இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

38. வெளிக் காரியங்களில் தன்னை நன்றாய் நடத்துதலும், ஆபத்து வேளையில் சர்வேசுரனை நாடிப்போகுதலும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டியது எது என்று கேள்; எவ்விடத்திலிருந்தாலும், என்ன வெளி வேலை செய்தாலும், எந்த வெளி அலுவலைப் பார்த்தாலும், உள்ளத்தில் மனச் சுதந்தரத்தைக் காப்பாற்றி வா, உன்னையே ஆண்டு கொள்; சகலமும் உனக்குக் கீழ்ப்படிய வேண்டியதுமல்லாமல் ஒருபோதும் எவ்விதக் கவலைகளும் உன்னை மேற்கொள்ளலாகாது; உன் செயல்களுக்கு அடிமையும் ஊழியனுமாயிராதே, ஆனால் அவற்றிற்கு அதிகாரியும் இராஜாவுமாயிரு; மெய்யான இஸ்ராயேனைப் போல, நீ அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டவனாய், தேவபுத்திரர்களின் சுதந்தரத்திற்கும் சுயாதீனத்திற்கும் பங்காளியா யிரு; அவர்கள் அநித்திய காரியங்களில் சிக்கிக் கொள்ளாமல் நித்திய காரியங்களைத் தேடுகிறார்கள், கடந்துபோகிற காரியங்களை இடது கண்ணால் மட்டும் பார்த்துப் பரலோக நன்மைகளை வலது கண்ணால் நோக்குகிறார்கள், அநித்தியமானவைகளின் மாய்கையில் சிக்கிக் கொள்ளாதவர்களாய்ச் சகலத்தையும் ஒழுங்குடன் செய்திருக்கிற பரமகர்த்தருடைய சித்தத்திற்கும் கருத்திற்கும் தக்கபடி அவைகளை நன்மைக்கு உபயோகமாகச் செய்கிறார்கள்.

2. மேலும் எந்தச் சம்பவத்திலும், உன் கண்ணுக்குத் தென் படுவதில் நின்றுவிடாமலும், நீ பார்ப்பதிலும் கேட்பதிலும் சரீரக் கண்ணை நம்பாமலும், மோயீசனைப் போல், ஆண்டவருடைய ஆலோசனை கேட்க, உடன்படிக்கைக் கூடாரத்தில் முதலில் பிரவேசிப்பாயானால், சிலவேளை தேவ பதிலைப் பெற்று, தற்கால, எதிர்காலத்தவைகளின்பேரில் மிகுந்த தெளிவு கொள்வாய். உள்ளபடி மோயீசன் தமது கஷ்டங்களை நீக்கவும் தமது சந்தேகங் களைத் தீர்க்கவும் எப்போதும் உடன்படிக்கைப் பெட்டகத்தை நாடிப் போனார். மனிதர்களின் துஷ்டத்தனத்திற்கும் கண்ணிகளுக்கும் தப்பித்துக்கொள்ள அவர் எப்போதும் செபத்தை ஆயுதமாக ஏந்திக் கொண்டார். அதுபோல் நீயும் உன் உள்ளத்தில் அடைக்கலம் புகுந்து தேவ ஒத்தாசையை அதிக உருக்கத்தோடு மன்றாட வேண்டியது. ஜோசுவாவும் இஸ்றாயேல் மக்களும் கபவோனித்தாரால் ஏய்க்கப் பட்டதற்குக் காரணம் என்னவெனில், அவர்கள் முதலில் “ஆண்டவ ருடைய வாக்கைக் கேட்கவில்லை.” ஆனால் நயமான பேச்சுகளை மிதமிஞ்சி நம்பி, ஒழுங்கற்ற இரக்கத்தினால் மோசம் போனார்கள் என்று வேதாகமங்களில் வாசிக்கிறோம்.

யோசனை

மனிதரில் அநேகர், தங்கள் மனதில் முதன்முதல் பதிந்த எண்ணங்களுக்கு இடங்கொடுத்து, சர்வேசுரனை ஆலோசனை கேட்பதில்லை; காலையில் செய்ததைப் பற்றி மாலையில் மனஸ்தாபப் படுகிறதில்லை; வீணிலே தங்களுடைய காலத்தைக் கழிக்கிறார்கள். நம் உள்ளத்தில் திடீரென்று எழும்பும் எண்ணங்களை எதிர்க்கப் பிரயாசைப்பட்டு அந்தப் பிரலாபத்துக்குரிய பலவீனத்தை வெல்ல எப்போதும் முயற்சி செய்ய வேண்டியது. தன்னையே அடக்காதவன் வெகு ஆபத்துக்குள்ளாவான், திடீரென்று நினையாத சமயத்தில் ஆபத்தில் விழுந்து போவான். ஆத்துமத்தை இழுத்துப் போகிற வீண் எண்ணத்தை அடக்க வேண்டியது. இருதயத்தையும் அதன் ஆசை களையும் கண்டிப்பான கட்டளைக்குக் கீழ்ப்படுத்த வேண்டியது. ஆனால் சர்வேசுரன் நமக்கு உதவியாக வராவிட்டால் பலவீனரான நாம் என்ன செய்வோம்? நம்மால் ஒன்றும் முடியாது. ஆண்டவர்தான் நமது ஏக பலம்; ஆனதால் நம்பிக்கையோடு அவரை மன்றாடுவோம். இடைவிடாமல் அவரை மன்றாடுவோம். தாழ்ச்சியுள்ளவர்களின் மன்றாட்டு வானத்தை ஊடுருவுகின்றது. நமக்கு உதவி வரக்கூடுமான நிலையை நோக்கி நமது கண்களை உயர்த்துவோம். “ஆண்டவரே! என் இரட்சணியத்தின் கடவுளே! இரவும் பகலும் உமக்கு முன்பாக இந்த நிர்ப்பாக்கியன்” கூச்சலிட்டான். ஆண்டவர் அவன் மன்றாட்டைக் கேட்டார். அவன் துன்பங்களினின்று அவனை மீட்டார். ஆண்டவர் வாழ்த்தப்படக்கடவாராக. ஏனெனில் என் செபத்தின் சப்தத்தை அவர் கேட்டார். ஆண்டவரே எனக்கு உதவி, அவரே என்னைப் பாதுகாப்பவர்; என் இருதயம் அவரை நம்பிற்று. அவர் எனக்கு உதவி புரிந்தார், எனக்கு நம்பிக்கை உண்டாயிற்று, என் முழு மனதோடு அவரைத் துதிப்பேன், என் எலும்புகளெல்லாம் “ஆண்டவரே! உமக்குச் சமானமானவன் யார்?” என்று சொல்லும்.”