1. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ உன்னையே விட்டுவிடு, நம்மைக் கண்டடைவாய். யாதொன்றையும் நீயே தெரிந்து கொள்ளாதே. எதன்பேரிலும் மனப்பற்றுதல் வைக்காதே; அவ்விதம் செய்தால் நீ இலாபமடைந்து கொண்டே வருவாய். ஏனெனில் நீ உன்னை நமக்குக் கையளித்துவிட்டுத் திரும்பவும் உன் சுயாதீனத்தை நீ எடுத்துக் கொள் ளாமல் போனால், நம் வரப்பிரசாதம் அதிகமதிகமாய்க் கொடுக்கப் படும்.
(ஆத்துமம்) ஆண்டவரே! நான் எத்தனை முறை என்னைப் பரித்தியாகம் செய்ய வேண்டும்? எதிலே என்னை விட்டுவிட வேண்டும்?
(கிறீஸ்துநாதர்) எப்போதைக்கும் எந்நேரத்திலும், சொற்ப விஷயத்திலும் கனமான விஷயத்திலும் ஒன்றும் தவறாமல் சகலத் திலுமே நீ உன்னை முழுமையும் பரித்தியாகம் செய்யக் கடவாய். நீ வெளிக்காரியங்களிலும், உன் உள்ளத்திலும் சுயமனதற்றவனாய் இரா விடில், நீ எப்படி நமக்குச் சொந்தமாவாய், நாம் எப்படி உனக்குச் சொந்தமாவோம்? எவ்வளவுக்கு சீக்கிரமாக இந்த நல்ல பரித் தியாகத்தை நிறைவேற்றியிருப்பாயோ, அவ்வளவுக்கும் அதிக நன்மை அடைவாய். எவ்வளவு உத்தமமும் யதார்த்தமுமான விதமாய் அதைச் செய்வாயோ, அவ்வளவாக எனக்குப் பிரிய முள்ளவனாவதுடன் அதிக இலாபமடைவாய். சிலர் தங்களைக் கையளிக்கிறார்கள், ஆனால் முழுதுமல்ல; சர்வேசுரனை முழுமன தோடு நம்பாதவர்களாய் இன்னமும் தாங்களாகவே தங்களைப் பராமரிக்கப் பார்க்கிறார்கள். மற்ற சிலர் முதலில் தங்களை நமக்கு முழுமையும் கையளித்திருந்தபோதிலும், பின்பு தந்திர சோதனையால் தூண்டப்பட்டு, தங்கள் சுய இலாபத்தை மறுபடியும் தேடுகிறார்கள்; ஆதலால் அவர்கள் புண்ணியத்தில் வளர்கிறதில்லை. அவர்கள் உண்மையான மனச்சுயாதீனத்தை அடைவதற்காகவும், முதல் முதல் தங்களை முழுமையும் விட்டுவிட்டுத் தங்களை தினந்தினம் பரித் தியாகம் செய்யவேண்டியது; அப்படிச் செய்யாவிடில் அவர்கள் நம்முடன் இன்பமான ஒற்றுமையை இப்பொழுதும் அடைய மாட்டார்கள், எப்பொழுதும் அடைய முடியாது. அநேக தடவை உனக்குச் சொன்னோம், இன்னும் மீண்டும் சொல்கிறோம். அதாவது: உன்னைத்தானே விட்டுவிடு, உன்னைப் பரித்தியாகம் செய், அப்போது ஓர் சிறந்த மனச் சமாதானத்தை அடைவாய்; சகலமுமாகிய நமக்காகச் சகலத்தையும் விட்டுவிடு, எதையும் நாடித் தேடாதே, விட்டு விட்டதை மீண்டும் பெற விரும்பாதே; நம்மில் மட்டும் வெகு உறுதியும் அந்தரங்கமுமான ஒன்றிப்பால் நிலைத்திரு; அப்போது நம்மைக் கைக்கொள்வாய். அப்போதுதான் மனச் சுதந்திரத்தைத் தரித்துக்கொள்வாய், இருள்கள் உன்னை மூடாது. ஆகையால் நீ சகலத்தையும் துறந்தவனாய், சகலத்தையும் துறந்த சேசுநாதரைப் பின்செல்லவும், உனக்கே நீ மரிக்கவும், நமக்காக நித்தியமாய்ச் சீவிக்கவும்தக்கதாக, உனது சுயமன முழுமையும் விட்டுவிட முயற்சி செய், அதற்காக வேண்டிக்கொள், ஆசைப்படு; அப்போது வீண் எண்ணங்களும், வருத்தம் விளைவிக்கும் கலகங் களும் அவசரமற்றக் கவலைகளும் உன்னை விட்டுக் கலைந்து போகும், அப்போதுதான் மிஞ்சிய அச்சங்களும் உன்னை அண்டாது, ஒழுங்கற்ற நேசமும் உன்னிடம் இராது.
யோசனை
தன்னை மறுப்பதும் தன்னைப் பரித்தியாகம் செய்வதும் சகலருக்கும் கடமையென்று சேசுநாதர்சுவாமி நமக்குப் படிப்பித்தது மல்லாமல், தாமே செய்தார் என்பதில் சந்தேகமில்லை. நாம் அப்படிச் செய்யாவிட்டால் மோட்ச கரை ஏறுவது இயலாத காரியம், தேவனுக்குப் பிரியமாய் நடப்பதும் அசாத்தியம். ஆண்டவரே! ஆண்டவரே! என்று கூவி வேண்டிக் கொள்பவர்களல்ல, ஆனால் தங்கள் துர்க்குணங்களை அடக்கி என் நித்திய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களே பரமகதி அடைவார்கள் என்பது சேசுநாதர் சுவாமி திருவாய் மலர்ந்தருளின போதனையல்லவா? ஆகையினால் உண்மையான கிறீஸ்துவனாகும்படி ஆசையுடையவனாய் இருப்பவன் கோபம், பொறாமை, மோகம், ஆங்காரம், சுயநேசம் முதலிய நம் மானிட சுபாவத்தில் ஊன்றி இருக்கிற சகல துர்க்குணங்களையும், ஒழுங்கற்ற பற்றுதல்களையும் பாவ நாட்டங்களையும், பாவத்திற்கு ஏதுவான சகல சமயங்களையும் நீக்கி விலகுவது அவசியம்.