே! நீர் என்னைக் கைவிட்டால், நான் எப்படி முறைப்படக் கூடும்? அல்லது நான் கேட்பதை நீர் செய்யாவிட்டால் நான் ஏதாகிலும் பேச நியாயமுண்டோ? சந்தேகமில்லாமல் நான் உண்மையாகவே நினைக்கவும் சொல்லவும் கூடுமானது ஏதென்றால்: “ஆண்டவரே! நான் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் முடியாது, என்னால் உண்டான நன்மையொன்றும் என்னிடம் கிடையாது; சகலத்திலும் வெறுமையாயிருக்கிறேன்; நானாக எப்போதும் ஒன்றுமில்லாமையை நாடுகிறேன். நீர் எனக்கு உதவி செய்து என் உள்ளத்தைச் சீர்படுத்தாவிடில், நான் முழுமையும் வெதுவெதுப்பும் மனத்தளர்ச்சியும் உள்ளவனாய்ப் போகிறேன்.

2. “ஆண்டவரே! நீர் இருக்கிறபடியே எப்போதும் இருக்கிறீர்.” நித்தியத்திற்கும் எப்போதும் உத்தமராயும், நீதியுள்ளவராயும், பரிசுத்தராயும் இருக்கிறீர்; சகலத்தையும் நன்றாயும், நீதியாயும், பரிசுத்தமாயும் செய்கிறீர்; சகலத்தையும் ஞானத்தோடு ஒழுங்கு படுத்துகிறீர். நானோவெனில் புண்ணிய ஜீவியத்தில் வளர்வதை விடப் பின் னுக்குப் போகச் சார்புள்ளவனாய், ஒரே நிலையில் நிலைத்திராமல், ஒரு நாளைக்குள் என் மனம் ஏழுவிசை மாறுகின்றது. ஆயினும் நீர் என் இஷ்டப்பட்டு எனக்கு உதவியாக உமது கரத்தை நீட்டினால், உடனே எனக்கு மிகவும் சுகமாகின்றது; ஏனெனில் நீர் ஒருவரே மனிதர் துணையில்லாமல் என்னை ஆதரிக்கவும், என் மனம் பலவிதமாய் மாறாமல், உமது பக்கமாய் மாத்திரம் திரும்பி உம்மில் இளைப் பாறும்படி என்னை உறுதிப்படுத்தவும் கூடுமானவராயிருக்கிறீர்.

3. ஆனதினால் பக்திச் சுறுசுறுப்படைவதற்காகவாவது, எனக்கு ஆறுதல் அளிக்க மனிதர்க்குச் சக்தியில்லாமல் நான் உம்மையே கட்டாயம் தேடவேண்டியதின் நிமித்தமாவது, நான் சகல மானிட ஆறுதலையும் அகற்றிவிட நன்றாய் அறிந்தால், அப்போதுதான் உமது வரப்பிரசாதத்தினால் சகலமும் கைகூடும் என்று நம்பவும், புதிய ஆறுதலைப் பற்றிக் கொண்டு ஆனந்திக்கவும் கூடுமாயிருக்கும்.

4. எனக்கு உண்டாகும் சகல நன்மைக்கும் ஊறணியாகிய உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். நிலையில்லாமையும் பலவீனமுமுள்ள மனிதனாகிய நான் உமக்கு முன்பாக வீணே, பூச்சியமே. அப்படியிருக்க நான் எங்கிருந்து பெருமை பாராட்டக் கூடும்? ஏன் கீர்த்தி பெற ஆசைப்படுவேன்? என்னுடைய ஒன்று மில்லாமையைப் பற்றியோ? அது அநீதத்திலும் அநீதமாகுமே. மெய்யாகவே வீண் மகிமை தீய விஷநோய், பெருத்த மோசம், ஏனெனில் அது மெய்யான மகிமையினின்று அகற்றுகின்றது, பரலோக வரப்பிரசாதத்தை விட்டு விலக்குகின்றது. ஏனெனில் மனிதன் தனக்கே பிரியப்படத் தேடும்போது, உமக்குப் பிரியப்பட மாட்டான்; மனிதப் புகழ்ச்சிகளை நாடும்போது, மெய்யான புண்ணியங்களினின்று அகற்றி விடப்படுகிறான்.

