இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

39. உலகக் காரியங்களில் மிஞ்சின கவலை வைத்தலாகாது

1. (கிறீஸ்துநாதர்) மகனே! உன் காரியத்தை எப்போதும் நம்மிடத்தில் ஒப்பித்துவிடு; அதை நாம் தக்க காலத்திலும் அதிக நன்மையாகவும் நடத்துவோம். நமது ஏற்பாட்டுக்குக் காத்திரு; அவ்விதம் உனக்கு அதிகப் பிரயோசனமாகும்.

(சீஷன்) ஆண்டவரே! யாவற்றையும் மிகவும் மனமுவந்து உம்மிடத்தில் ஒப்பித்து விடுகிறேன்; ஏனெனில் என் சொந்த புத்தியின் அறிவினால் எனக்கு உண்டாகும் உதவி வெகு சொற்பமா யிருக்கின்றது. இனி எதிர்காலத்துக் காரியங்களின் பேரில் நான் அம்மாத்திரம் கவலை வைக்காமல், தாமதமின்றி உமது திருச்சித்தத் திற்கு என்னைக் கையளித்து விட்டால் அல்லவா நல்லது!

2. (கிறீஸ்துநாதர்) மகனே! அநேக முறை மனிதன் தான் ஆசிக்கிற காரியத்தை வெகு ஊக்கத்தோடு தேடுகிறான், ஆனால் அதை அடைந்ததும் அதன் பேரில் அவன் வைத்திருந்த மதிப்பு மாறிப்போகின்றது. ஏனெனில் அவனுடைய பற்றுதல் எந்தக் காரியத்தின் மேலும் நெடுங்காலம் நீடிப்பதில்லை, ஆனால் ஒன்றை விட்டு ஒன்றின் மேல் தாவுகின்றது. ஆனதால் அற்பக் காரியங்களில் முதலாய்த் தன் சுய பிரியத்தைப் பார்த்துத் தேடாதிருப்பது சொற்பக் காரியமல்ல.

3. மனிதனுடைய மெய்யான வளர்ச்சி தன்னையே மறுப்பதில் அடங்குகிறது; தன்னை மறுத்தவன் சுயாதீனமுள்ளவனும் அச்ச மற்றவனுமாவான். ஆனால் எவ்வித நன்மைக்கும் விரோதியான பழைய சத்துரு சோதனை செய்வதினின்று ஓய்வதில்லை; அல்லும் பகலும் கண்ணிகள் வைத்து, அவனைத் தன் மோச வலைக்குள் தள்ளி விடப் பார்க்கிறது. “தந்திரத்துக்கு உள்ளாகாதபடி விழித்திருந்து செபம் செய்யுங்கள்” என்று ஆண்டவர் திருவுளம் பற்றியிருக்கிறார்.

யோசனை

உலகக் காரியங்களை நடத்துகிற விஷயத்தில் ஆத்துமம் தன் மட்டில் ஜாக்கிரதையாயிராமல் போனால், அதற்குப் பயங்கரமான ஆபத்து உண்டாகக்கூடும். சொந்த இலாபத்தைப் பற்றிய சோதனைகள் பலவாறாயிருக்கின்றன. அவைகளால் சாதாரணமாய் மனசாட்சி தளர்ந்து அவை இருதய வறட்சிக்கும் காரணமாகின்றன; கருத்தில் கலக்கம் உண்டாக்கி, தேவனிடத்தினின்றும் ஆத்தும இரட்சணியத்தினின்றும் நீக்கிப் போடுகின்றன; பக்திக்கு ஆதார மான நற்செயல்கள் படிப்படியாய் நின்று போகின்றன; ஞான வாசகம், செபம், மற்ற ஞானக் கடமைகள் அற்றுப் போகின்றன; எப்போதும் வீண் கவலை, எப்போதும் வீண் பிரயாசை; “அவசியமான ஒரே காரியத்தை” மறந்து விடுகிறார்கள். வியாதியாய் விழுந்தாலும், தங்களுடைய நிர்ப்பாக்கிய நிலைமையைக் கண்டுகொள்ளுவதில்லை. புத்திமதியொன் றும் கேட்பதில்லை. கடைசியாய் மரணம் வருகிறது. அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டு போய் சர்வ வல்லபமுள்ள நீதியஸ்தர் முன் நிறுத்துகின்றது. அவர் அவனை நோக்கி: நாம் உனக்குக் கொடுத்த காலத்தை என்ன செய்தாய்? என்று கேட்கிறார். அந்த நிர்ப்பாக்கியன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த முப்பது, நாற்பது, அறுபது வருஷங்களை உலகக் கவலைகளில் கழித்ததைக் காண்கிறான். அதை மாத்திரம்தான் பார்க்கிறான். அவன் ஆத்துமத் தைக் குறித்துக் கொஞ்சமாவது நினைத்தவனல்ல. அதைப் பற்றிக் கவனிப்பதற்கு இனி காலமில்லை, அவனுடைய தண்டனை நிச்சய மாயிற்று. ஆ! சகலத்துக்கும் முந்தி, முடியாத நித்தியத்தை நினைத்துப் பாருங்கள்; “முந்தமுந்த சர்வேசுரனுடைய இராச்சியத்தைத் தேடுங்கள், மற்றதெல்லாம் உங்களுக்கு ஏராளமாகக் கொடுக்கப் படும்.” கடந்து போகிற காரியத்தின்மேல் ஆசையை ஒழித்து விடுவதும், தேவனுடைய சித்தத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதும், தேவ திருவுளம் ஆசிப்பது எதுவோ, எவ்விதம் ஆசிக்கின்றதோ, எப்போது ஆசிக்கின்றதோ, அதனையே அவ்விதமே அப்போதே ஆசிப்பதும், இவைதான் சமாதானத்தின் வழி, கடைசி நேர நம்பிக்கையின் பலமான ஏக அஸ்திவாரம்.