இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

35. இச்சீவியத்தில் தந்திர சோதனை வராமல் இருக்காது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! இச்சீவியத்தில் நீ ஒருபோதும் அச்சமற்றிருக்க முடியாது; ஆனால் நீ சீவிக்கும் வரையும், ஞான ஆயுதங்கள் உனக்கு எப்போதும் தேவை. சத்துருக்கள் நடுவில் சீவிக்கிறாய், வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் அவர்கள் உன்னைத் தாக்கி வருகிறார்கள். ஆதலால் நீ பொறுமையின் கேடயத்தை நாலாபக்கத்திலும் உபயோகிக்காவிடில், காயப் படாமல் வெகுநேரம் இருக்க மாட்டாய். மேலும் நம்மைப்பற்றிச் சகலத்தையும் சகிப்பது என்ற முழுமனதோடு, உன் இருதயத்தை உறுதியாய் நம்மிடத்தில் வைக்காவிட்டால், அந்த யுத்தத்தின் அகோரத்தை நீ தாங்க மாட்டாய். முத்திப்பேறு பெற்றவர் களுடைய வெற்றியை நீ அடையவும் மாட்டாய். ஆகையால் நீ சகல ஆபத்து களையும் வீரியமாய்க் கடந்து தடைகளையெல்லாம் பலமாய் விலக்க வேண்டியது. ஏனெனில் “வெற்றி கொள்பவனுக்கு மன்னா என்னும் போசனம் கொடுக்கப்படும்.” கோழைத்தனமுள்ளவர்களோ துன்ப சாகரத்தில் அமிழ்ந்திருப்பார்கள்.

2. இச்சீவியத்திலேயே நீ இளைப்பாற்றியைத் தேடினால், நித்திய இளைப்பாற்றியை எப்படி அடைவாய்? அதிகமான சுகம்அடைய அல்ல, அதிகமாய்ப் பாடுபட ஆயத்தமாயிரு. மெய் யான சமாதானத்தைப் பூமியிலல்ல, ஆனால் பரலோகத்தில் தேடு. மனிதர்களிடத்திலும் மற்ற சிருஷ்டிகளிடத்திலுமல்ல, ஆனால் சர்வேசுரனிடம் மாத்திரம் அதைத் தேடு. வேலை, கஸ்தி, சோதனை, துன்பம், ஏக்கம், அவசரம், வியாதி, நிந்தை, புறணி, கண்டனம், சிறுமை, கலக்கம், தண்டனை, அவமானம் ஆக சகலத்தையுமே சர்வேசுர னுடைய நேசத்தைப்பற்றி நல்ல மனதோடு சகிக்க வேண்டியது. இவைதான் புண்ணியத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன, கிறீஸ்துவின் படைவீரனைப் பரிசோதனை செய்கின்றன; இவைதான் மோட்ச முடியை உருவாக்குகின்றன. கொஞ்ச நேரத்துப் பிரயாசைக்கு நித்திய சம்பாவனையும், சீக்கிரம் கடந்து போகிற நிந்தனைக்கு முடிவில்லாத மகிமையும் நாம் கொடுப்போம்.

3. உன் இஷ்டப்படி உனக்கு எப்போதும் ஞான ஆறுதல்கள் கிடைக்குமென்று எண்ணுகிறாயோ? நமது அர்ச்சியசிஷ்டவர்கள் அப்படி அவைகளை அனுபவிக்கவில்லை; ஆனால் அநேக துன்பங் களும், பலவித சோதனைகளும், பெருத்த மனத்துயரங்களும்தான் அவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் சகலத்திலும் பொறுமையாயிருந்தார்கள்; தங்களை நம்பாமல், சர்வேசுரனை அதிகமாய் நம்பி னார்கள்; ஏனெனில் இச்சீவியத்தின் பாடுகளின் சம்பாவனையாகிய பரலோக மகிமைக்கு அவைகள் சற்றேனும் பொருத்தமானவைகள் அல்லவென்று அறிந்திருந்தார்கள். அநேகர் திரளான கண்ணீர் விட்டும் வெகு பிரயாசைப்பட்டும் இன்னும் சரியாய் அடையாததை நீ உடனே அடைய வேண்டுமென்கிறாய். ஆண்டவர் வருகைக்குக் காத்திரு; தைரியமாய்ப் போராடு, நம்பிக்கையாயிரு, அவநம்பிக்கைப் படாதே, யுத்தம் செய்வதை விடாதே, ஆனால் சர்வேசுரனுடைய மகிமைக்காக உன் சரீரத்தையும் ஆத்துமத்தையும் தண்டித்துக் கொள். “நாம் ஏராளமான சம்பாவனையைக் கொடுப்போம்; உனது சகல துன்பங்களிலும் உன்னுடன் இருப்போம்.” 

யோசனை

இவ்வுலகத்தில் இல்லாத இளைப்பாற்றிக்காக நீ காத்திராதே; வெகு பிரயாசையோடுதான் மோட்சம் அடையலாம்; பூலோகத்தில் இருக்கிறவரையிலும் எப்போதும் போராட வேண்டியது; ஆனதால் பின்வாங்காதே; உன்னைத் தேற்றுகிறவரான தேவனுடைய உதவியை மன்றாடு; அவருடைய சமூகத்தில் உன்னைத் தாழ்த்து. “தந்திர சோதனைக் குள்ளாகாதபடி விழித்திருந்து செபம் செய்ய நான் திரும்பத் திரும்ப சொல்லுகிறேன்.” இடைவிடாமல் செபம் செய். “விசுவாசத்தில் உறுதியாயிரு; தைரியத்தோடு நட, பலமாயிரு.” பலமாய் யுத்தம் செய்தபிறகு சிலர் திடீரென்று சோர்ந்து போகிறார்கள், அதைரியம் அடைகிறார்கள். கடைசியாய்த் தோல்வி அடைகிறார்கள்; காரண மென்ன? சுய நம்பிக்கை. அவர்களுடைய ஆங்காரத்தைத் தண்டிப் பதற்காக ஆண்டவர் அவர்களைக் கைவிடுகிறார். ஒருநாள், இரண்டு நாள் மாத்திரம் எதிர்த்துப் போராடுவது போதாது. இறுதி வரையில் விடாமல் போராட வேண்டியது. “எவன் கடைசிவரையில் நிலைநிற்கிறானோ, அவனே இரட்சிக்கப்படுவான்.” இந்த யுத்தம் வெகு நேரம் நீடிக்கிறதென்று சொல்லாதே, முடிவுள்ள காரியங்கள் ஒன்றும் நீடிக்காது. நீ முடிவை நெருங்கி வருகிறாய், “ஏனென்றால் காலங் குறுகிப் போகின்றது, உலகம் கடந்து போகின்றது” என்று ஆண்டவர் சொல்கிறார். “இன்னும் ஒரு நிமிஷத்துக்குப் பின்பு உன்னைக் காணப் போவதில்லை; ஆனால் நீ நம்மைக் காண்பாய், ஏனெனில் நாம் சீவிக்கிறோம், நீ நம்மிடத்தில் சீவிக்கிறாய்” என்கிறார்.