5. மெய்யான மகிமையும் பரிசுத்த சந்தோஷமும் எதில் அடங்கியிருக்கிறதெனில்: தன்னிடத்திலல்ல, ஆனால் உம்மிடத்தில் மேன்மைகொள்வதிலும், தன் சொந்த புண்ணியத்தைக் குறித்தல்ல, ஆனால் உமது நாமத்தைக் குறித்தே களிகூர்வதிலும், உம்மைப்பற்றி யன்றி வேறெந்தக் காரணத்தைப் பற்றியும் யாதொரு சிருஷ்டிக்கப் பட்ட வஸ்துவின்மேல் பிரியம் கொள்ளாதிருப்பதிலும்தான் அடங்கியிருக்கின்றது. உம்முடைய நாமம் வாழ்த்தப்படக் கடவது, என்னுடையதல்ல; உமது செயல் கெளரவம் பெறட்டும், என் செயலல்ல; உமது பரிசுத்த நாமம் புகழப்படக்கடவது. மனித ருடைய புகழ்ச்சிகளில் யாதொன்றும் என்னைச் சாராதிருக்கக் கடவது. “நீரே என் மகிமை! என்னிருதய அக்களிப்பு!” உம்மிலேயே எப்போதும் பெருமை பாராட்டி அகமகிழ்வேன்; என் விஷயத் திலோ “எனக்குண்டான பலவீனங்களிலொழிய மற்ற எதிலும் நான் மகிமைகொள்ள மாட்டேன்.” “யூதர் ஒருவருக்கொருவரால் உண்டாகும் மகிமையைத் தேடட்டும், நானோ சர்வேசுரன் ஒருவரால் உண்டாகும் மகிமையை மட்டும் தேடுவேன்.” உள்ளபடியே, மனிதரால் உண்டாகிய மகிமை, உலகக் கீர்த்தி, பிரபஞ்சப் பெருமை, இவை யாவும் உமது நித்திய மகிமையோடு இணையிட்டுப் பார்த்தால், எல்லாம் வெறுமை, எல்லாம் பைத்தியம். ஓ! என் சத்தியமே! என் கிருபை தயாபமே! என் சுவாமி! பரிசுத்த திரித் துவமே! உமக்கு மாத்திரமே புகழ்ச்சியும் மகிமையும் பெருமையும் தோத்திரமும் நித்திய சதா காலத்துக்கும் உண்டாகக் கடவது.

யோசனை

ஆண்டவரே! நான் என் உள்ளத்தில் இறங்கி, நான் யார் என்று என்னைத்தானே கேட்பேனாகில், நான் என்ன காணப் போகிறேன்? எப்போதும் மோசத்துக்குள்ளாகி இடைவிடாமல் மாறும் பற்றுதல்கள், ஒரு பக்கத்தில் நம்பிக்கை, மற்றோர் பக்கத்தில் பயம், துர்நாட்டங்கள், ஓயாமல் என்னை அலைக்கழிக்கும் ஆசைகள், சில சமயங்களில் ஒரு நிமிஷத்தில் தோன்றி மறைந்து போகும் சந்தோஷம், அநேகமாய்ச் சலிப்பு, பூலோக ஆசாபாசங்கள், வேண்டும் வேண்டாம் என்கிற நிலையற்ற மனது, ஆங்காரம், இவை முதலிய காரியங்களைத்தான் என் உள்ளத்தில் காண்பேன். இந்த நிலையினின்று நான் எழுந்திருப்பது எப்படி? சர்வேசுரன்தான் என்னைக் கைதூக்கி இரட்சிக்க வேண்டியிருக்கிறது. இரட்சகர் வராவிட்டால் மனிதன் நித்திய கேட்டுக்குள்ளாவது தப்பாது. இரட்சகர் தோன்றினார், இதோ வந்துவிட்டேன் என்கிறார். பாவத்தால் உண்டான நிந்தைக்குப் பரிகாரமாகத் தமது இரத்தத்தைச் சிந்தினார். இருதயத்தின் ஒழுங் கீனங்களை நிவாரணம் செய்தார். கடவுளுடைய சாயலைத் தவறிப் போன சிருஷ்டியினிடத்தில் திரும்ப ஸ்தாபித்தார். தேவ சிநேகத்தின் கண்டுபிடிக்கக் கூடாத இரகசியமே! இவ்வளவான உபகாரத்திற்குப் பதில் நன்றியாக நாங்கள் செய்யக் கூடுமானதென்ன? நமது பலவீனத் தையும் நமது வறுமையையும் நாம் ஒத்துக் கொள்ளக் கடவோம். சர்வேசுரன் வலிய நமக்குச் செய்தருளும் நன்மை நம்மால் உண்டாவ தல்ல, ஆகையால் சர்வேசுரனுக்கே அதனால் மகிமையுண்டாகக் கடவது. நாம் தீர்க்கதரிசியோடு: “என் ஆண்டவராகிய சர்வேசுரா! நான் உம்மை மன்றாடினேன், நீர் என்னைக் குணப்படுத்தினீர், நீர் என் ஆத்துமத்தை நரகத்தினின்று இரட்சித்தீர், நரகத் தடாகத்தில் இறங்கு கிறவர்களிடம் இருந்து என்னைப் பிரித்தீர். சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்டவர்களாயிருக்கிறவர்களே! நீங்கள் அவரைப் போற்றுங்கள், அவருடைய பரிசுத்ததனத்தின் மகிமையைக் கொண்டாடுங்கள்” என்று சொல்லக் கடவோம்.